6174


புத்தகங்கள் படிப்பதற்கு அவகாசமும் சூழ்நிலையும் அமையும் போதெல்லம் அதை பயன்படுத்திக்கொள்ள முயற்சிப்பேன். அப்படி ஒரு முயற்சியில் பல நாட்கள் ஊறவைத்து படித்து முடித்ததுதான் இந்த 6174 நாவல். அறிவியல் பின்புலம் உள்ள திரில்லர் நாவல்களும் திரைப்படங்களும் எனக்கு பிடிக்கும். இந்த நாவலும் அந்த ரகம் தான். இந்த புத்தகத்தின் அறிமுகம் இணையத்தில் கிடைக்கப்பெற்று "ஆன்லைனில்" ஆர்டர் செய்து வாங்கினேன். புத்தகத்தின் தலைப்பே வித்தியாசமாக இருந்தது கொஞ்சம் கூடுதல் உந்துதலை கொடுத்தது. இந்த புத்தகம் "சுதாகர்" என்பவரால் எழுதப்பட்டது. தூத்துக்குடியை சேர்ந்த இவர், மென்பொருள் ஆலோசகராக பணியாற்றுகிறார் என்பது உபரி தகவல்.

எழுத்தாளர் சுஜாதாவின் எழுத்துகளுக்கு நான் அடிமை. அவரது எழுத்துகளில் சுவாரஸ்யங்களும், அறிவியல் சார்ந்த தகவல்களும் ஆங்காங்கே துள்ளிவிளையாடும். இந்த காரணத்தால், 500 பக்கங்கள் கொண்ட புத்தகமாக அது இருந்தாலும், படிக்கும் வாசகர்களுக்கு எந்த ஒரு அயர்ச்சியையும் கொடுக்காது. இதை அவரது கணேஷ்-வசந்த் துப்பறியும் நாவல்களில் அதிகம் கவனித்திருக்கிறேன். கிட்டத்தட்ட அதே போன்ற உணர்வை இந்த 6174 நாவலும் எனக்கு கொடுத்தது.

அப்படி என்னதான் இருக்கிறது இந்த நாவலில்...?!

நாம் கேள்விப்பட்டு அதிகம் தெரிந்துகொள்ளாத பல விஷயங்களை இந்த புத்தகத்தில் எழுதியிருக்கிறார் சுதாகர். உதாரணமாக "சீல்கந்த்" எனப்படும் டைனோசர் காலத்திலிருந்து இன்றளவும் வாழும் மீன்கள், லெமூரியன் கண்டம், நம் வீட்டு பெண்கள் அதிகாலையில் போடும் "கோலங்கள்", பெண்கள் சூடும் "மல்லிகை பூ", நாம் பள்ளிகளில் படித்த தமிழ் இலக்கணம், அறிவியல் பாடத்தில் படித்த "படிகங்கள்", கருந்துளை எண், செயற்கைகோள்கள், ஆற்றுநீரில் வாழும் "டால்பின்" மீன்கள் , மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள லோனார் ஏரி, பக்கத்து நாடாகவே இருந்த போதிலும் நாம் அதிகம் அறிந்திராத (அல்லது) அறிந்துகொள்ள முயற்சிக்காத "பர்மா" நாடு, புத்தர் கோவில், குகைகள் போன்ற பல விஷயங்களை இந்த புத்தகத்தில் எழுதியிருக்கிறார். பல இடங்களில் புதிர் கணக்குகள், அதன் விடை தேடல்கள் என்று சுவாரஸ்யங்கள் இருக்கின்றன.

