வெள்ளம்

சென்னையை பிரிந்து வந்து ஆறு மாதங்களுக்கும் மேல் ஆகிறது. சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் என் அலுவலகம் இருந்த DLF வளாகம் மிகவும் பாதிக்கப்பட்டிருப்பதாக கேள்விப்பட்டேன். ஒருநாள் சென்னை அலுவலகத்தில் இருந்து, நீங்கள் பாதுகாப்பாக இருந்தால் இந்த பட்டனை அழுத்துங்கள், உதவி தேவைபட்டால் இந்த பட்டனை அழுத்துங்கள்  என்று மின்அஞ்சல் மூலமாக சர்வே எடுத்து கொண்டிருந்தார்கள் (அவர்கள்தான் என்னை வேலை விஷயமாக வெளிநாட்டிற்கு அனுப்பிவைத்தது என்கிற விவரம் கூட அவர்கள் கைவசம் இல்லை போலும்). இன்னொரு நாள், சென்னைய சேர்ந்த பாதிக்கப்பட்ட அனைத்து ஊழியர்களுக்கும் பத்தாயிரம் ரூபாய் நஷ்ட ஈடு அளிப்பதாகவும், ஒரு லட்சம் ரூபாய் வட்டியில்லா கடன் அளிப்பதாகவும் ஒரு மின்அஞ்சல் அனுப்பினார்கள். இதில் இன்னொரு சிறப்பு அம்சம், இந்த பண உதவிகள் எல்லாம் வருமான வரிக்கு உட்பட்டவையாம். இதுவரை கொடுத்த வரிப்பணத்தை என்ன செய்கிறார்கள் என்றே எனக்கு தெரியவில்லை. இதில் மேலும் வரிகட்டி என்ன செய்ய?!. சென்னையில் இருந்திருந்தால் வெள்ளப்பெருக்கின் உண்மையான நிலவரம் எனக்கு தெரிந்திருக்கும். ஆனால், எனக்கு இங்கே காணக்கிடைப்பதெல்லாம் "இன்டர்நெட்" மூலம் வந்து சேரும் செய்திகளே. அதனால் எல்லா செய்திகளையும் அவ்வளவும் எளிதில் கண்மூடித்தனமாக் நம்பிவிட முடியாது. ஆனாலும் சில செய்திகளை அடிக்கடி டிவிட்டர், பேஸ்புக் போன்ற சமூகவலைத்தளங்களில் பார்க்கும்போது வெறுப்பு தான் வந்தது.


 உதாரணங்கள் சில..

1. நிவாரண உதவியாக உள்நாட்டில் மற்றும் வெளிநாட்டில் இருந்து பணம் அனுப்பினால் அதை பாதிக்கப்பட்ட மக்களின் உதவிக்காக செலவிடாமல் தவறாக பயன்படுத்திகொண்ட கயவர்களை பற்றியை செய்தி.
2. உதவிக்காக வரும் பொருட்களை வழிமறித்து அடாவடியாக அதை வழிப்பறி செய்த சுயநலவாதிகள்.
3. மற்றவர்கள் அளிக்கும் பொருட்களில் "அம்மா" ஸ்டிக்கர் ஒட்டி வழங்கிய சமூக விரோதிகள்.
4. அந்த நடிகர் இவ்வளவு கொடுத்திருக்கிறார், ரஜினிகாந்த் இவ்வளவு தான் கொடுத்திருக்கிறார் என்கிற ரக புலம்பல் செய்தி.
5. பாதிக்கப்பட்டவர்களுக்கு "லெமன்சாதம்" சாப்பிட வழங்கினால், தினமும் இதை கொண்டுவராதீர்கள் "போர்" அடிக்குறது. நாளை வேறு ஏதாவது வித்தியாசமாக சாப்பிட கொண்டுவாருங்கள் என்று பாதிக்கப்பட்டோர் ஆதங்கப்பட்டது.
6. பாதிக்கப்பட்ட மக்கள் சாப்பிட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் உணவுகளை தயாரித்து சென்று கொடுக்க, அந்த உணவு மக்களின் கைகளில் சேரும்போது காலாவதி ஆனதால் குப்பையில் கொட்ட வேண்டிய சூழ்நிலை.
7. மக்களின் பிரச்சனைகளுக்காக போராடமாட்டோம் என்று அறிக்கைவிடுத்த நடிகர்சங்கம், வெள்ளநிவாரண பணிகளில் கலந்துகொண்டது.

இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.

தனி மனிதனாக இந்த மாதிரியான ஒரு சூழலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவது கடினம் தான். ஒரு குழுவாக செயல்பட்டால்தான் இது சாத்தியப்படும். அதற்காக பல இடங்களில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உதவும் போது மதம், ஜாதி, அரசியல், சினிமா, சங்கம்  என்கிற சாயங்களை பூசிக்கொண்டு உதவியதை பார்க்கும் போது வெறுப்பாக இருந்தது. இதில் சிலர் வித்தியாசமான ரகம், வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுகிறேன் என்று நிதி வசூலித்து தன் வாயில் போட்டுகொண்டது. இப்படி ஏமாற்றினால், எந்த நம்பிக்கையில் கண்காணா தூரத்தில் இருப்பவர்கள் பண உதவி செய்வார்கள்.

நம்மில் பலர், கண்ணில் பார்க்கும் செய்திகளை எல்லாம் "லைக்" மற்றும் "ஷேர்" செய்துவிடுகிறோம். உதாரணமாக, ஒரு முகநூல் பக்கத்தில்.. முதல்நாள் "ரஜினிகாந்த 10 லட்சம் தான் கொடுத்திருக்கிறார், ஆனால் அந்த நடிகர் ஒரு கோடி கொடுத்திருக்கிறார்" என்று ரஜினியை தூற்றி பதிகிறார்கள். சில நாட்கள் கழித்து, "ரஜினி எவ்வளவு கொடுத்தால் என்ன? நீ தான் அவர் படத்தை காசு கொடுத்து பார்த்து அவரை பணக்காரனாக்கினாய் என்றும், காசு கொடுத்து பெப்சி, கோலா வாங்கி குடிக்கிறாய்.. அதற்காக அந்த கம்பெனியிடம் நீ நிதியை எதிர்பார்க்க முடியுமா" என்று ஒரு பதிவை போடுகிறார்கள். நாம் இரண்டு செய்திகளையும் கண்மூடித்தனமாக "லைக்" மற்றும் "ஷேர்" செய்கிறோம். இவர்கள் இங்கே செய்தியை பதிவது விளம்பரத்திற்காகவும் அதில் கிடைக்கும் "லைக்" மற்றும் "ஷேர்" எண்ணிக்கைக்காக மட்டுமே, இதை நாம் உணர்வதே இல்லை.

கமல்ஹாசன் மக்களின் வரிப்பணம் என்ன ஆகிறது என்று தெரியவில்லை என்று கருத்தை பதிகிறார். அடுத்தநாளே சொன்ன நியாயமான கருத்துக்கு மன்னிப்பு கேட்கிறார். இல்லை என்றால் அவரது நடிப்பு தொழிலை கொண்டு இங்கே பிழைக்கமுடியாது என்று அவருக்கு தெரியும். அரசியல்வாதிகளும் ரௌடிகளும் தான் நம் நாட்டின் சாபக்கேடுகள். இவர்களை எதிர்த்து கேள்வி கேட்கமுடியாது, அப்படி கேட்டால் நம் உயிருக்கும் உறவுகளின் உயிருக்கும் உத்திரவாதமே கிடையாது.

