இரண்டாம் உலகம்

இதற்கு முன்பு சுட்டகதை, ஆரம்பம் மற்றும் பாண்டியநாடு போன்ற திரைப்படங்களை பார்த்தாயிற்று. அதில் பாண்டியநாடு தவிர மற்ற படங்கள் அந்த அளவிற்கு என் மனதோடு ஒட்டவில்லை. அவற்றை பற்றி எழுதவும் எனக்கு தோன்றவில்லை. இரண்டாம் உலகம் படத்தின் ட்ரைலர் வெளிவந்த நாள் முதல், படம் வெளியான நாள்வரை (இன்றும் கூட) பலவகையான விமர்சனங்கள் வெளிவந்து இணையத்தில் சக்கபோடு போட்டுகொண்டிருக்கிறது என்பது பெரும்பாலும் அறியப்பட்ட உண்மை. ஆனாலும், இந்த படத்தை பற்றியும் அதை சார்ந்த எனது புரிதல்கள் பற்றியும் எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன். மேலும், எனது அரைகுறையான எழுத்துக்களை விரும்பிப்படிக்கும் வெகுசிலரில் ஒருவனான தம்பி கிப்ட்சன் நேற்று "WHATSAPP"ல் விரும்பி கேட்டுக்கொண்டதாலும் தான் இந்த பதிவு.


படத்தை பார்த்தவர்களும், படம் பார்க்காமல் முழுகதையையும் அறிய முற்படுபவர்கள் மட்டும் தொடர்ந்து படியுங்கள்...

படத்தின் தொடக்கத்திலேயே நாம் வாழும் பூமி போலவே, மனிதர்கள் வாழும் பல உலகங்கள் இருக்கலாம் என்று சொல்லி இது பூமி உட்பட கற்பனை உலககங்கள் பற்றிய ஒருவிதமான "பேண்டஸி" திரைப்படம் என்று நமக்கு சொல்லிவிடுகிறார்கள்.

நாம் வாழும் பூமியில் அதாவது முதல் உலகத்தில், பொதுமக்களுக்கு மருத்துவ தொண்டு செய்யும் ஒரு சாதாரண மனிதன் தான் மதுபாலகிருஷ்ணன் (முதல் ஆர்யா). இதே உலகத்தில் வாழும் மருத்துவ கல்லூரி மாணவியான ரம்யா (முதல் அனுஷ்கா) மதுவின் பொதுசேவை குணத்தை பார்த்து தனக்கு ஏற்ற கணவனாக இவன் இருப்பான் என்று எண்ணி தன்னுடைய காதலை தன் தோழிகளின் உதவியுடன் தயங்கி பகிரங்கமாக சொல்கிறாள். ஆனால், அந்த காதலை மது நிராகரித்து விடுகிறான். ஆனால், வீட்டிற்கு வந்து யோசித்து பார்க்கையில் நல்ல பெண்ணை தவற விட்டுவிட்டோமே என்கிற எண்ணம் மதுவிற்கு  வந்துவிடுகிறது. அவன் அவளை நிராகரித்த காரணம், முடமாக கிடக்கும் தன் தகப்பனை கல்யாணத்திற்கு பின் யார் பொறுப்பாக பார்த்துக்கொள்வார்கள் என்கிற எண்ணமே தவிர வேறொன்றுமில்லை. அதன் பிறகு சில சர்கஸ்கள் செய்து ரம்யாவின் அன்பை பெறுகிறான். அவள் அன்பை பெற்ற அதே நேரத்தில் எதிர்பாராதவிதமாக ரம்யா இறந்துவிடுகிறாள். இதையெல்லாம் அவருக்கே உரிய பாணியில் காட்சி படுத்தியிருக்கிறார் செல்வராகவன்.

