சென்னை நகரத்தின் ஒரு இரவு நேரத்தில், ஆள் நடமாட்டம் அதிகமில்லா இடத்தில் குண்டடிபட்டு கிடக்கும் மிஷ்கினிற்கு மருத்துவ உதவி செய்து, ஸ்ரீ அனுபவிக்கும் அவஸ்தைகளும் அதன் மூலம் அவருக்கு கிடைக்கும் அனுபவங்களும் தான் இந்த திரைப்படம்.
முகமூடி படத்தில் கிடைத்த விமர்சனப் பேரிடிகளில் இருந்து மீண்டு, தமிழ் சினிமா ரசிகர்களின் மனதிலிருந்து சறுக்கி தான் இழந்த இடத்தை இந்த படத்தின் மூலம் மீண்டும் பிடித்துவிட்டார் மிஷ்கின். மிஷ்கின் திரைப்படம் என்றால் அதிகம் அலட்டிகொள்ளாத கதாபாத்திரங்களையும் கேமரா கோணங்களையும் வைத்து எளிதாக கண்டு பிடித்துவிடலாம். இந்த மாதிரியான கதாபாத்திரங்களை பல கொரியன் திரைப்படங்களிலும் சில ஜப்பானிய திரைப்படங்களிலும் நான் பார்த்திருக்கிறேன். முக்கியமாக இரவுநேரக் காட்சிகளை இவர் படமாக்கும் விதம் அழகு. இதை இவரது முந்தைய படங்களிலும் பார்த்து ரசித்திருக்கிறேன், அதற்கு இந்த படமும் விதிவிலக்கல்ல.
படத்தின் வேகத்தோடு கதையையும் நாம் தேடி பயணிக்க வேண்டியிருந்தது திரைக்கதையின் பலம். கதையை படத்தின் முக்கால் பாகம் முடியும் போதுதான் சொல்கிறார் மிஷ்கின். காரணம், இது திரில்லர் படத்திற்கே உரிய கதை சொல்லும் பாணி என்பதாக கூட இருக்கலாம். படத்தில், அந்த குழந்தை மட்டும் கதை சொல்ல சொல்லி கேட்காமல் இருந்திருந்தால் நமக்கு ஓநாயும் ஆட்டுக்குட்டியும் கதையை ஒரு பிளாஷ் பேக்காகவோ அல்லது ஸ்ரீயிடம் உரையாடலாய் விளக்குவது போலவும் அமைந்திருக்கும். அது படத்தின் சுவாரஸ்யத்தை குறைத்திருக்கவும் வாய்ப்பிருக்கிறது.
இந்த மாதிரியான ஒரு படத்துக்கு பின்னணி இசை எந்த அளவிற்கு முக்கியம் என்பதை இளையராஜா உணர்த்துகிறார். இவர் மட்டும் இந்த படத்தில் பணியாற்றவில்லை என்றால் "நடுநிசி நாய்கள்"படத்தை பார்த்த ஒரு உணர்வை எனக்கு இந்த படம் கொடுத்திருக்கலாம். போலிஸ் அதிகாரியாக வரும் ஷாஜி பேசும் வசனங்களில் எனக்கு மலையாள நடிகர் பிருத்திவிராஜின் குரல் நினைவுக்கு வருகிறது (அவரது வசன உச்சரிப்பு இதற்கு காரணமாக இருக்கலாம். அல்லது, ஒருவேளை எனக்கு மட்டும் தான் இப்படி தோனுதோ??!!). மற்றபடி அவர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார் அவ்வளவே.
சராசரி திரைப்படங்களில் நகைச்சுவை நடிகர்கள் வந்தாலே நாம் சிரிப்பதற்கு ஆயத்தமாகி விடுவோம். மிஷ்கின் படங்களில் நகைச்சுவை என்பதை படத்தில் கதையோடு வரும் சராசரியான கதாபாத்திரங்கள் திடீரென்று செய்து காட்டிவிடும். இந்த படத்திலும் அத்தகைய சிரிக்க வைக்கும் காட்சிகள் இருக்கின்றன. ஸ்ரீ நடிப்பில் வழக்குஎண் திரைப்படத்தை விட பல மடங்கு மிளிர்கிறார். ஸ்ரீ யை விட்டால் இந்த கதாபாத்திரத்திற்கு நடிகர் ஜீவா பொருத்தமாக இருப்பார் என்று நினைக்கிறேன்.
