லிட்டில் மிஸ் சன்ஷைன்

 இந்த படத்தின் இறுதி 20 நிமிட காட்சிகளை ஒரு ஆங்கில சேனலில் பார்த்ததும் திரைப்படம் முழுவதையும் பார்க்கவேண்டும் என்கிற ஆவலை என்னுள் தூண்டியது. அதன் பின்னர் நண்பர் ஒருவரின் மூலம் இந்த இந்த திரைப்படம் எனக்கு கிடைத்தது. 2006 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படத்தை இயக்கியது ஜோனாதன் மற்றும் வலேரி என்ற தம்பதியினர் ஆவார்கள். இந்த திரைப்படத்தில் வாழ்க்கையின் யதார்த்தத்தை கொஞ்சம் தெளிதிருப்பது என்னை கவர்ந்தது. இனி இந்த திரைப்படத்தை பற்றி பார்ப்போம்... 


ஷெரில் மற்றும் ரிச்சர்டின் எழு வயது மகளான ஆலிவ் கலிபோர்னியாவில் நடக்கும் லிட்டில் மிஸ் சன்ஷைன் என்ற குழந்தைகளுக்கான அழகி போட்டியின் இறுதி சுற்றில் கலந்து கொள்ள தேர்ந்தெடுக்கபடுகிறாள். ஆலிவ் எவ்வாறு அந்த போட்டியில் கலந்துகொண்டாள் என்பதை பற்றியது தான் முழு திரைப்படமும். ரிச்சர்ட் சுய முன்னேற்றம் பற்றி மற்றவர்களுக்கு வகுப்புகள் எடுக்கும் ஒரு ஆசாமி. அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் குடும்பத்தை ஓட்டிகொண்டிருப்பவன். டுவைன் ஷெரிலிற்கும் அவளது முதல் கணவனுக்கும் பிறந்தவன். இவனது நீண்ட கால ஆசை விமான படையில் சேர்ந்து பணியாற்றி ஒரு புகழ்பெற்ற விமானியாக வேண்டும் என்பதாகும். மேலும் தான் விமாநியாகும் வரை யாரிடமும் பேசாமல் மெளனமாக இருப்பதாக முடிவெடுத்து அதை கடைபிடித்தும் வருபவன் டுவைன்.  


பிரான்க் தற்கொலைக்கு முயற்சி செய்து அதன் பின்னர் காப்பாற்றப்பட்டு அவனது சகோதரி ஷெரிலின் வீட்டில் தற்காலிகமாக தங்க வந்திருப்பவன். இறுதியாக எட்வின், இவர் தான் ரிச்சர்டின் தந்தை. இரண்டாம் உலகப்போரில் பங்கேற்றுவிட்டு, தற்போது ஹெராயின் போன்ற போதை பொருட்களை விற்பதும் உபயோகிப்பதுமாய் இருக்கிறார்.

தாங்கள் இருக்கும் இடத்தில் இருந்து 800 மையில் தொலைவில் உள்ள கலிபோர்னியாவிற்கு சென்று அந்த போட்டியில் கலந்துகொள்ள ஆலிவ் ஆர்வமாகிறாள். ஆனால், அவர்களது குடும்ப சூழ்நிலை அதற்கு ஒத்துழைக்க மறுக்கிறது. முதலாவதாக நிதி பற்றாக்குறை அடுத்ததாக அங்கே செல்ல ரிச்சர்ட், டுவைன் மற்றும் பிரான்க் போன்றோருக்கு விருப்பம் இல்லாமை இவை தான் அதற்கான காரணங்கள்.  நிதி பற்றாக்குறை காரணமாக அனைவரும் ஒரே இடத்தில் இருக்கவேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. ஒரு வழியாக ஷெரில் அனைவரையும் சமாதானபடுத்தி அந்த பயணத்திற்கு சம்மதிக்க வைக்கிறாள், மேலும் பண பற்றாகுறையால் விமானத்தில் போகமுடியாது என்பதனால் அவர்களது சொந்த வாகனத்தில் செல்ல முடிவெடுத்து கிளம்புகிறார்கள். அங்கிருந்து கலிபோர்னியாவை சென்றடையும் வரை அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தான் திரைப்படம்.


