முகமூடி

சூப்பர் ஹீரோ திரைப்படங்களை ஹாலிவுட்டில் மட்டுமே அதிக அளவில் பார்த்து பழகிய நமக்கு முகமூடி மாதிரியான திரைப்படங்களை ரசிப்பதென்பது கடினமே. உண்மை என்னவென்றால் முகமூடி ஒரு சூப்பர் ஹீரோ திரைப்படமே அல்ல. சந்தர்ப்ப சூழ்நிலையால் இரவு நேரங்களில், ஒரு மாறுவேடத்தை போட்டுக்கொண்டு தனக்கு தெரிந்த குங்க்பூ வித்தைகளின் உதவியுடன் நடமாடும் ஒரு சாதாரண மனிதனின் கதைதான் இது. ஹாலிவுட்டில் வெளியான பேட்மேன் மற்றும் அயர்ன்மேன் திரைப்படங்களில், ஹீரோ எப்படி தொழில்நுட்ப உதவிகளுடன் சூப்பர் ஹீரோவாக வலம் வருகிறார்களோ, அதே போல இந்த படத்தில் ஜீவா குங்க்பூ கலையின் உதவியுடன் மட்டும் சூப்பர் ஹீரோவாக வலம்வருகிறார் அவ்வளவே.

இந்த மாதிரியான ஒரு கதையை படமாக்கிய விதத்தில் இயக்குனர் பாராட்டு பெறுகிறார். ஆனால், மிஷ்கினின் படங்களில் வரும் எல்லா ஹீரோக்களும் கிட்டத்தட்ட ஒரேமாதிரியான மேனரிஷங்களுடன் திரிவது ஒருவித சலிப்பை தருகிறது. உதாரணமாக நிலத்தை பார்த்தபடி நின்று கொண்டிருப்பது. இதை யுத்தம் செய் திரைப்படத்தில் சேரன் கூட செய்திருப்பார். இதற்கு காரணம் மிஷ்கின் திரைப்படங்களில் அதிகமாக வரும் "லோ ஆங்கிள் ஷாட்ஷாக" கூட இருக்கலாம்.


ஹீரோயின் பூஜா ஹெக்டேயின் பங்கு இந்த திரைப்படத்தில் கொஞ்சம் இருப்பது மகிழ்ச்சி. ஹீரோயின் தனது ஸ்கூட்டியில் செங்கல், லாட்டி கம்பு போன்றவற்றை வைத்துகொண்டு நடமாடுவதை நம்பமுடியவில்லை. சில நேரங்களில் இந்த பொண்ணு மெச்சூரிட்டி இல்லாம இப்படி நடந்துக்குதா? இல்ல.. சந்தோஷ் சுப்பிரமணியம் படத்துல வர்ற ஜெனிலியா மாதிரி நடந்துக்க முயற்சி பண்ணுதான்னு சந்தேகம் வருகிறது. ஆனால், ஜீவா முகமூடியாக திரிவதன் மூலகாரணமே  ஹீரோயின் தான் என்பதே நிதர்சனம்.


என்னை பொறுத்தவரை, இது ஜீவாவிற்கு இன்னொரு ரௌத்திரம். அவருக்கு கொடுக்கப்பட்டதை சிறப்பாக செய்துள்ளார். முக்கியமாக குங்க்பூ சண்டை காட்சிகளில் அசத்தியுள்ளார். நரேன் தனது பங்கை சிறப்பாக செய்துள்ளார். அஞ்சாதே திரைப்படத்தில் இவரது நடிப்பை பார்த்து பிரமித்திருக்கிறேன்.


குங்க்பூ மாஸ்டராக வரும் செல்வாவை போலீஸ்காரர்கள் உட்பட யாராவது அடித்தால், அவருடைய சிஷ்யர்கள் அளவுக்கு அதிகமாக கோபப்படுவதை படமாக்கியவிதம் குங்க்பூ கலையின் மீது ஒருவித மரியாதையை உண்டாக்குகிறது. ஆனால், அந்த அளவுக்கு அதிகமான கோபமே செல்வாவின் வீழ்ச்சிக்கு காரணமாகிவிடுகிறது. ஒரு காட்சியில் மிக அற்புதமாக நரேனுடன் செல்வா சண்டை போட்டுகொண்டிருக்கும் போது, நரேன் செல்வாவின் மாஸ்டரை எப்படி கொலை செய்தேன் என்பதை சொல்லிக்காட்டி செல்வாவின் கோபத்தை அதிகரிக்கிறார். இறுதியில் அந்த அதீத கோபத்தாலே செல்வா வீழ்கிறார்.

ஸ்பைடர் மேன் திரைப்படத்தில் ஒரு காட்சியில், அந்தரங்கத்தில் தொங்கும் ஒரு பஸ்ஸை கையில் இருக்கும் ஜவ்வைவிட்டு பறந்து பறந்து காப்பாற்றும் போது ரசிக்க முடிந்த நம்மால், இந்த படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் அதே போல அந்தரங்கத்தில் தொங்கும் ஒரு ஸ்கூல் பஸ்ஸை, ஜீவா மிக இயல்பாக காப்பாற்றும் போது ரசிக்க முடிவதில்லை. இதற்கு காரணம் அசாதாரணமான படமாக்கப்பட்ட காட்சிகளை ரசித்து பழகிய நமக்கு இது சாதாரணமாக தெரிவதாக கூட இருக்கலாம்.


படத்தில் வரும் "வாயமூடி சும்மா இருடா" பாடல் படமாக்கப்பட்ட விதம் அருமை. படத்தின் பின்னணி இசை சிறப்பாக இருந்தது. ஆனால் சில இடங்களில், "யுத்தம் செய்" திரைப்படத்தை நியாபகப்படுத்துவதை தவிர்க்கமுடியவில்லை.

படத்தில் முதல் பாதி அருமை.. இரண்டாம் பாதியில் ஆங்காங்கே தோய்வு.. மேலும் இறுதியில் திடீரென்று படம் முடிந்துவிடுவதை போல ஒரு உணர்வை கொடுக்கிறது. முகமூடியின் அடுத்தபாகம் வரும் என்பதன் அறிகுறிதான் இதுவா என்று தெரியவில்லை. இன்னொரு காரணம், நரேன் இறந்ததை தெளிவாக காட்டப்படவில்லை.

மொத்தத்தில் ஒரு முறை பார்க்கலாம்.
SHARE
    Blogger Comments
    Facebook Comments

0 மறுமொழிகள்:

Post a Comment