Inglourious Basterds (2009)

திருமணம் ஆன பிறகு எழுதும் முதல் பதிவு இது. திருமணத்திற்கு பிறகு இரண்டு படங்கள் பார்த்தாகி விட்டது. ஆனால் அவற்றை பற்றி எழுதும் சந்தர்ப்பம் அமையவில்லை. ஆனாலும் சமீபத்தில் நான் பார்த்த இந்த படத்தை பற்றி எழுத வேண்டும் என்று தோன்றியதால் இப்பொழுது எழுதுகிறேன். இதற்கு காரணம் சின்ன வயதிலிருந்தே எனக்கு இந்த மாதிரியான வரலாற்று கதை அம்சம் கொண்ட திரைப்படங்களின் மீது இருந்த ஆர்வமே. அதுவும் ஹிட்லர் சம்பந்தபட்ட திரைப்படம் என்றால் சொல்லவே வேண்டாம், அந்த அளவிற்கு ஆர்வ கோளாறாக ஆகிவிடுவேன் நான். சரி அப்படி என்ன தான் சொல்ல வருகிறது இந்த திரைப்படம் என்று இனி பார்ப்போம்.


ஹிட்லர் என்றதும் நமக்கு உடனே நினைவுக்கு வருவது இரண்டாம் உலகப்போர் தான். அந்த வேளையில் அனைத்து வல்லரசு நாடுகளின் கண்களிலும் விரலை விட்டு ஆட்டிகொண்டிருந்தார் ஹிட்லர். அவர் மட்டும் ரஷ்யா மீது படை எடுக்காமல் இருந்திருந்தால் வரலாறே மாறி இருந்திருக்கும். அதே நேரத்தில், ஹிட்லர் என்றால் நம் நினைவுக்கு வரும் மற்றொரு விஷயம் யூதர்களின் படுகொலை. வரலாற்று நிபுணர்கள் இதற்கு பல விதமான காரணங்களை முன் வைத்தாலும், இனவெறி ஒரு காரணமாக இருக்கலாம் என்பதே பெரும்பாலோனோரின் கருத்து. மற்றபடி பல லட்ச கணக்கான யூதர்களை கொன்று குவிக்கும் அளவிற்கு ஹிட்லரின் வெறுப்பை எப்படி யூதர்கள் சம்பாதித்தார்கள் என்பது புலப்படாத ஒரு விஷயம். இந்த திரைப்படமும் யூதர்களின் படுகொலை பற்றிய ஒன்றே. 1941 ஆம் ஆண்டில் ஜெர்மனி நாட்டின் ஆதிக்கத்தில் பிரான்ஸ் நாடு இருந்த போது, அந்த நாட்டில் நடந்த வரலாற்று சம்பவங்களை மையமாக வைத்து தனது கற்பனையையும் அதில் தெளித்து இந்த திரைக்கதையை உருவாக்கி இருக்கிறார் படத்தின் இயக்குனர்  குயென்டின் டரன்டினோ  (Quentin Tarantino). படத்தின் ஆரம்பத்தில் பிரான்ஸ் நாட்டின் ஒரு பகுதியை சேர்ந்த பால் பண்ணையில் வசிக்கும் பெர்ரியர் லபடிடே (Perrier Lapadite) வீட்டிற்கு தனது ஜெர்மானிய வீரர்களுடன் வருகிறார் ஹான்ஸ் லாண்டா (Hans Landa).


லாண்டாவின் வேலையே பிரான்சில் இருக்கும் யூதர்களை குடும்பத்தோடு அழிப்பது தான். அப்படி இருக்க, பெர்ரியரின் வீட்டில் ஒரு யூத குடும்பம் பதுங்கி இருக்கலாம் என்ற சந்தேகத்தில் விசாரிக்க வருகிறார். ஆரம்பத்தில் மிகவும் பாந்தமாக பேசும் அவனது பேச்சில், போக போக குரூரம் வெளிப்படுகிறது. இறுதியில் லாண்டாவின் மிரட்டலுக்கு பயந்து, தனது வீட்டிற்கு கீழே இருக்கும் அடுக்கில் அந்த குடும்பம் பதுங்கி இருப்பதாக காட்டிகொடுத்துவிடுகிறான் பெர்ரியர். லாண்டா தன வீரர்களை அழைத்து இரக்கமே இல்லாமல் அந்த யூத குடும்பத்தை சுட்டுகொல்கிறான். அப்போது, அந்த துப்பாக்கி சூட்டிலிருந்து சொஷானா (Shosanna) மட்டும் தப்பித்து விடுகிறாள்.


