வெகுநாட்களுக்கு பிறகு பாடல்களை பற்றி ஒரு பதிவை என் வலைத்தளத்தில் எழுதுகிறேன். நேற்று ரகுமான் இசையில் வெளியான மரியான் திரைப்பட பாடல்களை கேட்டேன்.. மகிழ்ந்தேன். வந்தேமாதரம் புகழ் பாரத்பாலாவும் ரகுமானும் மீண்டும் இந்த படத்தில் இணைந்திருக்கிறார்கள். இந்த படத்தில் மொத்தம் ஏழு பாடல்கள், அதில் எனக்கு பிடித்த பாடல்களை பற்றி மட்டும் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.
எங்க போன ராசா...
காதலனை பிரிந்த காதலியின் மன நிலைமையை விளக்கும் பாடல் போல தெரிகிறது. இந்த பாடலின் ஜீவன் பாடகி ஷக்திஸ்ரீ யின் குரல் தான். அதற்கேற்றார் போல இசைக்கருவிகள் மிகவும் குறைவாகவே உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. கொஞ்சம் பிசிறி இருந்தாலும் ஒப்பாரி வகைப்பாடலாக மாறுவதற்கு வாய்ப்பிருக்கிறது.
இன்னும் கொஞ்சம் நேரம்...
இது ஒரு மென்மையான காதல் பாடல். ரகுமானின் மற்றொரு "மாஸ்டர் பீஸ்" என்று சொல்லலாம். இந்த பாடலின் வரிகள் வேண்டுமானால் தமிழில் பாடப்பட்டிருக்கலாம் ஆனால் இசையை கேட்கும் போது ரகுமானின் இசையில் வந்த ஹிந்தி திரைப்பட பாடல்களில் ஒன்றை கேட்பது போன்ற ஒரு உணர்வு எனக்கு. இதே உணர்வை கடல் திரைப்படத்தில் வந்த "மூங்கில் தோட்டம்" பாடலிலும் உணர முடிந்தது. இதற்கு காரணம் இசைக்கருவிகளை உபயோகித்த விதமாக இருக்கலாம். இந்த பாடலை விஜய்பிரகாஷ் மற்றும் ஸ்வேதா மோகன் இணைந்து பாடியுள்ளனர்.
நேற்று அவள் இருந்தாள்...
இதுவும் ஒரு மென்மையான காதல் பாடல் தான். பாடகர்கள் முக்கியமாக விஜய்பிரகாஷ் "லோ பிட்ச்" ஹை பிட்ச்" என்று மாறி மாறி பாட அதற்கேற்றார் போல தேவையான இடங்களில் இசையை குறைத்தும் கூட்டியும் கொடுத்திருக்கிறார் ரகுமான். எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது.
நெஞ்சே எழு...
இந்த பாடலை முதலில் கேட்கும் போது செம்மொழிக்காக ரகுமான் இசை அமைத்த பாடல் ஏனோ நினைவுக்கு வந்தது. அடுத்து தொடர்ந்து கேட்கும் போது வேறு எதோ பாடலை நினைவுபடுத்தியது ("அன்பே ஆருயிரே" படத்தில் வரும் "ஆறரை கோடி பேர்களில் ஒருவன்.." பாடலின் ஸ்லோ வெர்ஷன் போல). இதற்கு காரணம் இசையோ அல்லது பாடல் வரிகளோ அல்ல.. பாடியவிதம் மட்டுமே. இதை நான் குறையாக சொல்லவில்லை. மேலும் இந்த பாடலை கேட்கும் போது நமக்குள் ஒரு புத்துணர்வு ஏற்படுவதை மறுக்க முடியாது. இந்த பாடலை ரகுமானே பாடியுள்ளார்.
பாடல்களை பதிவிறக்கம் செய்ய கீழே இணைப்புகளை சொடுக்கவும்..
0 மறுமொழிகள்:
Post a Comment