வெகுநாட்களாக எதிர்பார்த்திருந்த இரண்டாம் உலகம் பாடல் கடந்த வாரம் ரிலீஸ் ஆனது. எனது எதிர்பார்ப்பிற்கான காரணம் செல்வராகவன் மற்றும் ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணி எப்படி இருக்கும் என்பது தான்.
இந்த படத்தில் மொத்தம் ஆறு பாடல்கள்இடம்பெறுகின்றன. அனைத்து பாடல்களுக்கும் வைரமுத்துவின் வரிகள் முத்தாய்ப்பாக அமைந்திருக்கிறது.
MGR காலகட்டத்திலிருந்து இன்று வரை தன் குரல்வளத்தால் நம்மை களிக்க வைப்பவர் SP பாலசுப்ரமணியம் அவர்கள் தான். அந்த வகையில் இந்த படத்தில் இடம் பெற்ற "என் காதல் தீ.." பாடலை SPB அவர்கள் பாடியுள்ளார். இது மென்சோகத்துடன் காதலை பற்றி பாடும் பாடல். ஏழாம்அறிவு படத்தில் இடம்பெற்ற "யம்மா யம்மா காதல் பொன்னம்மா.." பாடலை போல ஒரு உணர்வை கொடுத்தது. காரணம், அதே ஹாரிஸ் மற்றும் SPB கூட்டணி என்பது கூட இருக்கலாம். மற்றபடி, பாடலை கேட்டவுடன் அது மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவதை நாம் உணர வாய்ப்புகள் அதிகம்.
அடுத்ததாக கார்த்திக் குரலில் "கனிமொழியே..." எனத்தொடங்கும் பாடல். பாடகர் கார்த்திக்கிற்கு இந்த மாதிரியான பாடல் என்றால் கேட்கவே வேண்டாம். (அ)படித்து விளாசிவிடுவார். ஹாரிஸின் இசையில் கார்த்திக்கின் குரலை மிஸ் செய்வது அரிதாகிவருகிறது. அவரின் எல்லா படங்களிலும் ஒரு பாடலையாவது பாடிவிடுகிறார்.
"மன்னவனே.. என் மன்னவனே.." எனத்தொடங்கும் பாடலை சக்தி மற்றும் கோபால் ராவ் இணைந்து பாடியிருக்கிறார்கள். பாடல் கேட்க நன்றாக இருக்கிறது. இந்த பாடலை கேட்கும் போது, கிராமத்து ஸ்டைலையும் நகரத்து ஸ்டைலையும் கலந்து கொடுத்ததை போன்ற உணர்வு எனக்கு. உன்னாலே.. உன்னாலே.. படத்தில் வரும் "முதல்நாள் இன்று.." என்ற பாடல் சில நொடிகள் நினைவுக்கு வந்து போவதை தவிர்க்க முடியவில்லை.
ஹாரிஸ் விருப்பபட்டு தனுஷை பாடவைத்த பாடல் "பனங்கள்ள.. விஷமுள்ள.." எனத் தொடங்கும் பாடல். தான் இசை அமைக்கும் K V ஆனந்த்தின் அடுத்த படத்தில் தனுஷ் நடிக்க இருப்பதால் அவரை இந்த பாடலை படிக்க வைத்தாரா என்று தெரியவில்லை. இந்த பாடல் தனுஷின் குரலிற்கு பொருத்தமாகத்தான் இருக்கிறது. ஆனால், கேட்டவுடன் எனக்கு பிடிக்கவில்லை. ஒருவேளை படத்தோடு பார்க்கும் போது பிடிக்கலாம்.
"ராக்கோழி.." எனத்தொடங்கும் பாடலை ஹரிகரன் மற்றும் ஸ்ரீராம் பார்த்தசாரதி இணைந்து பாடியிருக்கிறார்கள்.ஸ்ரீராமின் குரல் ஒரு தனித்தன்மையானது. அதை முதலில் "சாமி" படத்தில் வந்த "திருநெல்வேலி அல்வாடா.." பாடலில் உணர்ந்தேன். மனுஷன் அன்று முதல் இன்றுவரை அதே டெம்போவை மெய்ன்டெயின் பண்ணுகிறார். ஹரிகரன் பற்றி சொல்லவே வேண்டாம். குரலை வழக்கம்போல இறக்கி ஏத்தி அசத்துகிறார்.
