சிங்கம் - 2


படத்தின் டிரைலரில், வாயில் அருவாளை வைத்துக்கொண்டு "வாங்கல.." என்று சூர்யா அலறும் போதே.. கதி கலங்கி இந்த படத்தை கண்டிப்பாக பார்க்கவேண்டுமா?!! என்கிற கேள்வி எனக்குள் தோன்றியது. ஆனாலும் படம் வெளியான பிறகு நேர்மறையான பல விமர்சனங்கள் வரதொடங்கியதால் படத்தை பார்க்கலாம் என்று முடிவுசெய்து, சனிக்கிழமை காலையில் இன்டர்நெட்டில் டிக்கெட் தேடும் படலம் தொடங்கியது. நண்பர்களுடன் கலந்துரையாடி எந்த காட்சிக்கு செல்லலாம் என்று ஒரு முடிவுக்கு வருவதற்குள் எல்லா திரைஅரங்கத்திலும் டிக்கெட்களும் விற்று தீர்ந்தாகிவிட்டது. பரங்கிமலை ஜோதி தியேட்டரில் மட்டும் தான் டிக்கெட் இருந்தது. சரி, படம் பார்த்தே ஆகவேண்டும் என்று முடிவாகிவிட்டது, எந்த தியேட்டரில் பார்த்தல் என்ன என்று மனதை சமாதானப்படுத்திக்கொண்டு சாயங்கால காட்சிக்கு முன் பதிவு செய்தோம். முன்பதிவு என்றால், டிக்கெட்டுக்கான சேவை கட்டணத்தை மட்டும் ஆன்லைனில் செலுத்தினால் போதும். அதுபோக, டிக்கெட்டுக்கான முழு கட்டணத்தையும் காட்சி தொடங்குவதற்கு இரண்டு மணி நேரம் முன்பு,  தியேட்டரில் நேரில் வந்து செலுத்திவிட்டு டிக்கெட்டை பெற்றுக்கொள்ள வேண்டும். இந்த விஷயம் தெரியாத நாங்கள் பல தடைகளை தாண்டி அடித்துபிடித்து காட்சிநேரத்திற்கு சரியாக திரைஅரங்கத்தை அடைந்தோம். அங்கே சென்ற பிறகுதான் இந்த விஷயம் தெரிந்தது. அதனால் இரவுக்காட்சிக்கு அதே தியேட்டரில் முன்பதிவு செய்து, டிக்கெட்டையும் கையோடு வாங்கிவிட்டு இரவுகாட்சியை கண்டுகளித்தோம்.


இயக்குனர் ஹரி பற்றி பெரிய அறிமுகம் நமக்கு தேவை இல்லை. தனது முதல் படமான "தமிழ்" திரைப்படத்திலிருந்து இன்று வரை அருவா, வேல்கம்பு சண்டைகளுடன் குடும்பம் மற்றும் சென்டிமென்ட் காட்சிகளை கலந்து திரைப்படம் எடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். இதில் எனது சொந்த ஊரை சுற்றி எடுத்த "சேவல்" திரைப்படத்தை தவிர மற்ற திரைப்படங்கள் பெரும்பாலும் வெற்றி திரைப்படங்களே. தமிழ் சினிமாக்களில் போலிஸ் திரைப்படங்கள் வேறொரு பரிமாணத்தை தொடுவதற்கு இவர் எடுத்த "சாமி" திரைப்படம் மிக முக்கியமான பங்கை வகித்தது என்பது மறுக்க முடியாத உண்மை. அடுத்ததாக சிங்கம் திரைப்படத்தின் மூலமாகவும் தனது தனிமுத்திரையை பதித்தார். சிங்கம் திரைப்படம் பாலிவுட்டில் இதே பெயரில் ரோகித் ஷெட்டி என்னும் இயக்குனரால்  ரீமேக் செய்யப்பட்டது மற்றொரு ஹைலைட். ஹரியின் பிளஸ் பாயிண்ட் விறுவிறுப்பான திரைக்கதை அமைத்தல், அதைத்தான் இந்த படத்திலும் செய்திருக்கிறார், அதன்மூலம் வெற்றியும் பெற்றிருக்கிறார்.

"சாமி" திரைப்படத்தின் இறுதியில் "சாமியின் வேட்டை தொடரும்.." என்று எண்டு கார்டு போட்டு முடித்திருப்பார் ஹரி. அப்போது இதன் அடுத்தபாகம் வெளிவருமோ என்று சந்தேகித்தேன். ஆனால், அது நடக்கவில்லை. அது சிங்கம் திரைப்படத்தில் நடத்திருக்கிறது. சிங்கம் படத்தின் முதல் பாகத்தின் இறுதிகாட்சியில் சூர்யா தனது போலிஸ் வேலையை விடுத்து சொந்த ஊருக்கே திரும்பி செல்வதுபோல காட்டப்பட்டிருக்கும். அப்போது, உள்துறை அமைச்சரான விஜயகுமார் ஆணையின்படி ஒரு ரகசிய திட்டத்திற்காகவே சூர்யா தனது சொந்தஊரான தூத்துக்குடிக்கு செல்வதாக கட்டியிருப்பார்கள். அதன்படி அடுத்தபாகத்தை வெளியிட்டு.. சொல்லி ஹிட்டடித்திருக்கிறார்கள்.


