ஜேக்!


Based on true story!

 அமராவதியும் ஜுலியெட்டும் ஒரு தாய்க்கு பிறந்தவர்கள். பிறந்ததிலிருந்தே அம்மாவின் அருகாமையில் வளர்ந்தவர்கள் என்கிற போதும் தங்கள் தந்தையை பற்றிய விவரம் அவர்கள் தெரிந்திருக்கவில்லை. அதை பற்றி தங்கள் தாய் மனிஷாவிடம் கேட்டு தெரிந்து கொள்ளவும் விரும்பவில்லை. இவர்கள் மட்டும் அல்ல, இவர்களுடன் இரண்டு சகோதர்கள் வேறு பிறந்திருந்தார்கள், ஆம்! கிட்டத்தட்ட ஒரே பிரசவத்தில் தான். இவர்கள் பிறந்து மூன்றாவது வாரத்திலேயே அந்த ஊரை நிதமும் சுற்றுவரும் ஹானிபெல் என்னும் கொடூரன் கடத்தி சென்றுவிட்டான். அதன் பிறகு அவர்களுக்கு என்ன ஆயிற்று என்று யாருக்கும் தெரியாது. அவர்களை பிடித்து சென்ற தருணம் தன் தாய் "கேவி கேவி" அழுதது மட்டும் இவர்களுக்கு அப்போது நினைவிருந்தது. அந்த நிகழ்வு நடந்து முடிந்த அடுத்த சில மணி நேரங்களில் தன் தாய் இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டதை நினைத்து அப்போதே அமராவதியும் ஜூலியட்டும் ஆச்சர்யமாக யோசித்தார்கள். மேலும் அதை ஒரு வாழ்க்கைபாடமாகவே அவர்களின் அம்மாவிடம் இருந்து தங்களை அறியாமலேயே கற்றுகொண்டிருந்தார்கள். அமராவதியும் ஜூலியட்டும் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருந்தார்கள். திடீரென ஒருநாள் மனிஷா, அமராவதியையும் ஜூலியட்டையும் தனியே விட்டுவிட்டு ஒதுங்கிவிட்டாள். ஒதுங்கிவிட்டாள் என்றால் முற்றிலுமாக ஒதுங்கிவிட்டாள். இவர்கள் இருவரும் அருகில் சென்றால் கடித்து குதறும் அளவிற்கு வெறுப்பை உமிழ்ந்தாள். அமராவதிக்கும் ஜூலியட்டுக்கும் என்ன செய்வதென்றே தெரியவில்லை. இருவரும் "கேவி கேவி" அழ தொடங்கினார்கள், ஆம்! இவர்களின் சகோதர்கள் பிறந்தநாளில் எப்படி தன்தாய் கதறி அழுதாளோ அதை போலத்தான். சில மணிநேரம் கடந்திருக்கும், அப்போது அவர்கள் கண்ட காட்சி மனதை அப்படியே உலுக்குவிட்டது. அவர்களின் பக்கத்து வீட்டுக்காரனான ஜேக் என்பவனுடன் இவர்களின் தாய் கொஞ்சி குலாவி கொண்டு தெருவை வலம்வந்து கொண்டிருந்தாள். அம்மாவை கடிந்து கொள்ளவும் முடியாமல், அவளை பிரிந்து அதிக நேரம் இருக்கவும் முடியாமல் மனம் வெதும்பினார்கள். சில நாட்கள் தன் தாயுடன் எப்படியாவது மீண்டும் சேர்ந்துவிட வேண்டும் என்று முயற்சி கூட செய்து பார்த்தார்கள். ஆனால், இவர்களின் அம்மா எதற்கும் மசியவில்லை, காரணம் அவள் ஜேக்கின் வசியத்தில் மயங்கியிருந்தாள். ஜேக்கும் மனிஷாவும் சல்லாபமாக நாட்களை கழித்து வந்தார்கள். தினமும் காலையில் வீட்டில் வந்து "பிக்கப்" செய்வது முதல், இரவு நெருங்கும் போது வீட்டில் வந்து "டிராப்" செய்வது வரை எல்லா விஷயங்களையும் சரியாக செய்துவந்தான் ஜேக். இத்தனை நிகழ்வுகள் நடந்த போதும், மனிஷா தன் பிள்ளைகள் வசிக்கும் வீட்டில் தான் வசித்து வந்தாள். ஆனாலும், அவர்களின் மீது துளியும் கரிசனம் காட்டியது கிடையாது. மூன்று பேரும் அந்நியர்களை போல ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தார்கள். சில மாதங்கள் கழிந்த பின்னர், மனிஷா மீண்டும் பிள்ளைகளை ஈன்றாள். இந்த முறை ஒரே பிரசவத்தில் எட்டு பெண் பிள்ளைகள். எட்டு என்பது அதிர்ஷ்டம் இல்லாத எண் என்று சொல்வதால் என்னவோ, கடைசியாக பிறந்த நிக்கோலஸ் ஹானிபெல்லுக்கு இறையாகிவிட்டான். தனக்கு புதிதாக பிறந்த பிள்ளைகளை மிகவும் பாசமாக வளர்த்துவந்தாள் மனிஷா. சில நாட்கள் ஜேக்கின் வாடை மனிஷாவின் வீட்டு பக்கம் அடிக்காமல் இருந்தது. ஒருநாள் மாலை நேரத்தில் ஜேக் அமராவதியையும் ஜூலியட்டையும் வீட்டில் வந்து "ட்ராப்" செய்துவிட்டு போனான். அடுத்து வந்த நாட்களில் "ட்ராப்" மட்டுமல்லாது இருவரையும் உபரியாக "பிக்கப்"பும் செய்துகொண்டான். இதே நிகழ்வு தொடர்ந்து பலவாரங்கள் நடந்தேறியது. இப்போதுதான் அமராவதிக்கும் ஜூலியட்டுக்கும் தன் தந்தையை பற்றி ஏன் தங்கள் தாய் சொல்லவில்லை என்று மெல்ல புரிந்தது. மனிஷாவும் ஜேக் தன் (முன்னாள்) மகள்களுடன் ஊர் சுற்றுவதை பற்றி கண்டுகொள்ளவில்லை. அமராவதி மற்றும் ஜூலியட் மீது மற்ற எந்த ஆண்களாவது கண் வைத்தால் அவ்வளவுதான், அவர்களது முகம் ரத்தகளரி ஆகிவிடும். அந்த அளவிற்கு கோபக்காரன் ஜேக் என்னும் எங்கள் பக்கத்து வீட்டு சேவல்!


கதாபாத்திரங்கள்:
மனிஷா, அமராவதி, ஜூலியட் = எங்க வீட்டு கோழிகள்
ஜேக் = பக்கத்து வீட்டு சேவல்
ஹானிபெல் = பறுந்து

(முற்றும்)
SHARE
    Blogger Comments
    Facebook Comments

0 மறுமொழிகள்:

Post a Comment