ஸ்வதேஸ் (Swades)


நான் பலமுறை பார்த்து ரசித்த ஹிந்தி திரைப்படங்களில் இது முக்கியமான ஒன்று. இந்த திரைப்படத்தை ஒவ்வொரு இந்தியனும் பார்க்கவேண்டும் என்பது என் எண்ணம். இந்த படத்தின் இயக்குனர் அஷுதோஷ் கோவரிகர் கவனிக்க படவேண்டியவர்களில் ஒருவர். இவரது இயக்கத்தில் வெளிவந்த லகான், ஜோதா அக்பர் போன்ற வரலாற்று திரைப்படங்கள் அதற்கு சான்றுகள். சமூக ஏற்றதாழ்வுகள், பஞ்சம், வறுமை, கல்லாமை என்று ஒழிக்க முடியாத (படாத) பல விஷயங்கள் முட்டுகட்டையாக இருந்து கொண்டு நம் நாட்டை முன்னேற விடாமல் தடுத்துக்கொண்டே தான் இருக்கின்றன. முன்பெல்லாம் பஞ்சம் என்றால் உணவிற்கு தான் ஏற்படும், அனால் இப்பொழுது மின்சாரத்திற்கும், குடிநீருக்கும் கூட அடிக்கடி பஞ்சம் ஏற்படுகிறது. நாமும் அதை கண்டு கொள்ளாமல் கடந்துகொண்டே தான் இருக்கின்றோம். சரி இதை பற்றி பேசிக்கொண்டிருந்தால் தொடர்கதை போல போய்கொண்டே தான் இருக்கும். இந்த திரைப்படத்தில் ஒரு சராசரி இந்திய கிராமத்தில் நடக்கும் பிரச்சனைகளை பற்றி சொல்லியிருக்கிறார்கள். ஒரு கிராமத்தில் இவ்வளவு பிரச்சனைகள் என்றால், நம் நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களையும் நினைத்து பார்த்தால் தலை சுற்றுகிறது. இந்த திரைப்படத்தை பற்றி பார்ப்போம் இனி...

இந்த திரைப்படம் மகாத்மா காந்தியின் அற்புதமான மேற்கோள் வரிகளுடன் தொடங்கும் போதே என்னை இருக்கையில் நிமிர்ந்து உட்கார வைத்துவிட்டது. அந்த வரிகள் கீழே..
"Hesitating to act because the whole vision might not be achieved, or because others do not yet share it, is an attitude that only hinders progress..."

மோகன் (ஷாருக் கான்) அமெரிக்காவில் உள்ள NASA விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் பணி புரிந்து கொண்டு அங்கே அந்த நாட்டின் நிரந்திர குடிமகனாக மாறிக்கொள்ள விண்ணப்பித்துவிட்டு காத்திருப்பவன். தனது பெற்றோர்கள் மறைந்து, பல வருட இடைவெளிக்கு பிறகு இந்தியாவில் தன்னை குழந்தையாக இருந்தபோது வளர்த்த காவேரியம்மா என்ற பாட்டியை தன்னுடன் அழைத்து வர முடிவு செய்து, இந்தியாவிற்கு விடுமுறை எடுத்துக்கொண்டு செல்கிறான். இந்தியாவை வந்தடைந்ததும் மோகனின் நண்பன் உதவியோடு காவேரியம்மாவை தேடும் முயற்சியில் இறங்குகிறான். முதலில் காவேரியம்மா தங்கியிருந்த முதியோர் இல்லத்திற்கு செல்கிறான். அப்பொழுது தான், பல வருடங்களுக்கு முன்பே காவேரியம்மாவை அங்கிருந்து யாரோ சரண்பூர் என்ற கிராமத்திற்கு அழைத்து சென்றிவிட்டதாக தெரியவருகிறது.


ஒரு நாள் மோகனின் நண்பன் வைத்திருக்கும் புத்தக கடையில் கீதாவை (காயத்ரி) சந்திக்கிறான் மோகன். மோகனும், கீதாவும் பால்யகால நண்பர்கள் என்று அவனுக்கு அப்போது தெரியவில்லை, இதை அறிந்த கீதாவும் அதை இறுதி வரை காட்டிக்கொள்ளவில்லை. மேலும் புத்தக கடையில் கீதாவின் நடவடிக்கைகள் பார்த்து அவள் மீது ஒரு வித ஈர்ப்பு கொள்கிறான் மோகன். இறுதியில் கீதாவிடமே சரண்பூர் செல்லும் வழியை கேட்டு தெரிந்து கொள்கிறான்.


