555


தலைவா திரைப்படம் வெளியாகாத காரணத்தால் இயக்குனர் சசியின் இயக்கத்தில் வெளியான 555 திரைப்படத்தை நேற்று பார்க்க நேர்ந்தது. காதலை சினிமா மொழியில் சொல்வதில் தனக்கென்று ஒரு தனிவழியை கடைபிடிப்பவர் சசி. இதை நாம் இவரது இயக்கத்தில் வெளியான "ரோஜாகூட்டம்", "சொல்லாமலே" மற்றும் "பூ" போன்ற திரைப்படங்களில் உணர்ந்திருப்போம். மேலே குறிப்பிட்ட மற்றதிரைப்படங்களில் படத்தின் முக்கால்பங்கு ஒரு மென்மையான போக்கு இருக்கும். ஆனால் அதே சசி இந்த 555 திரைப்படத்தின் மூலமாக முழுக்க ஆக்க்ஷன் மற்றும் திரில்லர் கலந்து கொடுத்து வெற்றியும் பெற்றிருக்கிறார்.

ஒரு விபத்திற்கு பிறகு தொலைந்து போன தனது காதலை தேடும் ஒரு காதலனின் கதை தான் படத்தின் ஒருவரி கதை.


படத்தின் தொடக்கத்தில் விபத்தில் அரவிந்த் (பரத்) அடிபட்டு காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். சிகிச்சைக்கு பிறகு இறந்து போன தனது காதலி லியானா (மிர்த்திகா) போட்டோ, வீடியோ, கல்லறை என்று அவளது நினைவுகளோடு பரத் வாழ்வதை போல காட்டுகிறார்கள். இதன்பின்னர் பழையபடி மீண்டும் அலுவலகம் செல்ல ஆரம்பிக்கிறார். அந்த அலுவலகத்தில் வேலைபார்க்கும் மஞ்சரி (எரிக்கா பெர்ணன்டஸ்) பரத்திற்கு ஆறுதலாக இருக்கிறார். இப்படியே சில நாட்கள் ஓடுகிறது. ஒருகட்டத்தில் பரத் அவ்வப்போது பார்த்து ரசித்த அவரது காதலியுடன் தான் இருக்கும் புகைப்படத்தில் காதலிக்கு பதிலாக தனது அண்ணன் சந்தானம் இருப்பதை பார்த்து திடுக்கிடுகிறார். சரி காதலியின் வீடியோவை பார்க்கலாம் என்று வழக்கமாக பார்க்கும் அந்த DVDயை போட்டுப்பார்க்கும் போது அதில் எதுவும் டிஸ்ப்ளே ஆகாததால் திடுக்கிடுகிறார். இதனால், சந்தானம் புகைப்படத்தையும் DVDயையும் மறைத்து வைத்திருப்பதாக நினைத்து அவரை பரத் அடித்துவிடுகிறார். அதன்பின், பரத்தின் அண்ணன் சந்தானம் முதல் பரத்திற்கு சிகிச்சை அளிக்கும் மனநல மருத்துவர் வரை அனைவரும் அந்தமாதிரி ஒரு காதலி பரத்திற்கு கிடையாது என்று அவரிடம் சொல்கிறார்கள். மேலும், முதலில் ஏற்பட்ட விபத்தினால் மூளை சிறிய அளவில் பாதிக்கப்பட்டிருக்கும் அதனால்தான் இந்தமாதிரி உனக்கு தோன்றுகிறது என்று அறிவியல்பூர்வமாக அந்த மனநல மருத்துவர் பரத்திடம் சொல்கிறார். ஆனாலும் பரத் அதை நம்ப மறுத்து வெளியேறுகிறார். பரத் தன்னுடைய காதலியின் அத்தையை எதோச்சையாக சாலையில் பார்த்து விரட்டிசெல்கிறார். ஆனால் அந்தபெண் பரத்தை யார் என்றே தெரியாது என்று சொல்லிவிடுகிறாள். இறுதியில், தான் வழக்கமாக செல்லும் காதலியின் கல்லறைக்கு சென்று பார்த்தால், அவரது காதலிக்கு பதிலாக வேறொரு பாட்டியின் கல்லறை அங்கே இருக்கும். இதன் பின்னர் தன்னை சமாதானப்படுத்திக்கொண்டு, தனக்கு தான் எதோ மூளையில் பிரச்சனை இருப்பதாக நினைத்துக்கொள்கிறார்.

உண்மையிலேயே பரத்தின் காதலிக்கு என்ன நடந்தது?? இதன்பிறகு பரத்திற்கு என்ன நேர்ந்தது?? என்பதை திரைப்படத்தில் காண்க..!!


ஆரம்பத்தில் பரத்தை இந்த கதாபாத்திரத்தில் பொருத்திப்பார்க்க மனம் கொஞ்சம் சிரமப்பட்டது. பரத் இந்த படத்திற்காக சிக்ஸ்பேக் மற்றும் தனது உடல்மொழி என்று கொஞ்சம் உழைத்திருக்கிறார். தன்னால் முயன்ற வரை அந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுக்க முயற்சி எடுத்திருக்கிறார். அதற்காக கண்டிப்பாக பாராட்டலாம். நடிகர் சூர்யா (கஜினி படத்தில் நடிக்காமல்) அல்லது கார்த்தி இதில் நடித்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்பது எனது அவதானிப்பு.


