The Dark Knight Rises


நம் நாட்டில் காமிக்ஸ் கதைகளை அதிகபட்சம் அனிமேஷன் படங்களாக தான் மறுஉருவாக்கம் செய்வார்கள். அந்த மாதிரியாக வெளிவரும் திரைப்படங்கள் அதிக வரவேற்பை பெறுவதுமில்லை. ஆனால், ஹாலிவுட்டில் அவ்வகை காமிக்ஸ் கதைகள் திரைப்படங்களாக வெளிவரும் போதும் அதிகவரவேற்பை பெறுகின்றது. அந்த வகையை சேர்ந்தது தான் பேட்மேன் வரிசை திரைப்படங்கள். முதல் முதலாக 1989ல் "பேட்மேன்" திரைப்படம் வெளியானது. இது DC காமிக்ஸ் புத்தகத்தில் வெளிவந்த ஒரு கற்பனை கதாபாத்திரத்தின் கதை. இந்த திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால், இந்த வரிசையில் தொடர்ந்து "Batman Returns", "Batman for ever" மற்றும் "Batman & Robin" போன்ற திரைப்படங்கள் வெளியாயின. இறுதியாக 1997ல் வெளியான "Batman & Robin" திரைப்படம் சரிவர செல்லாததால், இந்த பேட்மேன் வரிசை திரைப்படங்கள் தயாரிப்பதை நிறுத்தினார்கள். அதன் பிறகு கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் இந்த வரிசை திரைப்படங்களை மீண்டும் தயாரிக்க தொடங்கினார்கள். நோலன் "Batman Begins", "The Dark Knight" மற்றும் இப்போது வெளியாகியுள்ள "The Dark Knight Rises" வரை இயக்கியுள்ளார். The Dark Knight திரைப்படம் வெளிவந்த தருணத்தில், அவ்வகை சூப்பர் ஹீரோ திரைப்படங்களை பார்ப்பதில் ஆர்வம் இல்லாமல் இருந்தேன். என் நண்பன் பிரமோத் தனது சொந்த செலவில் அந்த திரைப்படத்திற்கு அழைத்துசெல்வதாக சொன்னான், அதன் பிறகு கூட செல்ல மறுத்துவிட்டேன். அதன் பின்னர் இரண்டு வருடங்களுக்கு முன்னால், அதே திரைப்படத்தை என்னுடன் பணிபுரிந்த நண்பர் பார்க்க சொல்லி கொடுத்திருந்தார். அப்பொழுது கூட நான் சீரியசாக அந்த படத்தை பார்க்க முயற்சி செய்யவில்லை. சில நாட்களில் இரவு நேரம் தூக்கம் வரவில்லை என்றால் இந்த படத்தை போட்டுவிடுவேன், படம் போட்ட ஐந்து நிமிடத்தில் தூங்கி விடுவேன். இப்படியாக பல வாரங்கள் கழிந்தன.  ஒரு சனிக்கிழமை அன்று மதிய நேரம் பொழுது போகாமல் இந்த படத்தை மீண்டும் போட்டுவிட்டேன், படம் போக போக விருப்பானது. முக்கியமாக ஜோக்கர் என்னும் அந்த வில்லன் கதாபாத்திரம் வந்த பிறகு சுறுசுறுப்பானது. அந்த திரைப்படத்திற்கு பிறகு நோலன் திரைப்படங்களின் ரசிகனாகி போனேன். நோலன் திரைப்படங்கள் பெரும்பாலும் இப்படி தான் இருக்கும். வாழை பழத்தில் ஊசி ஏற்றுவது போல மெதுவாக நம் மனதை திரைப்படத்தோடு கட்டிப்போடும்.

