உடான்

இந்த திரைப்படம் சென்ற வருடம் வெளிவந்த ஹிந்தி திரைப்படங்களில் குறிப்பிடத்தக்கது. பதின்பருவ பசங்களின் பிரச்சனைகள், அவர்களின் ஆசைகள், அவர்கள் கடந்து வரும் தடைகள் என அனைத்தை பற்றியும் இந்த படம் பேசுகிறது. முக்கியமாக, அவர்களின் தந்தை எப்படி இருக்க கூடாது என்பதை பற்றியும் பேசுகிறது. கீழே உள்ள புகைப்படத்தை உற்று பார்த்தாலே பாதி விஷயம் உங்களுக்கு விளங்கிவிடும்.


இந்த திரைப்படத்தின் ஆரம்ப காட்சியை பார்த்த போது என்னுடைய கல்லூரி நாட்கள் நியாபகத்திற்கு வந்தது. நான் முதல் இரண்டு வருடங்கள் கல்லூரில் படிக்கும் போது, கல்லூரி விடுதியில் தான் தங்கி இருந்தேன். எனது கல்லூரியும் சரி, விடுதியும் சரி மிகவும் கட்டுப்பாடுகள் நிறைந்தது. விடுதி காவலரின் அனுமதி இன்றி விடுமுறை நாட்களில் கூட வெளியே செல்ல முடியாது. சனிக்கிழமைகளில் மட்டும் மாலை நேரத்தில் சென்று வர அனுமதி உண்டு. அந்த அளவிற்கு கட்டுப்பாடுகள் அதிகம். அவ்வளவு கட்டுப்பாடுகள் நிறைந்த விடுதியில், ஒரு விடுமுறை நாளின் போது விடுதி காவலர்களின் கண்களில் மண்ணை தூவி விட்டு திரைப்படத்திற்கு சுமார் ஆறு கிலோ மீட்டர்கள் நடந்தே சென்ற அனுபவம் எனக்கு உண்டு. நான் செல்வதை பார்த்து, என்னை பின் தொடர்ந்து வந்த நண்பர்களும் உண்டு.


சரி படத்திற்கு வருவோம், ஆரம்ப காட்சியில் 17 வயசான ரோஹன் ஷீம்லாவில் உள்ள ஒரு உயர்ந்த அந்தஸ்து உடைய பள்ளியில் இருந்து வெளியேற்றபடுகிறான். காரணம், அவனும் அவனது மூன்று நண்பர்களும் சேர்ந்து விடுதி காவலருக்கு தெரியாமல் இரவு பலான திரைப்படத்தை பார்க்க செல்ல, அதே திரை அரங்கில் விடுதி காவலர் ஒரு பெண்ணுடன் இருக்க அனைவரும் மாட்டி கொள்கின்றனர். பள்ளியில் இருந்து வெளியேற்றபட்டதால் அவனது சொந்த ஊரான ஷாம்ஸெத்பூருக்கு பல வருடங்களுக்கு பிறகு ரயிலில் வந்து இறங்குகிறான். அவனை அழைத்து செல்லவந்த தந்தையோ அந்நியனை போல அங்கு நிற்கிறார்.


வீட்டிற்கு வந்த பிறகு தான் ரோஹனுக்கு தெரிகிறது, அவனுக்கு ஆறு வயதில் அர்ஜுன் என்று ஒரு தம்பி இருப்பது. தம்பி என்றால், அவனது தந்தையின் இரண்டாம் மனைவிக்கு பிறந்தவன். முதல் மனைவி இறந்ததால், இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். ஆனால்,  அர்ஜுன் பிறந்த பிறகு அவரது இரண்டாம் மனைவியும் இறந்துவிட்டார். மேலும் அந்த வீட்டில் தங்க   அவனது தந்தை பல கட்டளைகளை அவனுக்கு இடுகிறார். தன்னை அப்பா என்று அழைக்கக்கூடாது என்றும், தன்னை சார் என்றுதான் அழைக்க வேண்டுமென்றும் சொல்கிறார், மேலும் மாலைநேர கல்லூரியில், தான் சொல்லும் பிரிவில் சேர்ந்து படிக்க வேண்டும் என்கிறார், இது போக, காலை முதல் மாலை வரை தன்னுடைய இரும்பு தொழிற்சாலையில் பணி புரிய வேண்டும் என்றும் கட்டளை இடுகிறார். ரோஹனும் இதற்கு வேறு வழி இன்றி ஒத்துகொள்கிறான். ஆனால், உண்மையில் அவனுக்கு ஒரு எழுத்தாளனாக வரவேண்டும் என்பது ஆசை.