இதே நேரத்தில், இரண்டாம் உலகத்தில் வாழும் பெண்களை எல்லாம் ஆண்கள் அடிமைகளாகவும் வாரிசுகள் உருவாக்கும் இயந்திரமாகவும் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். இங்கே வாழும் மறவன் (இரண்டாவது ஆர்யா) அனாதை பெண்ணான வர்ணாவின் (இரண்டாவது அனுஷ்கா) மீது ஆசைபடுகிறான். நிற்க! காதல் அல்ல. ஆனால், செல்வராகவன் படத்திற்கே உரிய மனதைரியத்தோடு இருக்கும் கதாநாயகி வர்ணாவை அவனால் நெருங்க முடியவில்லை. ஒரு சந்தர்ப்பத்தில், இவர்கள் வாழும் பகுதியை ஆளும் "குப்பை ராஜா" வர்ணாவை சிறைபடுத்தி தன்னோடு வைத்துகொள்ள விரும்புகிறான். அப்போது மறவன் அவள் தனக்குரியவள் என்று அந்த ராஜாவிடமே முறையிடுகிறான். இறுதியில் ராஜாவின் ஒப்பந்தப்படி அங்கே வாழும் சிங்கத்தின் தோலை வேட்டையாடி கொடுத்து வர்ணாவை மீட்கிறான்.
வர்ணாவை திருமணம் செய்துகொள்ளவும் விரும்புகிறான் மறவன். அதனால், அவன் ஆசைப்படி அங்கே வாழும் பெண் தெய்வத்தால் இவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்கப்படுகிறது. ஆனால், யாருக்கும் அடிமையாக வாழ பிடிக்காத வர்ணா தன்னை கத்தியால் குத்திக்கொள்கிறாள்.

காதல் என்கிற ஒரு வஸ்து தனது உலகத்தில் இல்லாததால் பூக்கள் கூட பூப்பதில்லை,  தன் உலகத்தில் காதல் என்பது தோன்றிவிட்டால் பெண்களை மதிக்கும் நாகரீகம் தோன்றிவிடும் என்று நினைத்து முதல் உலகத்தில் இருக்கும் பொதுநலமும், உண்மையான அன்பும் கொண்ட ஆர்யாவை தன் உலகத்திற்கு மறவனின் மூலமாக அழைத்துவருகிறது தெய்வமாக போற்றப்படும் பெண் தேவதை. அந்த இரண்டாம் உலகத்திற்குள் ஆர்யா வந்ததும் அதுவரை பூக்காத பூக்கள் தானாக பூக்கின்றன (காரணம் அன்பே உருவான ஆர்யா அந்த உலகத்தில் இருப்பது தான்). இங்கே தன் ரம்யாவை வர்ணாவின் உருவத்தில் பார்த்து சந்தோசப்படுகிறான் (ஆனால் கண்ணில் காதல் இல்லை!). தன்னைதானே கத்தியால் குத்திக்கொண்ட வர்ணா எப்படி பிழைத்தாள் என்று நமக்கு காட்சிகளின் மூலம் இயக்குனர் உணர்த்தவில்லை. முதல் உலகத்தில் வாழ்ந்த ரம்யாவின் உயிரை எடுத்து இரண்டாம் உலகத்தில் வாழும் வர்ணாவிற்கு உயிர் கொடுத்திருப்பார்கள் என்பது என் எண்ணம். இதே நேரத்தில், தன் ஆணைக்கு கட்டுப்பட்டு மறவனுடன் சேர்ந்துவாழாத வர்ணாவை குப்பை ராஜா தன் இடத்தை விட்டே ஒதுக்கிவைக்கிறான். அதனால், காட்டில் குளிரில் தனித்துவாழும் வர்ணாவிற்கு உணவு, உடை எல்லாம் வழங்கி உதவி செய்கிறான் மது. இதை பார்க்கும் மறவனுக்கு தன் மனைவியின் மீது மது காட்டும் கருணை கண்டு பொறாமைபடுகிறான்.ஒரு கட்டத்தில் பெண் தேவதையை வேறொரு சமஸ்தானத்தின் வீரர்கள் கடத்தி சென்றுவிடுகிறார்கள். தேவதையை காப்பாற்ற செல்லும் மறவனையும் தாக்கி சிறைபிடித்துவிடுகிறார்கள். அதன் பிறகு, வர்ணா மதுவின் துணையுடன் அவர்களை மீட்க செல்கிறாள். இந்த தருணத்தில், தனது முதல் உலகத்தின் வாழ்க்கை பற்றியும் ரம்யாவை பற்றியும் வர்ணாவிற்கு சொல்கிறான் மது. அப்பொழுதுதான் உண்மையான காதல் பற்றி வர்ணா உணருகிறாள். இதே நேரத்தில் மறவன் அங்கிருந்து தப்பித்து பெண் தேவதையின் ஒருவித மாய சக்தியால் அங்கிருந்த வீர்களின் கண்களுக்கு புலப்படாமல் பெண் தேவதையுடன் தப்பிக்கிறான். இறுதியில் எதிரி வீரர்கள் துரத்த மது, வர்ணா, மறவன் மற்றும் தேவதை ஆகிய நால்வரும் தங்கள் சமஸ்தானத்திற்கு திரும்பிகொண்டிருக்கிறார்கள். அப்போது நிகழும் சண்டையில் "நீ பார்த்துகொண்டிருந்தால் உலகத்தை உன் காலடியில் வைப்பேன்" என்று காதல் வசனம் பேசும்போது மறவனின் மனதில் காதல் அரும்பியதை உணர்கிறாள் பெண் தேவதை. இதன் பிறகு மதுவின் சேவை இரண்டாம் உலகத்தில் தேவை இல்லாதபட்சத்தில் மது எதிரிகளால் கொல்லப்படுகிறான். அவனை காப்பாற்ற முயற்சி செய்யும் வர்ணாவையும் மறவனையும் பெண் தேவதை தடுக்கிறாள். அடிபட்டு நீரில் விழுந்த மது மூன்றாம் உலகத்தில் விழித்தெழுகின்றான். அங்கே இன்னொரு அனுஷ்கா இருக்கிறார்.

