மெட்ராஸ்

 சென்னைக்கு வந்து ஒரு வருடத்திற்கும் மேலாகிவிட்டது. இன்றளவும் சென்னை பழக்கப்படவில்லை. சென்னை கற்றுக்கொடுத்த வாழ்க்கை பாடங்கள் பல. குறைந்த தூரமாக இருந்தாலும் டூ வீலரில் செல்லும் போது ஹெல்மெட் போட்டுக்கொண்டுதான் வண்டி ஓட்டவேண்டும் என்று சென்னை மக்கள் தான் எனக்கு உணர்த்தினார்கள். ஹெல்மெட் போடாமல் வண்டி ஓட்டினால் யார் நம் முகத்தில் எச்சிலால் வடாகம் போடுவார்கள் என்று நம்மால் அனுமானிக்கவே முடியாது. அந்நியன் படத்தில் அம்பி விக்ரமின் முகத்தில் சார்லி காறி உமிழ்வாரே அதே போன்று. ஒருநாள், டூ வீலரில் வேகமாக சென்று கொண்டிருந்த ஒருவர், திடீரென வண்டியை ஓட்டிக்கொண்டே ரோட்டின் ஓரத்தில் எச்சிலை துப்பினார். காற்று அதை பின்னால் வந்துகொண்டிருந்த ஒரு நபர் முகத்தின் பக்கமாக திசை திருப்பிவிட்டு வேடிக்கை பார்த்தது. என்ன செய்ய.. எச்சில் வடாகத்தை முகத்தில் வைத்துக்கொண்டு உமிழ்ந்தவனை அவர் சரமாரியாக திட்டி அனுப்பியது மட்டும் தான் மிச்சம். அன்று முதல் ஹெல்மெட்டின் அவசியத்தை உணர்ந்துகொண்டேன். படத்தின் பெயர் மெட்ராஸ் என்பதால் தான் சென்னை பற்றிய இந்த சிறிய முன்னுரை.


சரி.. நாம மெட்ராஸ் படத்துக்கு வருவோம். அட்டகத்தி படத்தின் இயக்குனர் இரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் இரண்டாவது படம். அட்டகத்தி படத்தை போலவே இதுவும் யதார்த்தம் நிறைந்த சினிமா. அரசியல் சார்ந்த படம் என்பதால் "சகுனி" படம் போல அமைந்துவிடுமோ என்கிற பயம் இருந்தது. ஆனாலும், இயக்குனர் இரஞ்சித் மேல் இருந்த நம்பிக்கையால் படத்திற்கு சென்றேன். சென்னைவாசிகள் எப்படி இருப்பார்கள் என்று பல திரைப்படங்களில் பார்த்திருப்போம். சில படங்களில் யதார்த்தமாக அதை பதிவு செய்திருக்கிறார்கள். ஆனால், பல திரைப்படங்களில் மிகைப்படுத்தி தான் காட்டப்பட்டுள்ளது. இந்த படத்தில் வரும் கதை வியாசர்பாடி பகுதில் நடப்பாதாக காட்டியிருக்கிறார்கள். சத்தியமாக அந்த ஏரியாவை பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. ஆனால், படத்தை பார்க்கும் போது இப்படி தான் அங்கே மனிதர்கள் இருப்பார்கள் என்று நம்மையே நம்ப வைத்துவிடுகிறார்கள் அவர்களது இயல்பான நடிப்பால்.