அடுத்த நாள் கேரவேன் ஒன்றை ஏற்பாடு செய்துகொண்டு அங்கிருந்து சரண்பூர் கிராமத்திற்கு செல்கிறான். ஒரு கட்டத்தில் தான் அவனுக்கு தெரியவருகிறது தான் செல்லும் பாதை சரண்பூர் கிராமத்தில் கொண்டு சேர்க்காதென்று. அதன் பிறகு அங்கே சென்று கொண்டிருந்த வழி போக்கன் ஒருவனின் உதவியுடன் சரண்பூர் கிராமத்தை அடைகிறான். அங்கே காவேரியம்மாவை சந்திக்கிறான், மேலும் தான் புத்தக கடையில் பார்த்த கீதாவுடன் தான் காவேரியம்மா தங்கியிருப்பதை அறிந்து கொள்கிறான். கீதா, சரண்பூர் கிராமத்தில் உள்ள ஆரம்ப பள்ளியில் ஆசிரியையாக வேலைபார்த்து கொண்டிருக்கிறாள். மோகனின் உதவியுடன் அமெரிக்காவின் நெடுஞ்சாலைகளில் தாபா போன்ற உணவகம் அமைக்க முயற்சிக்கும் மனிதர், அங்கே பணிபுரியும் தபால்காரர், கிராமத்து நிர்வாகிகள் என்று மோகன் அந்த கிராமத்தில் பலவிதப்பட்ட மனிதர்களை சந்திக்கிறான். மோகன் தன்னுடன் காவேரியம்மாவை அழைத்து செல்லும் விருப்பத்தை தெரிவிக்கிறான், அவரோ கீதாவிற்கு திருமணத்தை முடித்தால் தான் தன்னால் எதையும் சொல்ல முடியும் என்கிறார். கீதாவின் பெற்றோர்களும் இறந்துவிட்டதால், அவளுக்கும் அவளுடைய எட்டு வயது சகோதரனுக்கும் தற்போது ஒரே ஆதரவு காவேரியம்மா என்பதே அதன் காரணம். ஒருமுறை கீதாவை பெண் பார்க்க ஒரு மாப்பிள்ளை குடும்பம் வருகிறது. திருமணத்திற்கு பின்பும் தான் இதே பள்ளியில் வேலையை தொடர்வேன் என்று கீதா சொல்லியதால் அந்த வரன் தவறி விடுகிறது. கீதாவின் கனவு அந்த ஆரம்ப பள்ளியை உயர்நிலைப்பள்ளி அளவிற்காவது உயர்த்தவேண்டும் என்பதே. அனால், ஆரம்ப பள்ளியிலே அதிக மாணவர்கள் இல்லாததால் அந்த பள்ளிக்கூடம் இருக்கும் இடத்தை அந்த கிராம பஞ்சாயத்து அபகரிக்க முயற்சி செய்கிறது. இந்த பிரச்சனைகளுக்கு முடிவு கிடைத்தால் தான் காவேரியம்மா தன்னுடன் அமெரிக்கா வருவார் என்பதை உணர்ந்து அவர்களுக்கு உதவ முயற்சிக்கிறான் மோகன்.


ஒவ்வொரு வீடுகளா ஏறி குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புமாறு கேட்கிறான். அப்போது தான் அந்த கிராமத்தில் இருக்கும் ஜாதி வேறுபாடுகள், பால்ய விவாகம், அறியாமை போன்ற பல பிரச்சனைகள்  முட்டுகட்டைகளாக இருப்பதாக உணர்கிறான். ஒவ்வொருவராய் சமாதனபடுத்தி பள்ளிக்கூடத்தில் படிப்பதற்கு ஓரளவிற்கு குழந்தைகள் கூட்டத்தை சேர்க்கிறான். இது இப்படி போக கீதா, காவேரியம்மாவை மோகனுடன் அமெரிக்கா செல்லவிடமாட்டேன் என்று தடை போடுகிறாள். ஒரு முறை, மோகன் ஒரு அமெரிக்க வாழ் இந்தியன் என்பதால் NON RETURNING INDIAN (NRI) என்று கீதா அவனை கூறுவது அழகு.


நடுவே தான் எடுத்து வந்த விடுமுறைகள் கிட்டத்தட்ட முடிந்து விட்ட நிலையில் கிராமத்தில் இருந்தே தனது NASA பணிகளை கொஞ்ச நாட்கள் தொடர முடிவு செய்தான். அதற்காக இன்டர்நெட் மற்றும் தொலை பேசி இணைப்பு போன்ற உதவிகளை அந்த ஊர் தபால்காரர் மூலம் பெறுகிறான் மோகன் மேலும் கீதாவின் மேல் காதலும் கொள்கிறான். இந்த நேரத்தில் காவேரியம்மா, கோட்டி என்ற ஊரில் உள்ள ஹரிதாஸ் என்பவரை சந்தித்து கீதாவின் நிலத்திற்கான குத்தகை பணத்தை வசூலித்து வர மோகனை அனுப்பி வைக்கிறார். அங்கே சென்ற போது தான் ஹரிதாஸ் குடும்பமே பஞ்சத்தில் இருப்பது. நெசவு தொழிலை பரம்பரை தொழிலாக கொண்ட ஹரிதாஸ், கீதாவின் நிலங்களை குத்தகைக்கு வாங்கி விவசாயம் செய்ய முயற்சி செய்திருக்கிறார். ஆனால், இவர் பிறப்பால் நெசவாளி என்ற ஒரே காரணத்தால் இவருடைய நிலங்களுக்கு தண்ணீர் வழங்க மறுத்து விட்டனர் அந்த ஊர் மக்கள். அதனால் பயிர்கள் அனைத்தும் வாடி அழிந்து போனது. ஒரு வேலை சாப்பாட்டிற்கே கஷ்டப்படும் அவர், அங்கே சென்ற மோகனுக்கு தாங்கள் உண்ணும் உணவை அளிக்கிறார்கள். அன்று இரவு தூக்கம் வராமல் ஹரிதாசின் நிலைமை பற்றி சிந்தித்துக்கொண்டே இருக்கிறான், மேலும் அடுத்த நாள் சரண்பூர் திரும்பும் போது தனது கையில் இருந்த பணத்தை அவருக்கு உதவியாக இருக்குமென கொடுத்துவிட்டு வருகிறான்.