இதுதான் படத்தின் முழு கதை.

படத்தை பற்றிய என்னுடைய கருத்துக்கள் சில:

"நான் ஈ" திரைப்படம் பார்த்திருப்போம், அதில் படத்தின் ஆரம்ப காட்சியில் ஒரு தகப்பன் தன் செல்ல மகளுக்கு கதை சொல்வது போல படம் தொடங்கும், அதை சுவாரஸ்யமாக காட்சிபடுத்தியதால் தான் நம்மால் ஒரு "ஈ" எப்படி பழிவாங்கும் என்ற சிந்தனைகளை ஒதுக்கிவைத்து படத்தை முழுவதுமாக  ரசிக்க முடிந்தது. அதைதான் செல்வராகவனும் சில அனிமேஷன் காட்சிகளுடன் நமக்கு இந்த படத்தின் தொடக்கத்தில் செய்திருக்கிறார். ஆனால், அது எந்த அளவிற்கு மனதோடு ஒட்டியது என்பது கேள்விக்குறி. இந்த அனிமேஷன் காட்சிகள் மனதில் ஒட்டவில்ல என்றால், படத்தின் காட்சியோட்டதில் நம்மை பல கேள்விகளை கேட்க தூண்டும் நமது ஆறாம் அறிவு. உதாரணமாக பெண்களை அடிமைகளை போல நடத்தும் இரண்டாம் உலகத்தில் எல்லோராலும் போற்றி பாதுகாக்கப்படும் பெண் தேவதை. ஆதலால், இந்த அனிமேஷன் காட்சிகளில் வரும் உரையாடல்களை சரியாக புரிந்துகொள்ளும் அளவிற்கு கூட நமக்கு பொறுமை இல்லை என்றால், மேற்கொண்டு இந்த படத்தை நாம்  பார்ப்பதில் எந்தவொரு அர்த்தமும் இல்லை என்பதே என் சிந்தனை.

மதுவை முதல் உலகத்திலிருந்து இரண்டாம் உலகத்திற்கு வரவைக்கும் அளவிற்கு சக்திகொண்ட அந்த பெண் தேவதையால் ஏன் அந்த எதிரி வீரர்களிடம் இருந்து எளிதில் தப்பிக்க முடியவில்லை என்ற கேள்வி நமக்குள் எழத்தான் செய்யும். அதற்கு எனக்கு தெரிந்த காரணம், உண்மையான காதலையும் அன்பையும் எந்த மந்திர சக்தியாலும் கொடுக்கமுடியாது, அது மனதால் உணர்வதனால் பெறக்கூடிய பேரானந்தம் என்பதே!.

படத்தில் என்னை மிகவும் நெருடியகாட்சிகள், முதல் உலகத்திலிருந்து ஆர்யாவை இரண்டாம் உலகத்திற்குகொண்டுசெல்லும் கார் சம்பந்தப்பட்ட காட்சிகள் தான். படத்தின் இறுதியில், இதே ஆர்யா இரண்டாம் உலகத்திலிருந்து மிக எளிதாக மூன்றாம் உலகத்திற்கு செல்வதை கண்பித்திருப்பார் செல்வா. அப்போது ஏனோ எனக்குள் எந்த நெருடல்களும் இல்லை.

