வேலையில்லா பட்டதாரி

"காதல் கொண்டேன்" படம் வெளிவந்திருந்த சமயத்தில், நடிகர் கமல்ஹாசன் தனுஷின் நடிப்பை பற்றி சிலாகித்து பேசியிருந்தார். அதில் "ஒரு பெண்னை தன் நெஞ்சில் மீது ஏறி நடக்கவிட்டு நடிப்பதெல்லாம் சாதாரண நடிகனால் முடியாது" என்று சொல்லியிருந்தார் ("சோனியா அகர்வால்" ஒரு பாடலில் தனுஷின் மார்பின் மீது ஏறி கடந்து போவார்). தனுஷின் உடல்வாகுக்கு அதெல்லாம் மிகவும் அதிகம். "காதல் கொண்டேன்" தனுஷிற்கு இரண்டாவது படம். அப்படி ஆரம்ப காலத்திலேயே நடிப்பின் உச்சம் தொட்டவர்தான் தனுஷ். அதனால் தான் அவர் நடிப்பின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்புகளும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அவர் நடிப்புக்கு தீனி போடும் அளவிற்கு நிறைய படங்கள் வரவில்லை. அப்படி வரவேண்டுமென்றால் கதை தேர்வில் தனுஷ் கவனமாக இருக்கவேண்டும்.

இந்த படத்தில் வரும் கதாபாத்திரத்திற்கு தனுஷ் தான் பொருத்தமாக இருப்பார். ஆனால் எத்தனைமுறை தான் இவரை இதே மாதிரி பார்ப்பது?!. படத்தின் முதல்பாதியில் "திருடா திருடி" மற்றும் "மயக்கம் என்ன" படங்களின் திரைக்கதையை ஒரு மிக்ஸியில் போட்டு அடித்து கலந்து கொடுத்திருக்கிறார்கள். படத்தின் ஆரம்பத்தில் போதாதகுறைக்கு "திருடா திருடி" படத்தின் இயக்குனர் "சுப்பிரமணியம் சிவா"க்கு நன்றி கார்டு வேறு போடுகிறார்கள். இரண்டாம் பாதியில் சில ரஜினி படங்களின் தாக்கம் நன்றாகவே தெரிகிறது. சமுத்திரக்கனியும் சரண்யாவும் இந்த படத்தில் கொஞ்சம் யதார்த்தமாகவே நடித்திருக்கிறார்கள். அமலாபாலிற்கு பதிலாக சுரபியை கதாநாயகியாக போட்டிருக்கலாம். தனுஷிற்கும் அமலாபாலுக்கும் பொருத்தமே சரியில்லை என்பது என் கருத்து. படத்தின் வில்லனை பற்றி சொல்லிக்கொள்ள எதுவும் இல்லை. வெளிநாட்டு மாப்பிள்ளை கதாபாத்திரத்திற்கு பொருத்தமானவர் போல இருக்கிறார். நம்மை தியேட்டரை விட்டு வெளியே போகவிடாமல் கட்டிபோடுவது தனுஷின் நடிப்பும் அனிருத்தின் இசையும் மட்டுமே. இந்த படத்தின் பல பொறுப்புகளை தன் தோளில் போட்டு சுமந்திருக்கிறார் தனுஷ். தயாரிப்பு, பாடல்கள், பாடகர் மற்றும் கதாநாயகன் என்று எல்லா விஷயத்தையும் சரியாகவே செய்திருக்கிறார். சொந்த தயாரிப்பு என்பதால் கதையை விட படத்தின் வெற்றியின் மீது தான் முழு கவனத்தையும் செலுத்தியிருக்கிறார், அந்த வெற்றியையும் அடைந்திருக்கிறார்.
இந்த திரைப்படம் ஒரு மசாலா படம் பார்த்த திருப்தியை கொடுக்கும். ஆனால், இதை மிகச்சிறந்த மசாலா படம் என்றெல்லாம் சொல்லிவிட முடியாது. ஆங்காங்கே "லாஜிக் மிஸ்டேக்ஸ்" இருக்கத்தான் செய்கிறது. உதாரணமாக, வில்லனின் CCTV கேமராவை வேலை செய்யவிடாமல் தடுக்கும் "டிவைஸ்" ஹீரோவின் சட்டைக்குள் இருக்கும் ரெகார்டிங் கேமராவை மட்டும் வேலை செய்யவிடாமல் தடுக்காதா?! (இது என் மனைவி கண்டுபிடித்த லாஜிக் மீறல்). ஆனால், இப்படி லாஜிக் மீறல்கள் எல்லாம் பார்த்தால் இப்போது வெளியாகும் சினிமாக்களை பார்க்கவே முடியாதே என்கிற நிலை.

நல்ல டைம்பாஸ் திரைப்படம். அதனால், நம்பிக்கையாக போயி பார்க்கலாம்.
SHARE
    Blogger Comments
    Facebook Comments

0 மறுமொழிகள்:

Post a Comment