முன்தினம் பார்த்தேனே...

 நேற்று முன்தினம் தான் இந்த திரைப்படத்தை பார்த்தேன். ஒரு முறை ஜெயா தொலைகாட்சியில் அரைகுறையாக இந்த படத்தை பார்த்த நியாபகம். சில திரைப்படங்களை பார்க்காமலே மொக்கை என்று நாம் முடிவுசெய்வதுண்டு. அதற்கான காரணம் அந்த திரைப்படத்தின் கதாபாத்திரங்கள் தேர்வு நம் மனதோடு ஒட்டாமல் போவதாக கூட இருக்கலாம். நான் இந்த திரைப்படத்தின் மீது முதலில் ஆர்வம் காட்டாததற்கும் இது தான் காரணம். இந்த திரைப்படம் கடந்த வருடம் புதுமுக இயக்குனர் மகிழ் திருமேனியின் இயக்கத்தில் வெளிவந்தது. மகிழ் திருமேனி இயக்குனர் கவுதம் மேனனின் உதவியாளர் என்பது உபரி தகவல். இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற கதாபாத்திரங்களும் இயக்குனரை போலவே புதுமுகங்கள் தான். ஆஹா.. ஓஹோ.. என்று புகழும் அளவிற்கு இந்த திரைப்படத்தில் எதுவுமில்லை என்றாலும் யதார்த்தம் நிரம்பி இருந்ததால் என்னவோ எனக்கு பிடித்திருந்தது. இந்த படத்தின் கதையை பற்றி பார்ப்போம்... 

 
சஞ்சய் ஒரு பன்னாட்டு மென்பொருள் நிறுவனத்தில் மேலாளராக பனி புரிபவன். அவனது வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை அவன் நினைவு கூர்வது தான் முழு திரைப்படமும். பொதுவாக எல்லா ஆண்களுக்கும் தனக்கு வரபோகின்ற மனைவி இப்படி தான் இருக்கவேண்டும் என்ற ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். இந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் தாண்டி, பார்த்தவுடன் ஈர்க்கும் எல்லா பெண்களிடத்தும் அவர்கள் காதல்வயப்படுவதும் இயற்கை. ஆனால் இறுதில் அவர்கள் திருமணம் புரியும் பெண், அவர்களது எதிர்பார்ப்புகளை சில வகைகளிலாவது பூர்த்தி செய்யாத பெண்ணாக தான் இருப்பாள். இதை போல, சஞ்சய் குடும்பப் பாங்கான அதே நேரத்தில் கொஞ்சம் நவநாகரீகமான பெண்ணை தான் திருமணம் செய்யவேண்டும் என்ற எதிர்பார்ப்புகளோடு வாழ்பவன். இவனது வாழ்க்கையில் கடந்து செல்லும் மூன்று பெண்களை பற்றியது தான் கதை.


முதலில் அவன் குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் புதிதாக குடிவரும் பூஜா என்ற பெண்ணின் மீது பார்த்தவுடன் மையல் கொள்கிறான். தனது குழந்தை தனமான நடவடிக்கைகளால் பூஜா சஞ்சய்யை கவர்ந்ததால், அவளை கவர முயற்சிகள் செய்கிறான் சஞ்சய். ஒரு முறை, அவள் கேமரா ஒன்றை கள்ளமார்க்கெட்டில் வாங்கி ஏமாந்துவிடுகிறாள். அதற்கு பதிலாக நல்ல கேமராவை, பூஜா எமாந்தவர்களிடமே வாங்கி வருவதாக சொல்லிவிட்டு செல்கிறான் சஞ்சய். சஞ்சய் தனது நண்பனின் உதவியுடன் அந்த ரவுடி கும்பலிடம் இருந்து நல்ல கேமராவை திருப்பி வாங்க செல்ல.. அவர்கள் இவர்களை துரத்த.. உயிருக்கு பயந்து இருவரும் தப்பி ஓடிவருகிறார்கள். இறுதியில் தனது சொந்தப்பணம் நாற்பது ஆயிரத்தை வைத்து அவளுக்கு கேமரா வாங்கி கொடுக்கிறான் சஞ்சய். ஒரு தருணத்தில் தனது காதலை சொல்லலாம் என்று சஞ்சய் நினைக்கும் போது பூஜா தான் ஒரு அமெரிக்கா வாழ் இந்தியனை காதலிப்பதாகவும், மேலும் அவளுக்கு ஏற்கனவே நிச்சயம் ஆகிவிட்டதாகவும் ஒரு குண்டை தூக்கி போடுகிறாள். அதோடு அந்த காதல் முடிந்தது.



