சீதா லக்ஷ்மி - பாகம் 10

கடந்த பாகத்தை தவற விட்டவர்கள் கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்...


பாகம் 10
அது பன்னிரெண்டாம் வகுப்பு இறுதி தேர்வு முடிந்து நாங்கள் அனைவரும் முடிவுகளுக்காக காத்திருந்த நேரம். நானும் ராமும் அவ்வப்போது கோவில்களில் மட்டும் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. பள்ளி விடுமுறை என்பதால் அவனுடன் என்னால் அதிக நேரம் செலவிட முடியவில்லை. ஒரு வழியாக தேர்வு முடிவுகள் வெளியிடும் நாள் வந்தது. அன்றைய காலகட்டத்தில் இன்டர்நெட் வசதிகள் கிடையாது, அதனால் மதியம் வெளியாகும் மாலை மலர் நாளிதழில் தான் தேர்வு முடிவுகள் முதலில் வெளியாகும். அது எங்கள் கிராமத்திற்கு வந்து சேர்வதற்குள் நேரமாகிவிடும் என்பதால், நானும் என் தோழன் ராமும் அவனது இரண்டு சக்கர வாகனத்தில் 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நகரத்திற்கு பயணித்தோம். ஒரு நான்கு கிலோ மீட்டர் பயணத்திற்கு பிறகு எதிரே கட்டுபாடற்று லாரி ஒன்று வேகமாக வந்தது. அப்போது எதிர்பாராத விதமாக ராமின் வாகனத்தில் பிரேக் வயர் அறுந்து போனது, கண்ணிமைக்கும் நேரத்தில் பின்னால் இருந்த என்னை சாலையின் ஓரமாக தள்ளிவிடவும் அந்த லாரி வந்து அவன் மேல் மோதவும் சரியாக இருந்தது. இது அனைத்தும் கன நேரத்தில் நடந்து முடிந்துவிட்டது. அந்த விபத்தில் ராம் அங்கேயே இறந்து விட்டான். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு நான் இரண்டு சக்கர வாகனத்தில் பயணம் செய்வதை நிறுத்திக்கொண்டேன். என் வாழ்நாளின் மறக்க முடியாத நண்பன் ராம், அவன் நினைவாக தான் எனது பெரும்பான்மையான கடவுசொல்களில் கூட அவனுடைய பெயரை உபயோகிப்பேன் என்று சீதா சொல்லி முடிக்க சரண்யாவின் கண்களில் கண்ணீர் எட்டி பார்த்தது.

மறுநாள், சரண்யா ரகுவிடம் நடந்த எல்லாவற்றையும் கூறினாள். ரகு எல்லாவற்றையும் பொறுமையாக கேட்டுவிட்டு சீதாவின் இறந்த கால நண்பன் குறித்து
வருந்தினான். இப்போது தான் ரகுவிற்கு புரிந்தது சீதா ஏன் தன்னுடன் இரண்டு சக்கர வாகனத்தில் வரவில்லை என்று. சீதாவின் மன வருத்தத்திற்கு முழுமையாக
ஆறுதல் அளிக்கமுடியாது என்றாலும், ஓரளவிற்கு முடியும் என நினைத்துகொண்டான். மூன்று நாட்களுக்கு பிறகு, ரகு சீதாவை தன்னுடன் காபி அருந்த அழைத்தான்.
அவளும் சரண்யா அன்று விடுமுறை என்பதால் அவனுடன் செல்ல முடிவெடுத்தாள். வெகுநாட்களுக்கு பிறகு இருவரும் தனியே பேசிக்கொள்ளும் வாய்ப்பிருந்தும் நிமிடங்கள் யாவும் மௌனங்கள் மட்டுமே விழுங்கி கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் தனது மௌனத்தை முறித்த ரகு, உன் நண்பனுக்காக நானும் வருந்துகிறேன் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்துவிட்டான்.

இரண்டு வாரங்களுக்கு பிறகு, அது ஒரு அழகிய கார்காலம். மேக மூட்டங்கள் அடுக்குமாடி கட்டிடங்களை முட்டிக்கொண்டிருந்தன. வழக்கம் போல சீதா மற்றும் சரண்யா அலுவலகத்திற்கு சீக்கிரமே வந்துவிட்டார்கள். அப்பொழுது ரகு வேகமாக அலுவலகத்திற்குள் நனைந்த படி ஓடிவந்தான். அவனது உடைகள் மழையில் நனைந்து இருந்தது. நேராக சீதாவின் இருக்கைக்கு வந்தவன், அவளிடம் என்னுடன் ஒரு ஐந்து நிமிடம் வெளியே வரமுடியுமா என்றான். அவளுக்குள் காதல் ஒளிந்திருப்பது உண்மை என்பதால் என்னவோ, அவ்வளவு அவசரமாக ரகு கேட்டதும் ஏன்? எதற்கு? என்று எதுவுமே கேட்காமல் ரகுவுடன் நடக்க ஆரம்பித்தாள் சீதா. ரகு சீதாவை அழைத்து கொண்டு அலுவலகத்திற்கு வெளியே சென்றான். ரகுவை பின்தொடர்ந்த சீதா ஒரு ஐந்து அடி இடைவெளி விட்டே அவனுடன் நடந்தாள். ரகு ஒரு ஐம்பது அடி கடந்தவுடன் நின்றான், அப்போது அவன் மட்டும் மழையில் நனைய தொடங்கினான். ஐந்தடி இடைவெளியில் வந்த சீதாவின் மேலே மஞ்சள் நிற வெயில் மட்டும் அணைத்து கொண்டிருந்தது. இந்த மழை காட்சியை சீதா கண் கொட்டாமல் ரசிக்க தொடங்கினாள். இந்த காட்சியை சீதாவின் கண்களில் பதிவு செய்யவே ரகு அவ்வளவு அவசரமாக அவளை அழைத்து வந்தான். அப்போது எதிர்பாராத விதமாக சீதாவின் கைகளை பற்றி நான் உன்னை காதலிக்கிறேன் என்றான் ரகு. இதை சற்றும் எதிர்பார்க்காத சீதாவும் தன் மனதிற்குள் ஒளித்து வைத்திருந்த காதலை ரகுவிடம் கண்களால் பரிமாறினாள்.

முற்றும்.

டிஸ்கி:
இந்த கதையில் வந்த சம்பவங்கள் மற்றும் கதாபாத்திரங்கள் யாவும் கற்பனையே.
SHARE
    Blogger Comments
    Facebook Comments

0 மறுமொழிகள்:

Post a Comment