துப்பாக்கி


துப்பாக்கி இந்த வருடத்தில் வெளியான ஆக்க்ஷன் திரைப்படங்களில் மிகச்சிறந்த வெற்றிப்படம் என்பதை ஆணித்தரமாக பதிவு செய்துள்ளது. ஒரு காலத்தில் நடிகர் விஜய்யின் திரைப்படங்களை வெளியாகும் நாளிலேயே பார்க்கும் வழக்கத்தை கொண்டிருந்தேன். ஆனால் எல்லாம் குருவி திரைப்படத்திற்கு பிறகு மரணித்து போனது. அதன் பிறகு அவரின் ஆக்க்ஷன் திரைப்படங்களை இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக என்று காண்பித்தால் கூட பார்ப்பதை நிறுத்திக்கொண்டேன். இதையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால் கில்லி மற்றும் போக்கிரி படங்களுக்கு பிறகு நான் ரசித்த விஜய்யின் ஆக்க்ஷன் திரைப்படம் துப்பாக்கி என்பதால் மட்டுமே. மற்றபடி எனக்கு தலயும் தளபதியும் ஒன்று தான். கில்லி மற்றும் போக்கிரி திரைப்படங்களில் இருந்து துப்பாக்கி தனித்து தெரிவதன் காரணம் இது ரீமேக் திரைப்படம் அல்ல என்பதே. சரி இனி துப்பாக்கி எப்படி வெடித்திருக்கிறது என்று பார்ப்போம்..


விடுமுறையை கழிப்பதற்காக மும்பை வரும் இராணுவ அதிகாரி ஜெகதீஷாக விஜய். அங்கே நடக்க இருக்கும் தொடர்குண்டு வெடிப்புகளை எப்படி தடுத்து நிறுத்துகிறார் என்பது தான் கதை. ஏழாம் அறிவு திரைப்படத்தில் நோக்குவர்மத்தையும் போதிதர்மரையும் கையில் எடுத்தவர், இந்த திரைப்படத்தில் தீவிரவாதத்தையும் ஸ்லீப்பர் செல்சையும் கையில் எடுத்துள்ளார். படத்தில் வில்லன் எவ்வளவு புத்தி கூர்மையானவன் என்பதை பல இடங்களில் நிரூபித்துள்ளார் இயக்குனர். அதனால் விஜய்யின் செயல்பாடுகள் வில்லனின் செயல்பாடுகளை விட கொஞ்சம் அதிபுத்திசாலிதனமாக இருக்கவேண்டியுள்ளது, அதை திரைக்கதையில் செயல்படுத்தியும் காட்டியுள்ளார் இயக்குனர். காஜல் அகர்வால் இந்த கதைக்களத்தில் மசாலாவுக்காக மட்டுமே உபயோகப்படுத்தப் பட்டுள்ளார். வழக்கமாக முருகதாஸ் திரைப்படங்களில் கதையில் கதாநாயகியின் பங்களிப்பு கண்டிப்பாக இருக்கும், அனால் இந்த படத்தில் அது தொலைக்கப்பட்டது என்றுதான் சொல்லவேண்டும்.


சண்டைகாட்சிகள் நல்ல முறையில் படமாக்கப்பட்டுள்ளது. இறுதியில் கப்பலில் போடும் சண்டைகாட்சி புளித்துப்போன பழைய கஞ்சி போன்ற உணர்வை கொடுத்தது. இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் இந்த வில்லன்கள் ஹீரோக்களுடன் ஒண்டிக்கு ஒண்டி சண்டைக்கு ஒத்துக்கொள்வார்களோ? ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம். மேலும், கில்லி திரைப்படத்தின்  இறுதிகாட்சியில் பிரகாஷ்ராஜ் விஜய்யின் கையையும் காலையும் முடக்கிவிடுவார். அதன்பின் கையை காலையும் ரெண்டு சுழட்டு சுழட்டி விஜய் சரிசெய்துகொள்வார் (நாங்க எல்லாம் அப்பவே அப்படி.. இப்போ கேட்கவா வேணும்..), அதே போன்ற காட்சி இங்கும் உள்ளது. படத்தின் நீளத்தை குறைத்திருக்கலாம், இதற்கு பெரிய அளவில் ரிஸ்க் வேண்டியதும் இல்லை, சில பாடல்களையும் ஜெயராம் வரும் காட்சிகளையும் கிள்ளி எறிந்திருந்தாலே போதுமானது. ஆனால் படத்தில் ஆங்காங்கே கலகலப்பூட்ட ஜெயராம் மற்றும் சத்தியன் உபயோகபடுத்தப்பட்டுள்ளனர்.