சரி, நாம் இந்த திரைப்படத்தை பற்றி பார்ப்போம். பேட்மேன் வரிசையில் வந்த அனைத்து திரைப்படங்களின் கதையை பற்றி தெரிந்து வைத்திருந்தாலே போதும், இந்த திரைப்படத்தை மிகவும் ரசித்து பார்க்கலாம். பேட்மேன் வரிசையில் வரும் கடைசி திரைப்படம் என்கிற எண்ணத்தோடு தான்  இந்த திரைப்படத்தை தொடங்கினார் நோலன், அதனால் தான் என்னவோ இதன் முந்தைய திரைப்படங்களின் பாதிப்பு ஆங்காங்கே தெரிகிறது. பொதுவாக சூப்பர் ஹீரோ திரைப்படங்களில், வில்லன் கதாபாத்திரம் ஹீரோ கதாபாத்திரத்திற்கு இணையான வலிமை கொண்டிருக்க வேண்டும். அப்பொழுது தான் சுவாரஸ்யமாக இருக்கும். இந்த திரைப்படத்தில், ஆரம்ப காட்சியிலேயே படத்தின் பிராதான வில்லனாக வரும் டாம் ஹார்டி (Tom Hardy) ஒரு விஞ்ஞானியை விமானத்தில் பறந்த படி கடத்துகின்றார். அந்த காட்சியிலேயே தான் பேட்மேனுக்கு பொருத்தமான வில்லன் என்பதை நிரூபிக்கிறார். ஆனால், என்ன இருந்தாலும் சென்ற திரைப்படத்தில் வந்த "ஜோக்கர்" கதாபாத்திரத்திற்கு அருகில் வருவது என்பதே கடினம். நோலனின் முந்தைய பேட்மேன் திரைப்படங்களில் பேட்மேனாக வரும் கிறிஸ்டியன் பேல் (Christian Bale) தான் இந்த திரைப்படத்திலும் வருகிறார். ஆரம்ப காட்சியில் வெயின் ப்ரூஸ் என்னும் தனது உண்மையான தொழிலதிபர் தோற்றத்தில், கையில் ஒரு ஊன்று கோலை வைத்துகொண்டு கிழட்டு சிங்கம் போல நடமாடுகிறார், (இவரது நடிப்பில் வெளிவந்த "The Machinist" திரைப்படத்தில் இவரது தோற்றத்தை பார்த்தால் இதெல்லாம் இவருக்கு சாதாரணம் என்றே தோன்றும்). பின்னர் மீண்டும் பேட்மேனாக மாறும் போதும் திரை அரங்கில் விசில் பறக்கிறது.

ப்ரூஸ் தனது நிறுவனத்தில் வரும் லாபத்தை கொண்டு தன்னால் ஆனா உதவிகளை அனாதைகளுக்கு செய்து வருகிறான். ஆனால் ஹார்வி டெண்ட்டின் மரணத்திற்கு பிறகு,  பல ஆண்டுகளாக வீட்டுக்குள்ளேயே கிடப்பதால் லாபம் இல்லாமல் இயங்குகிறது ப்ரூஸின் நிறுவனம். அதனை மீண்டும் பொலிவூட்ட லூயிஸ் பாக்ஸின் (Morgan Freeman) உதவியை நாடுகிறான். இதே நேரத்தில், ப்ரூஸின் கைரேகையை திருட்டு பூனையாக (catwoman) வரும் செலினா கைல் (Anne Hathaway) உதவியுடன் வில்லன் திருடுகிறான். அதை உபயோகித்து பங்குசந்தையில் ப்ரூஸின் பங்குகளை அதல பாதாளத்திற்கு தள்ளுகிறான். இதே நேரத்தில் வில்லன் கோத்தம் சிட்டியின் எல்லா இடங்களிலும் அணுகுண்டுகளை பதுக்கும் வேளையில் ஈடுபட்டு வருகிறான். ப்ரூஸ் தனது நிறுவனத்தின் தற்காலிக இயக்குனராக மிராண்டா டேட்டை (Marion Cotillard) வைத்துவிட்டு, வில்லனை பிடிக்கும் வேலையில் இறங்குகிறார். அதற்கு செலினாவின் உதவியை நாடுகிறான் பேட்மேனாக வரும் ப்ரூஸ். ஆனால் செலினாவோ வில்லனிடம் பேட்மேனை மாட்டிவிட்டுவிட்டு அங்கிருந்து சென்றுவிடுகிறாள். அதன் பிறகு பேட்மேனுக்கும் வில்லனுக்கும் நடக்கும் சண்டையில், பேட்மேனின் முதுகை உடைத்து சிறைபடுத்தி விடுகிறான் வில்லன்.