இந்த சம்பவம் நடந்து சில வருடங்களுக்கு பிறகு, அமெரிக்க ராணுவ அதிகாரி அல்டோ (Aldo Raine - Brad Pitt) தலைமையில் ஒரு அமெரிக்க-யூதர்கள் சார்ந்த குழு உருவாகிறது. இந்த குழுவின் பெயர் தான் பாஸ்டர்ட்ஸ் (Basterds). இந்த குழுவின் ஒரே வேலை, பிரான்ஸ் நாட்டில் இருக்கும் ஒவ்வொரு ஜெர்மானிய ராணுவ வீரர்களையும் கொன்று குவிப்பது தான். அது போக, அந்த குழுவில் உள்ள ஒவ்வொரு வீரரும் தனக்கு நூறு ஜெர்மன் நாட்டு ராணுவ வீரர்களின் தலை பகுதியை சமர்பிக்கவேண்டும் என்று ஆணை இடுகிறான் அல்டோ.


படத்தின் ஆரம்பத்தில் லாண்டாவிடம் இருந்து தப்பித்த சொஷானா,  மிமியேக்ஸ் (Emmanuelle Mimieux) என்று தனது பெயரை மாற்றி கொண்டு பாரிஸில் ஒரு திரைஅரங்கத்தை நடத்திவருகிறாள். அப்போது யதோச்சையாக சொஷானாவை சந்திக்கும் பிரெட்ரிக் (Fredrick Zoller) என்ற ஜெர்மானிய போர்வீரன் அவள் மீது ஆசை கொள்கிறான். ஆனால் அவளுக்கு அவனின் மீது துளிகூட நாட்டம் இல்லாததால் அவனை விட்டு விலகி செல்கிறாள். இப்படி இருக்கும் போது, போரில் பிரெட்ரிக் செய்த சாகசங்களை விளக்கும் ஆவணபடத்தை ஹிட்லர் உட்பட ஜெர்மன் நாட்டு ராணுவத்தின் உயர் அதிகாரிகளுக்கு காண்பிக்க திரை அரங்கம் கிடைக்காததால், அந்த படத்தை சொஷனாவின் திரைஅரங்கில் திரையிட முடிவு செய்கிறான் பிரெட்ரிக். அதற்கான அனுமதியை பெற சொஷானாவை ஜோசெப் (Joseph கோஎப்பெல்ஸ்) என்ற அதிகாரியுடன் சந்திக்க ஏற்பாடு செய்கிறான் பிரெட்ரிக். அந்த சந்திப்பின் போது சொஷானா, அவளுடைய குடும்பத்தை சில வருடங்களுக்கு முன் அடியோடு அழித்த லாண்டாவையும் சந்திக்க நேரிடுகிறது. அப்போது ஒரு வழியாக சமாளித்து லாண்டாவிடம் இருந்து தப்புகிறாள். இந்த ஆவண படத்தை தனது திரை அரங்கில் திரையிட்டால் அதை காண ஹிட்லர் உட்பட பல ஜெர்மன் நாட்டு நாஸிப்படை வீரர்கள் வருவார்கள், அப்போது அவர்கள் அனைவரையும் திரை அரங்கத்தோடு எரித்துவிடலாம் என முடிவு செய்கிறாள்.


