நானும்.. சென்னை டிராபிக் போலீஸும்..


பெங்களூரில் இருந்து சென்னைக்கு பணிமாற்றதையும், இட மாற்றத்தையும் கடந்தமாதம் ஒரு சேர தேடிக்கொண்டேன். சென்னைக்கு மாற்றலாகி வருவதற்கு முன், வாடகைக்கு வீடு தேடவேண்டும், புதிய மொபைல் நம்பர் வாங்கவேண்டும், கேஸ் கணைக்ஷன் வாங்க வேண்டும், அப்புறம் எல்லா வீட்டு சாமான்களையும் பெங்களூரிலிருந்து பத்திரமாக கொண்டுசேர்க்க வேண்டும் என்று பல வேலைபாடுகள் இருக்க, நான் எப்பொழுதும் சிந்தித்துகொண்டிருந்தது என்னுடைய கர்நாடகா பதிவு எண்ணை கொண்ட இரண்டு சக்கர வாகனத்தை எப்படி தொல்லை இல்லாமல் சென்னை மாநகர வீதிகளில் ஓட்டுவது என்பது மட்டுமே.

ஆரம்பத்தில் இந்த வண்டியை விற்றுவிட்டு புதிதாக ஒரு வண்டியை வாங்கி ஓட்டலாம் என்று திட்டமிட்டிருந்தேன். ஆனால் என் மனைவிக்கு இந்த வண்டியை தான் பிடித்திருந்தது. நம்ம கவுண்டமணி பாஷையில் சொல்லவேண்டுமென்றால் "பெட்ரமாஸ் லைட்டே தான் வேணுமாம்". அதனால் வேறுமாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனத்தை சென்னையில் ஓட்டுவதற்கான விதிமுறைகளை விசாரிக்க தொடங்கினேன். அதன்பிறகு அதிலிருக்கும் பிரச்சனைகளையும் உணர்ந்தேன்.

பெங்களூரில் உள்ள கமிஷனர் காவல்நிலையத்தில் NOC (நோ அப்ஜெக்சன் சர்டிபிகேட்) வாங்கிவிட்டு ஒரு மாதத்திற்கு சென்னையில் பிரச்சனை இல்லாமல் ஓட்டிகொள்ளலாம். ஆனால், அந்த ஒருமாத காலத்திற்குள் பதிவு எண்ணை தமிழ்நாடு பதிவு எண்ணாக மாற்றிக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் இரண்டு மாநிலங்களிலும் அந்த வண்டியை பிற்காலத்தில் ஓட்ட முடியாத நிலை ஏற்படும். இப்படி பதிவு எண்ணை மாற்றுவதற்கு இரண்டு மாநிலத்தின் RTO அலுவலகங்களிலும் ஒரே முறையில் RC புக் வழங்கப்படவேண்டும். அதாவது ஒருபுறம் "ஸ்மார்ட் கார்டு" முறையும், மறுபுறம் காகித முறையும் அமலில் இருந்தால் புதிய எண்ணை பெறமுடியாது. என்னுடைய வாகனத்திற்கு வழங்கப்பட்ட RC புக் "ஸ்மார்ட் கார்டு" முறையில் வழங்கப்பட்டது. இதுபோக, எனக்கு முன்பே என்னுடைய வாகனத்தை ஒருவர் உபயோகித்திருந்தார். நான் இரண்டாவதாக வாங்கி ஓட்டிகொண்டிருக்கிறேன். சில நேரங்களில் புதிய பதிவு எண்ணை வாங்குவதற்கு வாகனத்தின் பழைய உரிமையாளரையும் RTO அலுவலகம் தொடர்புகொள்ள வாய்ப்பிருக்கிறது. ஆனால் என்னிடம் அவரை பற்றிய எந்தஒரு தகவலும் இல்லை. மேலும், மீண்டும் பணிமாற்றம் பெற்று வேறு எந்த மாநிலத்திற்கோ அல்லது கர்நாடகாவிற்கே பிற்காலத்தில் செல்ல வாய்ப்புகள் இருக்கிறது.