பரத்தின் காதலியாக வரும் புதுமுக நடிகை மிர்த்திகா நம்மை கவர்கிறார். சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தில் வரும் ஜெனிலியாவின் கதாபாத்திரம் எனக்கு பிடித்ததில்லை. காரணம் அந்த கதாபாத்திரத்தில் யதார்த்தத்தை மீறிய ஒரு வெகுளித்தனம்மான நடிப்பு தெரியும். ஆனால், இந்தபடத்தில் மிர்த்திகாவின் நடிப்பை பார்க்கும் போது அது சரியாக ஒன்றிப்போகிறது. அளவான மேக்கப், யதார்த்தமான புன்னகை, முகபாவனைகள், விழி அசைவுகள் என்று கவர்கிறார்.


பரத்திற்கும் மிர்திக்காவிற்குமான காதல் காட்சிகள் நன்றாக வந்திருக்கிறது. படத்தில் சந்தானம், லொள்ளுசபா சாமிநாதன், மனோபாலா அடிக்கும் லூட்டிகள் அரங்கத்தில் சிரிப்பலையை ஏற்படுத்துகிறது. பெரும்பாலான திரைப்படங்களிலும் கதாநாயகனின் தோழனாக மட்டுமே பார்த்து பழகிப்போன சந்தானம், இந்த படத்தில் பரத்தின் அண்ணனாக வருவது கொஞ்சம் ஆறுதல்.


படத்தின் இசை சைமன். மூன்று பாடல்கள் நன்றாக வந்திருக்கிறது. "முதல் மழை காலம்.." பாடல் என்னுடைய பேவரைட். "விழியிலே.. விழியிலே.." பாடல் படமாக்கப்பட்ட விதம் எனக்கு பிடித்திருந்தது. சில பாடல்கள் தேவை இல்லாமல் இடையில் சொருகி இருக்கிறார்கள். அது படத்தின் நீளத்தை கொஞ்சம் அதிகரிக்கிறது, வேகத்தை குறைக்கிறது.

தன்னால் மென்மையான திரைப்படங்களை போல ஆக்க்ஷன் திரைப்படங்களையும் கொடுக்கமுடியும் என்று நிரூபித்திருக்கிறார் இயக்குனர் சசி. ஆரம்பம் முதல் இறுதிவரை படத்தின் சஸ்பென்சை உடைக்காமல் கொண்டுசெல்ல முயற்சி செய்ததில் சசியின் திரைக்கதை அமைக்கும் திறன் வெளிப்படுகிறது.

முழுக்கதையை பற்றி தெரிந்துகொள்ளாமல் திரைஅரங்கத்தில் கண்டுகளியுங்கள். ஒரு ஆக்க்ஷன் திரில்லர் கலந்த காதல் திரைப்படத்திற்கு உத்தரவாதம் நிச்சயம்.

டிஸ்கி:

முதலில், பரத்தின் திரைப்படத்தை இணையத்தில் முன்பதிவு செய்து பார்க்க எங்களில் யாருக்கும் உடன்பாடே இல்லை. அந்த அளவிற்கு பரத்தின் நடிப்பால் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளோம் (நடிப்பு என்று சொல்வதைவிட படங்கள் தேர்ந்தெடுக்கும் முறையால் என்று சொல்லலாம்). கடைசியாக இவரது நடிப்பில் வந்த "சேவல்" என்கிற படத்திற்கு இணையத்தில் முன்பதிவு செய்து நண்பர்கள் நால்வரை அழைத்துசென்று அவர்களால் கழுவி ஊற்றப்பட்டேன். அதற்கு பிறகு பரத் என்றாலே அலர்ஜி ஆகிவிட்டது. "காதல்", "என்-மகன்", "வெயில்" அப்படின்னு ஒரு நாலு படம் பரத்திற்கு பெயர் வாங்கி கொடுத்திருக்கிறது, மற்றபடி எல்லாம் பிளாப் ரகங்களே. அதன்பிறகு நீண்ட இடைவெளிக்கு பிறகு மறுபடியும், பரத் நடிப்பில் மீண்டு வந்திருக்கிறார் என்று சொல்லலாம்.

முதல் பதினைந்து நிமிடங்கள் நம்மை படத்தோடு ஒன்றவைக்க இயக்குனர் கொஞ்சம் முயற்சி எடுத்திருக்கலாம். முக்கியமாக அந்த இரண்டாவது ஹீரோயினுக்கான (எரிக்கா) இன்ட்ரோ பாடல் சுத்த வேஸ்ட்.

சமர் திரைப்படத்தில் கதாநாயகனை சுற்றி நடக்கும் நிகழ்வுகள் எவ்வாறு நிகழ்த்தப்பட்டதோ அதே போல இந்த படத்தில் பரத்தை சுற்றி நடப்பவை எல்லாம் ஒரு மனிதனால் தீர்மானிக்கப்படுகின்றது (அல்லது) தீர்மானிக்க முயற்சி எடுக்கப்படுகிறது. அது ஏன்? எதற்கு? என்பது படத்தின் இறுதியில் தான் தெளிவாகிறது.

இந்த படத்தை என் மனைவி மற்றும் நண்பர்களுடன் குரோம்பேட் வெற்றி திரைஅரங்கில் பார்த்தேன். இரவுக்காட்சி சென்றால் எரிச்சலடைய வாய்ப்புகள் இருக்கிறது. அதானால் இரவுக்கட்சியை தவிர்க்க!!
SHARE
    Blogger Comments
    Facebook Comments

0 மறுமொழிகள்:

Post a Comment