விஸ்வரூபம்


பெரும்பாலோனோர் திரைப்படத்தை திரைஅரங்கில் பார்த்துவிட்டு திருட்டு விசிடிகளில் பார்த்துக்கொண்டிருக்கும் இந்த சமயத்தில், நான் இந்த படத்தை பார்த்துவிட்டு அதை பற்றி எழுதுகிறேன்.முதலில் செல்வராகவன் இயக்குவதாக இருந்த திரைப்படம் அதன் பிறகு கமலே இயக்கி, அதன்பின் DTH பிரச்சனை, பின்னர் தியேட்டர் அதிபர்கள் பிரச்சனை, பின்னர் முஸ்லிம் சகோதர்கள் பிரச்சனை என்று பல பிரச்சனைகளினாலும் எதிர்ப்புகளினாலும் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்திருந்தாலும் எனக்கு மட்டும் இந்த திரைப்படத்தை பார்க்கவேண்டும் என்கிற ஆவல் மிகுதியாக இருக்கவில்லை. இதற்கு காரணம் வழக்கத்திற்குமாறாக அதிக எண்ணிக்கையில் வெளிவந்த டிரைலர்களும் ஒன்று.   இருந்தாலும் கமல்ஹாசன் என்கிற நடிகனின் நடிப்பாற்றலின் மீது அதீத பற்று உள்ள காரணத்தாலும் அவர் இந்த படத்திற்காக செய்த பொருட்செலவிற்காகவும் இந்த படத்தை பார்க்க முடிவு செய்தேன். நான் இரவுக்காட்சி திரைப்படங்களுக்கு செல்லும்போது பெரும்பாலும் தூங்குவதற்கு வாய்ப்புகள் உண்டு. இது டெர்மினேடர்  போன்ற அதிரடி ஆக்சன் திரைப்படங்களுக்கும் பொருந்தும். திரையில் துப்பாக்கி சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும்,  நானோ இங்கே சுட்டுப்போட்டது போல இருக்கையில் இருந்து தூங்கிகொண்டிருப்பேன். ஆனால் ஒரு படத்தை எப்படியாவது தூங்காமல் பார்க்கவேண்டும் என்று முடிவு செய்துவிட்டால் சிலபல சூடான காப்பிகளை உள்ளே தள்ளியாவது படம் முழுவதும் தூங்காமல் இருப்பேன். அப்படிதான் விஸ்வரூபம் திரைப்படத்தையும் பார்த்தேன். சரி அப்படி என்ன இருக்கிறது இந்த திரைப்படத்தில் என்று இனி பார்ப்போம்...


