முப்பொழுதும் உன் கற்பனைகள்


மொக்கையான திரைப்படங்களை கூட பார்த்து விடலாம்.. மரண மொக்கையான படங்களை பார்த்து முடிப்பதற்குள் பொறுமை என்பதன் அர்த்தத்தை வற்புறுத்தி நமக்கு புரிய வைத்துவிடுவார்கள். இந்த திரைப்படம் இரண்டாம் ரகம்.

படத்தின் முதல் காட்சியை நான் பார்க்கவில்லை. ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் நல்ல பொறுப்பில் இருக்கும் ராம் (அதர்வா) அவரிடம் ஜொள்ளுவிடும் பெண்களை கூட கண்டுகொள்ளாத கண்ணியமானவராக எனக்கு அறிமுகமாகிறார் (ஏற்கனவே முதல் காட்சியில் டெரராக அறிமுகம் ஆயிட்டாருன்னு அப்புறமாதான் என் தோழி சொன்னாள்). அடுத்த காட்சியில் தனது நான்கு சக்கர வாகனத்தில் ஒரு பாட்டை படித்துக்கொண்டே சென்னையிலிருந்து பெங்களூருக்கு பயணம் போகிறார். இந்த கனவுப்பாடலில் சாரு (அமலாபால்), வெள்ளைக்கார நண்பர்கள் சகிதமாக வந்து போகிறார். அப்புறம் கட் பண்ணினா பெங்களூரில் சாருவுடன் இரண்டு நாட்கள் தங்குகிறார். முதல் நாள் இரவில் தன் முகத்தில் கரியை பூசிக்கொண்டு (மாறு வேஷமாம்) நடுரோட்டில் ஒருவனை கொடூரமாக கொலைசெய்துவிடுகிறார். அடுத்தநாள் சாரு தன்னை வெளியே அழைத்து செல்லுமாறு கேட்க, எல்லா பிரச்சனைகளும் முடிந்தபிறகு கூட்டிட்டு போறேன்னு சொல்லிட்டு சென்னைக்கு வருகிறார். அதே நேரத்தில் அமெரிக்காவில் லதாவிற்கும் (அமலாபால்) இன்னொருத்தருக்கும் நிச்சயதார்த்தம் நடக்குது. இந்த மாப்பிள்ளைக்கு இரண்டு வெள்ளைக்கார நண்பர்கள் இருக்குறதாக இயக்குனர் புத்திசாலிதனமா அப்பவே அறிமுகபடுத்திடுறார். நான் கூட அமலாபாலுக்கு இந்த படத்துல இரட்டை வேடம் அப்படின்னு நினைத்தேன். ஆனா அதுதான் இல்ல. அடுத்த காட்சியில் இந்தியாவுல இருக்கும் தன்னோட சாப்ட்வேர் கம்பெனிய கொள்வதற்கு அமெரிக்காவில் இருந்து சென்னைக்கு கிளம்பிவருகிறாள் லதா, கூடவே சந்தானமும் வறார்.


இங்க வந்தால், ராம் லதாவை தெரியாதது போலநடந்து கொண்டதால் சிறிதாக அதிர்ச்சி அடையுறமாதிரி முகபாவனை காட்டுகிறாள் லதா. எந்த பொண்ணாவது ராமிடம் சென்று பேசினால் சந்தானத்தை வைத்து அவர்களை கலைத்து விடுகிறாள். இதற்கிடையில் அவ்வப்போது பெங்களூரில் இருக்கும் சாருவிடம் கைபேசியில் பேசிக்கொண்டு வேற இருக்கிறார் ராம். சாருவிடம் பேசும்போது தனக்கு உயர் அதிகாரத்தில் இருக்கும் பெண் உன்னை போலவே இருப்பதாக சொல்கிறான் ராம். இதெல்லாம் ஏன் அப்படின்னு யோசிக்கிறதுக்குள் அடுத்தகாட்சியில் ராமும் லதாவும் செல்லும் நான்கு சக்கர வாகனத்தை ஒரு கன்டைனர் லாரி விரட்டுகிறது. அதில் இருந்து தப்பிக்க இரண்டு பேரும் அவர்களுடைய வண்டியில் இருந்து குதிக்கிறார்கள். அந்த லாரி இவர்களுடைய வாகனத்தில் மோதி, அதை சுக்குநூறாக்குது (நான் பார்த்ததிலேயே ரொம்ப மொக்கையான காட்சி இதுதான்). அதன் பிறகு கீழ விழுந்ததில் ராம் மயக்கமாகி விட, லதா ராமை  மருத்துவமனைக்கு கொண்டுசெல்கிறார். பின்னர் மருத்துவராக வரும் ஜெயபிரகாஷிடம் ராமை எனக்கு முன்பே தெரியும். ஆனால் என்னை தெரியாதது போல காட்டிகொள்கிறார். அப்படின்னு சொல்ல, ஜெயபிரகாஷ் ஒரு ஊசியை போட்டு ராமை மயக்கமடைய வைத்து அறிதுயில் (ஹிப்னாடிசம்) செய்து விஷயங்களை கறக்க முயற்சி செய்கிறார்.


