தங்க மீன்கள்


நேற்று "தேசிங்கு ராஜா" இன்று "தங்க மீன்கள்". இரண்டு திரைப்படங்களும் முற்றிலும் மாறுபட்ட கதை அம்சம் கொண்டவை. தேசிங்கு ராஜா திரைப்படத்தை பற்றி பேச என்வசம் எதுவும் இல்லாததால் தான் அந்த படத்தை பற்றி நான் என் வலைத்தளத்தில் எழுதவும் இல்லை. நான் எழுத நினைக்கும் படங்களை மட்டும் தான் இங்கே எழுதவும் செய்திருக்கிறேன் (விமர்சனம் என்கிற கண்ணோட்டத்தில் அல்ல!).

ஒரு திரைப்படத்திற்கு போகும் போது அதை பற்றி எதிர்பார்ப்புகள் இருப்பது சாதாரண விஷயம். அந்த வகையில், சில நடிகர்களின் திரைப்படங்களும், சில இயக்குனர்களின் திரைப்படங்களும் நமக்குள் எதிர்பார்ப்புகளை அளவுக்கு அதிகமாகவே தூண்டி விடுகின்றன. அதற்கு காரணம், அவர்களின் முந்தைய படைப்புகளின் தாக்கமாக தான் இருக்கும். அதே வரிசையில் தான் ராமின் தங்கமீன்கள் திரைப்படமும் இணைந்திருந்தது. உண்மையை சொல்லவேண்டுமென்றால் இவரின் "கற்றது தமிழ்" திரைப்படம் ஒரு படைப்பாக என்னை முழுவதும் ஈர்க்கவில்லை. அந்த படத்தில், தற்கால சமுதாயத்தின் மீது உள்ள தனது ஆதங்கத்தை கொஞ்சம் அரைகுறையாக வெளிப்படுத்தியதை போன்ற உணர்வு எனக்கு. உதாரணமாக, கணிப்பொறி துறையில் பணிபுரியும்  அவருடைய நண்பனின் அலுவலகத்திற்குள் சென்று கதாநாயகன் ஜீவா நடந்துகொள்ளும் விதத்தை சொல்லலாம். அந்த "கற்றது தமிழ்" திரைப்படத்தை நடிகை சுஹாசினி ஜெயா தொலைக்காட்சியில் விமர்சித்து கொண்டிருந்தது இன்னும் என் நினைவில் இருக்கிறது. "இயக்குனர் ராமிற்கு அப்படி என்னதான் இந்த சமுதாயத்தின் மீது கோபமோ?" என்று அவர் பேசிக்(விமர்சித்து)கொண்டிருந்தார். இப்படி பல விமர்சனங்கள் அந்த படத்தின் மீது வைக்கப்பட்டாலும் ஒரு இயக்குனராக ராமிற்கு அங்கீகாரம் கிடைத்தது என்பது மறுக்க முடியாத உண்மை.

தங்க மீன்கள் திரைப்படம் மசாலா படங்களின் ரசிகர்களுக்கும் சரி, உலக சினிமா ரசிகர்களுக்கும் சரி ஒரு படைப்பாக பிடிக்குமா என்றால்? இல்லை என்று தான் சொல்வேன். ஏனென்றால் எந்த ஒரு படைப்பையும் அந்த படைப்பாளியின் கண்ணோட்டத்தில் பார்க்கும் போதோ, அந்த படைப்பு நம் வாழ்வியலோடு பொருந்தியிருந்தாலோ, நம் ரசனையோடு பொருந்தியிருந்தாலோ அது நமக்கு பிடிக்க வாய்ப்புகள் அதிகம். இந்த திரைப்படம் முதல் ரகம். இந்த திரைப்படத்தில் அப்பா - மகள் இடையே உள்ள பாச உறவை யதார்த்ததோடு சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குனர் ராம். முயற்சியில் வெகுசில இடங்களில் சருக்கவும் செய்திருக்கிறார். ஆனால், அந்த முயற்சிக்காவே கண்டிப்பாக இந்த திரைப்படத்தை பார்க்கலாம்.

ராமின் கதாபாத்திரம் சரியான அளவில் படத்தில் பொருந்தியிருக்கிறது. நான் நிஜ வாழ்க்கையில் இதே மாதிரி, +2 படிக்கும் போதே பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டவர்களை பார்த்திருக்கிறேன். அதிகம் சம்பாதிக்க முடியாமல், தன்னுடைய இயலாமையை வெளிக்காட்ட தெரியாமல் அவர்கள் தடுமாறுவதை பார்த்திருக்கிறேன். சொந்த ஊரில் பிழைக்க பல வழிகள் இருந்தும் சொற்ப சம்பளத்திற்காக, திருப்பூர், கேரளா, சென்னை என்று பிழைப்பு தேடி சென்றவர்களை பார்த்திருக்கிறேன். இவை எல்லாவற்றின் கலவையாக தான் படத்தில் ராம் எனக்கு தெரிந்தார். ஆனால், கொஞ்சம் யதார்த்தம் தான் ஆங்காங்கே குறைகிறது. ராமிற்கு அடுத்தபடியாக இந்த கதாபாத்திரத்தை செய்ய நடிகர் பார்த்திபன் பொருந்துவார் என்பது என் அவதானிப்பு.

