மரியான்ஏ ஆர் ரகுமான், பரத்பாலா மற்றும் தனுஷ் என்று படத்திற்கான எதிர்பார்ப்புகளோ அதிகம், அதே நேரத்தில் படத்திற்கான விளம்பரங்களோ இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியான சிங்கம்-2 திரைப்படத்தை விட குறைவு. இதற்கிடையே வெளிவந்திருக்கும் மரியான் திரைப்படம் உண்மையில் தமிழ் சினிமா வரலாற்றில் மற்றொரு சிறந்த முயற்சி தான்.

கடலை தனது வாழ்க்கையாக நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கும் மீனவன்  மரியான் (தனுஷ்). அதே ஊரில் வாழும் தொம்சை (சலீம் குமார்) என்னும் மீனவரால் வளர்க்கப்படுபவர் பனிமலர் (பார்வதி). படத்தில் பார்வதிக்கு தனுஷின் மீது பலவருடங்களாகவே காதல். ஏன் அப்படியொரு காதல்?? அப்படின்னு கேட்டா அது எனக்கும் தெரியாது.. இயக்குனர் பரத்பாலவும் படத்தில் அதை காட்டவில்லை. பருத்திவீரன் "பிரியாமணி" மாதிரி, தனுஷின் மீதான தனது காதலை சிலநேரங்களில் ஆண்மைதனமாக வெளிப்படுத்தி தனுஷிடம் அடியும் வாங்குகிறார் பார்வதி. தனுஷிற்கு உள்ளுக்குள் காதல் இருந்தாலும் அதை மறைத்து பார்வதியிடம் வெறுப்பை காட்டுகிறார். காரணம், தனுஷின் தந்தை மீன் பிடிக்கும் போது கடலில் படகு உடைந்து இறந்துவிட்டதால் அதே நிலை கடலையே நம்பி வாழும் தனக்கும் ஏற்பட்டால் பிற்காலத்தில் பார்வதியின் நிலமை மோசமாகிவிடும் என்பது மட்டுமே. ஒரு கட்டத்தில், பார்வதியை தூக்கிவளர்த்த தொம்சை வாழ்க்கையில் சாதிக்கணும்னு நினைக்கிறவங்களுக்கு எப்போதுமே ஒரு பொண்ணோட துணை வேணும் அப்படின்னு சொல்ல.. ஆப்லைன்ல இருந்த தன்னோட காதலை ஆன்லைனுக்கு கொண்டுவரார் தனுஷ். அதாவது, எம்ப்டி கிரவுண்டா இருந்த அவரது இதயத்தில்.. பார்வதிக்கு பட்டா போட்டு கொடுக்கிறார். இந்த நேரத்துல பல வருஷதிற்கு முன்னால் தான் கொடுத்த கடனுக்கு பதிலா பார்வதியை கல்யாணம் பண்ணி தர சொல்லி கடன்கொடுத்தவன்  தொம்சையை கேட்க, அந்த லோக்கல் தண்டல்காரன அடிச்சி தொம்சம் செய்றார் தனுஷ். அது மட்டுமில்லாமல், அந்த கடன் தொகையை, வெளிநாட்டுக்கு இரண்டு வருட காண்ட்ராக்ட் வேலைக்கு போகும் ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டுவிட்டு தனுஷ் திருப்பிகொடுக்கிறார்.


அதன் பிறகு, வெளிநாட்டில் இரண்டு வருட ஒப்பந்த தொழிலை முடித்துவிட்டு கிளம்பும் தருவாயில், அந்த நாட்டின் லோக்கல் நக்சலைட் கூட்டம் தனுஷை பிடித்து சென்றுவிடுகிறது. மேலும் தனுஷிடம் ஏதாவது பணம் இருக்கிறதா என்று கேட்டு அடித்து சித்திரவதை செய்கிறார்கள். அந்த கூட்டம், தங்களுடைய நாடு ஏழை நாடு, எங்கள் நாட்டின் எண்ணை வளத்தை நீ வேலைபார்க்கும் நிறுவனம் கொள்ளை அடிக்கிறது. அதனால், நீ வேலைபார்க்கும் கம்பெனிக்கு போன் செய்து முடிந்த அளவு பணத்தை பெற்றுத்தரும்படி சொல்கிறார்கள். இறுதியில் அந்த நக்சலைட் கூட்டத்திடம் இருந்து தப்பித்து, தனுஷ் தன் காதலி பார்வதியை எப்படி கரம்பிடித்தார் என்பதுதான் படத்தின் கதை.