அடுத்ததாக ஆர்த்தி என்ற நடன ஆசிரியை மீது காதல் கொள்கிறான்.இந்த காதல் மட்டும் பார்த்தவுடன் வருவதில்லை, மாறாக பக்குவத்தால் மெல்ல வருகிறது. முதலில் ஆர்த்தியை பற்றி பலவிதமான கிசுகிசுக்கள், புரளிகள் ஊர் முழுவதும் பரவிக்கிடைக்கிறது. அவளுக்கும் ஒரு சின்னத்திரை நடிகருக்கும் காதல் அப்படி இப்படி என்று பல கிசுசிசுக்கள். இருந்தாலும் அவளை சஞ்சய் பார்க்கும் போதெல்லாம் அந்த மாதிரி பெண் போல தோன்றுவதில்லை. அதனாலே அவளின் மீது சஞ்சய்க்கு ஈடுபாடு அதிகமாகிறது. ஒரு முறை ஆர்த்திக்கு நள்ளிரவில் தனது இரண்டு சக்கர வாகனத்தில் லிப்ட் கொடுத்து உதவி செய்கிறான். அதன் பின்னே, அவள் பணிபுரியும் நடனப்பள்ளிக்கு நடனம் கற்றுக்கொள்ள நண்பனுடன் சென்று இணைகிறான். அப்படி இருந்தும் ஆர்த்தி சஞ்சய்யை கண்டுகொள்ளாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கிறாள். ஒரு முறை அவளது வீட்டில் உள்ள பிரச்சனைகளால் சோர்ந்திருக்க சஞ்சய் அவளுக்கு ஆதரவாக பேசுகிறான். அன்று முதல் இருவரும் நண்பர்கள் ஆகிறார்கள். நாளடைவில் சஞ்சய் ஆர்த்தியின் மீது காதல் கொள்கிறான். ஒரு நாள் யதார்த்தமாக ஆர்த்தி சஞ்சய்யிடம், நீ என்னை காதலிப்பது எனக்கு தெரியும். நான் உனக்கேற்ற பெண் இல்லை, நீ  நல்ல குடும்பப் பாங்கான, கொஞ்சம் மாடர்னான பெண்ணை திருமணம் செய்துகொள் என்கிறாள். அதற்கு சஞ்சய், உனக்கு என் மேல் காதல் வரும்வரை உனக்காக நான் காத்திருப்பேன் என்று பதிலளிக்கிறான். அவர்களுடைய உறவு மீண்டும் நண்பர்களாகவே தொடர்கிறது. இப்படி போக, ஒரு நாள் ஆர்த்தியை அவளுடைய பெங்களூரு இல்லத்தில் சந்திக்கிறான் சஞ்சய். சஞ்சையும் ஆர்த்தியும் மாடியில் தனியாக இருக்கும் போது, அவள் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர் யதோச்சையாக அங்கே வந்து ஆர்த்தியின் பழைய காதலனை பற்றி விசாரிக்கிறார். இந்த விஷத்தை ஆர்த்தி தன்னிடம் மறைத்ததால் அவளை பார்க்க செல்வதை அன்று முதல் தவிர்கிறான், நடன வகுப்பிற்கும் முழுக்கு போட்டுவிடுகிறான் சஞ்சய். ஆர்த்தியும் தானது பழைய காதலை பற்றி சஞ்சய்யிடம் சொல்லியிருக்கவேண்டும் என்று மனதிற்குள் வருந்துகிறாள். 


