பக்தி சிற்றுலா

கடந்த வியாழகிழமை காலையிலேயே நண்பன் பிரமோதிடம் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் அவன் சனிக்கிழமை அன்று பெங்களூரை சுற்றி ஒரு பக்தி சிற்றுலா செல்ல இருப்பதாகவும் வெட்டியாக இருந்தால் நீயும் என்னுடன் கலந்து கொள்ளலாம் என்றான். நானும் சனிக்கிழமை தானே வருகிறேன் என்று சொல்லிவிட்டேன். பிரயாணத்தின் போது சனிக்கிழமை அன்று முக்கியமான நிகழ்ச்சி ஒன்றிற்கு போகவேண்டியத்தை நண்பர் பரிதி தொலைபேசி அழைப்பின் மூலம் நியாபகபடுத்தியது வேறு விஷயம். அடுத்தநாள் வெள்ளிகிழமை அன்று சாயங்காலமே எனக்கு ஜலதோஷம் பிடிப்பதற்கான அறிகுறிகள் தெரிய ஆரம்பித்துவிட்டது. இருந்தாலும் சனிக்கிழமை அதிகாலை 5 மணிக்கெல்லாம் நண்பன் பிரமோத், நான் உட்பட நான்கு பேர் ஒரு நான்கு சக்கர வாகனத்தில் சிற்றுலாவை பெங்களூரில் இருந்து தொடங்கினோம்.


முதலில் ஸ்ரீரங்கப்பட்டணம் ஸ்ரீரங்கநாதசுவாமி கோவிலுக்கு 7 மணி அளவில் சென்றோம். பெங்களூரில் இருந்து சுமார் 130 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இந்த நகரம். இது வரலாற்று சிறப்பு மிக்க ஒரு நகரமாகும். திப்பு சுல்தான் ஆட்சி காலத்தில் இது மைசூர் சமஸ்தானத்தின் தலைநகரமாக இருந்ததாம். மேலும் ஆங்கிலேயருக்கு எதிரான போரில் திப்பு சுல்தான் கொல்லப்பட்டதும் இங்கே தான். ஆலய தரிசனத்திற்கு பிறகு அங்கே இருந்த பழைய காலத்து சிறைச்சாலையை ஒரு பார்வையிட்டு வந்தோம். பின் அங்கிருந்து சங்கமம் என்ற ஆற்றுபடுகைக்கு குளிக்க சென்றோம். ஆனால், மூன்று நதிகள் (காவேரி, கபினி, ஹேமாவதி) சங்கமிக்கும் இடம் என்பதால் அங்கே நீர் வரத்து கொஞ்சம் அதிகமாக இருந்தது. எனவே அங்கிருந்து நிமிஷாம்பா கோவிலுக்கு வந்து சேர்ந்தோம்.


அந்த கோவிலின் அருகே ஓடும் காவேரி நதியில் ஒரு குளியலை போட்டுவிட்டு. அம்மன் தரிசனத்தையும் முடித்துவிட்டு அடுத்ததாக மேல்கோட்டைக்கு பயணத்தை தொடர்ந்தோம்.


மேல்கோட்டையை அடைந்ததும் தான் தெரிந்தது அன்றைய தினம் ஏதோ விசேஷம் என்று. அங்கே உள்ள குளத்து நீரில் கணவனும் மனைவியும் குளித்தேழுந்தால் விரைவில் குழந்தை பேரு கிடைக்கும் என்பது ஐதீகமாம். அதனால் அங்கே பல தம்பதியினர் கூட்டத்தினை பார்க்க முடிந்தது. முதலில் அங்கே மலை உச்சியில் உள்ள யோகநரசிம்மர் கோவிலுக்கு சென்றோம்.


மலை உச்சியை அடைவதற்குள் உடன் வந்த நண்பருக்கு மூச்சு வாங்கி தாவு தீர்ந்துவிட்டது. தரிசனத்தை முடித்துவிட்டு அங்கே சில புகைப்படங்களை எடுத்தோம். அதன் பின்னர் மலையில் இருந்து கீழே இறங்கி அருகே உள்ள செல்வநாராயணசுவாமி கோவிலுக்கு சென்றோம்.


அங்கே தரிசனத்தை முடித்துவிட்டு கோவிலை சுற்றி வந்த போது கோவில் கோபுரத்தின் பின்புறமுள்ள சிலைகள் அனைத்திற்கும் மாறுகால் மாறுகை வாங்கப்பட்டு சிதைந்திருந்தது. விசாரித்த போது தான் தெரிந்தது ஏதோ ஒரு போரில் படைவீரர்கள் செய்த அட்டகாசங்கள் இவை என்று. அதன் பின்னர் அருகில் உள்ள அக்கா-தங்கையர் குளத்திற்கு சென்று ஒரு பார்வையிட்டு வந்தோம். மேல்கோட்டையில் மதிய உணவிற்கு கோதாவில் இறங்கலாம் என்றால் அனைத்து கடைகளும் நிரம்பு வழிந்தது. எனவே அப்போதைக்கு பசி ஆற்ற, அங்கே உள்ள ஒரு கடையில் நான்கு வெள்ளரிக்காய் 20 ரூபாய் வீதம் கொடுத்து வாங்கினோம். ஒரு பத்து கிலோமீட்டர் மேல்கோட்டையில் இருந்து கடந்து வந்திருப்போம், அப்போது சாலையோரத்தில் இருந்த தோட்டத்தில் இருந்து விற்பனைக்காக மொத்தமாக வெள்ளரிக்காய்களை ஒரு மீன்பாடி வண்டியில் ஏற்றிகொண்டிருந்தார்கள். அங்கே எங்களது வாகனத்தை நிறுத்தி 20 ரூபாய்க்கு வெள்ளிரிக்காய் கேட்டோம், ஒரு கூடை முழுவதும் சுமார் 15 காய்களை அள்ளிக்கொண்டுவந்து எங்களுடைய வாகனத்தில் தட்டினார்கள். அப்பொழுது தான் நினைத்துகொண்டேன் இதை சந்தையில் எப்படி விற்று லாபம் சம்பாதிக்கிறார்கள் என்பதை. பெங்களூருக்கு திரும்பும் வழியில் உள்ள மதூரில் சிற்றுண்டியை முடித்துவிட்டு, டொட்டமல்லுரில் உள்ள நவநீதகிருஷ்ணன் கோவிலை வந்தடைந்த போது மாலை 3.50 மணி.


இந்த நவநீதகிருஷ்ணன் கோவிலில் உள்ள சுவாமிகளின் சிலை தவழ்ந்த நிலையில் இருப்பது சிறப்பம்சம் ஆகும். கோவில் நடை 4 மணிக்கு தான் திறக்கப்படும் என்பதால், அதுவரை கோவிலுக்கு வெளியே காத்திருந்து நடை திறந்த பின்னர் தரிசனத்தை முடித்துவிட்டு பெங்களூருக்கு கிளம்பினோம். வீட்டை நெருங்கிய பின்னர் காய்ச்சலின் வீரியம் அதிகரித்துவிட்டது. இதனால், இன்று நண்பர் ஒருவரின் திருமணத்திற்கும் செல்லமுடியாமல் போனது வேறு விஷயம்.
SHARE
    Blogger Comments
    Facebook Comments

0 மறுமொழிகள்:

Post a Comment