முதலில் அவர்கள் சென்ற வாகனம் ஒரு பழங்காலத்து வாகனம் என்பதால் அதில் இருந்து பிரச்சனைகள் ஆரம்பிக்கின்றது. ஒரு கட்டத்தில் வாகனத்தின் "கிளட்ச்" பழுதடைவதால் வாகனம் நகரமறுக்கிறது. அதன் பிறகு வாகனத்தை ஒரு 20 கிலோ மீட்டர் வேகத்திற்கு தள்ளினால் நகரும் என்பதை ஒரு மெக்கானிக்  சொல்ல கேட்டு, வாகனத்தை தள்ளியே ஸ்டார்ட் செய்கிறார்கள். அந்த குறிப்பிட்ட வேகத்திற்கு வாகனம் வந்ததும் அனைவரும் ஓடி ஏறி கொள்கிறார்கள். இதே மாதிரி, நான் கல்லூரி படிக்கும் போது நண்பன் ஒருவனின் அக்கா திருமணத்திற்காக நான் உட்பட நண்பர்கள் இரண்டு பேர்  TVS சேம்ப் வாகனத்தில் ஏறிக்கொண்டு இரவு முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டிகொண்டிருந்தோம். அப்போதும் இது போல எங்கள் வாகனம் பழுதடைந்தது. எனவே வாகனத்தை தள்ளி விட்டு தள்ளி விட்டு ஓட்டினோம், சுவரொட்டிகளையும் ஒட்டினோம்.  அந்த இரவு மறக்க முடியாத ஒன்று. அதே போல தான் இவர்களும் வாகனத்தை நிற்கும் போதெல்லாம் தள்ளி தள்ளி ஓட்டுகிறார்கள். இது இப்படி போக ஒரு கட்டத்தில் ரிச்சர்ட் தனக்கு கிடைக்கவேண்டிய தொழில் ரீதியான ஒரு பெரிய வாய்ப்பை இழந்த செய்தியை தனக்கு வரும் தொலைபேசி அழைப்பின் மூலம் அறிகிறான். அதே போல, ரிச்சர்டின் தந்தை எட்வின் ஹோட்டலில் தங்கி இருந்தபோது அளவுக்கு அதிகமான போதையால் இறந்து விடுகிறார். நேரமின்மை காரணமாக, எட்வினின் உடலை மருத்துவ மனையில் இருந்து கடத்தி தங்களுடைய வாகனத்திலே கொண்டு சொல்கிறார்கள். பொதுவாக ஒரு மாகாணத்தில் இருந்து மற்றொரு மாகாணத்திற்கு இவ்வாறு இறந்த உடலை கொண்டு செல்வது சட்டத்தை மீறுவதாகும். இருந்தாலும் தன் மகள் ஆலிவ் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவேண்டும் என்பதற்காக விதிகளை மீறுகிறார்கள்.


இவ்வாறு அவர்கள் சென்றுகொண்டிருக்கையில் பச்சை நிறத்தில் எதையோ ஆலிவ் வரைந்து காட்டி அது என்னவென்று டுவைனிடம் கேட்க, அவன் அதில் ஒன்றும் இல்லை என்று எழுதி காண்பிக்கின்றான் [அவன் தான் யாரிடமும் பேசமாட்டானே..]. அப்பொழுது தான் அவனுக்கு நிறக்குருடு இருப்பதை உணருகிறான். கோபத்தில் தான் இத்தனை காலம் தேக்கி வைத்திருந்த மௌனத்தை கலைத்து கத்துகிறான், கதறுகிறான். காரணம், அவனுக்கு நிறக்குருடு இருப்பதால் விமானியாக ஆக முடியாது என்பது தான். சிறிது நேரத்திற்கு பிறகு ஆலிவ், டுவைனை சமாதானபடுத்தி அங்கிருந்து மீண்டும் பயணத்தை தொடர்கிறார்கள்.

அப்பொழுது மீண்டும் அவர்களுடைய வாகனத்தின் ஹாரன் பிரச்னை செய்ய, அவர்களால் அதை சரி செய்ய முடியவில்லை. அது சத்தமாக அலறிக்கொண்டே இருந்ததால் நெடுஞ்சாலையில் பாதுகாப்பில் இருக்கும் ஒரு காவல்துறை அதிகாரியிடம் சிக்குகிறார்கள். வாகனத்தில் எட்வினின் இறந்த உடல் இருப்பதால் அனைவரும் பயத்தால் பதற ஆரம்பிக்கிறார்கள். ஆனால், இறந்து போன எட்வின் ஏற்கனவே செய்த ஒரு அல்பமான விஷயத்தால் அந்த அதிகாரியிடம் இருந்து தப்புகிறார்கள்.


இப்படியாக ஒரு வழியாக பல பிரச்சனைகளை கடந்து ஆலிவ் பங்கேற்க வேண்டிய நிகழ்ச்சிக்கு ஒரு ஐந்து நிமிடம் தாமதமாக வந்து சேர்கிறார்கள். சில பல கெஞ்சல்களுக்கு பிறகு விழா கமிட்டிகாரர்கள் ஆலிவை நிகழ்ச்சியில் பங்கேற்க சம்மதிக்கிறார்கள். நிகழ்ச்சி தொடங்குகிறது, ஆலிவை விட சிறந்து விளங்கும் பல குழந்தைகள் அங்கே இருப்பதை கண்டு ஆலிவ் குடும்பத்தினர் பயம் கொள்கிறார்கள்.


ஆலிவ் அந்த மேடையில் தோன்றினால் ரசிகர்களால் அவமான படுத்தபடுவாள் என்று உணர்ந்து அவளை பங்கேற்க வேண்டாம் என் கூறுமாறு ஷெரிலிடம் சொல்கிறார்கள். தங்களை போல ஆலிவும் வாழ்க்கையில் தோற்றுவிடக்கூடாது என்பது தான் அதன் உள்நோக்கம். ஆனால், அதையும் மீறி ஆலிவ் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கிறாள். இறுதியில் மேடையில் நடந்தது என்ன..? ஆலிவ் அந்த போட்டியில் வெற்றி பெற்றாளா என்பதை திரைப்படத்தில் கண்டு மகிழுங்கள்.

திரைப்படத்தின் பல யதார்த்தமான உரையாடல்கள் என்னை கவர்ந்தது. அவற்றில் சில கீழே...

Luck is the name losers give to their own failings. It's about wanting to win...

Sarcasm is the refuge of losers...

A real loser is someone who's so afraid of not winning, they don't even try... 


இந்த திரைப்படத்தை நீங்கள் பார்த்து முடிக்கும் போது உங்களுக்குள் உள்ள தன்னம்பிக்கை உதயமாவதை உணரலாம்.
SHARE
    Blogger Comments
    Facebook Comments

0 மறுமொழிகள்:

Post a Comment