"சென்னை.. வட சென்னை.." என்ற பாடல் பின்னணியில் முழங்க டைட்டில் கார்டு போடப்படும் போது சந்தோஷ் நாராயணன் பட்டைய கிளப்புகிறார். படத்தின் முதல் பதினைந்து நிமிடங்கள் மிக முக்கியமானவை. இதை தவறவிட்டால், நமக்கு படத்தோடு ஒன்ற வாய்ப்புகள் மிகக்குறைவு. இந்த படத்தின் மிக முக்கியமான கதாபாத்திரம் ஒரு சுவர். தேர்தல் நேரங்களில் சுவரில் ஆக்கிரமித்திருக்கும் கட்சிகளின் விளம்பர சுவரொட்டிகள் நாம் பார்த்திருப்போம். அந்த மாதிரியான ஒரு சுவர் எப்படி பல உயிர்களை பலி வாங்குகிறது என்பதை அரசியல், நட்பு, கொஞ்சம் காதல் என்று சரியாக கலந்து கொடுத்திருக்கிறார் இயக்குனர் இரஞ்சித். இரண்டு பெரிய கட்சிகள் வியாசர்பாடியில் ஹவுசிங் போர்டுகளுக்கு மத்தியில் அமைந்திருக்கும் ஒரு மிகப்பெரிய சுவரில் தங்களது கட்சியின் விளம்பரத்தை வரைய போட்டி போட்டு அடித்து கொள்கிறார்கள். இறுதியில் கண்ணன் எனப்படும் அரசியல்வாதி தன் தந்தையின் படத்தை பிரம்மாண்டமாக போலிஸ் உதவியுடன் அந்த சுவரில் வரைந்து முடிக்கிறான். அதை அழித்து தனது கட்சியின் விளம்பரத்தை வரைய எதிர் கட்சி கோஷ்டிகள் சண்டை பிடிக்க, இறுதியில் இரு பக்கமும் சேதாரங்கள். இது போக, அந்த சுவர் இருக்கும் பகுதில் சிலர் தற்செயலாக இறக்க நேர்கிறது. இதனால், ஒரு கட்டத்தில் அந்த சுவரால் தான் நிறைய உயிர்சேதம் என்று நினைத்து காவு வாங்கும் சுவராக மக்கள் அதன் மீது மூடநம்பிக்கை கொள்கின்றனர். இப்படியே பல காலம் ஓடி விடுகிறது. ஆனாலும், எதிர்கட்சியை சேர்ந்த "மாரி" அந்த பகுதியில் வாழும் அன்பு என்பவனின் துணையுடன் அந்த சுவரை அடைய முயற்சி செய்கிறான். அன்புவும் காளியும் (கார்த்தி) நண்பர்கள். காளி சாப்ட்வேர் துறையில் வேலை பார்ப்பவன், முன் கோபம் அதிகம் உடையவன், நண்பன் அன்பு எதை கேட்டாலும் செய்பவன் தான் காளி. அன்பு, திருமணமானவன், ஒரு குழந்தை வேறு. அதனால் அவன் காளியை விட கொஞ்சம் பொறுமை கொண்டவன். எதிர்க்கட்சி தலைவன் மாரி, அன்புவிடம் தேர்தல் வேலையை செய்யும் பொறுப்பை கொடுத்து அந்த சுவரை எப்படியாவது இந்த தேர்தலில் அடைந்துவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறான். இடையில் நடக்கும் சில தகராறுகளாலும், அன்பு அந்த சுவரில் தனது கட்சியின் விளம்பரத்திற்காக "ரிசெர்வ்டு" என்று காளியின் உதவியால் எழுதுவதாலும் மோதல் முற்றுகிறது. இதனால் அந்த சுவரில் பல காலமாக இருக்கும் தனது அப்பாவின் படத்தை பாதுகாக்க, அன்புவை கொலை செய்ய முடிவு செய்து ஆட்களை அனுப்புகிறான் கண்ணன். அதில் நடக்கும் சண்டையில் காளி கண்ணனின் ஒரே மகனை ஆத்திரத்தில் கொலை செய்துவிடுகிறான். அதில் இருந்து தப்பிக்க, மாரியின் உதவியுடன் வேறொரு ஊரில் இருக்கும் கோர்ட்டில் சரணடைய செல்கிறார்கள். அங்கே காளியின் கண்முன்னே அவனது நண்பன் அன்பு கொடூரமாக கொலை செய்யப்படுகிறான். இதன் பிறகு எப்படி காளி நண்பனை கொன்றவர்களை பழிவாங்கினான், அந்த சுவர் என்னவாயிற்று படத்தில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