இப்படி பல பிரச்சனைகள் இருக்க NOC வாங்காமல் எதோ ஒரு தைரியத்தில் வண்டியை வீட்டுசாமான்களோடு சேர்த்து பொட்டலம் கட்டி சென்னையில் வந்து இறக்கிவிட்டேன். சென்னை வந்து ஒரு வாரத்திற்கு ரோட்டில் போகும்போது எந்த போலீஸ்காரரை பார்த்தாலும் அவர் என்னையே பின்தொடர்வதை போன்ற ஒரு பிரமை இருந்தது. ஆனால் இந்த பீலிங் அடுத்தவாரத்திலேயே காணாமல் போனது.

அது திங்கள்கிழமை, விடுமுறைநாட்களை நண்பர்களோடு இனிமையாக கழித்த நினைவுகளை அசைபோட்டுக்கொண்டே அலுவலகத்திற்கு  சென்றுகொண்டிருந்தேன். ராமாபுரம் சிக்னலுக்கு முந்தைய சிக்னலை மெதுவாக நெருங்கிகொண்டிருந்தேன். அந்த நேரம் பார்த்து பச்சையில் இருந்து மஞ்சளுக்கு மாறியது சிக்னல் விளக்கு. நானும் வண்டியை நிறுத்தலாம் என்று யோசித்து வண்டியின் வேகத்தை இன்னும் குறைக்க, எனக்கு அருகில் வந்த டெம்போ வாகனம் சிக்னலில் நிற்காமல் நகர்ந்தது. நானும் சிக்னலில் மஞ்சள்தானே எரிகிறது, சாலையை கடக்கவும் ஆட்கள் யாருமே இல்லையென்று அந்த டெம்போ வாகனத்தை பின்தொடர்ந்து சென்றேன்.




அடுத்த சிக்னலின் ஓரத்தில் நின்றுகொண்டிருந்த டிராபிக் போலிஸ் அதிகாரி அவருடைய கைப்பேசியில் பேசிக்கொண்டே எனக்கு சமிஞ்கை செய்து என்னை ஓரங்கட்டினார். நான் எதுவும் நடக்காதது போல அவருக்கு அருகில் வண்டியை நிறுத்தினேன். அவர் என் கையில் அவருடைய கைபேசியை கொடுத்து பேசசொன்னார். கைபேசியின் அடுத்தமுனையிலிருந்த போலிஸ் அதிகாரி "என்ன சார்.. ரெட் சிக்னல் விழுந்திருக்கு.. நீங்க நிக்காம போய்கிட்டே இருக்கீங்க.." அப்படின்னு கேட்டார். அப்பொழுதுதான் அங்கே வெள்ளை சொக்கா போட்டு நின்னுக்கிட்டுறுந்த போலீஸ்காரரை கவனிக்காமல் நான் கடந்துவந்ததை உணர்ந்தேன்.  சரி சமாளிப்போம் என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டு "சார் நான் சிக்னல்ல yellow போட்டுருந்ததால மெதுவா cross பண்ணிவந்துட்டேன்" அப்படின்னு சொல்ல, அவரோ "இல்ல சார்.. ரெட் சிக்னல் விழுந்துருச்சி..நீங்க நிக்க போற மாதிரி வண்டிய slow பண்ணி அப்படியே நிக்காம போயிட்டிங்க.. நான் கவனிச்சிகிட்டே இருந்தேன். இது ட்ராபிக் அபென்ஸ் சார். 300 ரூபா பைன் கட்டனும்.. நீங்க அங்கேயே நில்லுங்க.. நான் அங்க வறேன் " அப்படின்னு சொன்னாரு. நான் "சரி சார் கட்டிரலாம்.. நான் வெய்ட் பண்றேன்.. நீங்க வாங்க" அப்படின்னு சொன்னேன்.