இவ்வளவு பொருட்செலவில் வெளிவந்த இந்த திரைப்படம் அமைதியாக ஆரவாரமில்லாத டைட்டில் கார்டுடன் ஆரம்பமாகும்போதே  படத்தின் மீதிருந்த எதிர்பார்ப்பு என்னுள் துளிர்விட்டது. படத்தின் சுவரொட்டிகள் ஒன்றில், கமல் நடந்துவர அவருக்கு பின்னால் புறாக்கள் பறந்துவருவதை பார்த்த நியாபகம். அதேபோல  டைட்டில் கார்டு போடும்போதும் புறாக்களை காட்டுகிறார்கள். அப்பொழுதே யோசித்தேன் "இந்த புறா.. அந்த மனுஷன் (கமல்).." ஏதோ உதைக்குதே என்று. இறுதியில் அந்த புறாக்களில் வைத்தார் பாருங்க ஒரு டிவிஸ்ட்.. ஆனால் திரைக்கதையின் அதீத ஓட்டத்தால் அந்த டிவிஸ்ட் அந்த அளவிற்கு மனதில் ஒட்டுவதற்கு வாய்ப்புகள் குறைவே. அமெரிக்க வாழ் இந்திய பெண்ணான நிருபமா (பூஜா குமார்) தனது கணவன் விஸ்வனாத்திடம் (கமல்) இருந்து விவாகரத்து வாங்க முயற்சிக்கிறார். அதற்கு காரணம் நிருபமா வேலைபார்க்கும் அலுவலகத்தின் முதலாளி தீபக்கை இரண்டாம் திருமணம் செய்துகொள்வது மட்டுமே. அப்போது ஆண்ட்ரியா உட்பட சிலபெண்களுக்கு  கதக்நடனம் கற்றுத்தரும் ஆசிரியராக அறிமுகமாகிறார். அன்பேசிவம் திரைப்படத்தின் வீதிநாடகத்தில் மீசையை முறுக்கிக்கொண்டு வித்தியாசமாக தோன்றியதை போல.. பெண்களுக்கே உரிய அதே நளினத்துடன் இங்கே கதக் நடனம் ஆடுகிறார். கமலின் மீது ஏதாவது குறை இருந்தால் மட்டுமே விவாகரத்து கிடைக்கும், அதனால் கமலின் மனைவி அவரை கண்காணிக்க ஒரு ரகசிய உளவாளியை நியமிக்கிறார். ஒருநாள் அந்த உளவாளி கமலை பின்தொடரும் போது, கமல் ஒரு முஸ்லிம் என்பதை கண்டுபிடிக்கிறார். மேலும் அவரை பின்தொடர்ந்து செல்லும்போது அடுத்த காட்சியிலேயே எதிர்பாராதவிதமாக அந்த உளவாளி தீவிரவாதிகளால் கொல்லப்படுகிறார். அந்த தீவிரவாதிகள் இறந்துபோன அந்த உளவாளியின் கைவசம் கமலின் மனைவி பூஜாவின் முகவரி இருப்பதை கண்டுபிடிக்கிறார்கள். அதனால் அந்த தீவிரவாதிகளின் தலைவன் ஒமரின் (ராகுல் போஸ்) உத்தரவின்படி பூஜாவின் குடும்பத்தை முழுவதுமாக அழிக்க முடிவெடுக்கிறார்கள். அதற்காக கமலையும் அவரது மனைவியையும் கடத்தி வருகிறார்கள். அதுவரை சாதுவாக இருந்த கமல் அங்கே திடீரென்று விஸ்வரூபமெடுத்து அனைவரையும் துவம்சம் செய்து, அங்கிருந்து தப்புகின்றனர். அதன்பின்னர் தான் ராகுல் போஸ், தன்னுடன் ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளித்த RAW ஏஜென்ட் தான் கமல் என்பதை கண்டுபிடிக்கிறார். தப்பித்து போன கமல், தன்னிடம் இருந்த ஆதாரங்களை எடுத்துக்கொண்டு பூஜா மற்றும் ஆன்ட்ரியாவுடன் தப்பித்து செல்கிறார் (ஆன்ட்ரியாவும் ஏஜென்டை சேர்ந்தவர் தான் போல). அவ்வப்போது கமலும், ராகுல்போஸும் ஆப்கானிஸ்தானில் நடந்த நிகழ்சிகளை நினைத்து பார்க்கிறார்கள். விருமாண்டியில் வந்ததுபோல கதை முன்னும் பின்னும் நகர்கிறது. என்ன ஒரு வித்தியாசம் என்றால், விருமாண்டியில் ஒரு கதை இரண்டு கோணம். விஸ்வரூபத்தில் ஒரே கதை, ஒரே கோணம். அங்கே ஆப்கானிஸ்தானில் வாழும் மக்களின் நிலைமை, தீவிரவாதிகளின் செயல்பாடுகள் மற்றும் அவர்களின் குடும்பசூல்நிலைகள் பற்றி காட்டுகிறார்கள். இந்த பிளாஷ்பேக் காட்சிகள் எல்லாம் முடிந்த பிறகு, இறுதியில் கமல் நியூயார்க் நகரத்தில் நடக்க இருக்கும் ஒரு மிகப்பெரிய வெடிகுண்டு விபத்தை எப்படி முறியடிக்கிறார் என்பது தான் கதை.