கமல் ஒரு மிகப்பெரிய கலைஞன் என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை. ஆனால், கமலின் சில திரைப்படங்களில் யதார்த்ததை மிஞ்சிய நடிப்பு கொஞ்சம் வெளிப்படும். அதாவது நான் நடிக்கிறேன் என்று பார்வையாளர்களுக்கு வெளிப்படையாக அவர் உணர்த்துவது போல இருக்கும் என்று சொல்லலாம். இதை மிக உன்னிப்பாய் கவனித்தால் தெரியும். இந்த படத்தில் மிஷ்கினின் உடல்மொழியை பார்க்கும் போது கமல்ஹாசனை விட கொஞ்சம் யதார்த்தமாக நடிப்பதை போல எனக்கு தோன்றுகிறது. மிஷ்கின் சண்டையிடும் காட்சிகளை பார்த்த போது, கமல் வில்லன்களோடு நேர்த்தியாக சண்டையிடும் பல காட்சிகள் என் நினைவுக்கு வந்து போனது. முக்கியமாக மிஷ்கின் துப்பாக்கியை லாபகமாக கையாளும் விதத்தை பார்க்கும் போது ஒரு அசல் ஹிட்மேனை பிரதிபலிக்கிறார். மிஷ்கின் நல்ல இயக்குனர் மட்டுமல்ல, தான் ஒரு நல்ல நடிகன் என்பதையும் இந்த படத்தில் நிரூபித்திருக்கிறார்.
டிஸ்கி:
மிஷ்கின் முன்பே சொன்னது போல இது சராசரியான மசாலா வகை டைம்பாஸ் திரைப்படம் அல்ல. அதனால், வித்தியாசமான திரில்லர் விரும்பிகள் இந்த படத்தை கண்டிப்பாக ரசிக்க வாய்ப்புகள் அதிகம்.
இந்த படத்தை குரோம்பேட் ராகேஷ் தியேட்டரில் பார்த்தோம். ஒரு மெகா ஹோம் தியேட்டருக்குள் நுழைந்த ஒரு உணர்வு. முதலில் ராஜா ராணி படத்தின் டைட்டில் கார்டை மாறுதலாக திரையிட ஆரம்பித்தார்கள். நாங்கள் தியேட்டர் மாறி வந்துவிட்டோமோ?! என்று குழம்பி யோசிக்கும் போது (நேற்று தான் ராஜா ராணி படத்தை பார்த்தோம்.. மறுபடியும் அதை பார்க்கும் அளவிற்கு எனக்கு பொறுமை இல்லை என்று வேறு நினைத்துகொண்டேன்) ஆப்பரேட்டர் தவறை சரி செய்து எல்லாருக்கும் நிம்மதி அளித்தார்.
ராஜா ராணி போன்ற திரைப்படங்கள், வெளியாகும் முன்னே பண்ணும் அதீத பப்ளிசிட்டிகள் போன்று எதுவுமே இல்லாமல் வெளிவந்திருக்கும் இந்த படம், எந்த அளவிற்கு லாபத்தை ஈட்டித்தரும் என்று தெரியவில்லை. நான் நேற்று பார்த்த ராஜா ராணி திரைப்படத்தை விட எனக்கு இந்த படம் மிகவும் பிடித்திருந்தது. உண்மையை சொல்ல வேண்டுமென்றால், பப்ளிசிட்டி மற்றும் தெரிந்த முகங்கள் (முக்கியமாக ஜெய் மற்றும் நயன்தாரா) இல்லாமல் ராஜா ராணி வெளிவந்திருந்தால் இந்த அளவிற்கு அதற்கு வரவேற்பு கிடைத்திருக்காது.
0 மறுமொழிகள்:
Post a Comment