அப்பொழுது, பல கஷ்டங்களை கடந்து ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் வேலைபார்த்ததையும், அந்த கம்பெனியில் இருந்து பெங்களூரில் நடந்த சாப்ட்வேர் பிராஜெக்ட் போட்டிக்கு சென்றதை பற்றியும், அந்த போட்டியில் தானும் சாருவும் ஒரே குழுவாக பங்கேற்றதாகவும் சொல்கிறார் ராம். சாருவின் அதீத கவனிப்பால் ஈர்க்கபட்ட ராம் மெல்ல சாருவை காதலிக்க தொடங்கி இருக்கிறார். இந்த நேரத்தில் ராமின் அம்மா உடல்நலக்குறைவால் இறந்துவிட மனதளவில் மிகவும் உடைந்து போகிறார் ராம். மூன்று நாட்கள் எதுவும் சாப்பிடாமல் ஒரே இடத்தில் இருக்கிறார் ராம். அந்த நேரத்தில் ராமை தேடி சாரு கிராமத்திற்கு வருகிறாள். ராமை விட்டு பிரியாமல் இருந்து பார்த்துகொள்வேன் என்று சொல்லிவிட்டு அவரை அங்கிருந்து மீண்டும் பெங்களூருக்கு அழைத்து செல்கிறாள். தனது அம்மாவிற்கு அடுத்தபடியாக சாருவை அதிகமாக நேசிக்கிறார் ராம். ஒரு நாள் சாரு தனது தோழியை பார்க்க ஒரு ஹோட்டலுக்கு செல்ல, அங்கே இரண்டு வாலிபர்கள் சாருவிடம் பிரச்சனை செய்கிறார்கள். இதை பற்றி போலீசிடம் புகார் தெரிவிக்கிறாள் சாரு. அவர்கள் பெரியஇடத்து பசங்க என்பதனால் போலிசால் ஒன்றும் செய்ய இயலாமல் போகிறது. அந்த இரண்டு வாலிபர்களும் சாருவை கொன்றுவிடுவதாக மிரட்டிவிட்டு செல்கிறார்கள், இதை ராம் பார்த்துவிடுகிறார். அடுத்தநாள் பிராஜெக்ட் போட்டியின் கடைசி நாள், அதற்காக சாருவும் ராமும் சென்றுகொண்டிருக்கும் போது ராம் பாதியிலே இறங்கிவிட்டு நான் சிறுது நேரத்தில் வந்துவிடுவதாகவும் சாருவை சென்றுகொண்டிருக்குமாறு சொல்லிவிட்டு வீட்டிற்கு திரும்புகிறார். வீட்டில்வந்து முந்தைய நாள் சாருவிற்காக வாங்கிவைத்திருந்த பரிசுப்பொருளை எடுத்துக்கொண்டு மீண்டும் போட்டி நடக்கும் இடத்துக்கு செல்கிறார். அங்கே சாருவை மிரட்டிய இரண்டு வாலிபர்களை பார்த்து அதிர்ச்சி அடைகிறார் ராம். சாருவை காப்பாற்றவேண்டும் என்ற நோக்கத்தில் வேகமாக போட்டி நடக்கும் இடத்திற்கு செல்கிறார் ராம். அங்கே சென்றால் போட்டி முடிந்து அந்த அறையே காலியாக இருக்கிறது. வேகமாக வந்து மாடியிலிருந்து எட்டி பார்க்கும்போது இரண்டு பேர் சாருவை ஒரு நான்கு சக்கர வாகனத்தில் இழுத்துசெல்வதை பார்க்கிறார் ராம். அவர்களை துரத்திக்கொண்டு ஓடும் போது சகதியில் விழுந்துவிடுகிறார். அதே சகதியோடு, தானும்  சாருவும் தங்கி இருந்த அறைக்கு வருகிறார் ராம். மூன்று நாட்கள் ஒரே இடத்தில சகதியோடு இருக்கிறார், மூன்று நாட்கள் கழித்து சாரு அங்கே வருகிறாள். தன்னை அந்த இரண்டு பேரும் கடத்தி செல்ல முயற்சித்ததாகவும், அவர்களிடமிருந்து தப்பித்து வந்துவிட்டதாகவும் சொல்கிறாள் சாரு.
ராமிற்கு மயக்கம் தெளிகிறது இதோட இந்த பிளாஷ்பேக் முடிகிறது.


