நண்பன்


இந்த வருடத்தின் முதல் பதிவு இது. எழுதவேண்டும் என்று பல நேரங்களில் நினைப்பேன், இருந்தாலும் ஏதோ ஒரு நினைவு அதை தடுத்துவிடும். இந்த முறை அதற்கு வாய்ப்பு அளிக்காமல் நண்பன் திரைப்படம் தடுத்துவிட்டது. இந்த வருடத்தில் திரை அரங்கத்திற்கு சென்று பார்க்கும் முதல் திரைப்படமும் இதுதான். த்ரீ இடியட்ஸ் திரைப்படத்தை முதல் முறை பார்த்தபோது உள்ளுக்குள் ஒரு புத்துணர்ச்சியை கொடுத்தது. அதே திரைப்படத்தை தமிழில் பார்த்தபோதும் புத்துணர்ச்சி குறையாமல் பார்த்துக்கொண்டார் இயக்குநர் சங்கர். அதற்கு காரணம் ஹிந்தி பதிப்பிற்கும் தமிழ் பதிப்பிற்கும் அதிக வித்தியாசங்கள் இல்லாமல் பார்த்துக்கொண்டதாக தான் இருக்கும் என நினைக்கிறேன்.


பாரி (விஜய்), வெங்கட் (ஸ்ரீகாந்த்) மற்றும் செந்தில் (ஜீவா) என்ற மூன்று நண்பர்களின் கல்லூரி வாழ்க்கையை பற்றிய கதைதான் இந்த திரைப்படம். கல்லூரி படிப்பு முடிந்து பத்து வருடங்களுக்கு பிறகு இந்த மூன்று நண்பர்களிடம் தான் விட்ட சவாலில் வெற்றிபெற்றதை நிரூபிக்க வெங்கட் மற்றும் செந்திலை அழைக்கிறான் ஸ்ரீவத்சன் (சத்தியன்). ஆனால், வெங்கட் மற்றும் செந்தில் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பாரியை சந்திக்கலாம் என்று வருகிறார்கள். ஆனால் அங்கே பாரி இல்லாததை பார்த்து ஏமாந்து போகிறார்கள். அதன் பிறகு பாரி ஊட்டியில் இருப்பதாக ஸ்ரீவத்சன் சொல்கிறான். அதன் பின்னர் ஸ்ரீவத்சன் உதவியுடன் தங்களது நண்பன் பாரியை தேடி செந்தில் மற்றும் வெங்கட் ஆகியோர் செல்கின்றனர். ஊட்டி செல்லும் வழியில் தங்கள் கல்லூரி வாழ்க்கையை நினைத்து பார்க்கிறான் வெங்கட். ஸ்ரீவத்சன் இந்த மூன்று நண்பர்களிடம் விட்ட சவால் என்ன..? சவாலில் உண்மையில் யார் வென்றார்..? இறுதியில் மூன்று நண்பர்களும் சந்தித்தார்களா..? போன்ற கேள்விகளுக்கான விடையை தான் மீதி கதை சொல்கிறது.


மற்ற மாணவர்களை போல அல்லாமல் எந்த ஒரு விஷயத்திலும் சற்றே வித்தியாசமான அணுகுமுறையை கையாளும் குணநலன் கொண்ட மாணவனாக அறிமுகமாகிறான் பாரி. மாணவர்களை குழப்பி மன அழுத்ததில் விடும் நவீன கல்வி முறையை பிடிக்காமல் அதை மாற்றி அமைக்கவேண்டும் என்று பாரி நினைக்கிறான். ஆனால் அதை அந்த பொறியியல் கல்லூரியின் முதல்வர் விருமாண்டி சந்தானம் (சத்தியராஜ்) எதிர்கிறார். முதல் நாள் கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு அவர் சொல்லும் காக்கா, குயில் கதை வாழ்க்கையின் யதார்த்ததை சொல்கிறது. இரண்டு கைகளாலும், இரண்டு கால்களாலும் ஒரே நேரத்தில் எழுதும் போது வியப்பில் ஆழ்த்துகிறார் சத்தியராஜ். வெங்கட்டிற்கு புகைப்படகலைஞனாக வரவேண்டும் என்பதே ஆசை. அனால், அவனுடைய பெற்றோரின் விருப்பத்திற்காக பொறியியல் படிக்க வருகிறான். செந்தில் பொறியியல் படித்து வேலைக்கு போனால் தான் வறுமையில் வாடும் தன் குடும்பத்திற்கு ஒரு விடிவுகாலம் பிறக்கும், தனது முதிர்கன்னி தங்கைக்கு திருமணம் முடிக்க முடியும். அவனது இந்த கடமைகளே அவனுக்குள் ஒரு வித பயத்தை ஏற்படுத்திவிடுகிறது. இதனால் அவனால் பரிட்சைகளில் நல்ல முறையில் தேர்ச்சி பெற முடிவதில்லை. செந்தில் மற்றும் வெங்கட்டின் குடும்ப சூழ்நிலையை காட்சிபடுத்திய விதம், நடுநிலையில் உள்ள குடும்பங்களில் இருந்து வரும் மாணவர்கள் எந்த ஒரு சூழ்நிலையில் படிக்கவருகிறார்கள் என்பதை நமக்கு உணர்த்துகிறது. சத்தியராஜின் மகள் ரியா (இலியானா) தனக்கு பார்த்திருக்கும் தொழிலதிபரை மணமுடிக்க தயாராக இருக்கிறாள். அந்த மாப்பிள்ளையோ மன உணர்வுகளுக்கு  பதிலாக பண உணர்வுக்கு முன்னுரிமை கொடுக்கும் ஆசாமி. ஒரு கட்டத்தில் ரியாவிற்கு நிச்சயிக்கபட்ட மாப்பிள்ளையின் சுயரூபத்தை அவளுக்கு பாரி நிரூபிக்கிறான். இதனால் அந்த திருமணத்தை அவள் நிறுத்துகிறாள். மேலும் பாரியின் மீது காதல் கொள்கிறாள். மேலும் பாரியின் நட்பு  வெங்கட் மற்றும் செந்திலின் வாழ்க்கை பாதையை மாற்றி அமைக்கிறது.