NCC ஆபீசராக ஊருக்குள் வலம்வந்து கொண்டிருக்கும் சூர்யா ரகசியமாக தூத்துக்குடி பகுதிகளில் நடக்கும் கள்ளக்கடத்தல் நிகழ்ச்சிகளை கண்காணிக்கிறார். அதை உள்துறை அமைச்சர் விஜயகுமாரிடம் அவ்வப்போது தெரிவிக்கிறார். ஒருகட்டத்தில் போதைபொருட்கள் கடத்தல் நடப்பதை கண்டுபிடித்துவிடுகிறார் சூர்யா. இதை சகாயம் என்னும் ரௌடி உதவியுடன் அங்கே இருக்கும் "பாய்" என்னும் தாதா மற்றும் அதே ஊரில் உள்ள கப்பல் கம்பெனி முதலாளியான ரகுமானும் செய்கிறார்கள். ரகுமானிற்கு வாமனன், பில்லா திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் ஒரு நெகட்டிவ் ரோல். பிசிறில்லாமல் நன்றாகவே செய்திருக்கிறார். ஒரு கட்டத்தில் தூத்துக்குடியில் ஜாதிகலவரம் வெடிக்க, தனது NCC ஆபீசர் உடையை கலைந்துவிட்டு மீண்டும் DSP ஆக தூத்துக்குடியில் பொறுப்பேற்று கொண்டு அங்கே நடக்க இருந்த கலவரத்தை சாதுர்யமாக அடக்குகிறார். அதன் பிறகு போதைபொருள் கடத்தும் கும்பலையும், அதற்கு முக்கிய காரணமான டேனி என்னும் ஆப்பரிக்க வில்லனையும் எப்படி பிடித்து ஜெயிலில் அடைக்கிறார் என்பதைதான் விறுவிறு திரைக்கதையுடன் காட்டியிருக்கிறார்கள்.


இந்த படத்தின் முதல் சண்டைகாட்சியில், முகமூடி படத்தில் ஜீவா கைக்குட்டையால் முகத்தை மூடிக்கொண்டு சண்டைபோடுவதை நினைவூட்டுகிறார். படத்தின் ஆரம்பம் முதல் இறுதிவரை ஸ்பிளென்டர் பைக், புல்லெட், போலிஸ் ஜீப், உள்நாட்டு விமானம், வெளிநாட்டு விமானம் என்று எல்லாவற்றிலும் ஏறி இறங்கி வில்லன்களை துரத்துகிறார் சூர்யா. படம் போரடிக்கிறதே என்று நமது ஆழ்மனம் நினைக்க தொடங்குவதற்குள் அடுத்த காட்சிக்கு நம்மை கொண்டுசென்று விடுகிறார்கள். படத்தில் சந்தானம் "எந்திரன்" பாடலை பாடிக்கொண்டு அறிமுகம் காட்சி, விஸ்வரூபம் ஸ்டைலில் தன்னை துரத்தி வந்தவர்களை மிரட்டும் காட்சி என்று பல இடங்களில் நம்மை சிரிக்க வைக்கிறார். விவேக்கை முதல் பாகத்தில் உபயோகப்படுத்திய காரணத்தினால் இந்த பாகத்திலும் உபயோகித்திருக்கிறார்கள் போல, காமெடியில் விவேக், சந்தானம் அளவிற்கு ஸ்கோர் செய்யவில்லை.


அஞ்சலி முதல் பாடலுக்கு மட்டும் வந்து ஒரு குத்தாட்டம் போட்டு செல்கிறார். ஹன்ஷிகா கொஞ்சம் உடல் மெலிந்து பிளஸ் டூ மாணவியாக வருகிறார். NCC ஆபீசர் சூர்யாவை காதலிக்கவும் செய்கிறார். இறுதியில் கௌரவகொலை என்று சொல்லி அவரை சாகடிக்கவும் செய்கிறார்கள். அனுஷ்காவிற்கு முதல் பாகத்தில் இருந்த அளவிற்கு கூட இதில் வாய்ப்புகள் இல்லை. அவரின் கெட்ட நேரம், இந்த பாகத்திலும் சூர்யாவை திருமணம் செய்துகொள்ளவில்லை. ஒருவேளை , அடுத்த பாகத்தில் திருமணம் செய்துகொள்வாரோ?!!.

இரண்டு பாடல்களை தவிர மற்ற பாடல்கள் அந்த அளவிற்கு மனதில் நிற்கவில்லை. ஒளிப்பதிவில் வழக்கம்போல பிரியனின் பங்களிப்பு பெரும்பங்கை வகிக்கிறது. இது ஒரு முழுநீள ஆக்க்ஷன் திரைப்படம். ஆக்க்ஷன் விரும்பிகளுக்கு நல்ல ட்ரீட்.


டிஸ்கி:
இரவு கட்சிக்கு சென்ற மாதிரி ஒரு உணர்வே எங்களுக்கு இல்லை. அரங்கமே விசில் சத்தத்தினால் அதிர்ந்தது. முக்கியமாக நாங்கள் இருந்த வரிசைக்கு பின்னால் இருந்தவர்கள், படத்தில் நடித்த சூர்யாவை விட கொஞ்சம் அதிகமாகவே சத்தம் போட்டார்கள்.

பாடல்கள் தனியாக கேட்பதற்கு விளங்கும்படியாக இல்லையென்றாலும் படத்தோடு பார்க்கும்போது பரவாயில்லை. அதனால்தான் என்னவோ, பாடல்கள் வரும்போது ஓரிருவரை தவிர யாரும் "தம்" அடிக்ககூட வெளியே செல்லவில்லை.

இரண்டாம் பாகம் கொஞ்சம் நீளமாக இருந்ததை போன்ற ஒரு உணர்வு இருந்தது. அந்த வெளிநாட்டு வில்லன் டேனி ஆப்பிரிக்கா போவதும், டேனியை தேடி சூர்யா ஆப்பிரிக்கா செல்லும் காட்சிகளை நீக்கி இருக்கலாம்.
SHARE
    Blogger Comments
    Facebook Comments

0 மறுமொழிகள்:

Post a Comment