நான் ஈ


இந்த திரைப்படத்தின் ட்ரைலரை கலகலப்பு திரைப்படம் பார்க்கும் போதே திரைஅரங்கில் பார்த்தாகிவிட்டது. ட்ரைலரை பார்த்த அடுத்த நாளே அதன் பாடல்களை கேட்டாகிவிட்டது. படத்தின் ட்ரைலரும் பாடல்களும் படத்தை பார்த்தே ஆகவேண்டும் என்கிற வேட்கையை என்னுள் கிளறிவிட்டது. அந்த அளவிற்கு கிராபிக்ஸ் நுட்பம் பயன்படுத்தப்பட்டிருப்பது  படத்தின் ட்ரைலரில் தெரிந்தது. மேலும் கீரவாணியின் இசையில் எனக்கு எப்போதும் ஒரு வித எதிர்பார்ப்பு உண்டு. காரணம் இளையராஜாவின் இசையை போல, இவரின் இசையும் தனித்து தெரியும். இந்த திரைப்படத்திலும் எனது அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளார் என்பதை மறுக்க முடியாது. மேலும் இயக்குனர் ராஜமௌளியை பற்றி சொல்லவேண்டும் என்றால், கையில் இருக்கும் ஒரு வரிக்கதையை முழுதிரைக்கதையாக்கி அதில் சுவாரஸ்யத்தை கூட்டி வெற்றிபெறும் இயக்குனர்களில் இவரும் ஒருவர். இவர் இயக்கிய மகதீரா திரைப்படத்தின் வெற்றியை பற்றி அனைவரும் தெரிந்ததே, இதே போல "நான் ஈ" திரைப்படத்தையும் சேர்த்து மொத்தம் ஒன்பது படங்கள் வரிசையாக ஹிட் கொடுத்திருக்கிறார்.


கதாநாயகி சமந்தாவை கதாநயாகன் நானி காதலிக்கிறார். இதே நேரத்தில் வில்லன் சுதீப்பும் சமந்தாவை அடைய முயற்சி செய்கிறார். இதனால் நானியை சுதீப் கொலை செய்கிறார். மீண்டும் நானி ஈயாக மறுபிறவி எடுத்து சுதீப்பை பழிவாங்குகிறார். இதுதான் படத்தின் ஒரு வரி கதை (ஏன் ஒரு வரிக்கு மேலே போச்சின்னு கேட்ககூடாது). இந்த கதையை திரையில் காட்டியவிதத்தில் தான் இயக்குனர் வெற்றிபெறுகிறார். படத்தின் ஆரம்பத்தில் டைட்டில் கார்ட் போடும்போது பின்னணியில் ஒரு குழந்தை தூங்குவதற்கு முன் தனது தந்தையிடம் கதை கேட்கிறது, அதன் அப்பா கதை சொல்லாமல் ஏமாற்றிவிட்டு தூங்க சிலவழிகளை கையாண்டு எடுபடாமல் போக, "ஒரு ஊர்ல ஒரு ராஜா" என்று வழக்கம் போல ஆரம்பிக்க, எத்தனை நாளுக்கு அதே கதையை சொல்லுவிங்க, இன்னைக்கு வேற கதை சொல்லுங்க என்று அந்த குழந்தை இடைமறிக்க, இந்த ஈ கதையை தொடங்குகிறார் அதன் அப்பா. இது கற்பனைக்கதை, "இது எப்படி சாத்தியம்? அது எப்படி சாத்தியம்?" என்று யோசிக்கும் நமது சிந்தனைகளுக்கு கொஞ்சம் ஒய்வு கொடுத்துவிட்டு படத்தை ரசிக்கவேண்டும் என்பதை இதிலேயே நாம் புரிந்துகொள்ளவேண்டும். அப்படி பார்த்தல்தான் இந்த திரைப்படத்தை உங்களால் ரசித்து பார்க்க முடியும்.


சமந்தாவும் அவருடைய நண்பர்களும் சேர்ந்து ஒரு சமூக தொண்டுநிருவனத்தை நடத்திவருகிறார்கள். அதற்கு மாதம் தவறாமல் ரூபாய் பதினைந்தை கொடுத்து உதவும் நானி பட்டாசு விற்பனையில் ஈடுபடுபவர். நானி, சமந்தாவை இரண்டு வருடமாக துரத்தி துரத்தி காதலித்து வருகிறார். சமந்தாவிற்கு நானியை பிடித்திருந்தாலும் காதலை சொல்லாமல் நானியை பின்னால் அலையவிடுகிறார் (இந்த பொண்ணுங்களே இப்படி தான் எஜமான்). நானி, சமந்தா காதல் காட்சிகள் குறைந்த நேரமே என்றாலும், ரசிக்கும் படியாக அமைத்திருந்தார் இயக்குனர். காதலி அனுப்பும் "Blank SMS" கூட "Blank Cheque" மாதிரி போன்ற வசனங்கள் ரசிக்கும் படியாக இருந்தது. இவர்களின் காதல் இப்படி போக, இதே நேரத்தில் சமந்தாவின் தொண்டுநிருவனதிற்கு பதினைந்து லட்சம் கொடுத்து உதவுகிறார் சுதீப். ஆனால், அவர் செய்யும் உதவி தொண்டு செய்வதற்கு அல்ல, சமந்தா என்னும் அல்வா துண்டின் மீதுள்ள ஆசையால் தான். இதை தெரியாத சமந்தாவும் சுதீப்புடன் பழக ஆரம்பிக்கிறார். ஒரு கட்டத்தில் நானி, சமந்தாவை காதலிப்பதை தெரிந்துகொண்ட சுதீப், நானியை கொலைசெய்ய தனது அடிஆட்களுடன் தூக்கி செல்கிறார். இந்த நேரத்தில் சமந்தா தனது காதலை நானியின் கைப்பேசியில் தெரிவிக்கிறார். இதை கேட்ட சுதீப் மேலும் கடுப்பாகி, நானியை கொலைசெய்கிறார்.