படத்தில் ஜீவா மற்றும் ஸ்ரீகாந்தின் நடிப்பு அருமை. காவலன் திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் ஒருமுறை நல்லதொரு நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார் விஜய். விஜய்க்குள் ஒரு நல்ல நடிகன் இருக்கத்தான் செய்கிறான், அதை வெளிக்கொணர்வது நல்ல இயக்குனர் கைகளிலும் விஜயின் மனதிலும் இருக்கிறது. சங்கர் சத்தியராஜை அவரது முந்தைய இரண்டு படங்களுக்கு நடிக்க அழைத்திருந்தாராம், ஆனால் அதற்கெல்லாம் ஒத்துகொள்ளாதவர் இந்த திரைப்படத்திற்கு மட்டும் சம்மதித்ததன் காரணம் எனக்கு புரியவில்லை. ஒருவேளை எந்த ஒரு ஹீரோக்களிடமும் அடி வாங்க விருப்பம் இல்லாததாக இருக்கும் என்று நினைக்கிறேன். அவரின் ஆரம்பகால திரைப்படங்களில் வெளிப்பட்ட வில்லத்தனம் எனக்கு மிகவும் பிடிக்கும். சத்தியனின் கதாபாத்திரத்தை எஸ்.ஜே.சூர்யா செய்வார் என்ற எதிர்பார்ப்பு எனக்கு இருந்தது. ஒருவேளை சத்யனிற்கு பதில் சூர்யா செய்திருந்தால் இன்னும் கொஞ்சம் வித்தியாசமாகவே வந்திருக்கும் இந்த திரைப்படம். விஜய் நடிப்பில் பல வருடங்களுக்கு முன் வெளிவந்த திரைப்படம் மாண்புமிகு மாணவன். அந்த படத்தின் தலைப்பு இந்த படத்திற்கு தான் பொருத்தமாக இருக்கும் என்பது எனது சிந்தனை.

படத்திற்கு இசை ஹாரிஸ் ஜெயராஜ். மூன்று பாடல்கள் மட்டும் அடிக்கடி கேட்கும் ரகம், மற்றவை சுமார் தான். பாடல்களின் இசையை விட பின்னணி இசையில் அதிக கவனம் செலுத்தியுள்ளார். இந்த படத்தின் ஒளிப்பதிவை பற்றி சொல்லியே ஆகவேண்டும். மனோஜ் பரமஹம்சா இந்த திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். கடந்த வருடம் தான் நான் ஊட்டி சென்று வந்தேன், அப்போது நேரில் என்னால் ரசிக்க முடியாத காட்சிகளை இவரது கேமராவுக்குள் கொண்டுவந்து பிரமிக்கவைத்தார். முக்கியமாக அந்த கொண்டைஊசி வளைவுகளை இவர் காட்சி படுத்திய விதம் அருமை. அதே போல ராமேஸ்வரத்தின் பாம்பன் பாலத்தை இவர் காட்டிய விதமும் எனக்கு பிடித்திருந்தது. சங்கரின் பாதிப்பு இந்த படத்தில் நேரடியாக வெளிப்படவில்லை என்றாலும் மறைமுகமாக பல இடங்களில் வெளிப்பட்டிருப்பதை மறுக்கமுடியவில்லை.

த்ரீ இடியட்ஸ் திரைப்படத்தை பார்த்தவர்களும் சரி, பார்க்காதவர்களும் சரி, எந்த ஒரு ஒப்பீடும் இல்லாமல் இந்த திரைப்படத்தை குடும்பத்தோடு சென்று ஒரு முறை பார்க்கலாம்.
SHARE
    Blogger Comments
    Facebook Comments

1 மறுமொழிகள்: