சமீபத்தில்தான் சமூகவலைதளத்தில் இந்த திரைப்படத்தை பற்றி பெருமையாக சொல்லியிருந்தார் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர். நானும் இந்த படத்தை நேற்றுதான் திரைஅரங்கில் பார்த்தேன். நான் எதிர்பார்த்தது போலவே படம் நன்றாக இருந்தது. பொதுவா இந்த மாதிரி ஒரு கதையை திரைப்படமாய் எடுப்பதில் சொதப்பல்கள் வர வாய்ப்புகள் அதிகம். ஆனால், அந்த மாதிரி எதுவும் இல்லாமல் ஒரு அறிமுக இயக்குனராக கலக்கியிருக்கிறார் ராம்பிரகாஷ்.
திடீரென நிகழும் சூரிய புயலால் "செல் போன்" சேவை தமிழத்தில் தடைபடுகிறது. இதனை மையமாக கொண்டு நிகழும் விஷயங்கள் தான் மொத்த படத்தின் கதை . ஒரு தமிழ் படத்தில் யதார்த்தமாக இந்த அளவிற்கு "விஞ்ஞானம்" பேசப்பட்டிருப்பதும் செயல்படுத்தப்பட்டிருப்பதும் இதுவே முதல் முறை என்று நினைக்கிறேன். இந்த படம் அறிவியல் பற்றி அதிகம் பேசுவதால் என்னவோ படத்தோடு என்னால் இயல்பாக ஒன்ற முடிந்தது. ஏனெனில் நமக்கு பள்ளிகூடத்திலேயே பிடிச்சபாடம் "அறிவியல்" தானே. நகுல் தோன்றும் ஒவ்வொரு காட்சியும் சுவாரஸ்யம் என்றால், தினேஷ் தோன்றும் ஒவ்வொரு காட்சியும் நகைச்சுவை தான். இருவருமே உடல்மொழியில் அசத்தியிருக்கிறார்கள். வல்லினம் படத்திற்கு பிறகு நகுல் படங்களை யோசித்து தேர்வு செய்கிறார் என்று நினைக்கிறேன். அது அவருக்கு நல்ல விஷயமும் கூட. இந்த திரைப்படத்தில் வரும் இரண்டு ஜோடிகளின் காதல் பகுதிகளும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. எந்த இடத்திலும் ஒரு சிறு அயர்ச்சியை கூட தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வழக்கம்போல சதீஸ் நகைச்சுவை காட்சிகளில் கலகலப்பூட்டுகிறார். அடுத்த சந்தானமாக வர வாய்ப்புகள் தென்படுகிறது. சதீஸை கல்யாணம் பண்ண விரும்பும் பெண்ணின் நடிப்பு இறுதி வரை ஒரு புரியாத புதிராகவே இருந்தது. இயக்குனர், அந்த பெண்ணை மோசமானவராக காட்ட நினைக்கிறாரா? இல்லை வெகுளிப்பெண்ணாக காட்ட நினைக்கிறாரா என்கிற குழப்பம் தான் அது. இந்த படத்தில் இரண்டு பாடல்கள் தான் (டைட்டில் பாடல் நீங்கலாக). இரண்டு பாடல்களும் நன்றாக வந்துள்ளது.
படத்தில் நகுலின் கதாபாத்திரமும் அவரது அம்மாவாக வரும் ஊர்வசியின் கதாபாத்திரமும் அருமையாக சித்தரிக்கப்பட்டிருந்தது. போலவே தினேஷ் மற்றும் பிந்துமாதவி கதாபாத்திரங்கள். நகுலை காதலிக்கும் ஐஸ்வர்யாவின் கதாபாத்திரமும் அவரது கல்லூரி சம்மந்தப்பட்ட காட்சிகளும் மனோபாலாவின் உதவியால் நகைச்சுவையோடு நகர்கிறது.
மொத்தத்தில் அதிக செலவில்லாமல் ஒரு நல்ல திரைப்படம் கொடுத்திருக்கிறார்கள். பார்க்காதவர்கள் கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம்.
டிஸ்கி:
இந்த படத்திற்கு இதைவிட பொருத்தமாக இன்னொரு எளிமையான தலைப்பை வைத்திருக்கலாம் என்பது என் கருத்து.
0 மறுமொழிகள்:
Post a Comment