ஊட்டி - ஒரு குளுமையான அனுபவம்

 
எனக்கு இரண்டு வயது இருக்கும் போது எனது அப்பா ஊட்டியில் பணி புரிந்து கொண்டிருந்தார். அப்போது என்னையும் எனது அம்மாவையும் அங்கே அழைத்து சென்றாராம். ஊட்டியில் இறங்கியதும் குளிர் தாங்காமல் எனக்கு காய்ச்சல் வந்ததால், வந்த முதல் நாளே சொந்த ஊருக்கு திரும்பி வந்ததாக என் அம்மா அடிக்கடி சொல்வார். அதன் பிறகு ஊட்டிக்கு நான் கடந்த வாரம் தான் நண்பர்களுடன் சென்றுவந்தேன். பல நாட்கள் கனவு ஒரு வழியாக நிறைவேறியது.

நான், நண்பர்கள் பிரமோத், அருண் மற்றும் காளி ஆகியோர் செல்வதாக முடிவானது. நண்பன் நாகராஜனுக்கு அவனுடைய திருமண நிச்சயதார்த்த வேலைகள் இருந்ததால் வரமுடியவில்லை. கடந்த வெள்ளிகிழமை மதிய நேரத்தில் நாங்கள் நால்வரும் எனது நான்கு சக்கர வாகனத்தில் பயணத்தை தொடர்ந்தோம். போகும் வழியில் மைசூர் சாலையில் உள்ள "கதம்பம்" ஹோட்டலில் மதிய உணவை முடித்து விட்டு பயணத்தை தொடர்ந்தோம். மாலை நேரத்தில் முதுமலை பகுதியை அடைந்தோம்.


அங்கே மான்கள் கூட்டத்தை பார்த்து பலர் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தார்கள். நாங்களும் எங்கள் பங்கிற்கு சில புகைப்படங்களை எடுத்தோம். நாங்கள் ஊட்டிக்கு போகும்போது 36  கொண்டைஊசி வளைவுகள் கொண்ட பாதை வழியாக சென்றோம். அது ஒரு திரிலிங்கான அனுபவம். அந்த வளைவுகளில் ஏறும்போதே உடம்பிற்குள் குளிர் கொஞ்சம் கொஞ்சமாக ஏறிக்கொண்டிருந்தது. ஊட்டி நகரத்தை மாலை ஏழு மணிக்கு அடைந்தோம். அங்கே தங்குவதற்கு உண்டான ஏற்பாடுகளை தம்பி பிரவீன் ஏற்கனவே தயார் செய்திருந்தான். அன்று இரவு ஊட்டி நகர வீதிகளை சுற்றி வந்தோம். நாங்கள் தங்கிய ஹோட்டலில் மின் விசிறி கிடையாது, குளிர் சாதன வசதியும் கிடையாது. இருந்தாலும் குளிர் அறை முழுவதும் நிரம்பி கிடந்தது. இரவில் தூக்கத்தில் ஒருவர் போர்வையை மற்றவர் மாறி மாறி அபகரித்து கொண்டு தூங்கினோம். நடுங்க வைத்த குளிராலும் பலத்த குறட்டை சத்தத்தாலும் அந்த இரவு மெல்ல நகர்ந்தது.

அடுத்த நாள், காலையில் தொட்டபெட்டா போக முடிவெடுத்தோம். அங்கே போகும் வழியெங்கும் புகைப்படங்கள் எடுத்தோம். தொட்டபெட்டா போய் சேர்ந்ததும், அங்கே இருந்த கூட்டத்தில் வாகனத்தை நிறுத்த கூட இடமில்லை.



அங்கே தேன் நிலவிற்கு வந்த புது மண ஜோடிகள் தான் அதிகமாக கண்களுக்கு தென்பட்டார்கள். நாங்கள் கேரட் மற்றும் முள்ளங்கி வாங்கி பச்சையாக சுவைத்தோம். அதன் பின்னர் அங்கே இருந்து இறங்கி கொடநாடு காட்சி முனைக்கு பயணித்தோம். கொடநாடு காட்சி முனையில் இயற்கையின் அழகை அப்படியே எங்களுடைய கண்களில் பதிவு செய்து மெய் மறந்தோம்.