லூயிஸ் பாக்ஸ், நலனுக்காக கண்டுபிடித்து வைத்திருந்த ஒரு அணுஆயுதத்தை, திரைப்படத்தின் ஆரம்பத்தில் கடத்திய விஞ்ஞானியின் உதவியுடன் ஆறு மைலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் அணுகுண்டாக மாற்றிவிடுகிறான் வில்லன்.  இதன் பின்னர், நகரம் முழுவதும் பூமிக்கடியில் பாதாள சாக்கடையின் வழியாக புதைக்கப்பட்ட அணுகுண்டை வெடிக்க செய்து அடுத்து சில நாளில் வெடிக்கவைக்க போகும் லூயிஸ் பாக்ஸின் அணு ஆயுதத்தையும் மக்களிடம் காட்டி பயமுறுத்துகிறான்.அதே நேரத்தில் நகரத்தின் பெரும்பான்மையான காவல்துறை அதிகாரிகளை பாதாள சாக்கடையில் சிக்கவைத்து விடுகிறான். கோத்தம் சிட்டி இவ்வாறு அழிந்து கொண்டிருக்க, பாதாள சிறையில் பயங்கர காயங்களுடன் இருக்கும் பேட்மேன், எப்படி மீண்டு வந்து வில்லனை அழித்து காப்பாற்றுகிறார் என்பதை இறுதியில் ரசிக்கும் படி காட்டியிருக்கிறார்கள். இந்த திரைப்படத்தை முடித்திருக்கும் விதம் ரசிக்கும் படியாக அமைந்தது. டிஸ்கி:

படத்தை  திரைஅரங்கிற்கு சென்று பாருங்கள். ஆங்கிலத்தில் பார்த்தால் ஆங்கில சப்-டைட்டிலுடன் பாருங்கள். புரிந்து கொள்ள இன்னும் கொஞ்சம் வசதியாக இருக்கும்.

தமிழிலும் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளிவந்திருக்கிறது. அந்த வகையில் தமிழ் நாடு மக்கள் கொடுத்துவைத்தவர்கள்.

நோலன் திரைப்படத்தை பற்றி எழுதுவதும் அதை பார்ப்பதும் கிட்டத்தட்ட ஒன்று தான். அவ்வளவு எளிதாக முடிய கூடிய காரியம் அல்ல. அதனால் தான் இரத்தின சுருக்கமாக இந்த திரைப்படத்தை பற்றி என்னால் முடிந்தவரை எழுதி உள்ளேன்.

"The Dark Knight" பாகத்தில் ஜோக்கராக நடித்திருந்த ஹீத் லெட்ஜெர் விளையாட்டு வீரராக நிற்பது போல இருந்தது. மீண்டும் பார்த்தால் தான் அவரா? இல்லை அவரை போன்ற இன்னொருவர என்று தெரிந்துகொள்ளமுடியும்.


அமெரிக்காவில் பேட்மேன் திரைப்படம் திரையிடப்பட்டிருந்த அரங்கில் நுழைந்து, ஜேம்ஸ் ஹோம்ஸ் என்பவன், படம் பார்ப்பவர்களை சுட தொடங்கியிருக்கிறான். இந்த சம்பவத்தில் இதுவரை 12 பேர் இறந்திருக்கிறார்கள்.
SHARE
    Blogger Comments
    Facebook Comments

0 மறுமொழிகள்:

Post a Comment