அடுத்த பெரிய திருப்பம் என்னவென்று பார்த்தால், டாக்டரிடம் ராம் சொன்ன சாரு நான் தான் என்கிறாள் லதா. அதன்பிறகு சாருலதா என்பது தனது முழுப்பெயர் என்று சொல்கிறாள் லதா. தன்னோடு தான் ராம் அந்த பிராஜெக்டில் பணிபுரிந்ததாகவும் சொல்கிறாள். மேலும் தான் ராமை காதலிக்கவில்லை என்றும் சொல்கிறாள். அன்று பிராஜெக்ட் போட்டி முடிந்ததும் தனது அப்பாவுடன் அன்றே அமெரிக்கா கிளம்பிவிட்டதாகவும் சொல்கிறாள். அந்த இரண்டு வாலிபர்களால் தனக்கு அங்கே பிரச்சனை வரும் என்பதனால் போலிசாரின் ஆலோசனையின் பேரில் தனது தந்தை தன்னை இழுத்துசென்றதாக சொல்கிறாள் லதா. மேலும் ராம் வேலைபார்க்கும் கம்பெனி தன்னுடையது, தனது சிபாரிசின் பேரில் தான் உயர்ந்த பணியில் இருப்பதாகவும் சொல்கிறாள் லதா. அதன் பின்னர் டாக்டர் சாருவுடன் கற்பனையாக வாழ்ந்துவருவதாக சொல்கிறார். அதாவது இல்லாத ஒன்றை இருப்பதாக நினைத்துகொண்டு வாழ்ந்துகொண்டிருக்கிறான் என்கிறார். அப்படியென்றால் ராமிடம் தொலைபேசியில் தினமும் பேசும் அந்த சாரு யாராக இருக்கும் எனக்கேட்கிறாள் லதா. அதை கண்டுபிடிக்கும் போதுதான் தெரிகிறது, அது சாரு பெங்களூரில் இருந்தபோது உபயோகித்த கைபேசி எண்ணை தற்போது உபயோகபடுத்தும் ஒரு கண்பார்வை இல்லாத பெண் என்று. ராம் ஒரு நாள் தனது கைபேசி எண்ணை தொடர்புகொண்டதாகவும், அவனது கதையை கேட்டு இரக்கப்பட்டு அவனுடன் தொடர்ந்து சாரு என்கிற பெயரில் பேசிக்கொண்டிருப்பதாக சொல்கிறாள் அந்த பார்வை இல்லாத பெண்.