இவர்களை விடுங்கள்.. சமீபத்தில் "தூய்மை இந்தியா" என்று ஒரு திட்டத்தை மத்திய அரசாங்கம் அறிவித்தது அல்லவா? அதை தமிழகம் உட்பட எத்தனை மாநில அரசுகள் கையில் எடுத்துக்கொண்டு செயல்படுத்தின? உண்மையில் அந்த திட்டத்தை நாம் அப்பொழுதே "சீரியசாக" எடுத்துக்கொண்டு செயல்பட்டிருந்தால் இப்போது ஆங்காங்கே குப்பைகளாலும், கழிவுநீர் கிடங்குகளாலும் முடங்கிக்கிடக்கும் சீரமைப்பு பணிகள் துரிதமாக முடிந்திருக்கும் அல்லவா. ஒரு வெள்ளம் வந்த பிறகுதான் நாம் ஒன்றிணைந்து செயல்பட்டிருக்கிறோம். இதே போன்று நல்லது செய்வதற்காக அடுத்து ஒரு கெட்ட தருணத்தை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டுமா என்ன?!

அரசியல்வாதிகள் தமிழ்நாடு, இந்தியா, அமெரிக்கா என்கிற வித்தியாசம் இல்லாமல் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரிதான் இருப்பார்கள். நெல்சன் மண்டேலா, காமராஜர், லீ குவான் யூ, சே குவேரா, போன்ற சுயநலமற்ற அரசியல்வாதிகள் சிலரே இருந்தார்கள். நிகழ்காலத்தில் இத்தகைய அரசியல்வாதிகள் இல்லை என்று ஆணித்தரமாக சொல்லலாம். இதை ஏன் சொல்கிறேன் என்றால், அரசியல்வாதிகள் ஒழுங்கா இருந்தால்தான் நாட்டின் நிர்வாகம் ஒழுங்காக இருக்கும். நிர்வாகம் சீர்குலைந்தால் புயல், வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர் சமயங்களில் நம்மால் சமாளிக்க இயலாமல் போகும். சமீபத்தில் பிரிட்டனின் ஒரு பகுதியில் இதே போன்று வெள்ளம் ஏற்பட்டது. மக்கள் வீடு, உடைமைகளை இழந்து தவித்தார்கள். நிவாரண தொகையாக ஐந்தாயிரம் பவுண்டுகளை அரசாங்கம் அறிவித்தது. இந்த தொகை பற்றாது என்று மக்கள் புலம்பினார்கள். இதை எதற்கு சொல்கிறேன் என்றால், இயற்கை பேரிடர் வளர்ந்த நாடுகளையே விட்டுவைப்பதில்லை, இதில் நிர்வாகம் சீர்குலைந்திருக்கும் நம் நாட்டை பற்றி சொல்லவே வேண்டாம்.

கடந்த நான்கு ஆண்டுகளாக மடிக்கணினி, அம்மா உப்பு, அம்மா குடிநீர், அம்மா சிமெண்ட், அம்மா உணவகம் மற்றும்  தமிழக அரசு கொடுத்த இலவசங்களில் எல்லாம் அந்த அம்மாவின் ஸ்டிக்கர் இருந்தது நமக்கெல்லாம் உறுத்தாமல் போனது ஏனோ? சரி.. இந்த இலவசங்கள் யாருடைய பணத்தில் கொடுத்தார்கள்? அவர்களின் கட்சி நிதியில் இருந்து கொடுத்தார்களா? இல்லையே.. ஓட்டு போட்ட நமது வரிபணத்தில் தானே கொடுத்தார்கள்? தேர்தலின் பிரசாரத்தில் இந்த மாதிரியான இலவச வாக்குறுதிகளை அள்ளி தெளித்த போது நாம் தெளிவோடு இந்த கேள்வியை நமக்கு நாமே கேட்டிருந்தால் இந்த வீண் செலவுகளை தவிர்த்திருக்கலாமே. இந்த அம்மா மட்டும் அல்ல, இதற்கு முன்பு ஆட்சியில் இருந்த கட்டுமரமும் இதே தான் செய்தது. இந்த அம்மா கொடநாடு சென்று ஓய்வில இருந்தார்கள் என்றால்.. கட்டுமரம் பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா போன்ற கேளிக்கைகளில் மூழ்கி கிடந்தார். இவர்கள்தான் இப்படி, விஜயகாந்த் ஒரு நல்ல மாற்று சக்தியாக இருப்பார் என்று எதிர்பார்த்தால்.. அவர் கட்சி தொண்டர்களையே பொது இடங்களில் அடித்து அவமானப்படுத்துகிறார். பள்ளிகூடத்தில் கண்டிக்கும் வாத்தியாரையே நமக்கு பிடிப்பதில்லையே, இவரை எப்படி மக்கள் நம்பி ஐந்து ஆண்டு ஆட்சியை வழங்குவார்கள். காங்கிரஸ் காமராஜர் காலத்திற்கு பிறகு தமிழ்நாட்டில் இருந்து காணமல் போய்விட்டது. பிஜேபி கட்சிக்கு ஓட்டு போடலாம் என்றால், அவர்கள் இன்னும் தமிழ்நாட்டில் ஒருவித குறிக்கோளின்றி செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள். அதனால் கூட்டணி இல்லாமால் இவர்களால் இப்போதைக்கு தமிழ்நாட்டில் தனித்து ஆட்சி அமைக்கவே முடியாது. முழு அதிகாரமும் தன் கைகளில் இருக்கும் அரசியல்வாதிகள் இருந்தால் ஹிட்லர் ஆகிவிடுகிறார்கள், அதிகாரம் இல்லாத அரசியல்வாதிகள் அடிமைகளாகி கிடக்கிறார்கள். இதுதான் நிதர்சனம்.

