துணையெழுத்து



அது எனக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்திருந்த தருணம். நிச்சயதார்த்த தினத்திற்கும் திருமண நாளிற்கும் இடையே கிட்டத்தட்ட மூன்று மாத இடைவெளி இருந்தது. என் மனைவி அப்போது அவள் பார்த்துகொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு அவளது வீட்டோடு இருந்தாள்.  நான் பெங்களூரில் பணியில் இருந்தேன். இடையில் ஒரு முறை சொந்த ஊருக்கு பயணிக்கும் போது, அவளுக்கு படிப்பதற்கு கதை புத்தகங்கள் வாங்கி செல்லலாமே என்று யோசித்தேன். நண்பர் பரிதியிடம் ஏதாவது தமிழ் கதை புத்தகங்கள் இருந்தால் கொடுங்கள் என்று கேட்டபோது, அவர் விநாயகர் புராணம் மற்றும் துணையெழுத்து புத்தகத்தை கொடுத்தார். விநாயகர் புராணம் புத்தகத்தை கொடுத்தால் ஏதாவது அவள் நினைத்து கொள்வாளோ என்று எண்ணி, துணையெழுத்து புத்தகத்தை மட்டும் கொடுத்தேன். அவளும் அந்த புத்தகத்தை ஒரு வாரத்திற்குள் படித்து முடித்துவிட்டாள், எங்களுக்கும் திருமணமாகி நான்கு மாதங்களை கடந்துவிட்டது. அதன் பிறகு கடந்தவாரம் தான் நான் இந்த புத்தகத்தை படித்தேன்.


இந்த புத்தகத்தின் முன்னுரையை படித்த போதுதான், இது ஏற்கனவே ஆனந்த விகடனில் வெளிவந்த ஒரு தொடரின் தொகுப்பு என்பது தெரிந்தது. இந்த புத்தகத்தின் ஆசிரியர் எஸ்.ராமகிருஷ்ணன் தனது வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை மட்டுமல்லாது, தான் மேற்கொண்ட பயணங்களின் வழியாக கண்ட காட்சிகள் அனைத்தையும் அவரது கோணத்தில் எவ்வாறு பார்த்திருக்கிறார் என்பதை விவரிக்கிறது இந்த துணையெழுத்து.

தன வீட்டில் கிடக்கும் தலை அறுபட்ட பொம்மையை, இரயில் வண்டியின் படிக்கட்டுகளை, மருத்துவமனை பழங்களை, ஒரு பெரிய வீட்டின் சாவி கொத்தை, வேலை இல்லாமல் இருக்கும் பகல் பொழுது, இப்படி பல விஷயங்களை எழுத்தாளர் எந்த கண்ணோட்டத்தோடு பார்க்கிறார் என்பதை இந்த புத்தகத்தை படிக்கும் போது தெரிகிறது. இந்த புத்தகத்தில் நாதஸ்வர வித்வான் காரகுறிச்சி அருணாசலம், பெரியார் அணையை தனது சொத்துகளை விற்று கட்ட உதவிய பென்னி குக், எழுத்தாளர் புதுமைபித்தன் போன்ற பல பிரபலங்களை பற்றிய நினைவுகளையும் நம்மோடு பகிர்ந்துகொள்கிறார்.

சில இடங்களில் அவர்காட்டும் மேற்கோள்கள் மிகவும் ரசிக்கும் படியாக இருந்தது. அவற்றுள் சிலவற்றை கீழே கொடுத்துள்ளேன்,

"உதடு தேய்வதை விடவும்.. உள்ளங்கால் தேயலாம்"  - பழமொழி
இதன் அர்த்தம் "ஒவ்வொரு வேலையையும் அடுத்தவரை செய்யசொல்லி ஏவிக்கொண்டே இருந்து உதடு தேய்வதை விடவும், தானே ஓடி ஆடி வேலை செய்து உள்ளங்கால் தேய்வது நல்லது" என்பதாகும்.

சிறகிலிருந்து பிரிந்த இறகு ஒன்று
காற்றின் தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதி செல்கிறது.

நான் ஒரு எறும்பை கொன்றேன்
என் மூன்று குழந்தைகள் அதை நிசப்தமாக
கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.
- ஜென் கவிதை.

இவரது நண்பர் குற்றாலத்தில் அருவியில் இறந்தது, சிறு வயதில் இவர் வீட்டை விட்டு ஓடியது, நண்பனை பிரிந்தது, உண்மை காதலர்கள் இணைவதையும் பிரிவதையும் மிக அருகாமையில் பார்த்தது என்று பல விஷயங்களை படித்த போது, நானும் எனது இறந்தகாலத்திற்கு மீண்டும் ஒரு முறை பயணித்துவந்தேன். வாழ்வில் என்ன மாற்றங்கள் வந்தாலும் சில இறந்தகாலங்கள் மட்டும் இறப்பதே இல்லை.

இந்த புத்தகத்தில் வரும் எனக்கு பிடித்த வரிகள் சில..

"பயத்திற்கு ஒரு போதும் வயதாவதே இல்லை."

"வெற்றி விளையாட்டை பெருமைகொள்ளச் செய்கிறது. தோல்வி விளையாட்டை புரிந்துகொள்ளச் செய்கிறது."

"பேச்சை கற்றுக்கொள்வதுபோல மௌனத்தை எளிதில் கற்றுக்கொள்ள முடியாது."

வாய்ப்பு கிடைத்தால் இந்த புத்தகத்தை வாங்கி படித்துப்பாருங்கள். உங்களுக்கும் பல இறந்தகால நினைவுகள் மீண்டும் மின்னி மறையலாம்.

விலை ரூபாய் 90 /-
விகடன் பிரசுரம்

டிஸ்கி:
அவன்-இவன், பாபா, சண்டைகோழி, உன்னாலே உன்னாலே போன்ற திரைப்படங்களின் வசனம் எழுதியது எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் தான்.
SHARE
    Blogger Comments
    Facebook Comments

0 மறுமொழிகள்:

Post a Comment