சேட்டை
தமிழ் சினிமாக்களில் வலுவான கதை மற்றும் திரைக்கதையை நம்பி எடுக்கப்படும் திரைப்படங்கள் குறைந்துகொண்டே வருகின்றது. நகைச்சுவைக்கு மட்டும் அதிக கவனம் செலுத்தி இடையில் இரண்டு பாடல், இரண்டு சண்டைகாட்சி என்று சொருகி படத்தை முடித்துவிடுகிறார்கள். அதே வகையை சேர்ந்த்தது தான் இந்த சேட்டை திரைப்படமும்.
2011 ஆம் ஆண்டு வெளிவந்த "டெல்லி பெல்லி" என்ற திரைப்படத்தின் ரீமேக் தான் இந்த படம். ஆர்யா, சந்தானம் மற்றும் பிரேம்ஜி மூவரும் ஒரே பத்திரிக்கையில் பணிபுரியும் நண்பர்கள். சந்தர்ப்ப சூழ்நிலையால் நாசரின் கடத்தல் கூட்டத்திற்கு சேரவேண்டிய வைரங்கள் எப்படியெல்லாம் கைமாறி தாறுமாறாக சுற்றி பிரச்சனைகளை உருவாக்கியது என்பது தான் படத்தின் ஒன் லைன். மற்றபடி படத்தில் கதை என்று பெரிதாக எதுவும் இல்லை.
திரைஅரங்கில் ஹீரோ ஆர்யாவை அறிமுகப்படுத்தும் போது எழும் கைதட்டலை விட, சந்தானம் அறிமுகம் ஆகும் போது எழும் விசில் சத்தமும், கைதட்டலும் வழக்கம்போல அதிகம். சந்தானத்தை படத்தில் காட்டியே கல்லாகட்ட நினைக்கிறார்கள் தமிழ் சினிமா இயக்குனர்கள்.
நகைச்சுவைக்காகவும் பொழுதுபோக்கிற்காகவும் மட்டும் வேண்டுமானால் இந்த படத்தை பார்க்கலாம். ஆனாலும் படத்தில் இடம்பெறும் பல நகைச்சுவை காட்சிகள் பச்சைரகம் தான். தமிழ்சினிமாவில் இந்த அளவிற்கு வெளிப்படையான காமெடி காட்சிகள் இடம்பெற்ற திரைப்படத்தை நான் இன்றுதான் பார்த்தேன்.படத்தின் இயக்குனர் கண்ணன், ஜெயம்கொண்டான் திரைப்படம் வந்தபோது குடும்பபாங்கான திரைப்படம் எடுக்க ஒரு இயக்குனர் தமிழ்சினிமாவிற்கு கிடைத்துவிட்டார் என்று நான் நினைத்தேன். ஆனால் இந்த படம் முடியும் போது "கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆகிவிட்டதே..!!" என்றுதான் எண்ண தோன்றியது.
திரைஅரங்கில் என் மனைவியையும் சேர்த்து அதிகபட்சமாக பத்து பெண்கள் வந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். அரங்கம் முழுவதும் ஆண்கள் கூட்டத்தால் நிரம்பி இருந்தது. அதிலும் எனக்கு அருகில் இருந்த நபர், படத்தில் வந்த சில மொக்கை காமெடிக்கெல்லாம் விழுந்து விழுந்து சிரித்துகொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் அவரது அளிம்பு தாங்கமுடியாத அந்த நபரின் நண்பர், "ஏன் மச்சி இப்படி சிரிச்சி என்ன பயமுறுத்துற?!!" அப்படின்னு சத்தமாகவே கேட்டுவிட்டார். அதன் பின்னர் ஓரளவிற்கு நிதானமடைந்தார் அந்த நபர்.
படத்தில் ஆர்யாவின் பைசெப்பிற்கு போட்டியாக இருப்பது அஞ்சலியின் கைகள் தான். கைகள் ஒவ்வொன்றும் கரளைகட்டை மாதிரி இருக்கு. இதே நிலை தொடர்ந்தால் நமீதாவின் இடத்தை இவரால் விரைவில் பிடிக்கமுடியும். ஹன்ஷிகாவும் அஞ்சலியும் பாடல் காட்சிகளுக்காவும், ஆர்யாவை காதலிக்கவும் மட்டும் பயன்படுத்தியிருக்கிறார்கள். பிரேம்ஜியின் "லவ் டிராக்" ஒரு பாடலில் தொடங்கி அதிலேயே முடிந்துவிடுகிறது.
"லொள்ளு சபா" நிகழ்ச்சிகளின் தொகுப்பு இன்று காலையில் இருந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருந்தது. அதை பாதியில் நிறுத்திவிட்டு இந்த திரைப்படத்தை பார்க்க சென்றேன். படம் திரைஅரங்கில் ஓடிக்கொண்டிருக்கும் போதே இதற்கு லொள்ளு சபா எவ்வளவோ பரவா இல்லை என்ற எண்ணம் தோன்றிவிட்டது.
இந்த திரைப்படம் எனக்கு கலகலப்பு திரைப்படத்தை சிலநேரங்களில் நியாபகபடுத்தியது. காரணம், இரண்டு திரைப்படங்களிலும் கடத்தல் வைரங்கள் தான் முக்கியமான பங்கை வகிக்கிறது. மேலும் அந்த படத்தில் பார்த்த அஞ்சலி, சந்தானம், பஞ்சு என்று அதே நடிகர்கள். ஆனால் காமெடி காட்சிகள் கலகலப்பு திரைப்படத்தை போல இல்லை.
கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்திலாவது கடைசி பதினைந்து நிமிடங்கள் கருத்து சொல்கிறேன் என்று ஒன்றை சொல்ல விழைகிறார்கள். ஆனால் அதுகூட இந்த படத்தில் இல்லை. இனி வரும் திரைப்படங்களிலாவது, ஆர்யா பாடல்களுக்கு நடனம் ஆடாமல் இருக்கவேண்டும். "பாஸ்" திரைப்படத்தில் போட்ட அதே போன்ற மொக்கையான ஸ்டெப்ஸ வச்சி இன்னும் ஒப்பேத்துகிறார் மனிதர்.
தமனின் இசையில் "அகலாதே...", "எததான் கண்டுட்ட புதுசா.." மற்றும் "போயும் போயும்.." என்ற இரண்டு பாடல்கள் நன்றாக வந்துள்ளது.
சேட்டை பச்சை காமெடி படம். ஆனாலும் படம் நல்ல வசூல்பார்க்க வாய்ப்புகள் இருக்கிறது.
0 மறுமொழிகள்:
Post a Comment