கலகலப்பு



சுந்தர்.சி யின் இயக்கத்தில் வந்திருக்கும் 25ஆவது திரைப்படம் கலகலப்பு. என்னை பொறுத்தவரை இவர் நடிகராக கலக்கியதை விட இயக்குனராக கலகலப்பூட்டியதே அதிகம். இவரது காமெடி கலக்கலில் வெளிவந்த "உள்ளத்தை அள்ளித்தா.. முறை மாமன்.. வின்னர்.." போன்ற படங்களை மறக்க முடியாது. இவர் கதாநாயகனாக நடித்து பலரது வெறுப்பை சம்பாதித்து விட்டு மீண்டும் இயக்குனராக மாறி இருக்கிறார் என்றே சொல்லலாம். இன்னும் சில காலம் நடிப்பை தொடர்ந்திருந்தால் நம்ம பவர் ஸ்டாருக்கு போட்டியாக மாறியிருப்பார். இவர் நடிப்பில் எனக்கு ஓரளவிற்கு பிடித்த திரைப்படம் என்றால் அது "தலைநகரம்" மட்டுமே. சரி.. பழைய கதை எல்லாம் நமக்கெதுக்கு.. இவர் மீண்டும் இயக்குனராக மாறியதற்கு மகிழ்ச்சி கொள்வோம்.

கும்பகோணத்தில் பல தலைமுறையாக சக்க போடு போட்ட "மசாலா கபே" என்ற உணவகம் தற்காலத்தில் அதிக வருமானம் இல்லாமல் சிதிலடைந்து கிடக்கிறது. அந்த "மசாலா கபே" உணவகத்தை அதன் உரிமையாளர்களான விமல் மற்றும் சிவா எப்படி தூக்கி நிறுத்துகிறார்கள் என்பதுதான் படத்தின் முக்கிய கதை. இந்த இரண்டு வரி கதையை வைத்துகொண்டு ரெண்டரை மணி நேர படத்தை நகைச்சுவையுடன் சொல்லியிருக்கிறார் இயக்குனர். இதற்கு கிளைக்கதையாக அஞ்சலியை திருமணம் செய்துகொள்ள துடிக்கும் சந்தானத்தின் பகுதியும், விலை உயர்ந்த வைரத்தை தேடித்திரியும் மற்றொரு கதாபாத்திரத்தின் பகுதியையும் கலந்திருக்கிறார்.


படத்தில் சிவா அறிமுகம் ஆகும் காட்சி முதலே தனது மொக்கையான நகைச்சுவை வசனங்களால் கலகலப்பூட்டுகிறார். படத்தின் இரண்டாம் பகுதியில் வரும் சந்தானம் தாமதமாக வந்தாலும் கலகலப்பிற்கு பஞ்சம் இல்லாமல் பார்த்துக்கொள்கிறார். சந்தானத்திற்கு துணையாக மனோபாலாவும் தன் பங்கிற்கு சேர்ந்து காமெடி கலாட்டா செய்துள்ளார். மொத்தத்தில் இந்த மூன்று பேரும் சேர்ந்துதான் படத்தை நகர்த்திக்கொண்டு செல்கின்றனர்.  இது போக இளவரசும் தன் பங்கிற்கு தன்னை துரத்தும் போலீஸ்காரருக்கு பயந்து கமல்ஹாசன் போல பல வேடங்களில் வந்து நகைச்சுவையில் பின்னுகிறார். சுகாதார ஆய்வாளராக வரும் அஞ்சலி கவர்ச்சிக்காக பயன்படுத்தப்பட்டிருக்கிறார். தனது ஹோட்டலை மூடுவதற்கு அறிக்கை அனுப்பும் அஞ்சலியை லஞ்சம் கொடுத்து சமாதானபடுத்த முயன்று இறுதியில் அவருடனான காதலில் விழுகிறார் விமல். இதே நேரத்தில் ஏற்கனவே தங்களது ஹோட்டலில் பணிபுரிந்து கொண்டு அங்கேயே தங்கி வாழும் ஓவியாவின் மீது காதல் கொள்கிறார் சிவா. இந்த இரண்டு ஜோடிகளும் இணைந்து அந்த காலத்தில் மக்கள் உண்டு மகிழ்ந்த உணவுப்பலகாரங்களை தங்களது ஹோட்டலில் அறிமுகப்படுத்தி புதுமையை ஏற்படுத்துகிறார்கள். இதனால், "மசாலா கபே" மீண்டும் பழைய பொலிவை அடைகிறது.


நகரத்தின் மையப்பகுதியில் இருக்கும் "மசாலா கபே" ஹோட்டலை கைப்பற்றி அதில் ஒரு வணிகவளாகம் கட்ட திட்டமிடுகிறார் ஒரு வியாபாரி. அதற்காக விமலின் பள்ளிபருவ நண்பனாக வரும் ஒரு போலிஸ் அதிகாரியிடம் உதவிகேட்கிறார் அந்த வியாபாரி. அந்த போலீஸ்காரரும் ஹோட்டலை நல்ல விலைக்கு விற்க விமலிடம் பேசிப் பார்கிறார், ஆனால் விமல் அதற்கு சம்மதிக்க மறுக்கிறார்.

இன்னொரு கிளைக்கதையில் நகைக்கடை அதிபரான பஞ்சு சுப்பு (பாஸ் படத்தில் ஆர்யாவின் அண்ணனாக வருவார்) பல கோடி மதிப்புள்ள, கணக்கில் வராத வைரத்தை பாதுகாக்க தனது செல்போனில் அதை யாருக்கும் தெரியாதபடி பதுக்கி, அந்த செல்போனையும் பழையகாலத்து வாள் ஒன்றையும் தனது மைத்துனனிடம் கொடுத்து, வாளை பத்திரமாக வைத்துகொண்டு தலைமறைவாக இருக்கும் படி அனுப்பிவைக்கிறார். ஆனால், அந்த செல்போனை ஒரு விபச்சாரியிடம் இழந்துவிடுகிறான் பஞ்சு சுப்புவின் மைத்துனன். இறுதியில் அந்த செல்போன் ஒவ்வொரு இடமாக கைமாறி கடைசியில் சிவாவின் கையில் வந்து செல்கிறது.


இந்த நேரத்தில் அஞ்சலி தனது தாத்தாவிற்கு உடல்நலம் சரி இல்லை என்று தனது சொந்த ஊருக்கு போகிறார். அதன் பின்னர் கிராமத்தில் தனக்கும் தனது மாமா சந்தானத்திற்கும் திருமண ஏற்பாடுகள் நடப்பதால் தன்னை வந்து அழைத்துசெல்லும்படி கடிதம் அனுப்புகிறார் அஞ்சலி. உடனே விமல் அங்கே பயணிக்கிறார். இந்த நேரத்தில் சிவா "மசாலா கபே" ஹோட்டலை வைத்து சீட்டு ஆட்டத்தில் விமலின் நண்பனான் அந்த போலிஸ்காரரிடம் தோற்றுவிடுகிறார். இறுதியில் விமல் அஞ்சலியை எப்படி கைப்பிடித்தார், இழந்த ஹோட்டலை எப்படி மீட்டார்கள், பஞ்சு சுப்பு தன் வைரத்தை எப்படி மீட்டார் என்பது தான் மீதிக்கதை.
 

மொத்தத்தில் லாஜிக் பார்க்காமல் சிரித்துமகிழ ஒரு முறை கலகலப்பிற்கு சென்று வரலாம்.
SHARE
    Blogger Comments
    Facebook Comments

0 மறுமொழிகள்:

Post a Comment