இதை போலதான் செல்லம்மா என்கிற அந்த பெண் குழந்தையும். எட்டு வயது பெண்ணுக்கே உரிய குணாதிசயங்களை அந்த குழந்தை தன் நடிப்பால் உணர்த்த விழைகிறது. ஆனால் எட்டு வயது பெண்ணாக வாழ விழையவில்லை. இதற்கு நாம் யாரையும் குறை சொல்ல முடியாது. அந்த வயதிற்கு, அதற்கு வந்ததை அது செய்திருக்கிறது. இதை திரைஅரங்கில் இருந்த சிலரும் சொல்ல கேட்டேன். மற்ற படி குறை என்று அதன் நடிப்பில் எதையும் சொல்ல முடியாது. அந்த குழந்தையின் தோழியாக வரும் இன்னொரு குட்டி குழந்தை பேசும் உரையாடல்கள் ரசிக்கும் படி இருந்தது.

படத்தில் ராமின் மனைவியாக வரும் அந்த பெண்ணின் யதார்த்தமான நடிப்பு எனக்கு பிடித்திருந்தது.

நடிகை பத்மப்பிரியா வருவது மூன்று காட்சிகள் தான். ஆனால், அந்த மூன்று காட்சிகளில் பத்மப்பிரியாவின் கதையை நமக்கு சொல்ல விழைகிறார் இயக்குனர். ஆனால், அது பலருக்கு முழுமையாக புரிந்திருக்க வாய்ப்பில்லை. எனக்கும் புரியவில்லை, என்னுடன் வந்த நண்பர்களுக்கும் முழுமையாக புரியவில்லை என்றுதான் நினைக்கிறேன். இதிலிருந்தே நமக்கு தெரிகிறது, நாம் எப்பொழுதுமே ஒரே வகையான திரைப்படங்களை பார்த்து பழகிப்போனதால், மூளை அதை தாண்டி யோசிப்பதில்லை என்று.

இந்த காலத்தில் தனக்கு போதிய வருமானம் இல்லை என்றாலும் வட்டிக்காவது கடன் வாங்கி, தனியார் பள்ளிகளில் தன் குழந்தைகளை படிக்க வைப்பதை ஒரு கவுரவமாக நினைத்து அதை நாடி செல்லும் பெற்றோர்கள் அதிகம். இதை நான் என் சொந்தங்கள் செய்தே பார்த்திருக்கிறேன். அவர்களுக்கெல்லாம் இந்த படம் நல்ல பாடமாக அமையும் என்று நினைக்கிறேன். கவனிக்க! இதன் மூலம் அரசுப்பள்ளிகள் எல்லாமே சிறப்பாக இயங்கி கொண்டிருக்கிறது என்கிற கருத்தை நான் இங்கு முன் நிறுத்த முயலவில்லை. படத்தில் தனியார் பள்ளியின் அவலங்களை முடிந்த அளவு சொல்லி இருக்கிறார் இயக்குனர். உதாரணமாக, ஆரம்பத்தில் ஒரே ஒரு கட்டடம் கட்டிக்கொண்டு, பள்ளி கூடத்தை ஆரம்பித்து, அதில் படிக்கும் மாணவர்களின் கட்டணத்தில் அடுத்தடுத்து கட்டடங்கள் கட்டுவதை ஒரு பாடலில் காட்சி ஓட்டத்தோடு காட்டியிருப்பார். அந்த குழந்தைக்கு "W" எழுத சொல்லி கொடுக்கும் டீச்சரை பார்த்த போது, எனக்கு மூன்றாம் வகுப்பில் "ABCD" எழுத சொல்லித்தந்த முறையும் டீச்சரும் தான் நினைவுக்கு வந்து சென்றது. மேலும், குழந்தைகளை எப்படி வளர்க்கவேண்டும், குழந்தைகளிடம் எதை பேசக் கூடாது,  குழந்தைகள் முன்னே எதை பற்றி விவாதிக்க கூடாது என்பதை பற்றி எல்லாம் இந்த படம் சொல்கிறது.

பின்னணி இசையில் இன்னும் கொஞ்சம் புதுமை சேர்த்திருக்கலாம் என்பது என் எண்ணம். ஒளிப்பதிவு நன்றாக இருந்தது. மலைக்காடுகள், ஓடும் ரயில் என்று சரமாரிய உழைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்.

இது மிதமான வேகத்துடன் கொஞ்சம் வாழ்க்கையின் யதார்த்தங்களை சுமந்து செல்லும் திரைப்படம். தமிழ் திரைப்பட வரலாற்றில் இப்படிப்பட்ட திரைப்படங்கள் வருவது மிகவும் அரிது. காரணம், தயாரிப்பாளர்கள் அதிக லாபம் ஈட்ட இந்த மாதிரியான திரைப்படங்கள் உதவாது என்கிற எண்ணம் தோன்றி பல வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால், இந்த மாதிரியான வித்தியாசமான முயற்சிகளை அங்கீகரித்தால் மட்டுமே, காமெடி நடிகர்களை மட்டுமே நம்பி வாழும் நிகழ்கால தமிழ் சினிமா, கொஞ்சம் வித்தியாசமான கதை அம்சங்கள் கொண்ட திரைப்படங்களை நமக்கு கொடுக்கும். அதனால் கண்டிப்பாக இந்த படத்தை பாருங்கள்.

தொலைக்காட்சிகளில் வரும் அழுகாச்சி நாடகங்களை அலுக்காமல் தினமும் பார்த்து அழும் நாம், இந்த மாதிரியான படங்களை பார்ப்பதில் தவறேதும் இல்லை என்பது என் தாழ்வான கருத்து. சரியான மனநிலையோடு, சரியான சூழ்நிலையில், சரியான நேரத்தில் இந்த படத்தை பார்த்தால், ஆனந்த யாழை உங்களுக்குள்ளும் கண்டிப்பாக மீட்டும் இந்த தங்க மீன்கள்.
SHARE
    Blogger Comments
    Facebook Comments

0 மறுமொழிகள்:

Post a Comment