படத்தில் என்னைபொருத்தவரை பின்னணி இசை நன்றாகவே வந்துள்ளது. படத்தின் பாடல்கள் ஹாரிஸின் பழைய பாடல்கள் சிலவற்றை நியாபகபடுத்துகிறது. குட்டி புலி ஆட்டம்.. வெண்ணிலவே.. மற்றும் கூகுள்.. பாடல்கள் என்னுடைய விருப்பங்கள். நடனத்தில் விஜய் பெரிய அளவில் எதுவும் செய்யவில்லை என்றே சொல்லலாம். கூகுள் பாடலில் கைதட்டலால் அரங்கம் அதிர்கிறது, ஆனால் அது அந்த பாடலை விஜய் பாடியதற்காக மட்டுமே. சந்தோஷ்சிவன் ஒளிப்பதிவில் அசத்தியுள்ளார். விஜய்யின் ஆக்க்ஷன் திரைப்படங்களில் இது முதல் இடத்தை பிடிக்கும் என்பது உண்மை. கண்டிப்பாக படத்தை குடும்பத்தோடு பார்க்கலாம்.


 டிஸ்கி:

1. இடைவேளை வரும் சமயத்தில் விஜய் "ஐயம் வெய்ட்டிங்" என்று சொல்லும் போது அரங்கம் அதிர்கிறது.. ஆனால் அந்த உரையாடலுக்கு முன்பாக வில்லன் பேசும் டயலாக்  "டேக்கன்" என்கிற ஆங்கில திரைப்படத்தில் வில்லனிடம் ஹீரோ பேசும் புகழ்பெற்ற "ஐ வில் பைன்ட் யூ, அண்ட் கில் யூ" டயலாக்கை நியாபகப்படுத்துகிறது.

2. விஸ்வரூபம் திரைப்படத்திற்கும் துப்பாக்கி திரைப்படத்திற்கும் சில ஒற்றுமைகள் இருக்கலாம் என்பது என் யூகம். விஸ்வரூபம் திரைப்படத்தின் டைட்டில் அரபிக் மொழியின் சாயலில் வருவதுபோல துப்பாக்கி திரைப்படத்தின் சில பேனர்களின் பின்னே அரபிக்மொழி வாசகங்கள் இருப்பதை காணலாம். சமீபத்தில் ஒரு பத்திரிக்கையில் வந்த செய்தியில், விஸ்வரூபம் படத்திலும் ஸ்லீப்பர் செல்ஸ் கான்செப்ட் உபயோகப்படுத்தபட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. (கமலின் பிறந்தநாளுக்கு அவரது இல்லத்திற்கு சென்று விஜய் வாழ்த்து தெரிவித்ததாக செய்திகள் வெளிவந்தன. நான் அப்பொழுதே இதற்கும் துப்பாக்கி திரைப்படத்திற்கும் சம்பந்தம் இருக்குமோ என்று சந்தேகித்தேன்.)

3. இந்த திரைப்படத்தில் தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவின் துணையின்றி தனித்து சாதித்திருக்கிறார் விஜய்.

4. விஜய்யின் திரைப்படங்களில் எப்படியாவது ஒருகாட்சியில் "கோர்ட் சூட்" சகிதமாக அவர் வருவது வழக்கம். இந்த திரைப்படத்தில் பெரும்பான்மையான காட்சிகளில் "கோர்ட் சூட்" சகிதமாக வந்துள்ளார். மேலும் அதே "கோர்ட் சூட்டை" இந்த படத்தில் வில்லன் அவரை கண்டுபிடிக்க பயன்படுத்திக்கொள்வது அப்ளாஸ்.

5. இந்த திரைப்படத்தை தென்காசி நகரில் உள்ள PSS மல்டிப்ளெக்ஸில் என் மனைவியுடன் பார்த்தேன். வழக்கம் போல இந்த படத்திலும் தல ரசிகர்கள் ஊடுருவி விட்டார்கள் போல. விஜய்யின் அறிமுக காட்சியில் சண்டைபோடும்போது எதிர்பாராத விதமாக கன்னத்தில் ஒரு குத்து வாங்குவார். அப்போது திரைஅரங்கில் ஒரு கூட்டம் கைதட்டி ரசித்தது, இன்னொரு கூட்டம் விஜய்யை அடித்ததற்காக சத்தம் போட்டது.

THUPPAKKI Fully loaded in Theaters
SHARE
    Blogger Comments
    Facebook Comments

4 மறுமொழிகள்:

  1. No way to like your posts. Have to comment - how sad :)

    Anyways after reading your review I want to watch the movie.
    Joyce.J.

    ReplyDelete
  2. @Joyce: I will find an option for that feature ;-)

    ReplyDelete
  3. Did you find the option? :)
    Joyce.J.

    ReplyDelete
  4. @Joyce: Yeah.. I have found the option :-)
    but didn't implement :P

    Now I have implemented only comments option using your facebook account id.

    ReplyDelete