இறுதியாக, விஜய் பிரகாஷ் குரலில் "விண்ணைத்தாண்டி.." எனத்தொடங்கும் பாடல். இவரது குரலில் மாற்றான் திரைப்படத்தில் வரும் "நாணி கோணி ராணி.." பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். இந்த பாடலையும் மற்ற பாடல்களை போலவே சிறப்பாக பாடியுள்ளார்.ஆனால், பாடலின் இசையை கேட்கும் போது சில நொடிகள் தசாவதாரம் படத்தில் வரும் "உலக நாயகனே.." பாடல் ஏனோ நினைவுக்கு வருகிறது.
மொத்தத்தில்எல்லா பாடல்களும் கேட்கும் ரகங்கள் தான். நீங்களும் கேட்டுப்பாருங்கள் உங்களுக்கும் சில பாடல்கள் பிடிக்க வாய்ப்புகள் இருக்கிறது. பாடலின் இணைப்புகள் கீழே..
என் காதல் தீ..
கனிமொழியே...
மன்னவனே.. என் மன்னவனே..
பனங்கள்ள.. விஷமுள்ள..
ராக்கோழி..
விண்ணைத்தாண்டி..
டிஸ்கி:
தமிழ் திரைப்படங்களில் இசை என்பது ஒரு தவிர்க்க முடியாத அம்சம். அந்த இசை ஒரு படத்திற்கு சிறப்பாக அமைய, இசை அமைப்பாளருக்கும் படத்தின் இயக்குனருக்குமான சிந்தனைகள் ஒருமித்து இருக்க வேண்டும். அத்தகைய கூட்டணி அமைந்துவிட்டால் படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசையானது மிகச்சிறப்பாக அமையும். அத்தகைய கூட்டணிகள் தமிழ் சினிமாவில் பலவற்றை நாம் பார்த்திருப்போம். உதாரணமாக "இளையராஜா-பாரதிராஜா", "மணிரத்தினம்-A R ரகுமான்", "யுவன் சங்கர் ராஜா-செல்வராகவன்" மற்றும் "கெளதம் மேனன்-ஹாரிஸ் ஜெயராஜ்" கூட்டணிகள். நான் மேலே குறிப்பிட்ட கூட்டணிகளில் சில தற்காலிகமாக பிரிந்து கிடைக்கின்றன. அவர்கள் இணைந்திருந்தபோது கொடுத்த இசையில் இருந்த ஜீவன் பிரிந்தபிறகு கொஞ்சம் ஊசலாடுவதையும் நாம் உணர்ந்திருப்போம். இதன் மூலம் நான் என்ன சொல்ல வருகின்றேன் அப்படின்னு கேட்டிங்கன்னா, ஒரு இயக்குனர் தொடர்ந்து ஒரு நான்கைந்து திரைப்படங்களில் உபயோகித்த டெக்னீஷியன்களில் யாரை வேண்டுமென்றாலும் அடுத்த படத்தில் மாற்றி கொள்ளலாம். ஆனால், இசை அமைப்பாளரை மாற்றும் போது அதன் பாதிப்பு அந்த படத்தில் தெளிவாக நமக்கு தெரியும். இன்றும் காதல் கொண்டேன் படத்தின் பாடல்களை திடீரென்று நாம் கேட்டக நேர்ந்தால், அந்த இசையோடு நாம் ஒன்றி போவோம். அதுதான், யுவன் மற்றும் செல்வராகவன் கூட்டணியின் சக்சஸ் பார்முலா. இந்த படத்தில் ஹாரிஸ் எல்லா பாடல்களையும் தன்னால் முடிந்தவரை சிறப்பாக கொடுத்திருந்தாலும் யுவனை வழக்கம் போல இந்த செல்வராகவன் திரைப்படத்திலும் மிஸ் பண்ணுகிறேன்.
0 மறுமொழிகள்:
Post a Comment