காதல் காட்சிகளை இன்றைய தமிழ் சினிமாவில் மிக யதார்த்தமாக சொல்ல செல்வாவால் மட்டுமே முடியும். செல்வாவின் படங்களில் வரும் காதல் காட்சிகளை நம் வாழ்வியலோடு ஒப்பிட்டும் பார்க்கமுடியும். அவ்வளவு யதார்த்தங்கள் நிரம்பி இருக்கும். இதற்கு முதல் உலகத்தில் நடக்கும் ஆர்யா-அனுஷ்கா காட்சிகளே உதாரணம். ஆர்யாவிடம் அனுஷ்கா காதலை சொல்ல தவிக்கும் அந்த காட்சி அருமை. அதன் தொடர்ச்சியாக வரும் காட்சியில், அனுஷ்காவின் தோழி ஒருத்தி ஆண்களின் அங்க அடையாளங்களை வைத்து அவர்கள் எந்த விஷயத்தில் எப்படி இருப்பார்கள் என்று எடைபோட்டு பார்க்கும் காட்சியில் நகைச்சுவை கலந்த யதார்த்தம்.

நம் கவனம் படத்திலிருந்து சிதறும் பட்சத்தில், இரண்டு உலகங்களில் நடக்கும் காட்சிகளையும் மாற்றி மாற்றி காண்பிப்பதால் நாம் குழம்பிபோகவும் வாய்ப்பு உள்ளது.

வர்ணாவிடம் நீ மதுவின் மீதுதான் ஆசையாக இருக்கிறாய் என்று மறவன் சொல்லும் போது, அவன் குழந்தை மாதிரி என்று வர்ணா சொல்லும் தருணத்தில் முதல் உலகத்தில் இருந்த அனுஷ்கா பிறந்த குழந்தையை கையில் வைத்து பார்க்கும் காட்சி என் நினைவுக்கு வந்து போனது. இப்படி பல இடங்களில் இரண்டு உலகங்களையும் நாம் தொடர்புபடுத்தி பார்த்துகொள்ளவேண்டிய காட்சிகள் வந்தாலும் இயக்குனர் அதற்கான வெளிப்படையான குறிப்புகளை நமக்கு அளிக்கும் இடங்கள் மிகமிக குறைவு.

செல்வராகவனை பற்றி நினைக்கும் போதெல்லாம் தோன்றும் ஒரு விஷயம் ஏன் எப்போதும் அரைகுறையான ஒரு ஸ்கிரிப்ட் உடன் ஒரு முழு படத்தையும் எடுக்கிறார் என்பதே. அதாவது தெளிவான முதல் பகுதி ஒரு புறம் இருக்க, இடைவேளைக்கு பிறகு இவர் என்ன சொல்ல வருகிறார்?! என்று நம்மை யோசிக்க வைத்துவிடும். நமக்கே தோன்றும் இந்த சின்ன விஷயம் கண்டிப்பாக அவருக்கும் தோன்றியிருக்ககூடும். அப்படி இருந்தும் அதே பாணியை அவர் தொடர்கிறார் என்றால், அதுதான் இவரது படத்துக்கான "ட்ரேட் மார்க்" என்று நாம் புரிந்துகொள்ளவேண்டும் போல.

செல்வராகவனின் டிவிட்டர் அக்கவுன்ட்டில் வைத்திருக்கும் பகவான் "கிருஷ்ணர்" புகைப்படத்தை பார்க்கும் போதெல்லாம் எதற்காக இந்த படத்தை வைத்திருக்கிறார் என்று எனக்கு தோன்றும். அதற்கான விடை, படத்தில் முதல் உலகத்தில் வரும் ஆர்யாவின் காதாபாத்திரத்தின் (மதுபாலகிருஷ்ணன்) பெயரில் உணர்ந்தேன். கிருஷ்ணர் தோன்றிய வரலாறு பெரும்பாலும் நாம் கேள்விப்பட்டகதை தான். அதை நம்மால் கொஞ்சம் ஆர்யாவின் கதாப்பாத்திரத்தோடு ஒப்பிட்டு பார்க்கமுடியும். சிறையில் பிறந்த கிருஷ்ணர் எப்படி கோகுலத்திற்கு கொண்டு வரப்பட்டார் என்று நினைத்துபாருங்கள். ஆர்யா முதல் உலகத்திலிருந்து இரண்டாம் உலகத்திற்கு வந்த கதை கொஞ்சம் (முழுவதுமாக அல்ல!) சம்மந்தப்படும். இது முற்றிலும் எனது எண்ணங்கள் மட்டுமே. மற்றபடி, செல்வராகவனும் இதே கண்ணோட்டத்தில் தான் காட்சிபடுத்தியிருப்பார் என்று என்னால் உறுதியாக சொல்லமுடியாது.