அவர் வருவதற்குள் என் அருகில் இருந்த போலிஸ்காரர் "வண்டியோட டாக்குமென்ட்ஸ் எல்லாம் வச்சிருக்கிங்களா..? எங்க வேலை பாக்குறிங்க..?? எங்க குடியிருக்கிங்க..?? கல்யாணம் ஆயிடுச்சா..?? " அப்படின்னு வரிசையா கேள்வி கேட்க ஆரம்பிச்சார். நான் அவரது கேள்விகளுக்கு பதில்சொல்லி முடிக்கவும்,என்னுடன் கைப்பேசியில் பேசிய போலிஸ் அதிகாரி வரவும் சரியாக இருந்தது. நான் அவரிடம் "சார், yellow போட்டுருந்ததாலதான் என் பக்கத்துல வந்த டெம்போ வண்டிகூடவே சிக்னல cross பண்ணிட்டேன்" அப்படின்னு சொன்னேன். அவர் வண்டியில் எழுதப்பட்டிருந்த கர்நாடகா பதிவு எண்ணை ஒருமுறை பார்த்துவிட்டு "டாக்குமென்ட்ஸ் எல்லாம் வச்சிருக்கிங்களா..??" அப்படின்னு கேட்டார். நான் "சார் சென்னைக்கு வந்து ஒரு வாரம் தான் ஆச்சு.." அப்படின்னு சொல்ல, அவர் "அப்போ வண்டியோட NOC இருக்கா..? அப்படின்னு கேட்டார். நான் அந்த நேரத்திற்கு தப்பித்தால் போதுமடா சாமி என்று நினைத்துக்கொண்டு "இல்ல சார்.. நான் மறுபடியும் பெங்களூருக்கு போறதுக்கு வாய்ப்பு இருக்கு.. அதனால NOC வாங்கல" அப்படின்னு சொன்னேன். அவர் என்னை மேலும் கீழும் பார்த்துவிட்டு "உங்க சொந்த ஊரு எது..?" அப்படின்னு கேட்டார். நான் "திருநெல்வேலி பக்கத்துல சார்.. அப்பா அம்பாசமுத்திரத்துல சப்-இன்ஸ்பெக்டரா இருக்காங்க.." அப்படின்னு ஒரு எக்ஸ்ட்ரா பிட்டை போட்டு வைத்தேன்.

அவர் சிரித்தது கொண்டே "சார் நான் உங்க டாக்குமெண்ட்ஸ் எதையுமே செக் பண்ணல.. அப்பா ஒரே டிப்பார்ட்மெண்ட்ல வேற இருக்காரு.. அதனால உங்களால முடிஞ்ச ஒரு அமவுண்ட்ட அந்த சார்கிட்ட குடுத்துட்டு போங்க.. இல்ல, குடுக்காம வேணும்னாலும் போங்க.. உங்க விருப்பம்" அப்படின்னு சொன்னாரு. நான் "சரி சார்" அப்படின்னு சொல்லிட்டு அவரிடமே என்னுடைய வண்டியின் பதிவு எண் மாற்றும் பிரச்சனையை தெளிவாக சொன்னேன். அவர் முழுமையாக கேட்டுவிட்டு "நீங்க NOC வாங்க வேணாம்.. இப்படியே ஓட்டுங்க.. எங்கயாவது பிடிச்சி கேட்டாங்கன்னா.. ப்ராஜெக்ட் விஷயமா வந்துருக்கேன்.. இன்னும் மூணு மாசத்துல திரும்ப பெங்களூர் போயிடுவேன்னு சொல்லுங்க" அப்படின்னு அட்வைஸ் கொடுத்துவிட்டு அவர் கிளம்பிவிட்டார்.

நான் பர்ஸிலிருந்து ஒரு நூறு ரூபாயை எடுத்து அவர் சொன்னபடி அங்கிருந்த இன்னொரு போலிஸ் அதிகாரியிடம் கொடுக்க போக, உடனே அவர் பதறி "சார் பப்ளிக்ல இப்படி பர்ஸுல இருந்து பணத்தை எடுத்து தரீங்க.." அப்படின்னு முகத்தை சுழித்தார். நான் "சார் நான் வேணும்னா அடுத்த சிக்னல்ல வெய்ட் பண்றேன்.. நீங்க வந்து வாங்கிக்கோங்க.." அப்படின்னு சொன்னேன். அவர் "இல்ல சார்.. வேணாம்.. நீங்க கிளம்புங்க.. ஒன்னும் பிரச்சனை இல்ல" அப்படின்னு ஜகா வாங்கிக்கொண்டார்.


இப்படியாக ஒருவழியாக அன்றைக்கு தப்பித்து கொண்டேன். இனி எங்கே மாட்டினாலும் அந்த போலிஸ் மாமா சொன்ன அறிவுரையை தான் பாலோ பண்ணனும்.

டிஸ்கி:

நன்றி சென்னை டிராபிக் போலிஸ்.
SHARE
    Blogger Comments
    Facebook Comments

0 மறுமொழிகள்:

Post a Comment