இதே நேரத்தில், இங்கிலாந்தின் எட் பிநெச்(Ed Fenech) என்ற ராணுவ அதிகாரி, ஆபரேசன் கீனோ (Operation Kino) என்ற திட்டத்தின் மூலம் அதே ஆவண படம் திரையிடப்படும் இடத்தில் அனைவரையும் சுட்டுக்கொல்ல முடிவு செய்கிறான். இதற்காக பாஸ்டர்ட்ஸ் குழுவை சேர்ந்த இரண்டு ராணுவ வீரர்களை பிரான்சிற்கு அனுப்பி வைக்கிறான் எட். மேலும் இவர்கள் அந்த திரை அரங்கத்திற்குள் நுழைய ஜெர்மன் நாட்டு திரைப்பட நடிகையும், இங்கிலாந்தின் ரகசிய உளவாளியுமான பிரிட்ஜெட் (Bridget von Hammersmark) உதவுகிறாள். மதுபான கடையில் ஒரு நாள் இரவு, ஆபரேசன் கீனோவிற்காக அனுப்பப்பட்ட அந்த இரண்டு ராணுவ வீரர்களும், நடிகை பிரிட்ஜெட்டும் பேசிக்கொண்டிருக்கும் போது அங்கே யதோச்சையாக வரும் ஜெர்மன் நாட்டு ராணுவத்தின் உயர் அதிகாரி வில்ஹெல்ம் (Wilhelm) அவர்களோடு பேச ஆரம்பிக்கிறான். அவர்களுடன் உரையாடிகொண்டிருக்கும் போது அந்த இருவரின் உச்சரிப்பு மட்டும் வேறுபட்டிருப்பதை உணர்கிறான் வில்ஹெல்ம். மேலும், குடிப்பதற்காக மூன்று கோப்பைகள் மதுபானத்தை கொண்டுவர சொல்கிறான் வில்ஹெல்ம். அப்போது அங்கே இருந்த அந்த இரண்டு ராணுவ வீரர்களில் ஒருவன் மூன்று விரல்களை காட்டி மீண்டும் ஒருமுறை மூன்று கோப்பைகள் மதுபானம் என்று சொல்ல, வில்ஹெல்மின் சந்தேகம் உறுதியாகிறது.


காரணம், ஜெர்மன் நாட்டில் மூன்று என்பதை சுட்டிக்காட்ட கட்டை விரல், ஆள்காட்டி விரல் மற்றும் நாடு விரலை உபயோகிப்பார்கள். ஆனால், அந்த ராணுவ வீரன் சுண்டு விரல், மோதிர விரல் மற்றும் நடு விரலை காட்டி மூன்று என்பதை சுட்டிகாட்டினான். அதன் பிறகு சிறிது நேரத்தில் அங்கே பலத்த துப்பாக்கி சூடு நடக்கிறது. அப்போது தான் நமக்கு தெரிகிறது அந்த மதுபான கடைக்குள் ஜெர்மன் நாட்டு வீரர்களும் பாஸ்டர்ட்ஸ் குழுவை சேர்ந்தவர்களும் கலந்திருந்தது. அந்த துப்பாக்கி சூட்டில் அங்கே இருந்த அனைவரும் இறக்கின்றனர், நடிகை பிரிட்ஜெட் மட்டும் காயங்களுடன் உயிர் தப்புகிறாள்.

பாஸ்டர்ட்ஸ் குழுவின் தலைவன் அல்டோ அவளை அங்கிருந்து தூக்கி சென்று காப்பாற்றுகிறான். மேலும், அதற்கு பதிலாக தானும் தனது குழுவை சேர்ந்த இருவரும் திரை அரங்கத்தில் நுழைய உதுவுமாறு கேட்கிறான். ஆனால், அங்கே சென்றால் பிரெஞ்ச் மொழி பெசவேண்டிருக்கும் இல்லாவிட்டால் அங்கே இருப்பவர்களுக்கு சந்தேகம் வரக்கூடும் என்று சொல்கிறாள் பிரிட்ஜெட். தங்களுக்கு ஆங்கிலம் தவிர கொஞ்சம் இத்தாலி மொழி பேச தெரியும், அதனால் சமாளித்து கொள்ளலாம் என்கிறான் அல்டோ. அதனால், தனது காலில் ஏற்பட்ட காயங்களுடன் அந்த திரை அரங்கத்திற்கு செல்ல சம்மதிக்கிறாள் பிரிட்ஜெட். இதே நேரத்தில், அந்த துப்பாக்கி சூடு நடந்த இடத்திற்கு வரும் லாண்டா, பிரிட்ஜெட் விட்டு சென்ற ஒற்றை கால் செருப்பை கண்டு பிடித்துவிடுகிறான். மேலும், அந்த துப்பாக்கி சூடு நடப்பதற்கு கொஞ்ச நேரத்திற்கு முன் ஒரு ராணுவ அதிகாரிக்கு தனது கையெழுத்தை போட்டு கொடுத்த கைக்குட்டையையும் கண்டுபிடிக்கிறான் லாண்டா.



