ஷிவ் மந்திர் - பெங்களூரு

 
எனக்கு பெங்களூரில் வார விடுமுறை நாட்களை கழிப்பது என்பது கொஞ்சம் சிரமமான விஷயம். சொந்த ஊருக்கு இரண்டு நாட்களை கழிப்பதற்காக பயணம் செய்வதை விட இங்கேயே இருந்துவிடலாம் என்று பெங்களூரிலேயே கழிப்பது வழக்கம். வெளியில் எங்காவது ஊர் சுற்ற செல்லலாம் என்றால், எங்கு செல்லலாம் என்கிற யோசனையிலையே  இரண்டு நாட்களும் கடந்துவிடும். சென்னைக்கு கடற்கரை என்றால், பெங்களூருக்கு பூங்காக்கள். சென்னையில் எப்படி கடற்கரையை சில (கள்ள)காதல் ஜோடிகள் நாசப்படுத்துகிறார்களோ, அதே போல இங்கேயும் பூங்காக்கள் நாசப்படுத்தபடுகின்றன. அதனால் பூங்காக்களுக்கு செல்ல மனம் ஏனோ விரும்புவதில்லை. பூங்காக்களை விட்டால், பல்பொருள் அங்காடிகள் (Shopping Malls) அதிகமாக உள்ளன. அங்கே போனால், பொருட்களை வாங்குவதை விட பார்ப்பதே அதிகம். ஆனாலும், பார்த்த பொருட்களையே எத்தனை முறைதான் பார்ப்பது. சரி நம்ம பதிவிற்கு வருவோம்..




திருமணத்திற்கு முன்பு அப்படி இருந்துவிட்டு, இப்பொழுதும் அப்படி இருக்க நினைத்தால் முடியுமா என்ன? கஷ்டம் தானே. இந்த வாரம் எங்கே போகலாம் என்று யோசித்துகொண்டிருந்த போது, என் மனைவி "பெங்களூரில் ஏதோ சிவன் கோவில் இருக்கிறதாமே?" என்று கேட்டாள். சரி, அங்கேயே போகலாம் என்று முடிவெடுத்துவிட்டேன். இந்த கோவிலுக்கு சுமார் 5 வருடங்களுக்கு முன்பு சென்ற நியாபகம். அதன் பிறகு நேற்று தான் மனைவியுடன் சென்றுவந்தேன். இனி இந்த கோவிலை பற்றி தெரிந்து கொள்வோம்...



1995 ஆம் ஆண்டு RVM என்பவரால் இந்த கோவில் கட்டப்பட்டது. இந்த கோவில் பெங்களூரு பழைய விமானநிலையத்திற்கு அருகில் உள்ளது. இந்த கோவிலின் சிறப்பே 65 அடி நீளமுள்ள சிவபெருமான் சிலை தான். இந்த கோவில் கயிலாயத்தை பிரதிபலிப்பது போல அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலிற்குள் இருக்கும் சிவபெருமானை தரிசிக்க இரண்டு வழிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு வழியாக சிறப்பு தரிசனம் என்கிற பெயரில் ஒரு நபருக்கு 50 வசூலித்து அனுமதிக்கிறார்கள். மற்றொரு வழியில் பொதுதரிசனம் என்கிற பெயரில் அனுமதிக்கிறார்கள். ஆனால், எனக்கு தெரிந்து பொது தரிசனத்திற்கும், சிறப்பு தரிசனத்திற்கும் இருக்கும் ஒரே வித்தியாசம் நீண்ட நேர வரிசை மட்டும் தான். நாங்கள் பொதுதரிசனம் வழியாக செல்லும் போது, உள்ளே தனியாக இரண்டு சேவை முகப்புகள் (counter) இருந்தன. முதல் கவுண்டரில் ஒரு நபருக்கு 30 வசூலித்தார்கள். இந்த கவுண்டரில் பணம் செலுத்தினால் மட்டுமே ஹரித்துவாரிலிருந்து பத்திரிநாத் செல்லும் பகதி யாத்திரையின் மாதிரி வடிவமைப்பை காண முடியும். அதன்பின் இருக்கும் இரண்டாவது கவுண்டரில் ஒரு நபருக்கு 20 ரூபாய் செலுத்தினால் பரஞ்சோதி லிங்க யாத்திரையின் மாதிரி வடிவமைப்பை காண முடியும். ஆகா மொத்தத்தில் இந்த கோவில் ஆன்மீகரீதியில் செயல்படுவதை விட வர்த்தகரீதியில் செயல்படும் இடமாகத்தான் அதிகம் விளங்குகிறது. இந்த கோவிலுக்கு 5 வருட இடைவெளியில் இதன் காரணமாகத்தான் செல்வதை தவிர்த்துவந்தேன்.


இப்படி ஒருவழியாக இந்த வாரம் கழிந்தது. சரி, இனி அடுத்த வாரத்தை பற்றி அப்புறமா யோசிப்போம்.
SHARE
    Blogger Comments
    Facebook Comments

0 மறுமொழிகள்:

Post a Comment