தொலைக்காட்சி விளம்பரங்களும்.. போலி டாக்டர்களும்

காலையில் அலுவலகத்திற்கு சென்றுவிட்டு மாலை வீடு திரும்பிய பிறகும் மற்றைய விடுமுறை நாட்களிலும் பொழுதுபோக்கிற்காக நாம் அதிகமாக சார்ந்திருப்பது கேபிள் டிவியின் சேவையை தான். தூர்தர்ஷனில் தொடங்கிய எனது தொலைகாட்சி சார்ந்த பொழுதுபோக்கு பயணம் இன்று சன் டிவி, விஜய் டிவி, ஸ்டார் டிவி என்று தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அதே நேரத்தில் அன்றைய காலத்தில் வந்துகொண்டிருந்த விளம்பரங்கள் படிப்படியாக முன்னேறி இப்பொழுது லொட்டு லொஷுக்குக்கெல்லாம் விளம்பரங்கள் வரத்தொடங்கிவிட்டது.

இதில் பல விளம்பரங்கள் நமது பொறுமையை சோதிப்பதை தான் முக்கிய கடமையாக செய்கிறது. வழக்கமாக பிரபலமானவர்களை காட்டி தங்களது நிறுவன பொருட்களை பிரபலபடுத்த எடுக்கப்பட்ட விளம்பரங்கள், நாளடைவில் கவர்ச்சியை காட்டி பிரபலபடுத்தும் விளம்பரங்களாக மாறின.

தற்போது தொலைக்காட்சியில் தோன்றும் விளம்பரங்களை விளையாட்டுவீரர்கள், சினிமா நட்சத்திரங்கள், கவர்ச்சியாக காட்டப்படும் மங்கைகள் மற்றும் டாக்டர்கள் தோன்றும் விளம்பரங்கள் என்று நான்கு வகையாக பிரிக்கலாம். இந்த விளம்பரங்களில் மிகவும் கடுப்பை கிளப்புவது சில "டாக்டர்கள்" தோன்றும் விளம்பரங்கள். அந்த காலத்தில் உடலுக்கு மிகவும் முடியாமல் போகும் பட்சத்தில் மட்டுமே மருத்துவர்களை நாடினார்கள். ஆனால் தற்போது எதற்கெடுத்தாலும் மருத்துவமனை தான். இந்த லட்சணத்தில் தற்போது டாக்டர்கள் தோன்றும் விளம்பரங்கள் கணிசமாக அதிகரித்துள்ளது.

சோப்பு, ஷாம்பு, சமையல் எண்ணெய், பற்பசை என்று நாம் அன்றாடம் உபயோகப்படுத்தும் எல்லா பொருட்களின் விளம்பரங்களிலும் டாக்டர்கள் தோன்றுகிறார்கள். இந்த டாக்டர்களை பார்க்கும் போதே தெரிகிறது போலி டாக்டர்கள் என்று. இப்படி டாக்டர்களை வைத்து விளம்பரப்படுத்துவதன் மூலம் நமக்கு நம் நாடு எவ்வளவு நோய்வாய்பட்டிருக்கிறது என்று தெளிவுபடுத்துகிறார்கள் போல. இதில் மிகவும் கொடுமையான விஷயம் என்னவென்றால் நம் வீடுகளில் இருக்கும் அம்மாமார்கள் அந்த போலி டாக்டர்களின் போலி வாக்குறுதிகளை நம்பி அந்த பொருட்களை வாங்க முடிவு செய்வதுதான்.
SHARE
    Blogger Comments
    Facebook Comments

0 மறுமொழிகள்:

Post a Comment