மனம்

ஆளுமை திறன் பற்றிய குறிப்பு அடங்கிய 44 பக்கங்கள் கொண்ட புத்தகம் ஒன்று என்னுடைய பழைய புத்தகங்களை புரட்டும் போது கிடைக்க பெற்றேன். இந்த புத்தகத்தினை நான் கல்லூரியில் படிக்கும் போது ஸ்ரீராமகிருஷ்ண மடம் நடத்திய கண்காட்சியில்  வாங்கிய நியாபகம். இந்த புத்தகத்தில் மனித மனத்தை பற்றியும் அதன் குணங்கள் பற்றியும் எழுத பட்டிருந்த குறிப்பு என்னை கவர்ந்திருந்தது. அந்த கருத்துக்களை தான் இங்கு நான் தொகுத்து கொடுத்துள்ளேன்.

மனம் என்பது என்ன...?

உடலை விட உயர்ந்தது மனம். மனம் தான் உடலை உருவாக்குகிறதே தவிர, உடல் மனத்தை உருவாக்குவதில்லை. எண்ணங்களின் களஞ்சியமே மனதாகும். எதிர்மறையான தீய எண்ணங்களே மனத்தை பலவீனமாக்குகின்றன. பலவீனமான கட்டுப்படுத்தப்படாத மனம் எப்போதும் கவர்ச்சிகளுக்கு வசப்பட்டு மனிதனை அழிவுபாதையில் தள்ளுகிறது. தோல்விகளை எண்ணி குமைந்து கொண்டிருப்பது எதிர்மறை எண்ணங்களை தோற்றுவிக்க எதுவாகும். சில அதிர்ஷ்டசாலிகளுக்கு தடைகளின்றி வெற்றி கிடைக்கலாம். ஆனால் மற்றவர்கள் தடைகளை கடந்துதான் ஆக வேண்டும். ஆனால், வாழ்க்கையில் வரும் சவால்களை தைரியமாகவும் வலிமையோடும் எதிர்கொள்பவனே உண்மையான வீரன். அத்தகைய மனிதனானவன் எல்லாவித தடைகளையும் கடந்து சிங்கத்தை போல வெற்றியோடு வருவான். கஷ்டமோ அபாயமோ சூழும் தருணத்தில் ஒருவன் பயந்து ஓடாமல் அவற்றை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். கோழைகள் ஒரு போதும் வெற்றி கண்டதில்லை. பயம், துன்பம், அறியாமை இவை அகலவேண்டும் என்று நாம் விரும்பினால் அவற்றை போராடியே தீர வேண்டும்.

ஒருவன் தன்னை தானே உயர்த்திகொள்ள வேண்டும், தன்னை ஒருவன் இழிவுப்படுத்திக் கொள்ள கூடாது. ஏனெனில், தானே தனக்கு நண்பனும், தானே தனக்கு பகைவனும் ஆகிறான்; வலிமையான ஒழுக்கம் வாய்ந்த மனம் நண்பனைப்போல் நடந்து கொள்கிறது. ஆனால், பலவீனமான, கட்டுப்படாத, கபடத்தனமான மனமானது எதிரியினை போல நடந்து அழிவுக்கு தள்ளுகிறது.

எது வலிமையான மனம்...?

1. வலிமையான மனம், துன்பமான வேளையிலும்கூட எப்போதும் போல அமைதியாக இருக்கும்.

2. ஒருபோதும் அது கவர்ச்சிக்கு வசப்படுவதில்லை. மேலும் தீய எண்ணங்கள் மற்றும் செயல்களை அளவற்ற ஆற்றலோடு "கூடாது" எனக்கூறி தடை செய்யும்.

3. பாரபட்சம், சந்தேகம், பொறாமை போன்றவற்றிலிருந்து முற்றிலும் விடுபட்டது.

4. சிந்தனையின் தெளிவு நல்ல முடிவுகளை எடுக்கவும் நல்ல தீர்ப்புகளை வழங்கவும் செய்யும்.

5. அத்தகைய மனம் ஆசை, கோபம், பேராசை, பயம், வெறுப்பு போன்ற தீய உணர்ச்சிகளுக்கு ஆட்பட்டு தவறான செயல்களில் ஒருபோதும் ஈடுபடாது. ஆனால் உறுதியான, ஆழமான, சரியான சிந்தனையினால் எப்போதும் வழிநடத்தப்படும்.

6. ஆக்கப்பூர்வ சிந்தனை, ஒருமுகப்பட்டதன்மை, பயமின்மை, துணிவு, தன்னம்பிக்கை போன்றவை வலிமையான மனத்தினுடைய குணங்களாகும்.

எது பலவீனமான மனம்...?

1. பலவீனமான மனம் அற்ப விஷயங்களில் கூட எரிச்சல்பட்டு, நிலைக்கொள்ளாமல் தவித்து வன்முறையில் இறங்கும்.

2. அத்தகைய மனம் லஞ்சம், திருட்டு, போன்ற கவர்ச்சிகளுக்கு எளிதில் வசப்படும்.

3. குழப்பம், சந்தேகம், தவறான எண்ணம் போன்றவற்றினால் நல்ல முடிவினை எடுக்காது நேர்மையற்ற தீர்ப்பினை வழங்கிவிடும்.

4. அத்தகைய மனம் எப்போதும் தீய சக்திகளிடம் சரணடைந்து ஒப்பந்தப் படுத்திக்கொள்ளும்.

5. வாழ்க்கையின் சவால்களை அதனால் எதிர்கொள்ள முடியாது. அதிலிருந்து தப்பிக்க கீழ்தரமான வழியைக் கையாளும்.

6. அத்தகைய மனம் எதற்கெடுத்தாலும் அழுதபடியும் குறைகூறியாவாறும் இருக்கும்.

7. ஒரு போதும் அத்தகைய மனம் மற்றவர்களிடம் உள்ள நல்லவற்றை பாராட்டாது.

8. பரபரப்பு, பயம் உணர்ச்சிவசப்படுதல், சோம்பல், ஆர்வமின்மை, மூட நம்பிக்கை, எதிர்மறை சிந்தனை போன்றவை பலவீனமான மனத்தின் முக்கிய குணங்களாகும்.
 
SHARE
    Blogger Comments
    Facebook Comments

0 மறுமொழிகள்:

Post a Comment