அரசாங்கத்தின் தவறுகளை சுட்டிக்காட்டி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நடுநிலையான செய்தி ஊடகங்கள் தேவை. நம் நாட்டில் எல்லா செய்தி ஊடகங்களும் விலை போய்விட்டன. எல்லா அரசியல் கட்சிகளும் தனக்கென்று ஒரு செய்தித்தாள் மற்றும் தொலைகாட்சி நிறுவனங்களை வைத்திருகின்றன. அப்படி இருக்கும் போது நடுநிலையான செய்திகள் எப்படி பொதுமக்களை சேர்ந்தடையும்.

நம்மை ஆட்சி செய்பவர்களை ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்கும் உரிமை மட்டும்தான் மக்களாகிய நமக்கு இருக்கிறது. என்னை பொறுத்தவரை இந்த வழிமுறையை கொஞ்சம் மாற்றி கடினமாக்க வேண்டும். உதாரணமாக, வேட்பாளர் பட்டியலை தேர்ந்தெடுக்கும் பொறுப்பையும் மக்களிடத்தில் தான் கொடுக்கவேண்டும். அருகதை இல்லாதவர்கள் இறுதிகட்ட தேர்தலில் போட்டியிட தடைவிதிக்க வேண்டும். இவ்வாறு இரண்டு கட்டமாக தேர்தல் நடத்தினால் மட்டும் ஊழல்பேர்வழிகளை முழுவதுமாக வடிகட்டிட முடியாது. ஆனாலும் ஒரு குறிப்பிட்ட சதவிகீதம் வரை கட்டுப்படுத்தலாம் என்பது என் யூகம். இதே போல நம் எல்லாருக்கும் சில ஆலோசனைகள் தோன்றும், ஆனால் அதை நடைமுறைபடுத்துவதில் தான் இருக்கிறது பிரச்சனை. ஒரு அரசியல் சட்டம் இயற்றப்பட்டு நடைமுறைக்கு வருவதற்குள் நம் பாதி ஆயுள் முடிந்துவிடும். இதற்கு மேல் இதை பற்றி புலம்ப ஒன்றுமில்லை, அடுத்து வரும் தேர்தலிலாவது யோசித்து வாக்களிப்போம், நல்லவர்கள் மட்டுமே போட்டியிடுவார்கள் என்கிற நம்பிக்கையோடு.

இவ்வளவு மோசமான நிலவரத்திலும் சல்மான்கான் விடுதலை, சிம்பு மற்றும் அனிருத் பெருமையுடன் வழங்கிய "பீப் சாங்" என்று மக்களின் கவனம் ஏற்கனவே பாதி சதவீதம் திசை திரும்பிவிட்டது. அதுபோல, சென்னையும் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பும் என்று நம்புகிறேன்.
SHARE
    Blogger Comments
    Facebook Comments

0 மறுமொழிகள்:

Post a Comment