பரதேசி - ஒரு உலக சினிமா


இன்று காலை தான் இந்த திரைப்படத்தை பார்த்தேன். என்னை பொறுத்தவரை பாலாவின் படைப்புகளில் சிறந்ததாக இதுநாள் வரை "நான் கடவுள்" திரைப்படம் இருந்தது. இன்று அதை முந்திக்கொண்டு முதலிடத்தில் சம்மனமிட்டு அமர்ந்துள்ளது "பரதேசி" திரைப்படம்.

1969 ஆம் ஆண்டு பால் ஹாரிஸ் டேனியல் என்பவரால் எழுதப்பட்ட "ரெட் டீ" என்கிற நாவலை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் இது. அந்த நாவலில் நம் நாட்டை பிரிட்டிஷ்காரர்கள் ஆட்சி செய்தபோது மலைக்காடுகளை திருத்தி தேயிலை உற்பத்தி செய்ய நம் மக்களை கொத்தடிமைகளாக்கி எவ்வளவு கொடுமைப்படுத்தினார்கள் என்பதை தெளிவுபடுத்தியிருந்தார் டேனியல். அது தான் இந்த திரைப்படத்தின் மையக்கதையும் கூட, ஆனால் திரைப்படத்தின் முதல் பகுதியில் அந்த காலத்தைய தென்னிந்திய மக்களின் வாழ்க்கைமுறைகளை அப்படியே நம் கண்முன் நிறுத்தியதற்காக பாலாவிற்கு ஒரு சபாஷ் சொல்லலாம்.

சாலூர் என்னும் தென்மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் வாழும் ராசா  தான் அதர்வா. இவர் அந்த ஊர் மக்களுக்கு ஏதாவது பொதுவான செய்தி சொல்வதற்கு தம்பட்டம் அடிப்பதாலும் , அந்த ஊர் மக்கள் கொடுக்கும் சாப்பாடு, மற்றும் பொருட்களை நம்பி வாழ்வதாலும் அவருக்கு ஒட்டுபொருக்கி என்னும் பெயரும் உண்டு. அதர்வா அந்த ஊர் மக்கள் சொல்லும் எல்லாவேலைகளையும் செய்கிறார். ஆனால், இவர் செய்யும் வேலைக்காக யாரும் அவருக்கு கூலி கொடுப்பதில்லை. அதர்வாவின் கதாபாத்திரத்தில் யதார்த்தம் நிறைந்த அப்பாவித்தனமான நடிப்பு தெரிகிறது. இவரை அவரின் அத்தை மகள் அங்கம்மா உருட்டி மிரட்டி விரட்டி காதலிக்கிறார். ஒருகட்டத்தில் வேலை செய்து சம்பாதிக்கலாம் என்று பக்கத்துக்கு ஊரில் உள்ள ஒரு கடையில் வேலை கேட்கிறார் அதர்வா. அவரும் அதர்வாவிற்கு அங்கே இருக்கும் விறகை வெட்டிபோட சொல்கிறார். அதர்வாவும் அதை செய்துவிட்டு கூலிகேட்கும் போது, கடையின் முதலாளி அவரை ஒட்டு பொருக்கிக்கு எதற்கு கூலி என்று சொல்லி அவரை அடிக்கிறார். இதைபார்க்கும் கங்காணி என்னும் கூலி ஆட்களை தேயிலை தோட்டத்திற்கு கொத்தடிமைகளாக பிடித்துகொடுக்கும் ஆசாமி, பஞ்சத்தையும் பணத்தையும் காரணம் காட்டி அதர்வாவையும் அவரது ஊர் மக்களையும் ஏமாற்றி அழைத்து செல்கிறார். அங்கே சென்ற பிறகு தேயிலை தோட்டத்தில் தொழிலாளர்கள் என்ன கொடுமைகள் அனுபவித்தார்கள் என்பதை இரண்டாம் பகுதியில் பாலாவிற்கே உரிய பாணியில் காண்பித்திருக்கிறார்.

முக்கியமாக படத்தில் வரும் துணைக்கதாபாத்திரங்களின் தேர்வு அருமை. அவற்றுள் அதர்வாவின் கூனிப்பாட்டி மற்றும் பெரியப்பா கதாபாத்திரம் நல்ல தேர்வு. நகைச்சுவைக்கென்று தனியாக கதாபாத்திரத்தை நாடாமல் நாஞ்சில்நாடனின் யதார்த்தமான (கொஞ்சம் பச்சையான) வசனங்களாலே அங்கங்கு கலகலப்பூட்டிருக்கிறார்கள். கங்காணி கதாபாத்திரம் தனக்குள் இருக்கும் குரூரத்தை தானாக காண்பிப்பதில்லை. அந்த கதாபாத்திரத்திற்குள்ளும் பயம் இருக்கிறது, வெள்ளைக்காரன் தேயிலைத் தோட்டத்தால் தனக்கு வந்துகொண்டிருக்கும் வருமானத்தை கெடுத்துவிடுவானோ என்கிற பயம் தான் அது. அதற்காக கொத்தடிமைகளை பிடித்துவருவதும், அவர்களை கொடுமைபடுத்துவதுமான வேலைகளை செய்கிறான் கங்காணி.