காலையில் எழுந்தவுடன் தன்னுடன் சில கிலோ மீட்டர் ஓட வேண்டும், அங்கே உள்ள பூங்காவில் உடற்பயிற்சி செய்யவேண்டும், ஓட்டம் முடிந்து வீடு திரும்பும் போது தன்னோடு ஓட்ட பந்தயத்திற்கு வரவேண்டும் என்பது கூடுதல் உத்தரவு. கிட்டதட்ட மற்றவர்களை துன்புறுத்தும் ஒரு வித மனநோயாளி போல இருக்கும் ரோஹனுடைய தந்தையின் செயல்பாடுகள்.


இந்நிலையில், ரோஹனுக்கு இருக்கும் ஒரே ஆதரவு அவனது அத்தையும், மாமாவும் தான். தனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் கவிதைகள், கதைகள் எழுதுகிறான் ரோஹன். ஒரு நாள், மனசோர்வு அதிகரிக்கவே அவனது தந்தைக்கு தெரியாமல் நான்கு சக்கர வாகனத்தை இரவு எடுத்து கொண்டு மது அருந்த சென்று விடுகிறான். அங்கே அவனுடைய கல்லூரியில் படிக்கும் மூத்த மாணவர்களின் நட்பு கிடைக்கிறது. அன்று முதல் தினமும் இரவு மது அருந்த வந்து விடுகிறான்.


இது இப்படியே செல்ல, ஒரு நாள் அர்ஜுனுக்கு உடல் நலம் சரி இல்லாமல் போக வேகமாக மருத்துவமனையில் அனுமதிக்கபடுகிறான். ரோஹனிடம் அர்ஜுனை பார்த்து கொள்ள சொல்லிவிட்டு வியாபார விஷயமாக அவர்களது தந்தை வெளியூர் சென்று விடுகிறார். அவர், சென்ற பிறகுதான் ரோஹனுக்கு தெரியவருகிறது, அவர் பலமாக அர்ஜுனை துன்புறுத்தியதாலே அவனுக்கு உடல் நலம் சரி இல்லாமல் போனதென்று. ரோஹன் மருத்துவமனையில் தங்கி இருந்த காலகட்டத்தில், அவனது கவிதைகள், கதைகள் மூலாம் அங்கு உள்ள அனைவரையும் கவர்கிறான்.


இது அங்கே திரும்பி வரும் அவனது தந்தைக்கு பிடிக்கவில்லை. எனவே, அவனை அடித்து துன்புறுத்துகிறார். அடுத்தநாள், ரோஹன் மற்றும் அர்ஜுன் இருவரிடமும் தான் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்கிறார். அது போக, அர்ஜுனை ரோஹன் படித்த பள்ளிக்கூடத்தில் விடுதியில் தங்கி படிக்க வைக்க போவதாகவும், ரோஹன் முழூ நேரமும் தனது தொழிற்சாலையில் பணி புரியவேண்டும் என்றும், இறுதியாக தான் இன்னொரு திருமணம் செய்து கொள்ள போவதாகவும் கூறி குண்டுகளை அள்ளி வீசுகிறார்.


இதன் பிறகு ரோஹன் மற்றும் அர்ஜுன் நிலமை என்னவாயிற்று என்பதை திரைப்படத்தில் கண்டுகளியுங்கள்.

டிஸ்கி:
இந்த திரைப்படம் புகழ் பெற்ற கேன்ஸ் திரைப்படவிழாவில் சென்ற வருடம் திரையிடப்பட்டது.
SHARE
    Blogger Comments
    Facebook Comments

0 மறுமொழிகள்:

Post a Comment