"பேஸ்புக்" பக்கம் வந்து 100 நாட்கள் ஆகிவிட்டது. தற்செயலாக இணையத்தில் பார்த்த "99 Challenge" செய்தியை ஏன் முயற்சித்து பார்க்க கூடாது?! என்று தோன்றியதன் விளைவுதான் இது.
http://99daysoffreedom.com
இன்று பகிர்ந்து கொள்ள நிறைய விஷயங்கள் இருந்தாலும், முதலாவதாக இந்த வீடியோவை நண்பர்கள் பார்வைக்கு வைக்கிறேன். இதை நம்மில் பலர் பார்த்திருக்க வாய்ப்புகள் உண்டு.
பேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூகவலைத் தளங்களில் இருந்து விலகி இருப்பதால் இழப்பதற்கு என்று எதுவும் இருப்பது போல எனக்கு தோன்றவில்லை. அன்றாட நிகழ்வுகளை நமது பார்வைக்கு கொண்டு வருவதற்கு நாளிதழ்கள், தொலைக்காட்சி என்று முந்தைய கால ஊடகங்கள் நமக்கு இன்றளவும் உதவிக்கொண்டு தான் இருக்கின்றன. மேலும், மிகவும் அவசரமான செய்திகளை நம்மிடம் மற்றவர்கள் பகிர்ந்துகொள்ள நம் கைவசம் தொலைபேசி எப்போதுமே இருக்கிறது.
பேஸ்புக் போன்ற வலைத்தளங்கள் நிகழ்வுகளை நமது பார்வைக்கு விரைவாக கொண்டு சேர்ப்பதை விட பெரிதாக ஒன்று சாதிப்பதில்லை. இவ்வாறு தகவல்களை, சீக்கிரமாக அறிந்துகொண்டாலும் சரி, தாமதமாக அறிந்து கொண்டாலும் சரி, அது நம்முள் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் ஒன்றே. அந்த நொடியில் மட்டும் தான், அதற்காக உணர்சிகளை வெளிப்படுத்துகிறோம், அதன் பிறகு நமது அடுத்த வேலையையோ அல்லது அடுத்த பரபரப்பான செய்தியையோ பார்க்க கிளம்பிவிடுகிறோம்.
இதற்காக, முற்றிலுமாக இவற்றில் இருந்து நாம் விலகி இருக்கவேண்டும் என்று பரிசீலிக்கவில்லை. இவற்றை, ஒரு நாளிதழ்களை போல கருதிகொண்டாலே போதுமானது. ஒரு நாளைக்கு அதிகபட்சம் மூன்று முறை (அதிகபட்சம் ஒரு முறைக்கு 15 நிமிடங்கள்) இம்மாதிரியான வலைத்தளங்களில் நுழைந்தால் போதுமானதே. அவ்வாறு இல்லாமல் அங்கேயே குடி கொண்டிருந்தால், நம் குடி தான் மூழ்கி போகும். முடிந்தால், ஒரு 30 நாட்கள், இவற்றில் இருந்து விலகி இருந்து பாருங்கள். நான் சொல்வதன் அர்த்தம் விளங்கும். எதையுமே அளவுக்கு அதிகமாக பயன்படுத்தினால், நாம் அதற்கு அடிமையாக வாய்ப்புகள் அதிகம். நாம், கண்டுபிடித்த விஷயங்களுக்கு நாமே அடிமையாவது எத்தகைய மடத்தனம்?!
"என்னடா.. 100 நாள் என்ன நடந்தது என்று எழுதாமல், என்னத்தையோ பேசிக்கிட்டு இருக்கான்" என்று நீங்கள் நினைக்கலாம். "யாம் பெற்ற இன்பம்.. இவ்வையகம் பெறுக" என்பதன் வெளிப்பாடுதான் இவை :-)
இந்த இடைவெளி, எனது இணையத்தள வாழ்வில் மிகப்பெரிய அளவில் எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. நண்பர்களுடன் கொடைக்கானல் பயணம், சொந்த வாழ்க்கையிலும் அலுவலக வாழ்க்கையிலும் கொஞ்சம் அதிக கவனம், பிராஜெக்ட் மேனேஜரிடம் இருந்து சில பாராட்டுகள், சில சினிமாக்கள், சொந்த ஊர் பயணங்கள், சில புத்தக அறிமுகங்கள், கொரியன் நாடகங்கள் என பல நல்ல விஷயங்கள் நடந்தன. இதை போன்று, உங்கள் வாழ்க்கையிலும் சில பல நல்ல விஷயங்களோ, அறிமுகங்களோ.. நடக்கலாம், கிடைக்கலாம். முயற்சித்து பாருங்கள்.
இறுதியாக இன்னொரு வீடியோ...
டிஸ்கி:
வீடியோக்களை பகிர்ந்துகொண்ட "வாட்ஸ் அப் " குழு நண்பர்களுக்கு நன்றி.
0 மறுமொழிகள்:
Post a Comment