ரம்யாவின் எதிர்பாராதவிதமான மரணம் பார்வையாளனை காட்சிகளோடு ஒன்ற விடவில்லை. 7G ரெயின்போகாலனி படத்தில் சோனியா அகர்வால் இறக்கும் போது கிடைத்த அதே உணர்வு.

செல்வராகவனுக்கு இந்த முறை பின்னணி இசை சுத்தமாக கைகொடுக்கவே இல்லை. இது படத்தின் மிகப்பெரிய பலவீனம். ஹாரிஸின் இசையில் "கனிமொழியே.." மற்றும் "என் காதல் தீ.." பாடல்கள் பிடித்திருந்தது. அனுஷ்கா தனது நடிப்பால் படத்தை பெரும்பாலான இடங்களில் தூக்கி நிறுத்த முயற்சி செய்திருக்கிறார். இரண்டாம் உலக ஆர்யாவை விட, முதல் உலக ஆர்யா நடிப்பில் கொஞ்சம் பரவா இல்லை. என்னை பொறுத்தவரை இந்த படத்திற்கு ஆர்யா சரியான தேர்வு இல்லை. குறைந்தபட்சம் அவருக்கு வேறு யாராவது டப்பிங் பேசியிருந்தால் ஓரளவிற்கு நன்றாக இருந்திருக்கும். முதல் உலகத்தில் ஆர்யாவின் நண்பனாக வருபரின் (சுட்டகதை படத்தில் வந்தவர்) நடிப்பும், ஆர்யாவின் அப்பாவாக வருபவரின் நடிப்பும் கொஞ்ச நேரமே என்றாலும் நன்றாக இருந்தது. இரண்டாம் உலகத்தில் வரும் வெளிநாட்டவர்களை உதட்டளவில் தமிழ் பேசவைத்துஓரளவிற்கு நடிக்கவைத்ததிலும் இயக்குனராகவெற்றி பெற்றுருக்கிறார் செல்வராகவன்.

கிராபிக்ஸ் காட்சிகள் படத்தின் மிகப்பெரிய பலம். ஒளிப்பதிவாளர் கடுமையாக உழைத்திருக்கிறார். படத்தில் இடைவேளை வரை ஒன்றியிருக்க முடிந்த நம்மால், இடைவேளைக்கு அடுத்து வரும் காட்சிகளில் அவ்வளவாக ஒன்ற முடியவில்லை. ஒருவிதமான வெறுமையை உணரமுடிந்தது. இதற்கு காரணம் திரைக்கதையில் இருந்த தோய்வு என்று கூட சொல்லலாம் அல்லது பெரும்பாலான இடங்களில் திரைக்கதையை தீர்மானிக்கும் பொறுப்பை நம்மிடமே விட்டுவிட்டதாக கூட இருக்கலாம். செல்வராகவன் ரசிகர்கள் இந்த படத்தை கண்டிப்பாக கொண்டாடுவார்கள். ஆனால், மற்றவர்களுக்கு ?!.
செல்வராகவன் பேண்டஸி படங்கள் எடுப்பதை விடுத்து, மீண்டும் யுவனுடன் கூட்டணி வைத்து மயக்கம் என்ன, புதுப்பேட்டை போன்ற அவரது டிரேட் மார்க் படங்களை கொடுக்கவேண்டும் என்பது என் கருத்து.
SHARE
    Blogger Comments
    Facebook Comments

2 மறுமொழிகள்:

  1. வணக்கம்...

    வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… Followers ஆகி விட்டேன்… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

    அறிமுகப்படுத்தியவர் : ராஜி அவர்கள்

    அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : காணாமல் போன கனவுகள்

    வலைச்சர தள இணைப்பு : தேனிலவு செல்ல அழகான இடங்கள்

    ReplyDelete