அதன் பின்னர் அங்கிருந்து குன்னூருக்கு பயணித்தோம். குன்னூரில் உள்ள பழமையான சிம்ஸ் பூங்காவிற்கு சென்றோம். அந்த காலத்தில் எனது தந்தை இங்கே எடுத்து கொண்ட புகைப்படங்களை நினைவு படுத்தியது அங்கே கண்ட காட்சிகள். இன்றளவும் அந்த பழமை மாறாமல் பராமறிப்பதற்கு ஒரு ராயல் சல்யுட்.




அடுத்ததாக கேத்ரின் அறிவியை காண டால்பின் நோஸ் பகுதிக்கு பயணித்தோம். அங்கே மக்காசோளம், அவித்த நிலக்கடலை போன்றவற்றை சுவைத்துவிட்டு சில புகைப்படங்கள் எடுத்தோம்.


அங்கிருந்து திரும்பும்போது வளைவில் இரண்டு வாகனங்கள் மோதிக்கொண்டதால், கடந்து வருவதற்கு கொஞ்சம் நேரம் ஆகிவிட்டது. ஒரு வழியாக இரவு சாப்பாட்டிற்கு ஊட்டி வந்து சேர்ந்தோம். இரவு நானும் நண்பன் பிரமோத்தும் ஊட்டி சாக்லேட் மற்றும் வர்கி வாங்கிவந்தோம். இப்படி ஒரு வழியாக அன்றைய பொழுது கழிந்தது.

அடுத்த நாள், காலையில் நாங்கள் தங்கியிருந்த அறையை காலி செய்துவிட்டு கூடலூர் வழியாக பெங்களூர் திரும்ப முடிவு செய்தோம். வரும் வழியில் முதலில் பைக்காரா  சாலையில் உள்ள 9  மைல்ஸ் பகுதிக்கு சென்றோம்.




இங்கே பல திரைப்படங்கள் எடுக்கப்பட்டதாக கேள்விபட்டிருக்கிறேன். அங்கே சில புகைப்படங்கள் எடுத்தோம். அடுத்ததாக அங்கிருந்து பைக்காரா நீர்வீழ்ச்சிக்கு சென்றோம்.



அங்கேயும் சில புகைப்படங்கள் எடுத்துவிட்டு பயணத்தை தொடர்ந்தோம். கூடலூரை வந்தடையும் போது மழை பொழிய ஆரம்பித்துவிட்டது. அங்கிருந்து முதுமலையை தாண்டி, கர்நாடகா மாநிலத்தின் எல்லையை தொடும் வரை மழை கொட்டி தீர்த்தது.


இறுதியாக இரவு 8  மணி அளவில் பெங்களூர் நகரை அடைந்தோம்.

ஊட்டி பயணம் வாழ்க்கையில் மறக்கமுடியாத குளுமையான ஒரு இன்ப அனுபவம்.
SHARE
    Blogger Comments
    Facebook Comments

4 மறுமொழிகள்:

  1. தம்பி... கல்யாணத்துக்கு முன்னாடி போனதை பத்தி கல்யாணம் முடிஞ்சப்புறம் எழுதக்கூடாது...

    ReplyDelete
  2. @Senthil Kumar Mohan அண்ணே.. இத நான் கல்யாணத்துக்கு முன்னையே எழுதிட்டேன்.. நீங்க தான் கால தாமதமா இத படிக்கிறிங்கன்னு நினைக்கிறேன் :-)

    ReplyDelete
  3. இன்னிக்கு தான்பா ரீடர்ல லிஸ்ட் ஆச்சு... காலையில எல்லாத்தையும் பப்ளிஷ் பண்ணிட்டு நாலு மாசத்துக்கு முன்னால எழுதுனதா சொல்லுறியே...

    ReplyDelete
  4. @Senthil Kumar Mohan இன்னைக்கு தான் ரீடர்ல லிஸ்ட் ஆச்சா?? அப்போ எதோ ரீடர்ல பிரச்சனைன்னு நினைக்கிறேன்.. இந்த போஸ்ட் பப்ளிஷ் பண்ணி பல மாசம் ஆயிடுச்சி :-)

    ReplyDelete