சகுனி


கார்த்தி நடிப்பில் புதுமுக இயக்குனர் சங்கர் தயாள் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் சகுனி. இந்த திரைப்படத்தை காண கடந்த வியாழன் அன்றே சனிக்கிழமைக்கான சாயங்கால காட்சிக்கு ஆன்-லைனில் முன் பதிவு செய்துவிட்டேன். அடுத்த நாள் அலுவலகத்திற்கு போனால், என்னுடன் பணி புரியும் நண்பரின் நண்பர் வெள்ளிகிழமை காலை காட்சி பார்த்துவிட்டு, "ஏன்டா போனோம்" என்று தன்னிடம் புலம்பியதாக சொன்னார். அதை கேட்டதும் கொஞ்சம் வருத்தமாக இருந்தாலும், இந்த முறை விலை குறைவான டிக்கெட்டிற்கு முன் பதிவு செய்திருந்ததால் அதிக நஷ்டம் இல்லை என்று கொஞ்சம் சந்தோஷ பட்டுக்கொண்டேன். இந்த படத்திற்கு விளம்பரங்கள் கொஞ்சம் அளவிற்கு அதிகமாகவே கொடுக்கப்பட்டதால் என்னவோ, அந்த எதிர்பார்ப்புகளை இயக்குனரால் ஈடு செய்யமுடியவில்லை. புதுமுக இயக்குனரிடம் இருந்து அதிகமாக எதிர்பார்ப்பதும் சில நேரங்களில் சாத்தியமில்லாமல் போய்விடும். இந்த திரைப்படம் அதற்கு விதிவிலக்கல்ல.


காரைக்குடியில் தனக்கு சொந்தமான பாரம்பரியமிக்க வீட்டை இடித்து அந்த இடத்தின் வழியே ரயில்வே பாலம் கட்ட அரசாங்கம் முடிவு செய்வதால், அதை தடுக்க முதல் அமைச்சரின் உதவியை நாடி சென்னைக்கு வருகிறார் கார்த்தி. அதற்கு உதவ மறுக்கும் முதல் அமைச்சர் பிரகாஷ்ராஜை பதவியில் இருந்து இறக்கி தனது வீட்டை எப்படி காப்பாற்றுகிறார் என்பது தான் கதை. இதை வைத்தே நாம் முடிவுக்கு வந்திருப்போம், இது எந்த அளவிற்கு சாத்தியம் என்று. ஆகவே இது சாத்தியமில்லா கதை என்பதால் நாம் லாஜிக் என்பதை மறந்து ரசித்தால் மட்டுமே இந்த படம் உங்களுக்கு கொஞ்சமாவது பிடிக்கும் என்பது எனது கருத்து. என்னை கேட்டால் இந்த படத்திற்கு கதாநாயகி தேவையே இல்லை. கதாநாயகி ப்ரனிதா பாடல்களுக்கு மட்டுமே உபயோகபடுத்தபட்டிருக்கிறார். படத்தின் மிகபெரிய பலம் என்றால் அது சந்தானம்-கார்த்தி நகைச்சுவை காட்சிகள் மட்டுமே. டைட்டில் கார்டு போடும் போதும் சரி.. அறிமுக காட்சியிலும் சரி.. கார்த்தியை விட சந்தானமே அதிகமான கைதட்டல்களை பெறுகிறார். முக்கியமாக ஒரு காட்சியில் மது அருந்துபவர்களுக்கு ஆதரவாக பேசும்போது திரை அரங்கமே கைதட்டலில் அதிர்கிறது. இந்த நேரத்தில் எனக்கு கலகலப்பு திரைப்படத்தில் விமல் சந்தானத்திடம் கேட்கும் "உங்க ஊர்ல ஆண்கள் ஓட்டு அதிகமா?? பெண்கள் ஓட்டு அதிகமா??" என்ற கேள்வி தான் நியாபகத்திற்கு வந்தது. அதில் உண்மை இருக்கத்தான் செய்கிறது, சந்தானத்தின் பெரும்பாலான திரைப்படங்களில் மது அருந்துவது சம்பந்தப்பட்ட காட்சிகள் வந்திருக்கின்றன. அது போகட்டும், மது அருந்துவதும் அருந்தாததும் அவரவர் இஷ்டம்.


படத்தின் பாடல்கள் அந்த அளவிற்கு மனதில் நிற்கவில்லை. "மனசெல்லாம் மழையே.." அப்படின்னு ஒரே ஒரு பாடல் மட்டும் கேட்கும் விதமாக இருக்கு, ஆனால் அந்த பாடலும் தேவையே இல்லாத நேரத்தில புகுத்தி கடுப்பை கிளப்பிவிட்டார்கள்.



இது போக இந்த படத்தில் அனுஷ்கா, ஆன்ட்ரியா, ராதிகா, கிரண், ரோஜா என்று பல நடிகைகள் வருகிறார்கள். இதில் ராதிகாவின் கதாபாத்திரம் ஓரளவிற்கு நன்றாக இருக்கிறது. அடுத்த படியாக கிரணின் கதாபாத்திரமும் பரவா இல்லை. மற்றவர்கள் எல்லாம் சும்மா வந்து போகிறார்கள். கிரணின் நிலைமை ஏன் இப்படி ஆனதென்று தெரியவில்லை. பிரகாஷ்ராஜிற்கு சின்ன வீடு போன்ற ஒரு கதாபாத்திரம் கிரணிற்கு, கொடுமை. பிரகாஷ்ராஜை பழிவாங்க, அடி ஆட்களையும் ஆட்டோவையும் வைத்து ரவுடிஷம் நடத்தும் ராதிகாவை தேர்தலில் நிற்க வைத்து பிரகாஷ்ராஜின் ஆதரவு பெற்ற கிரணை தோற்கடிக்க வைக்கிறார் கார்த்தி. சாதாரண சாமியாராக இருந்த நாசரை, சில யோசனைகள் கொடுத்து பல கோடிகள் புரளும் போலி சாமிராக ஆக்குகிறார். இறுதியில், எதிர்க்கட்சி தலைவரான கோட்டா சீனிவாசராவை முதல்வராக்குகிறார். கோட்டாசீனிவாசராவ் முதல்வரானதும் கார்த்தியின் வீட்டை இடிக்காமல் தவிர்க்க அந்த ரயில்வே திட்டத்தையே நிறுத்துகிறார். இப்படியாக பிரகாஷ்ராஜை பழிவாங்கி தனது வீட்டை காப்பாற்றுகிறார் கார்த்தி.


டிஸ்கி: 

சந்தானம்-கார்த்தி நகைச்சுவை காட்சிகளுக்காக ஒரு முறை பார்க்கலாம்.

ஆன்-லைனில் டிக்கெட்டிற்கு முன் பதிவு செய்திருந்ததால் போன உடன் டிக்கெட்டை வாங்கி விட்டு உள்ளே சென்றுவிடலாம் என்று பார்த்தால், அங்கே அந்த டிக்கெட்டை வாங்குவதற்கும் ஒரு பெரிய லைன் நின்றுகொண்டிருந்தது. அப்புறம் தான் தெரிந்தது ஆன்-லைனுக்கு (on-line) அர்த்தம்.
SHARE
    Blogger Comments
    Facebook Comments

1 மறுமொழிகள்:

  1. Neengal kudiya viraivil Tamil Pulavar aga valthukal

    ReplyDelete