கூர்க் (Coorg) - ஒரு இனிய அனுபவம்


கடந்த சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் நண்பர்களுடன் "இந்தியாவின் ஸ்காட்லாந்து" என்று அழைக்கப்படும் கூர்க் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்று வந்தேன். சுமார் இருபது பேர் இந்த சுற்றுலாவில் பங்கு கொண்டோம். நண்பர்கள் கோபால் மற்றும் பரிதி இதற்காக ஒரு சிறிய பேருந்தை முன் பதிவு செய்தனர், மேலும் தங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் இவர்கள் கவனித்து கொண்டனர். அதனால் முதலில் அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். சரியாக காலை 4 மணி அளவில் எங்களது இருப்பிடத்தில் இருந்து நானும் நண்பர் பரிதியும் கிளம்பினோம். பின் அனைவரையும் அவர்களது இருப்பிடத்திற்கு சென்று அழைத்து கொண்டு ரயில் நிலையத்தை அடைந்தோம். சென்னையில் இருந்தும் சில நண்பர்கள் இந்த சுற்றுலாவிற்கு வந்ததால் அவர்களை நேராக பெங்களூரு ரயில் நிலையத்திலிருந்து அழைத்துக்கொண்டு அந்த வழியே பிரயாணத்தை தொடர்ந்தோம்.

உடன் வந்த நண்பர்களில் பெரும்பாலோனோர் இளைஞர்கள் [ பெரியநாயகி-1ஐ தவிர :) ] என்பதால் பொழுதுபோக்கிற்கும் சரி, கலந்துரையாடுவதற்கும் சரி, முகவும் எளிமையாக இருந்தது. போகும் வழியெங்கும் கை மொழி சொல் விளையாட்டு (Dumb Charad) , பாட்டு போட்டி (Anthakshari) , உண்மையா? துணிவா? (Truth or Dare) போன்ற விளையாட்டுகளை விளையாடிக்கொண்டே சென்றோம். இது போன்ற விளையாட்டுகளை எனது கல்லூரி பருவத்தில் விளையாடி பார்த்திருக்கிறேன்.

ஒரு வழியாக காலை 4 மணிக்கு தொடங்கி சுமார் மதியம் 1 மணி அளவில் கூர்க் மாவட்டத்தின் தலைநகரான மடிகேரி நகரத்தை அடைந்தோம். இந்தியாவின் ஸ்காட்லாந்து என்பதால் குளுமையான தட்பவெப்ப சூழ்நிலை இருக்கும் என்று நினைத்திருந்தேன். ஆனால், அங்கு இறங்கியதும் சூரியன் கொஞ்சம் சுட்டு எரிக்கத்தான் செய்தது. நாம் இதற்கெல்லாம் அசருவோமா என்ன..? ஹெ ஹே...


அதன் பின்னர் மதிய உணவை முடிக்க அங்கே இருந்த ஒரு உணவகத்திற்கு சென்றோம். நாங்கள் சாப்பிட்டு முடித்ததும், ஒரு யுத்தமே நடந்து முடிந்த உணர்வை கொடுத்தது அந்த இடம். அந்த அளவிற்கு செம கட்டு கட்டினோம். ஏதோ என்னால முடிந்த பங்களிப்பையும் கொடுத்தேன் அந்த யுத்தத்தில் ஹி ஹி ஹி... பிறகு ஒரு வழியாக நாங்கள் தங்க வேண்டிய இடத்தை அடைந்தோம். அதன் பின்னர் அங்கே கொஞ்ச நேரம் இளைப்பாறிவிட்டு,


மாலை சுமார் 4 மணி அளவில் அப்பே நீர்வீழ்ச்சிக்கு (Abbey Falls) சென்றோம். நீர்வீழ்ச்சியை காண சுமார் இரண்டு கிலோ மீட்டர் தொலைவிற்கு ஜீப்பில் பயணம் செய்தோம். அதன் பின்னர் நீர்வீழ்ச்சியை அடைந்தோம். ஆனால் அங்கே குளிப்பதற்கான வாய்ப்புகள் கிடையாது என்பதால், கொஞ்ச நேரம் புகைப்படங்கள் மட்டும் எடுத்தோம்.


இறுதியாக ராஜா சீட் (Raja Seat) என்று அழைக்கப்படும் பார்வை கோணப்(View Point) பகுதியை அடைந்தோம். அங்கும் சில புகைப்படங்களை எடுத்தோம். குறிப்பாக சூரியன் மறைந்த அந்த காட்சியை நான் மிகவும் ரசித்தேன்.அதன் பின்னர் அங்கே நடைபெற்ற "நீரூற்று நடனம்" பார்க்க நன்றாக இருந்தது. அதையும் கொஞ்ச நேரம் ரசித்துவிட்டு மீண்டும் மடிகேரி நகரத்திற்கு பயணித்தோம். அங்கே கொஞ்ச நேரம் உலாவி விட்டு பின்னர் இரவு உணவையும் அங்கேயே முடித்துவிட்டு சுமார் 10 மணி அளவில் நாங்கள் தங்கி இருந்த இடத்திற்கு மீண்டும் வந்து சேர்ந்தோம். இரவில் நாங்கள் தங்கி இருந்த இடத்தில் நெருப்பு முகாம் (Camp Fire) இட்டு, அனைவரும் ஒன்று கூடி ஆடி பாடி மகிழ்ந்தோம். சுமார் 8 வருடங்களுக்குமுன் கல்லூரியில் படிக்கும் போது, நாட்டு நலப்பணி திட்ட குழுவின் (NSS) சார்பாக ஒரு கிராமத்திற்கு 10 நாட்கள் சிறப்பு முகாமிற்கு சென்று இரவில் நண்பர்களுடன் போட்ட ஆட்டம் நியாபகதிற்கு வந்து போனது. மேலும், எங்களுடன் வந்திருந்த நண்பர் ஸ்ரீநாதிற்கு பிறந்த நாளையும் கொண்டாடினோம்.