வரும் வழியில் ஒரு சிறுவன் ஒரு குவளை தண்ணீரை 25  பைசா என்று கூவி கூவி விற்பதை பார்த்து, நாட்டின் நிலை குறித்து மனம் வருந்துகிறான். இந்த காட்சியை பார்த்த போது எனக்கும் சில நினைவுகள் வந்து போனது.  நான் பள்ளி பயிலும் போது, எனது கிராமத்தில் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் குடிநீர் பஞ்சம் இருக்கும். அந்த காலகட்டத்தில் என் வயது பசங்க ஒன்று சேர்ந்து கொண்டு மிதிவண்டியில் இரண்டு குடங்களை வைத்துகொண்டு  ஐந்து கிலோ மீட்டர் தொலைவிற்கு சென்று குடி தண்ணீர் எடுத்து வருவோம், சில நேரங்களில் ஒரு குடம் தண்ணீர் 1 ரூபாய் என்று விற்பார்கள். கிட்டதட்ட அதே நிலை தான் இன்று நிகழ் காலத்தில் தொடர்கிறது என்பது என் எண்ணம், இங்கே பெங்களூரு நகரத்தில் மினரல் வட்டார் என்ற பெயரில் வீடுகளுக்கு வரும் சாதாரண காவேரி நீரை பிடித்து ஒரு குடம் 40 ரூபாய்க்கு விற்கிறார்கள். குடிநீரை பணம் கொடுத்து வாங்குபோது வேதனை தான் மிஞ்சும். சரி நாம் கதைக்கு வருவோம்..


இப்படி மோகன் பார்த்த பல விஷயங்கள் அவன் மனதை உறுத்துகிறது. அதனால் சரண்பூர் கிராமத்திற்கு அமெரிக்கா செல்வதற்கு முன் ஏதாவது செய்யவேண்டும் என்று முடிவெடுக்கிறான். சரண்பூர் கிராமத்தில் மின்சாரம் அதிகமாக தடைபடும். பெரும்பாலான நாட்களை மின்சாரம் இல்லாமல் தான் அந்த கிராமம் கழித்து கொண்டிருந்தது. அதனால் சொந்தமாக அந்த கிராமத்திற்கு மின்சாரம் உற்பத்தி செய்து வீடுகளுக்கு அனுப்ப முடிவெடுக்கிறான். அந்த ஊரில் உள்ள மக்களின் உதவியுடன் அதை செய்தும் முடிக்கிறான்.


இந்த படத்தில் எனக்கு பிடித்த காட்சிகளில் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் காட்சியும் ஒன்று. கடைசியில், மோகன் அமெரிக்கா திரும்பி செல்லும் நேரம்வருகிறது. காவேரியம்மா, இந்த வயதில் நான் அமெரிக்கா வந்து எதையும் சாதிக்கபோவதில்லை என்று கூறி மோகனுடன் போக மறுத்துவிடுகிறார்.  அதனால் மோகன் மட்டும் தனியாகே அமெரிக்கா திரும்புகிறான். அந்த கிராமமே ஒன்று சேர்ந்து மோகனை வழியனுப்புகிறது. கீதா தன் பங்கிற்கு நம் நாட்டின் நியாபகமாக சில பொருட்கள் அடங்கிய சிறிய பெட்டியை மோகனிற்கு நியாபக பரிசாக அளிக்கிறாள். அதன் பிறகு அமெரிக்கா சென்ற மோகன், மீண்டும் இந்தியா திரும்பினானா? கீதாவுடன் சேர்ந்தானா? என்பதை திரைப்படத்தில் கண்டு ரசியுங்கள்.

இந்த திரைப்படத்தில் திரைக்கதை, வசனங்கள், ஒளிப்பதிவு, இசை என்று அனைத்துமே என்னை கவர்ந்தவை. படத்தில் பின்னணி இசை என்னை மிகவும் வசீகரித்தது. இந்த திரைப்படம் தேசம் என்ற பெயரில் தமிழில் வெளியானது. ஆனால், எதிர்பார்த்த அளவிற்கு படம் நன்றாக செல்லவில்லை. நம்மிடம் நல்ல விஷயங்களை ஏற்றுக்கொள்ளும் மனபக்குவம் அப்போது இல்லையோ...? என்னவோ...?
SHARE
    Blogger Comments
    Facebook Comments

0 மறுமொழிகள்:

Post a Comment