சீதா லக்ஷ்மி - பாகம் 9

கடந்த பாகத்தை தவற விட்டவர்கள் கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்...


பாகம் 9
"நான் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் முன்பு வரை எனக்கு ஆண் நண்பர்கள் கிடையாது. அது இரு பாலர் பயிலும் பள்ளியாக இருந்தாலும் இறுதி ஆண்டுக்கு முன்பு வரை என்னுடன் பயின்ற எந்த ஒரு மாணவர்களிடமும் பேசி பழகியது இல்லை. இறுதி ஆண்டில் தான் என்னை போலவே யாருடனும் அதிகம் பேசாத ராம் என்கிற நண்பன் கிடைத்தான். வேதியியல் பாட பிரிவில் ஆய்வு கூட சோதனை வகுப்பில், ஒரு குழுவிற்கு இரண்டு பேர் என்று ஆசிரியர் பிரித்துவிடுவார். அப்படி பிரித்து விடுவதற்கு வகுப்பில் ஆண்களின் எண்ணிக்கையும் பெண்களின் எண்ணிக்கையும் சமமாக இருந்ததால், ஆண்களையும் பெண்களையும் தான் சீட்டில் எழுதி போட்டுள்ள நம்பரை தனித்தனியாக தேர்ந்தெடுக்க சொன்னார். அப்படி எந்த ஆணிற்கும், பெண்ணிற்கும் ஒரே நம்பர் வருகிறதோ அவர்கள் இரண்டு பேரும் ஒரு குழு. இந்த குழு வருடம் முழுவதும் கடை பிடிக்கப்படவேண்டும். அந்த வகையில் நானும் ராமும் நம்பர் 3 ஐ தேர்ந்தெடுத்ததால் ஒரு குழுவாக செயல்படவேண்டிருந்தது. அந்த வகையில் தான் எனக்கும் ராமிற்கும் நட்பு மலர்ந்தது. வேதியியல் ஆசிரியர் அனுசரித்த இதே முறையை மற்ற பாடங்களான இயற்பியல் மற்றும் விலங்கியல் பாட ஆசிரியர்களும் கடைபிடித்தனர். அதிர்ஷ்டவசமாக அவற்றிலும் நானும் ராமும் ஒரு குழுவாக இணைந்தோம்.

இவ்வாறு வேதியியல் ஆய்வுகூடத்தில் பணிபுரியும் பொது ஒருநாள் கைகளில் சில துளி அமிலம் பட்டுவிட்டது. பதறி போன ராம் தான் எனக்கு முதலுதவி செய்தான். அன்று முதல் அமிலங்களில் வேலை செய்யும் பொது என்னை அவற்றை நெருங்க விடமாட்டான். மிகவும் உரிமையுடன் தடுத்து நிறுத்துவான். தான் வீட்டில் இருந்து கொண்டு வந்த மதிய உணவை என்னுடன் பகிர்ந்து கொள்வான். இவ்வாறு கொஞ்சம் கொஞ்சமாக என்னுடைய நெருங்கிய நண்பனாக மாறிவிட்டான் ராம். மற்ற மாணவர்களை காட்டிலும் ராம் மிகவும் புத்திசாலி. ஆனால் தனக்குள் இருக்கும் திறமையை வெளிக்காட்டிகொள்ள மாட்டான். கணக்கு பாடத்தில் அவன் மக்கு, இருந்தாலும் விலங்கியல் மற்றும் இதர பாடங்களில் நன்றாக செயல்படுபவன். கவிதைகள் எழுதுவது, ஓவியங்கள்  வரைவது என்று பல கலைகளை நன்றாக செய்பவன். ஆனால் இது அவனுக்கும் எனக்கும் மட்டுமே தெரிஞ்ச ஒரு விஷயம். அவனுடன் நெருங்கி பழகிய பின்னர் தான் எனக்கே அவனை பற்றிய விஷயங்கள் தெரிந்தன. அவனது இல்லத்திற்கு ஒரு நாள் மதிய இடைவேளையின் போது அழைத்து சென்றான். அது வரை நான் யாருடனும் இரண்டு சக்கர வாகனத்தில் சென்றதில்லை அன்று தான் முதல் முதலில் ராமுடன் சென்றேன். யாரும் பார்த்து தவறாக பேசிவிடக்கூடாது என்பதற்காக முகத்தை முக்காடால் மறைத்து கொண்டு சென்றேன். ராமின் வீட்டிற்கு சென்ற பிறகு தான் தெரிந்தது அவனது கலை உலகம். அவனது அறை முழுவதும் அவன் வரைந்து வைத்திருந்த ஓவியங்கள் நிரம்பி வழிந்தன. அவற்றை பார்த்தபோது மனதிற்குள் பிரமிப்பு. காரணம் அவனது மனக்கண்ணாடியின் பிரதிபலிப்பாக விளங்கின ஒவ்வொரு ஓவியமும்.

இவ்வளவு திறமைகள் இருக்கும் போது ஏன் எதையும் வெளிக்காட்டிகொள்ளாமல் உனக்குள் வைக்கிறாய் என்று கேட்டால்,என்னுடைய சுய சந்தோசத்திற்காக மட்டுமே இவற்றை செய்கிறேன் என்பான் விநோதமாக. எல்லா பாடங்களிலும் சிறந்து விளங்குகிறாய், ஆனால் கணித பாடத்தில் மட்டும் சொதப்புகிறாய் என்றால், அந்த பாடத்தை எடுக்கும் ஆசிரியையை எனக்கு பிடிக்கவில்லை என்பான் சிரித்தபடி. நான் பழகிய முதல் ஆண் நண்பனே சற்றுவிநோதமானவனாக இருந்தது எனக்குள் வியப்பே. ராமிற்கு தந்தை கிடையாது, அம்மா மட்டுமே. அவனுடைய அம்மாவின் சமையலை நான் பல நாட்கள் மதிய உணவை அவன் பகிர்ந்துகொள்ளும் போது ருசித்திருக்கிறேன். அனால், அன்று தான் சுட சுட ருசித்தது. அவனுடைய அம்மாவின் அன்புடன் சேர்த்து ருசித்ததாலோ என்னவோ, அவர்களின் சமையலுக்கு மட்டுமல்லாது அன்பிற்கும் அடிமையாகி போனேன். ராமுடன் பகிர்ந்து கொண்ட நினைவுகள் ஏராளம். தாவரவியல் பாட ஆய்வு கூடத்திற்காக பூக்களை தேடி சென்றது, விலங்கியல் பாடத்திற்காக கரப்பான் பூச்சி, எலி போன்றவற்றை பிடித்தது என்று அனைத்தும் மனதோடு நிற்கின்றன இன்றளவும்" என்று மேலும் தொடர்ந்தாள் சீதா.

(பின் தொடருங்கள்...)

டிஸ்கி:
இந்த கதையில் வரும் சம்பவங்கள் மற்றும் கதாபாத்திரங்கள் யாவும் கற்பனையே.
SHARE
    Blogger Comments
    Facebook Comments

0 மறுமொழிகள்:

Post a Comment