படத்தில் பஞ்சம் பிழைப்பதற்காக அவர்களின் சொந்த கிராமத்தை விடுத்து தொலைவில் எங்கோ உள்ள தேயிலை தோட்டத்தில் வேலைக்காக செல்கிறார்கள் அந்த கிராமத்து மக்கள். எனது சிறுவயதில் பஞ்ச காலத்தில் மக்கள் எவ்வளவு அவதிப்பட்டார்கள் என்று எனது பாட்டி சொல்லி கேட்டுருக்கிறேன். நான் அதை கேட்டு உணர்ந்ததில் ஒரு இம்மி கூட படத்தில் காண்பிக்கவில்லை பாலா. வேதிகாவிற்கு கல்யாணத்திற்கு முன்பே குழந்தையை கொடுத்தவர் அதர்வா, அதே அதர்வா தேயிலை தோட்டத்தின் மேற்பார்வையிடும் வெள்ளைக்காரன் தனது ஊர்பெண்ணை வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்ததால் அந்த பெண்ணையே வெறுத்து ஒதுங்குகிறார். இதில் என்ன நியாயம் இருக்கிறது என்று தெரியவில்லை. அது பாலாவிற்கே வெளிச்சம். தேயிலை தோட்டத்தில் வேலைபார்க்கும் மக்களை காப்பாற்ற வரும் புதிய மருத்துவர் மூலமாக அந்த காலத்தில் கிறிஸ்தவமதம் எவ்வாறு நுழைந்தது என்பதை கொஞ்சம் மிகையாக காட்டமுயற்சி செய்துள்ளார் பாலா. இந்த மாதிரியாக ஆங்காங்கே சில லாஜிக் குறைகள் இருந்தாலும் அது படத்தின் ஓட்டத்தில் காணாமல் போய்விடுகிறது.

தன்ஷிகாவின் கதாபாத்திரம் கஞ்சா விற்கவில்லை தேயிலை தான் பறிக்கிறது, ஆனால் ஏனோ பிதாமகன் திரைப்படத்தில் வரும் சங்கீதாவின் கதாபாத்திரத்தை நினைவுபடுத்தியது. வழக்கமாக பாலாவின் திரைப்படத்தில் வரும் கதாநாயகிகள் கொஞ்சம் அமைதியாகவோ, இல்லை கொஞ்சம் அதிக வெகுளித்தனத்தை காட்டுபவர்களாக இருப்பார்கள். ஆனால் இந்த படத்தின் கதாநாயகி வேதிகாவை கொஞ்சம் சுட்டியாக காட்டியிருக்கிறார் பாலா.

படத்தில் மிகவும் பாராட்டப்படவேண்டிய விஷயம் ஒளிப்பதிவாளர் செழியன். அவரது கேமராக்கோணங்களால் நம்மை அந்த காலத்திற்கே அழைத்துசெல்கிறார். இந்த திரைப்படத்திற்கு பாடல்களைவிட பின்னணிஇசை தான் முக்கியம், அதற்கு இளையராஜாவை விட பொருத்தமானவர் யாரும் இருக்க முடியாது. ஆனால் அது இந்த படத்தில் மிஸ்ஸிங். ஜி வி பிரகாஷ்குமார் பின்னணி இசையில் சொல்லும்படியாக அழுத்தம் சேர்க்கவில்லை மேலும் "அவத்த பையா" மற்றும் "செங்காடே" பாடல்கள் தவிர வேற எதுவும் சொல்லும்படியாக இல்லை. நாஞ்சில்நாடனின் வசனங்கள், தென்தமிழக மக்கள் பேசும் வட்டார தமிழை நினைவுபடுத்துகிறது.

படத்தின் முதல் பாதியை அனைவராலும் ரசிக்க முடிந்தாலும், இரண்டாம் பாதியை பார்ப்பதற்கு சோகத்தை தாங்கும் கொஞ்சம் கனத்த இதயம் வேண்டும். இந்த திரைப்படத்தின் டீசர் வீடியோவை பார்த்து பலர் கொதித்து போனார்கள். ஆனால் இந்த மாதிரி பல திரைப்படங்களில் வில்லன் நடிகர்களும், ஸ்டன்ட் நடிகர்களும் எவ்வளவு கொடுமையாக அதுவும் உண்மையாக அடிவாங்குவார்கள் என்பதை அவர்கள் ஒரு முறை நினைத்து பார்க்கவேண்டும்.

மொத்தத்தில் தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு உலகசினிமா இந்த பரதேசி திரைப்படம். தவறாமல் பாருங்கள்.
SHARE
    Blogger Comments
    Facebook Comments

0 மறுமொழிகள்:

Post a Comment