படத்தின் முதல்பாதி தனுஷ்-பார்வதி காதல் காட்சிகள் நிறைந்தும், இரண்டாம் பாதி தனுஷ்-நக்சலைட் கூட்டம் நிறைந்தும் இருக்கிறது. படம் கொஞ்சம் மெதுவாகத்தான் நகர்கிறது, சர்வைவல் பற்றிய திரைப்படம் அதனால்தான் மெதுவாக நகர்கிறது என்றும் ஒரு முடிவுக்கு வரமுடியாது. சில நண்பர்கள் இந்த படத்தை "CASTAWAY", "127 HOURS" போன்ற சர்வைவல் திரைப்படங்களோடு ஒப்பிட்டு பார்க்கிறார்கள். தனி ஆளாக யாருமே இல்லாத இடத்தில் சிக்கிக்கொள்ளும் போது வேண்டுமானால் காட்சி அமைப்புகள் மெதுவாக இருக்கலாம். ஆனால், ஒரு கூட்டத்திடம் சிக்கிக்கொள்ளும் போது காட்சிகள் சுவாரஸ்யமாக இருந்தால்தான் நன்றாக இருக்கும் என்பது எனது சொந்த கருத்து. இதற்கு காரணம், டிஸ்கவரி சேனலில் வரும் "MAN Vs WILD" நிகழ்ச்சியை அதிகம் பார்த்த பாதிப்பாகக்கூட இருக்கலாம்.


தனுஷின் நடிப்பை பார்க்கும் போது, முதல்பாதியில் "ஆடுகளம்" மற்றும் இரண்டாம் பாதியில் "புதுப்பேட்டை" திரைப்படம் நினைவுக்கு வருகிறது. தனுஷின் நடிப்பு பல இடங்களில் நம்மை கவர்கிறது. முக்கியமாக பார்வதியுடன் போனில் பேசும் அந்த காட்சி. எனக்கு தெரிந்து திரைஅரங்கில் பெரும்பாலானோர் ரசித்த காட்சி அதுதான். முக்கியமாக "கட்டபீடி" இழுத்துக்கொண்டு அந்த கந்துவட்டிகாரனை புரட்டி எடுக்கும் போது ரஜினியின் சாயல் கொஞ்சம் தெரிகிறது. நடிப்பில் பார்வதி தனுஷிற்கு சரியான போட்டி, "பூ" படத்தை விட பல மடங்கு ஜொலிக்கிறார். பார்வதியை இந்த திரைப்படத்தில் பார்த்த போது மேக்கப் இல்லாத நயன்தாராவை பார்ப்பதை போன்ற உணர்வு. இரண்டாம் பாதியில் வில்லனிடம் பார்வதி அடிவாங்கும் காட்சிகளை வைக்காமலே இருந்திருக்கலாம். இது படத்தின் நீளத்தை கொஞ்சம் குறைத்திருக்கும்.

படத்தின் ஒளிப்பதிவு அருமையாக இருந்தது. ஒவ்வொரு காட்சியிலும் அது தெரிகிறது. உதாரணமாக இறுதிகாட்சியில், பார்வதி கடலோரத்தில் இருக்கும் ஒரு உயரமான பாறையில் அமர்ந்திருப்பார். அப்போது, தனுஷ் பாறையின் ஒரு பக்கதிலிருந்து பார்வதியை நோக்கி மேலே ஏறிக்கொண்டிருப்பார். அதேநேரத்தில் மறுபக்கத்திலிருந்து ஒரு அணில் பார்வதியை நோக்கி ஏறிக்கொண்டிருக்கும்.


படத்தின் மிகப்பெரிய பலம் ரகுமானின் இசை. ஆரம்பம் முதல் இறுதிவரை ஆடியன்ஸை சீட்டோடு கட்டிவைத்த பெருமை ரகுமானை சேரும். முக்கியமாக "நெஞ்சே எழு" பாடல் மட்டும் அந்த நேரத்தில் வராமல் இருந்திருந்தால், படம் பார்க்கவந்த சிலர் எழுந்துசென்றிருக்க வாய்ப்புகள் உண்டு. ஹீரோயிச காட்சிகளை குறைத்து முடிந்த அளவிற்கு யதார்த்தத்தை பதிவு செய்ய முயற்சி செய்ததிற்கும், படத்தின் நல்ல உருவாக்கத்திற்காகவும் இயக்குனரை கண்டிப்பாக பாராட்டலாம். தமிழ்சினிமாவில் இந்தமாதிரியான மெதுவாக செல்லும் திரைப்படங்கள் பெற்ற வெற்றிகள் மிகவும் குறைவு. மாரியானும் வெற்றிபெற்ற படங்களின் பட்டியலில் இணையும் என்று நம்புகிறேன்.

டிஸ்கி:

ஒரு காட்சியில் பாலைவனத்தில் சூரியன் உதயமாகும், அப்போது தனுஷ் அதற்கு எதிர்திசையில் நடந்து கொண்டிருப்பார். கடற்கரையையோ அல்லது நமதுநாடு இருக்கும் திசையை நோக்கியோ நடக்கவேண்டுமென்றால் கிழக்கு பக்கமாக அல்லவா நடக்க வேண்டும் என்று தோன்றியது. (தேங்க்ஸ் டூ Man Vs Wild. அவ்வ்வ்வ்வ்... )

படம் தொடங்கி 15 நிமிடம் கழித்து சென்றதால், சமீபத்தில் இறைவனடி சேர்ந்த கவிஞர் வாலியின் வரிகளில் வந்த "சோனாபரியா" பாடலை பார்க்க முடியவில்லை. மீண்டும் ஒருமுறை "ஆரோ" தொழில்நுட்பத்தில் பார்க்கவேண்டும்.
SHARE
    Blogger Comments
    Facebook Comments

0 மறுமொழிகள்:

Post a Comment