இந்த புத்தகத்தை படிக்கும்போதும், படித்துமுடித்த பிறகும் ஆங்கிலத்தில் புத்தகமாகவும் திரைப்படமாகவும் வெளிவந்த "The Da Vinci Code" மற்றும் "Angels And Demons" போன்றவை நியாபகத்திற்கு வருகிறது. இந்த புத்தகம் திரைப்படமாக எடுக்கப்பட்டால் கண்டிப்பாக ஒரு வித்தியாசமான ஒரு அனுபவமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. மேலும் அது தமிழ் திரையுலகில் ஒரு "ட்ரென்ட் செட்டராக" அமையவும் வாய்ப்பிருக்கிறது. ஆனால், இதெல்லாம் நடப்பதற்கு சாத்தியங்கள் குறைவு. ஏனெனில், நாம்தான் "மசாலா சினிமா" என்னும் "கோமா"வில் இருக்கிறோமே!

இந்த நாவல், உலகம் அழிவதிலிருந்து எப்படி தடுக்கபடுகிறது என்பதை பிராதானப்படுத்தி எழுதப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தின் கதையை பற்றி சொன்னால், அதன் சஸ்பென்ஸ் உடைந்துவிட வாய்ப்புகள் இருக்கிறது. அதனால், அதுபற்றி எதுவும் சொல்லாமல், புத்தகத்தின் சுவாரஸ்யங்கள் பற்றி மட்டும் சொல்லியிருக்கிறேன்.

புத்தகத்தின் தலைப்பான 6174 பற்றி ஒரு கொசுறு செய்தி. 6174 என்பது இந்தியாவை சேர்ந்த கணிதமேதை "கப்ரேக்கர்" என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த எண் "கப்ரேக்கர் மாறிலி" என்றும் அழைக்கப்படுகிறது.

ஒரு நான்கு இலக்க எண்ணை, உதாரணமாக 4295 என்ற எண்ணை எடுத்துக் கொள்ளுங்கள்..

முதலில் இந்த 4,2,9,5 என்ற நான்கு இலக்கங்களைக் கொண்ட மிகப் பெரிய மற்றும் மிகச் சிறிய எண்களை எழுதுவோம். அதாவது அவைகள் முறையே 9542 மற்றும் 2459 ஆகும். 9542-2459=7083.

இந்த 7,0,8,3 என்ற நான்கு இலக்கங்களைக் கொண்ட மிகப்பெரிய மற்றும் மிகச்சிறிய எண்கள் முறையே 8730 மற்றும் 0378 ஆகும். 8730-0378=8352. இதே முறையைச் செய்தால் 8532-2358=6174 கிடைக்கும்.

எந்தவொரு நான்கு இலக்க எண்ணை எடுத்து மேலே கூறிய முறையை கடை பிடித்தால் எப்போதுமே அது 6174 என்ற எண்ணில் தான் முடியும். மேலும், இந்த 6174 கிடைத்தபிறகு, அதை மறுபடியும் இதே போன்று வரிசைப்படுத்தி கழித்தால் அதே 6174 எண் தான் கிடைக்கும்.

இந்த 6,1,7,4 என்ற நான்கு இலக்கங்களைக் கொண்ட மிகப் பெரிய மற்றும் மிகச் சிறிய எண்கள் முறையே 7641 மற்றும் 1467 ஆகும். 7641-1467=6174. ஆகமொத்தத்தில், இது ஒரு முடிவில்லா சூழற்சியில் சிக்கவைத்துவிடும்.

இதில் ஒரேயொரு கட்டுப்பாடு என்னவென்றால், நான்கு எண்களும் ஒரே எண்ணாக இருக்கக் கூடாது. அதாவது 3333, 5555 போன்ற எண்களுக்கு இந்த முறை வேலை செய்யாது. நாவலில் இந்த 6174 எண் முக்கியமான கதாபாத்திரமாக இருப்பதால், அதையே நாவலின் தலைப்பாக வைத்திருக்கிறார் ஆசிரியர்.

கிட்டத்தட்ட 400 பக்கங்கள் கொண்ட இந்த நாவலின் விலை 300 ரூபாய் மட்டுமே. வாய்ப்பு கிடைத்தால் வாங்கி படியுங்கள்.
SHARE
    Blogger Comments
    Facebook Comments

0 மறுமொழிகள்:

Post a Comment