படத்தில் கமல் ஒரு இயக்குனராக ஜொலித்தாலும், ஒரு நடிகனாக என்னைபொருத்தவரை இரண்டு காட்சியில் மட்டுமே ஜொலிக்கிறார். ஒன்று அறிமுககாட்சியில் அவர் ஆடும் கதக் நடனம், மற்றொன்று தன்னை கட்டிவைத்திருந்த தீவிரவாதிகளிடம் இருந்து ஆவேசமாக தப்பிசெல்லும் காட்சி. படத்தின் ஆரம்பகாட்சியில் கதக் நடனம் ஆடியது மற்றும் கமலின் கைகளில் காயப்பட்டிருக்கும் போது அவரின் பேன்ட்டை கழட்டியதை தவிர கதைக்காக பெரிதாக எதையும் கழட்டவில்லை ஆன்ட்ரியா.


தனது நாத்திக நம்பிக்கையை காட்டும் கடவுளை பற்றிய வசனங்கள் இந்த படத்திலும் உண்டு. ஒரு காட்சியில் எந்த கடவுள்??! என்று கமல் கேட்பதும், இதே போல வலிய புகுத்தப்பட்ட பிள்ளையார் ஜோக் ஒன்றில் ஒரு வெள்ளைக்கார பெண்மணி, பூஜாவிடம் கடவுளை பற்றி கேட்கும் போது தனது கடவுளுக்கு நான்கு கைகள் என்பார், அப்படி என்றால் எப்படி சிலுவையில் அரைவீர்கள் என்று அந்த பெண் கேட்க, சிலுவையில் அறையமாட்டோம் ஆற்றில் கரைத்துவிடுவோம் என்பார்.

ராகுல்போஸ் தீவிரவாதியாக நடிப்பில் அசத்தியுள்ளார் என்பதைவிட தீவிரவாதியாகவே வாழ்ந்துள்ளார் என்று சொல்லலாம். கமலை, பெயரில் இருக்கும் முஸ்லிம் அடையாளத்தை வைத்துகொண்டும் இந்திய அரசாங்கம் தேடுகிறது என்பதற்காகவும், அவ்வளவு பெரிய தீவிரவாத இயக்கத்திற்குள் எப்படி எளிதாக இணைத்துக்கொண்டார்கள் என்கிற சந்தேகத்தை கிளப்புகிறது.

படத்தின் இறுதியில் கமல் பூஜாவுடனும் படுக்கையில் புரள்கிறார், ஆண்ட்ரியாவுடனும் புரள்கிறார், உண்மையில் ஆண்ட்ரியா கமலுக்கு யார்? என்கிற குழப்பம் அப்போது வரத்தான் செய்கிறது. இறுதியில் ராகுல்போஸ் தப்பிசெல்வது போல காட்சியமைத்து, விஸ்வரூபத்தின் இரண்டாம் பாகம் வரும் என்று சொல்கிறார்கள். அடுத்த பாகத்தில் தீவிரவாதிகளை நாத்திகவாதிகளாக காண்பித்தால் பிரச்சனைகள் இல்லாமல் விரைவில் வெளிவரும் என்று நம்புகிறேன்.

கமல்ஹாசன் என்கிற இயக்குனரை படம் நெடுக உணர முடிந்தாலும், கமல் என்கிற நடிகனை பார்க்க முடியவில்லை என்பது வருத்தமான விஷயம். அன்பேசிவம், ஹேராம், மஹாநதி  போன்ற நடிப்புக்கு தீனி போடும் கதாபாத்திரங்களில் கமலை காணும் ஆசை இன்னும் பலருக்கு இருக்கிறதை கமல் உணரவேண்டும். அவரது வித்தியாசமான முயற்சிகள் அவருக்கு வசூலை அள்ளிதராததால் இப்படி கமர்ஷியல் படங்கள் எடுப்பதை தவறு என்று நான் சொல்லவில்லை. சினிமாவில் எடுக்கும் பணத்தை சினிமாவிலே முதலீடு செய்பவர் கமல், அனால் இதே கமர்ஷியல் பாதையை அவர் மீண்டும் தொடரவேண்டாம் என்பதே என் வேண்டுகோள்.
SHARE
    Blogger Comments
    Facebook Comments

0 மறுமொழிகள்:

Post a Comment