சூது கவ்வும் நேரம்



கலைஞர் டிவியில் வரும் நிகழ்ச்சிகளில் உருப்படியான ஒரே நிகழ்ச்சி நாளைய இயக்குனர் மட்டுமே. ஏன் பாசத்தலைவனுக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவையும், மானாட.. மயிலாட நிகழ்ச்சியையும் அந்த பட்டியலில் சேர்க்கவில்லை அப்படின்னு கேட்கக்கூடாது. அப்புறம் நான் கடுப்பாயிடுவேன். சரி விஷயத்துக்கு வருவோம். அப்படி நாளைய இயக்குனர் கொடுத்த அறிமுகத்தில் பல நல்ல கலைஞர்களுக்கும் குறும்படங்களுக்கும் வெள்ளித்திரையிலும் அறிமுகம் கிடைத்துள்ளது. இது வரவேற்கதக்க ஒன்று.

அந்த வகையில் சமீபத்தில் வெளியான சூது கவ்வும் மற்றும் நேரம் திரைப்படங்களை பற்றிய பொதுவான பதிவு தான் இது. இந்த இரண்டு படங்களை பற்றி பார்ப்பதற்கு முன், இவற்றுக்கான எதிர்பார்ப்புகளை பற்றி சொல்ல விரும்புகிறேன். சமீபத்தில் சிறந்த நடிகராக கண்டுகொள்ளப்பட்ட விஜய் சேதுபதி என்கிற மனிதனின் மேலிருந்த எதிர்பார்ப்புகளால் சூதுகவ்வும் திரைப்படத்திற்கு எதிர்பார்ப்புகள் அதிகமாக இருந்தது.

நேரம் திரைப்படத்திற்கு பிஸ்தா பாடல் கொடுத்த வரவேற்பால்  நல்லதொரு எதிர்பார்ப்பு கிடைத்தது. அதுபோக படத்தின் கதாநாயகி நஸ்ரியாவிற்கு ரசிகர்கள் அதிகமானதும் ஒரு  காரணம். எனக்கு தெரிந்த  சமந்தா ரசிகர்கள் எல்லாம் நஸ்ரியாவிற்கு மாறிகொண்டிருக்கிறார்கள்.


சூது கவ்வும் திரைப்படம் அதிகப்பட்ச நேர்மையுடன் ஆள்கடத்தல் செய்யும் கதாநாயகன் ஒரு கடுமையான (கொடுமையான) போலிஸ் அதிகாரியிடம் தன் குழுவுடன் சிக்கி எப்படி தப்புகிறான் என்பதை காட்டுகிறது.


நேரம் திரைப்படம் சந்தர்ப்ப சூழ்நிலையால் கதாநாயகன் வட்டிக்கு பணம் வாங்கி அதன் தவணை பணத்தை கட்டமுடியாமல் போக, அந்த கந்துவட்டிகாரனிடம் இருந்து அவன் எப்படி தப்புகிறான் என்பதை காட்டுகிறது.

சூது கவ்வும் திரைப்படத்தை முதலில் பார்த்த சிலருக்கு அடுத்து வந்த நேரம் திரைப்படம் பிடிக்காமல் போக வாய்ப்புகள் இருக்கிறது. இதற்கு இரண்டு படங்களுக்கான பொதுவான விஷயங்கள் கூட காரணமாக இருக்கலாம். நான் முதலில் பார்த்தது நேரம் திரைப்படம். அடுத்து ஒருவார இடைவெளியில் சூது கவ்வும் பார்த்தேன். உண்மை என்னவென்றால் இரண்டு படங்களையும் ரசித்து பார்த்தேன். ஆனால் சூதுகவ்வும் திரைப்படத்தின் இரண்டாவது பகுதி கொஞ்சம் நீளமாக இருந்தது போல உணர்ந்தேன். ஆனால் இதற்கு நேர்மாறாக நேரம் திரைப்படம் இருந்தது.

எனக்கு தெரிந்த இரண்டு படங்களுக்கான பொதுவான விஷயங்கள்:

இரண்டு படத்தின் இயக்குனர்களும் குறும்படங்களில் இருந்து வெள்ளிதிரைக்கு வந்தவர்கள்.

சில நடிகர்கள் இரண்டு படங்களிலும் நடித்துள்ளனர்.

இரண்டுமே பிளாக் காமெடி (Black Comedy) வகை சினிமாக்கள்.

எதிர்பாராத நேரத்தில் முக்கிய வில்லனுக்கு படக்கூடாத இடத்தில் ஏற்படும் காயத்தால் கதாநாயகன் தப்புகிறான். (ஒரு படத்தோட வில்லனுக்கு முன்னாடி அடி.. அடுத்தப்பட வில்லனுக்கு பின்னாடி அடி)

ஒரு படத்தில் கந்துவட்டி.. மற்றொன்றில் ஆள்கடத்தல் என்கிற முக்கியமான சமூகப் பிரச்சனைகள் கதைக்களமாக உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.

ஒரு படத்தில் நல்லவர்கள் ஜெயிக்கிறார்கள்.. மற்றொன்றில் கெட்டவர்கள் மட்டுமே ஜெயிக்கிறார்கள்.

இரண்டு படத்துக்குமான ஒரே நீதி "எல்லாம் கடந்து போகும்".

இரண்டு படங்களும் பார்த்து ரசிக்கவேண்டிய திரைப்படங்கள். கண்டிப்பாக பார்க்கலாம்.
SHARE
    Blogger Comments
    Facebook Comments

0 மறுமொழிகள்:

Post a Comment