உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று பெரிய ஆளாக வரவேண்டும்
என்கிற பேராசையோடு, வேற எந்த வேலைக்கும் போகாமல் ஊர்சுற்றும் இரண்டு
இளைஞர்களான கேசவன் மற்றும் முருகன் என்பவர்களை பற்றிய கதைதான் இந்த கேடி
பில்லா கில்லாடி ரங்கா திரைப்படம்.
கேடி பில்லா கேசவனாக
விமலும், கில்லாடி ரங்கா முருகனாக சிவகார்த்திகேயனும் நடித்துள்ளார்கள்.
இவர்களின் அரசியல் ஆசை நிறைவேறியதா? அதற்காக அவர்களுடைய குடும்பத்தார்கள்
எப்படி எல்லாம் திட்டி கழுவி ஊற்றினார்கள், அதனை எல்லாம் துடைத்துவிட்டு
எப்படி சரக்கு அடிப்பதும், காதலிப்பதும் என போய்கொண்டே இருக்கிறார்கள்
என்பதை படம் முழுவதும் காண்பித்திருக்கிறார் இயக்குனர் பாண்டிராஜ்.
சிவகார்த்திகேயனின்
ஜோடியாக வரும் ரெஜினா பிரபல நடிகை சரண்யா மற்றும் இல்லியானாவின் முகஜாடையை ஒத்திருக்கிறார்,
கொஞ்சம் நடிக்கவும் செய்திருக்கிறார். பிந்துமாதவி விமலின் ஜோடியாக
நடித்துள்ளார், தனது பெரிய முட்டைகண்களால் மிரட்டி திடீரென்று
விஜயசாந்தியாக மாறி விமலை அடி வெளுக்கும் காட்சியில் அனைத்து
பெண்களிடமிருந்தும் பலமான கைதட்டும் வாங்குகிறார். விமலும் சிவகார்த்திகேயனும் அவர்களுடைய ஜோடிகளை துறத்தி துறத்தி காதலிக்கும் காட்சிகள் காதல் கலாட்டாக்கள்.
படத்தில்
சிவகார்த்திகேயன் மற்றும் பரோட்டா சூரி அடிக்கும் காமெடி லூட்டிகள் செம.
ஆரம்பம் முதல் இறுதி வரை இவர்கள் வரும் காட்சிகள் நகைச்சுவை விருந்து.
இவர்கள் இரண்டு பேரும் இருக்க பிந்துமாதவியின் அப்பா கதாபாத்திரம், விமலின்
அப்பா டெல்லி கணேஷ் என படத்தில் தோன்றும் அனைவரும் தங்கள் பங்கிற்கு
காமெடி செய்துவிட்டு போகிறார்கள். அதனால் இந்த திரைப்படத்தில்
நகைச்சுவைக்கு பஞ்சமில்லை.
ஆனாலும் இந்த படத்திற்கு ஏன் இந்த தலைப்பை வைத்தார்கள் என்பதற்கான காரணத்தை நீங்கள் படத்தை பார்த்தே தெரிந்துகொள்ளுங்கள். என்னால் முழுமையாக கண்டுபிடிக்க முடியவில்லை.
சிவகார்த்திகேயன் படம் முழுவதும் நெற்றியில் பட்டை அடித்துக்கொண்டு வலம் வந்தாலும்
வாய்ப்பு கிடைக்கும்போது எதிர்ப்பட்டவர்களை எல்லாம் கலாய்க்கிறார். இதை
அவர் விஜய் டி வி நிகழ்ச்சிகளிலே அதிகமாக பார்த்திருப்போம். ஒரு கட்டத்தில்
விமலை அவர் கலாய்க்க "அடுத்தவங்கள கலாய்க்கனும்ன ஹியூமர் சென்ஸ்
எங்கிருந்து தான் அப்படி பெருக்கெடுக்குதோ.." என்று விரக்தியாக சொல்வார்
விமல்.
"செத்து போனாலும்.. கெத்து போக கூடாது "
"லிப்ட் வேணும்கிற போது.. ஷிப்ட் கார் வந்தாதான் போவேன்னு அடம் புடிக்க கூடாது.. சைக்கிள் கிடைச்சா கூட தொத்திகிட்டு போயிடனும்"
இப்படி பல நகைச்சுவை கலந்த வசனங்களை அங்கங்கே அள்ளி தெரித்திருக்கிறார் பரோட்டா சூரி.
படத்தின்
கடைசி பதினைந்து நிமிடங்கள் மெசேஜ் சொல்லவேண்டும் என்பதற்காக கொஞ்சம்
அழுத்தம் சேர்க்கப்பட்டுள்ளது, மற்றபடி படம் முழுவதும் கலகலப்பாகவே
நகர்கிறது. இறுதியாக இயக்குனர் சொல்ல விழைவது நமது ஒவ்வொருவர் தந்தையின்
மீதும் உயர்ந்த மதிப்பையும் மரியாதையும் வைக்க வேண்டும் என்பதுதான் என்று
அவதானிக்கிறேன்.
யுவனின் இசையில் "கொஞ்சும் கிளி..." மற்றும் "சுடசுட தூறல்..." என்கிற இரண்டு பாடல்கள் நன்றாக வந்துள்ளது. மற்றபடி சொல்லும்படியாக இல்லை.
படத்தின்
பல இடங்களில் லாஜிக் ஓட்டைகள் இருக்கத்தான் செய்கிறது, அதை காமெடி என்னும்
களிமண் கொண்டு பூசி மொழுகியிருக்கிறார்கள். பொழுதுபோக்கிற்கான நல்லதொரு
நகைச்சுவை திரைப்படம், அதனால் நிச்சயமாக பார்க்கலாம்.
- Blogger Comments
- Facebook Comments
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 மறுமொழிகள்:
Post a Comment