ராம் இப்படி நடந்து கொள்வதற்கு என்ன காரணம் என்று கண்டுபிடிப்பதற்கு ராமின் கிராமத்திற்கு சென்று அவனது இளமைக்கால வாழ்க்கையை பற்றி அந்த ஊரில் உள்ள பூசாரியிடம் (நாசர்) விசாரிக்கின்றனர். இப்போ அடுத்த பிளாஷ்பேக். சின்ன வயதிலேயே தந்தையை இழந்த ராமை அவனது அம்மா மிகவும் கஷ்டப்பட்டு வளர்கிறாள். கையில் இருந்த பணத்தை வட்டிக்கு விட்டு அதில் வரும் பணத்தை சேர்த்து சின்ன வயதில் ஒரு கால் ஊனமாக இருக்கும் ராமிற்கு மருத்துவம் பார்த்து சரி செய்கிறாள். ராம் சின்ன வயதிலிருந்தே அனைத்திற்கும் அவனது அம்மாவை சார்ந்தே வாழ்கிறான். ஒரு கட்டத்தில் படித்து வளர்ந்தபின்னர் வேலை பார்ப்பதற்கு தன் தாயை பிரிந்து சென்னைக்கு செல்கிறான். மகனை பிரிந்த சோகத்தில் நோய்வாய் பட்டு இறந்துவிடுகிறாள் ராமின் தாய். இதோடு இந்த பிளாஷ்பேக் முடிந்தது. இப்போது ராமை எப்படி குணப்படுத்துவது என்று லதா டாக்டரிடம் கேட்கிறாள். அதற்கு நோயும் நீயே.. மருந்தும் நீயே.. என்று சொல்கிறார் டாக்டர். ராமை லதா உண்மையாக சாருவை போல காதலித்தால் சரி ஆகிவிடும் என்கிறார். தனக்கு ஏற்கனவே மற்றொருவருடன் நிச்சயம் ஆகிவிட்டதாகவும் அதனால் இன்னொருவரை காதலிக்க முடியாது என்கிறாள் லதா. அதற்கு டாக்டர் நீ காதலிப்பது போல நடித்தாலே போதும் என்கிறார். பலத்த யோசனைக்கு பிறகு பெங்களூருக்கு சென்று சாரு போல நடிக்க ஆரம்பிக்கிறாள் லதா. இந்த நேரத்தில் மீண்டும் ஒரு கொலையை செய்து முடிக்கிறான் ராம். அவன் கொலை செய்த இரண்டு பேரும் சாருவை கொன்றுவிடுவதாக மிரட்டியவர்கள். அடுத்து ஒரு நாள், எல்லா பிரச்சனைகளும் முடிந்ததால் சாருவை வெளியே அழைத்து செல்கிறான் ராம். அப்போது தான் செய்த கொலைகளை பற்றியும் சொல்கிறான் ராம். அடுத்தநாள் இதை பற்றி போலீசாரிடம் சொல்ல செல்கிறாள் லதா. ஆனால் போலீசாரோ அந்த கொலைகளை கடவுள் செய்த வதம் என்று சொல்லி மறைத்துவிடுகிறார்கள். இந்த நிலையில் ராமின் மீது லதாவிற்கு காதல் வருகிறது. அடுத்தநாள் லதாவை கோவிலில் வைத்து திருமணம் செய்துகொள்ளபோவதாக சொல்கிறான் ராம். அதிலிருந்து தப்பிக்க டாக்டரிடம் உதவி கேட்கிறாள் லதா. டாக்டர் சந்தானத்திடம் அந்த பொறுப்பை ஒப்படைக்க இறுதியில் சந்தானத்தின் நகைச்சுவை  கலாட்டாவால் அந்த திட்டம் சொதப்புகிறது. லதாவும் ராமும் கோவிலுக்கு செல்கின்றனர், அப்போது அங்கே ஒரு நான்கு சக்கரத்தில் வரும் நபர்கள் லதாவை அங்கிருந்து கடத்தி செல்கின்றனர். இறுதியில் கடத்தி சென்றவர்கள் யாரென்று பார்த்தால் லதாவிற்கு நிச்சயிக்கப்பட்ட அந்த மாப்பிள்ளையின் வெள்ளைக்கார ஓரினசேர்க்கை நண்பர்களாம். அவர்களிடம் போராடி லதாவை காப்பாற்றும் போது லதாவை ஒருவன் கத்தியால் குத்திவிடுகிறான். உயிருக்கு போராடும் லதாவை தூக்கிகொண்டு காப்பாற்ற செல்லும்போது ராமின் தலையில் டாக்டர் அடித்துவிடுகிறார்.


பொதுவாக திரில்லர் திரைப்படங்களின் முழுக்கதையையும் சொன்னால் அந்த படத்தை பார்க்கும் ஆவல் குறைந்துவிடும் என்பதனாலேயே இந்த படத்தின் கதையை சொல்லநினைத்தேன். ஆனால், இதற்கு மேல் இந்த படத்தை பற்றி என்னால எழுதமுடியாது மக்களே. நீங்களே முடிவு பண்ணிக்கோங்க.. முடிந்தால் இந்த படத்தை திரைஅரங்கில் அதிக செலவு செய்து பார்க்காமல் தவிர்த்துவிடவும். படத்தில் தேறுகின்ற மாதிரி விஷயங்கள் என்றால் பாடல்கள் மற்றும் அவ்வப்போது வருகின்ற சந்தானம் சம்பந்தப்பட்ட நகைச்சுவை காட்சிகள் மட்டும் தான்.
SHARE
    Blogger Comments
    Facebook Comments

0 மறுமொழிகள்:

Post a Comment