அடுத்த நாள், அந்த திரை அரங்கத்தில் லாண்டா உட்பட அனைத்து ஜெர்மன் நாட்டு வீர்களும் வருகிறார்கள். அங்கே பிரிட்ஜெட், அல்டோ மற்றும் இரண்டு சக பாஸ்டர்ட்ஸ் குழுவை சேர்ந்த வீர்களும் வருகிறார்கள். அப்போது பிரிட்ஜெட் அருகே வரும் லாண்டா, அவளுடன் தனியாக பேசவேண்டும் என்று தனி அறைக்கு அழைத்து சென்று பிரிட்ஜெட்டை கொன்றுவிடுகிறான். மேலும், அல்டோவையையும் கைது செய்துவிட்டு அவனுடன் திரை அரங்கை விட்டு வெளியேறுகிறான் லாண்டா. அனால் மற்ற இரண்டு பாஸ்டர்ட்ஸ் குழுவை சேர்ந்த வீரர்கள் கால்களில் வெடிகுண்டை கட்டிக்கொண்டு திரை அரங்கத்திற்குள் நுழைந்துவிடுகிறார்கள். இதே நேரத்தில் சொஷானா ஆவணப்படத்தை திரையிட ஆரம்பிக்கிறாள்.


ஹிட்லரும் திரை அரங்கத்திற்குள் நுழைகிறார். திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கும் போதே, தனது நண்பனின் உதவியோடு திரை அரங்கத்தை சுற்றி தாளிட்டு அடைத்துவிடுகிறாள் சொஷானா. மேலும், திரைக்கு பின்னே அதிக அளவிலான வெடிக்கும் தன்மை கொண்ட நைட்ரேட் படசுருளை குவித்து வைத்துவிடுகிறாள். படத்தின் இறுதி ரீலுக்கு முன்,  பிரெட்ரிக், சொஷானாவை ஆபரேட்டர் அறையில் சந்திக்க செல்கிறான்.  அப்போது, சொஷானாவிற்கும் பிரெட்ரிக்கிற்கும் இடையே நடக்கும் துப்பாக்கி சண்டையில் இருவருமே இறந்து விடுகிறார்கள். இதே நேரத்தில், சொஷானாவின் திட்டப்படி படத்தின் இறுதி ரீல் ஓடும் போது, அவளது நண்பன் அந்த நைட்ரேட் படசுருளுக்கு தீ வைத்து விடுகிறான். ஒருபுறம் முன்பே மாற்றம் செய்யப்பட்டிருந்த படத்தின் கடைசி ரீலில் சொஷானா, "நீங்கள் எல்லாரும் சாக போகிறீர்கள்" என்று சொல்லி திரையில் சிரிக்க, மறுபுறம் திரை அரங்கமே பற்றி எரிகிறது. நெருப்பிலிருந்து தப்பிக்க ஜெர்மன் நாட்டு வீரர்கள் அங்கும் இங்கும் ஓடும் போது, பாஸ்டர்ட்ஸ் குழுவை சேர்ந்த அந்த இருவரும் தாங்கள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் ஹிட்லர் உட்பட அனைவரையும் சுட்டு வீழ்த்துகின்றனர். இறுதியில் அந்த திரைஅரங்கமே சுடுகாடாகிறது.



இறுதியில் அல்டோ மற்றும் லாண்டாவின் நிலைமை என்னவென்று படத்தை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். முழுக்கதையையும் சொன்ன நல்லா இருக்காது, அதனால் இதை மட்டும் சொல்லாமல் விட்டு வைக்கிறேன்.

டிஸ்கி:
இந்த திரைப்படம் கொஞ்சம் மெதுவாக நகர்ந்து செல்லக்கூடியது. சிறிதளவு பொறுமை இருந்தால் ரசித்து பார்க்கலாம்.

யுத்தம் சம்பந்தபட்ட திரைப்படம் என்பதால் ரத்தத்தை கொஞ்சம் அதிகமாகவே தெளித்திருக்கிறார்கள்.

இந்த திரைப்படத்தில் லாண்டாவாக நடித்த வால்ட்ஸிற்கு (Christoph Waltz) சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருது கிடைத்தது.

 
SHARE
    Blogger Comments
    Facebook Comments

0 மறுமொழிகள்:

Post a Comment