இந்த நேரத்தில் தன்னுடன் பணிபுரியும் அனு சஞ்சய்க்கு அறிமுகம் ஆகிறாள். அனுவிடம் பழகிய பின்தான் தெரிந்து கொள்கிறான், இவள் தான் அவன் எதிர்பார்க்கும் குணங்கள் கொண்ட பெண் என்று. அதனால் அவளை திருமணம் செய்துகொள்வதா, இல்லை தான் காதலித்து வந்த ஆர்த்தியை திருமணம் செய்துகொள்வதா என்ற குழப்பத்தில் திறிகிறான் சஞ்சய். ஒரு நாள், தனது நண்பன் திருமணம் செய்துகொள்ள போகும் பெண்ணை காண அந்த பெண் பணிபுரியும் பள்ளிகூடத்திற்கு நண்பனுடன் ஊட்டி செல்கிறான். சஞ்சய் சென்ற அதே நேரத்தில் அந்த பள்ளிகூடத்திலிருந்து ஆர்த்தி வெளியேறுகிறாள். இதை கவனித்த சஞ்சய் எதற்கு ஆர்த்தி அங்கே வந்தாள் என்று விசாரிக்கிறான். அவளது குழந்தையை யாருக்கும் தெரியாமல் இங்கே படிக்கவைப்பதாகவும் தெரிந்துகொள்கிறான். இந்த குழந்தை தான் ஆர்த்திக்கும், அவளது முன்னாள் காதலனுக்கும் பிறந்தது என்று நினைத்துகொண்டு அவளை முற்றிலுமாக வெறுக்கிறான். ஒரு நாள் ஆர்த்தி சஞ்சய்யை சந்தித்து தனது பழைய காதலனை பற்றிய உண்மைகளை சொல்ல வரும்பொழுது, அவளது வளர்ப்பு குழந்தை பற்றி தனக்கு தெரியும் என்று கூறிவிட்டு விட்டு விலகிவந்துவிடுகிறான். அந்த வேகத்திலேயே அன்று இரவு அனுவிடம் வந்து தனது காதலை சொல்கிறான் சஞ்சய், அனுவும் சம்மதிக்கிறாள். இது இப்படி போக ஒரு சந்தர்பத்தில் ஆர்த்தியின் சகோதரி சஞ்சய்யிடம் வந்து, ஆர்த்தி வளர்க்கும் குழந்தை தனக்கும் தனது முன்னாள் காதலனுக்கும் பிறந்த குழந்தை என்கிறாள். மேலும் ஆர்த்தியை அவளுடைய குடும்பத்தினர் வீட்டை விட்டே வெளியேற்றிவிட்டார்கள் என்றும் கூறும் போது உடைந்து போகிறான் சஞ்சய்.

இறுதியில் சஞ்சய் யாரை திருமணம் செய்துகொண்டு வாழ்ந்தான் என்பதை திரைப்படத்தில்
பாருங்கள்.

இந்த திரைப்படத்தில் வரும் நகைச்சுவை காட்சிகளில்
சஞ்சயின் நண்பன் கதாபாத்திரம் அருமை, கண்டிப்பாக ஆண்கள் அனைவரும் ரசிப்பார்கள் என நம்புகிறேன். தமனின் இசையில் பாடல்கள் கேட்பதற்கு இனிமை, ஆனால் படமாக்கபட்டவிதம் எனக்கு பிடிக்கவில்லை. மொத்தத்தில் பொறுமை இருந்தால் இந்த திரைப்படத்தை ஒரு முறையாவது பார்த்து ரசிக்கலாம்.
SHARE
    Blogger Comments
    Facebook Comments

0 மறுமொழிகள்:

Post a Comment