ஜிகர்தண்டா

பெங்களூரில் பீட்சா படம் பார்க்க சென்றிருந்த சமயம், நாங்கள் டிக்கெட் கவுண்டரில் நின்றுகொண்டிருந்தோம். அப்போது அங்கே வந்த ஒரு வட நாட்டுக்காரர் "இது என்ன படம்? படத்தின் ஹீரோ யாரு? டைரக்டர் யாரு? படம் எப்படி இருக்கும்?" என்று எங்களிடம் கேள்விகள் கேட்டார். நான் இந்த படத்தில் எல்லாருமே புதுசு, இது ஒரு த்ரில்லர் படம் என்று சொன்னேன். அவருக்கு மற்ற படங்களுக்கு டிக்கெட் எதுவும் கிடைக்காததால் எதாச்சும் ஒரு படத்தை பார்த்தே ஆகவேண்டிய சூழ்நிலை. அது விடுமுறை நாள் என்பதால் மற்ற எல்லா ஹிந்தி படங்களும் ஹவுஸ்புல். வேறு வழியில்லாமல் "பீட்சா" படத்திற்கே டிக்கெட் வாங்கிகொண்டு குடும்பத்தோடு எங்களை பின்தொடர்ந்து திரைஅரங்கத்திற்குள் நுழைந்தார். படம் முடிந்து வெளியே வரும்போது, கண்டிப்பாக அவருக்கும் படம் பிடித்திருக்கும் என்று நினைத்துகொண்டேன். அதே பீட்சா திரைப்படம் சமீபத்தில்தான் ஹிந்தியில் வெளியாகி வசூலாகியது. அந்த பீட்சா படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் கைவண்ணத்தில் வந்திருப்பதுதான் "ஜிகர்தண்டா".

இயக்குனர் ஆகவேண்டும் என்கிற ஆர்வத்தில் ஒரு பிரபல ரவுடியிடம் சிக்கிக்கொள்ளும் இளைஞனின் கதைதான் இந்த திரைப்படம். இந்த மாதிரியான ஒரு கலவையில் ஒரு படம் தமிழில் இதுவரை வந்ததில்லை என்று தைரியமாக சொல்லலாம். வித்தியாசமா ஒரு படம் எடுத்தாங்கன்னா அதில் சில படங்கள்தான் கமர்சியலாக வெற்றி பெரும். அந்த வகையில் ஜிகர்தண்டா வெற்றிப்படம் தான். படத்தின் மிகப்பெரிய பலம், படத்தின் வித்தியாசமான பின்னணி இசையும் வில்லன் சிம்ஹாவும் தான். சிம்ஹாவின் நடிப்பை பற்றி சொல்லவேண்டிய அவசியமே இல்லை. ஏற்கனவே "நேரம்" மற்றும் "சூதுகவ்வும்" திரைப்படங்களில் அதை பார்த்தாயிற்று. தாடியுடன் ஒரு சாயலில் அந்த காலத்து ரஜினியின் முகத்தை நினைவுபடுத்துகிறார். சந்தோஷ் நாராயணன் தமிழ் சினிமாவில் கவனிக்கப்படவேண்டிய இசைஅமைப்பாளர். முதலில் பாடல்களை தனியாக கேட்டபோது, அந்த அளவிற்கு மனதோடு ஒட்டவில்லை. ஆனால், படத்தோடு பார்க்கும்போது ரசிக்க வைக்கிறது. படம் கொஞ்சம் நீளம். ஆனால் கண்டிப்பாக நம்மை சலிப்படைய வைக்காது. நாம எதிர்பார்த்த டிவிஸ்டுகள் நாம எதிர்பாராத நேரத்தில் வருவதுதான் படத்தின் மிகப்பெரிய டிவிஸ்டு. படத்தில் லட்சுமிமேனன் கதாபாத்திரம் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை என்றாலும், ஒரு முக்கியமான டிவிஸ்டுக்கு இவர்தான் மூலகாரணமாக இருக்கிறார். அதனால் சகித்துக்கொள்ளலாம். ஹீரோயின் ஹீரோகிட்ட "லவ் லெட்டர்" கொடுத்து காதலை வெளிப்படுத்துவதை இப்போது தான் தமிழ்படத்தில் பார்ப்பது போன்ற உணர்வு எனக்கு. சித்தார்த் நடிப்பிற்கெல்லாம் ஹீரோயிசம் செட் ஆகாது. அதை புரிந்துகொண்டு படங்களை செலக்ட் செய்கிறார். படம் மதுரை பேக்ரவுண்டில் எடுக்கப்பட்டுள்ளதால் ஆங்காங்கே "டொமோட்டோ சாஸ்" தெறிக்கிறது. ரவுடிகளை வைத்து ஆடியன்ஸை சிரிக்க வைத்ததில் வித்தியாசம் காட்டியுள்ளார் இயக்குனர். வாய்ப்பு கிடைத்தால் மறுபடியும் பார்க்கலாம் என்று நினைத்திருக்கிறேன்.

ஜிகர்தண்டா வித்தியாசமான முயற்சி. கண்டிப்பாக குடும்பத்தோடு பார்க்கலாம். படத்தின் ஒரு டிவிஸ்டை தெரிந்துகொள்ள விருப்பம் இல்லாதவர்கள் இதற்கு கீழே படிக்கவேண்டாம்.

டிஸ்கி:

அஜித் நடிப்பில் வெளிவந்த "ரெட்" திரைப்படமும், பிரகாஷ்ராஜ் நடிப்பில் வெளிவந்த "வெள்ளித்திரை" படமும் கொஞ்சம் நன்றாக எடுக்கப்பட்டிருந்தால் ஓடியிருக்கும். அஜீத்துக்கு இருக்கும் ரசிகர் வட்டத்திற்கு இப்போது "ரெட்" திரைப்படம் வந்தால் கூட நன்றாக வசூல் செய்ய வாய்ப்புகள் உள்ளது.

இது "டர்ட்டி கார்னிவல்" என்கிற கொரியன் படத்தின் அசல் காப்பி அல்ல. மேலே சொல்லப்பட்ட இரண்டு திரைப்படங்களின் "ஒன் லைன்" மட்டுமே ஜிகர்தண்டாவில் சரியாக மிக்ஸ் செய்யப்பட்டுள்ளது.
SHARE
    Blogger Comments
    Facebook Comments

0 மறுமொழிகள்:

Post a Comment