இதன்பிறகு நானி, ஈயாக மறுபிறவி எடுக்கிறார். ஈக்கு உண்டான பலங்களை வைத்து சுதீப்பை தூங்க விடாமல் இம்சிக்கிறார். குறிப்பாக இடைவேளையோடு சுதீப்பின் காரை விபத்துக்குள்ளாக்கி, சுதீப்பிற்கு அவர்கொடுக்கும் "பஞ்ச்" அருமை. இடைவேளைக்கு பின்னர் திரைப்படத்தை கிராபிக்ஸ் மிரட்டல்களுடன் இன்னும் விறுவிறுப்பாக நகர்த்துகிறார் இயக்குனர். சமந்தாவிற்கு தான் தான் நானி என்பதை தெரிவித்த பின்னர், சமந்தாவின் "மைக்ரோ ஆர்டிஸ்டிக்" திறமையை பயன்படுத்தி நவீனத்துவமாக சுதீப்பை பழிவாங்குகிறார் நானி. சுதீப் வில்லனாக அசத்தியுள்ளார். இவரது நடவடிக்கைகளை பார்க்கும் போது அடிக்கடி எனக்கு ரகுவரன் நியாபகத்தில் வந்தார். காரணம் சுதீப்பின் உயரமா, அவரது டப்பிங்கா என்று விளங்கவில்லை. படத்தில் சந்தானம் இரண்டு காட்சிகளுக்கு மட்டுமே வருகிறார். இடைவேளை முடிந்ததும் சமந்தாவின் வீட்டிற்கு திருடுவதற்கு வருகிறார் சந்தானம், அதன் பிறகு படம் முடிந்து "என்ட் க்ரெடிட்ஸ்" போடும்போது தான் வருகிறார். இரண்டு காட்சிகளுக்கு மட்டுமே வந்தாலும் தனது வழக்கமான திறமையால் நம்மை சிரிக்க வைக்கிறார்.


கிரேஸி மோகனின் வசனம் என்பதை அனுமானிக்க முடியவில்லை. மகதீரா மற்றும் அருந்ததி திரைப்படங்களின் ஒளிப்பதிவாளர் செந்தில்குமார் தான் இந்த திரைப்படத்திற்கும் ஒளிப்பதிவு. முந்தைய படங்களை போல, இந்த திரைப்படத்திலும் அசத்தியுள்ளார். ராஜமௌளியின் அனைத்து திரைப்படங்களுக்கும் கீரவாணி தான் இசை. பாடல்களை படமாக்கிய விதம் அருமை. பின்னணியில் வரும் "ஈ டா.. ஈ டா" பாடல் விறுவிறுப்பை அதிகரிக்கிறது. பின்னணி இசை நன்றாகவே கைகொடுத்திருக்கிறது.


குடும்பத்தோடு சென்று ஒருமுறை ரசித்து பார்க்கலாம். முடிந்தால் முயற்சி செய்துபாருங்கள்.


டிஸ்கி:

இந்த திரைப்படத்தை பெங்களூர் FORUM மாலில் உள்ள PVR வளாகத்தில் பார்த்தேன். அரங்கம் நிறைந்த காட்சி.

திரைஅரங்கமே கைதட்டி ரசித்து பார்த்து கொண்டிருக்க, என் அருகில் இருந்த நபர் மிக அமைதியாக திரையை வெறித்து பார்த்து கொண்டே இருந்தார். வேண்டா வெறுப்பாய் பார்க்கவந்தது போல இருந்தார். இடைவேளை முடிந்து வெகுநேரத்திற்கு பிறகும் அந்த நபர் தனது இருக்கைக்கு திரும்பவே இல்லை. அதன் பிறகு அவருடன் வந்திருந்த பெண் சென்று அவரை தேடி, வலிய அழைத்து வந்து இருக்கையில் அமர்த்தினார்.
SHARE
    Blogger Comments
    Facebook Comments

0 மறுமொழிகள்:

Post a Comment