மறுநாள் காலை நாங்கள் தங்கி இருந்த இடத்தை காலி செய்து விட்டு "தலைக்காவேரி" என்னுமிடத்தை நோக்கி பயணித்தோம். அங்கே செல்லும் வழியில் உள்ள பாகமண்டலம் எனப்படும் இடத்தில் வயிற்றை கொஞ்சம் நிறைத்து விட்டு [ அதாங்க காலை சாப்பாடு :) ], காலையும் கொஞ்சம் நனைத்தோம்.


அதாவது, பாகமண்டலம் என்பது "காவேரி", "கனிகா" மற்றும் "சுஜோதி" போன்ற மூன்று நதிகள் சங்கமிக்கும் இடமாகும். இங்கே தலை முழுகுவது நல்லது என்பது ஐதீகம். ஆனால் நாங்கள் காலை மட்டும் நனைத்துவிட்டு வந்தோம். அதன் பின்னர் தலைக்காவேரியை அடைந்தோம்.


இந்த இடத்தில் தான் காவேரி நதி தொடங்குகிறதாம். ஆனால் என்னால் அந்த இடத்தை பார்க்க முடியவில்லை. இங்கே கடவுள் பிரம்மாவிற்கு கோவில் எழுப்பி உள்ளார்கள். அது போக, அங்கே இருந்த மலை மீது ஏறி இறங்கிய அனுபவம் கொஞ்சம் கடினமாக இருந்தாலும் நான் மிகவும் ரசித்தேன்.


அதன் பின்னர் அங்கே, மோர் மற்றும் சில பல வடைகளை உள்ளே தள்ளிவிட்டு மீண்டும் பயணத்தை தொடர்ந்தோம். சுமார் மாலை 3 மணி அளவில் குஷால்நகர் எனப்படும் இடத்தை அடைந்தோம்.


அங்கே மதிய உணவை எடுத்து கொண்டோம். மீண்டும் ஒரு யுத்தம் நடந்து முடிந்தது :) . பிறகு நண்பர் செந்தில் தனது ரயிலை பிடிக்க வேண்டும் என்பதால் அங்கிருந்து ஸ்ரீராமின் வாகனத்தில் சென்றுவிட்டார். நாங்கள் குஷால்நகரிலிருந்து தங்ககோவிலை நோக்கி பயணித்தோம்.  


தங்ககோவில் பௌத்த மத துறவிகள் வசிக்கும் புத்த கோவிலாகும். இங்கே திபெத் நாட்டு துறவிகள் அதிகம் காணப்பட்டனர், தலாய்லாமாவின் புகைப்படங்களும் அதிகமாக கண்ணிற்கு தென்பட்டது.


தலாய்லாமாவின் போதனைகள் எனக்கும் மிகவும் பிடித்தமானவை [ கடைபிடிப்பது தான் கடினம்... ஹி.. ஹி.. ]. இறுதியாக அங்கிருந்து மைசூருக்கு வந்து சேர்ந்தோம், அங்கே நண்பர்கள் அழகேசன், தமிழ், ராஜா மற்றும் அவரது மனைவியை ரயில் நிலையத்திலிருந்து சென்னைக்கு வழி அனுப்பிவிட்டு பெங்களூருவை நோக்கி பயணித்தோம். இறுதியாக 1 மணி அளவில் வீடு வந்து சேர்ந்தேன்.


இருப்பு நீர்வீழ்ச்சி (Iruppu Falls) மற்றும் துபேர் (Dubare) [ யானைகளை பிடிக்கும், மற்றும் பயிற்றுவிக்கும் இடம் ] போன்ற இடங்களும் பார்ப்பதாக  திட்டமிட்டிருந்தோம். ஆனால், போகும் வழியில் சில நபர்கள் இருப்பு நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வரத்து இல்லை என்று கூறிய காரணத்தால் அங்கே செல்ல முடியவில்லை. நேரம் இல்லாத காரணத்தால் துபேருக்கும் செல்ல முடியவில்லை.

மொத்தத்தில், இந்த கூர்க் [ Coorg ] சுற்றுலா என் வாழ்வில் மறக்க முடியாத அனுபவம்.

டிஸ்கி1:
கூர்க் காஃபி, தேன், மிளகு போன்ற பொருட்களை வாங்குவதற்கு சிறந்த இடமாகும்.

டிஸ்கி2:
தோழி பெரியநாயகி-1 கேட்டுக்கொண்டதற்கு இணங்க, அவர்களை மட்டும் வயோதிகர் வரிசையில் சேர்த்துக்கொண்டதை திருத்தி, அவர்களை குழந்தைகள் வரிசையில் (அவங்க பையன் சூரியா கூட) இணைத்து விடுகிறேன் :)
SHARE
    Blogger Comments
    Facebook Comments

0 மறுமொழிகள்:

Post a Comment