படத்தில் மிகவும் பிடித்த விஷயம், சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசையும் பாடல்களும் தான். மனிதர் பட்டைய கிளப்புகிறார். "கானா பாலா" தோன்றும் அந்த ஒப்பாரி வகை கானா பாடல் நம் கண்களை குளமாக்குகின்றது. கார்த்தியின் நண்பர்களில் ஒருவராக வரும் "ஜானி" கதாபாத்திரம் என்னை கவர்ந்தது. பிரம்மிக்கவைக்கும் நடிப்பு அது. அவரின் நடிப்பும் டயலாக் டெலிவரியும் அட்டகாசம். இது போன்ற ஒரு நபரை நான் எனது சொந்த ஊரில் அடிக்கடி பார்த்திருக்கிறேன். அடுத்ததாக கார்த்தியின் நண்பனாக வரும் அன்பு கதாபாத்திரமும், அவரது மனைவி கதாபாத்திரமும் மிக இயல்பாக அமைந்திருந்தது. கார்த்தி தனக்கு கொடுத்த பங்கை சிறப்பாக செய்துள்ளார்.

இடைவேளைக்கு பிறகு வரும் கார்த்தியும் கதாநாயகியும் சம்பந்தப்பட்ட  காட்சிகள் நீளத்தை அதிகரித்ததோடு அல்லாமல், நமது பொறுமையையும் கொஞ்சம் சோதிப்பது போன்று இருந்தது. அந்த காட்சிகளோடு நம்மால் ஒன்றவே முடியவில்லை. இது மட்டும் தான் படத்தின் மைனஸ். மற்றபடி எல்லாம் அருமையாக அமைந்திருந்தது.

கண்டிப்பாக சென்னையின் ஒரு பக்கத்தை பற்றி தெரிந்துகொள்ள பார்க்கவேண்டிய திரைப்படம். கேரம் போர்டு, புட்பால், டேன்ஸ் குரூப், கானா, என்று யதார்த்தமான வட சென்னையை காட்டி இருக்கிறார் இயக்குனர். நடிகர் கார்த்திக்கு இந்த படம் கண்டிப்பாக பல பட வாய்ப்புகளை பெற்றுத்தரும் என்று நம்புகிறேன். டல்லடித்து கிடைக்கும் அவரது மார்க்கெட் இந்த படத்தின் மூலம் ஏற்றம் பெற வாய்ப்புகள் இருக்கிறது.

இந்த படத்தை கண்டிப்பாக என்னால் மறக்கவே முடியாது. இந்த படம் பார்த்துகொண்டிருக்கும் போதுதான் நம்ம முதல்வர் ஜெயலலிதாவிற்கு சொத்துகுவிப்பு வழக்கில் தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டது. படம் முடிந்து வெளியே வந்தபோது, ரோட்டில் ஒரு ஆளை காணோம். கடைகள் எல்லாம் மூடி கிடந்தது. பஸ் போக்குவரத்தும் தடைபட்டிருந்தது. வெகுதூரத்தில் இருந்து படம் பார்க்க வந்தவர்கள் எப்படி வீடு திரும்புவார்களோ என்று எண்ணிக்கொண்டேன்.

டிஸ்கி :
பேஸ்புக் பக்கம் சென்று பல நாட்கள் ஆகிவிட்டது. ஆகையால் முகநூலின் வாயிலாக இந்த பதிவிற்கு இடப்படும் கமெண்ட்களுக்கு பதில் அளிப்பது சிரமம். மன்னிக்கவும்.
SHARE
    Blogger Comments
    Facebook Comments

0 மறுமொழிகள்:

Post a Comment