சீரியல் கில்லர்ஸ்

ஆம்! இது டிவி சீரியல்கள் பற்றிய பதிவுதான். டிவி சீரியல்களை கண்டாலோ அல்லது அதை பற்றி பேசினாலோ "காண்டாகும்" நண்பர்கள் விலகிசெல்லுங்கள் :-)


தூர்தர்ஷன் காலத்திலேயே எனக்கு டிவி சீரியல்களை பற்றிய அறிமுகம் உண்டு. தொலைக்காட்சியின் மீதான ஆர்வத்தில், தமிழில் மொழிபெயர்க்கப்படாத மொக்கையான ஹிந்தி சீரியல்களை கூட விடாமல் பார்த்திருக்கிறேன். ஜங்கிள் புக், சந்திரகாந்தா, அலிஃப் லைலா, சக்திமான், சாணக்கியா, சாந்தி, ஸ்வாபிமான், கொலையுதிர்காலம், உடல் பொருள் ஆனந்தி, விழுதுகள், துப்பறியும் சாம்பு, மேல் மாடி காலி, கிரேஸி மோகன் மற்றும் எஸ்.வி.சேகர் நாடகங்கள் என்று அதன் பட்டியல் நீண்டுகொண்டே போகும். அது ஒரு அழகிய "தூர்தர்ஷன்" காலம்.

தூர்தர்ஷன் காலத்திற்கு பிறகு கேபிள் டிவி அறிமுகம் ஆனது. அதன் பிறகும் சீரியல்களின் ஆதிக்கம் முடியவில்லை. ஒரு சானலில் அத்தனை சீரியல் வந்தது என்றால், கேபிளின் வருகைக்கு பிறகு சொல்லவா வேண்டும்?!. ஆரம்பகாலத்தில் மர்மதேசம், நிம்மதி உங்கள் சாய்ஸ், சின்ன பாப்பா.. பெரிய பாப்பா, கையளவு மனசு என்று சில தரமான சீரியல்களை கொடுத்துவந்த கேபிள் சானல்கள், நாளடைவில் அண்ணாமலை, சித்தி, கங்கா யமுனா சரஸ்வதி, குலவிளக்கு என்று ஒரேமாதிரியான நாடகங்களை அதிகமாக்க தொடங்கின. இது ஒரு வித எரிச்சலை கொடுத்ததனால், டிவி சீரியல் என்றாலே தலைதெறிக்க ஓடுமளவிற்கு ஆகிவிட்டது நிலமை. பள்ளிப்படிப்பை முடிக்கும் தருவாயில் இந்த வெறுப்பு அதிகமாகிவிட்டது. காரணம், ரசனை மாற்றமாக கூட இருக்கலாம்.

கல்லூரி காலங்களில் டிவி சீரியல்கள் என் பார்வைக்கு வருவதே அறிதாகிப்போனது. அதன்பிறகு, படிப்பு முடிந்து வேலைக்கு சென்ற பிறகுதான் சில டிவி சீரியல்களை பார்க்க தொடங்கினேன். அதிலும், விஜய் டிவியில் வந்த "காதலிக்க நேரமில்லை" தொடர் மிகவும் பிடித்திருந்தது. அந்த நாடகத்தின் "டைட்டில்" பாடலை என் மொபைல் போனின் ரிங் டோனாக கூட வைத்திருந்தேன்.



இந்த பாடலை இப்பொழுது கேட்டாலும், மனதில் ஒருவித கிளர்ச்சி தோன்றும்.

அதன் பின்னர் இணையத்தின் மூலம், பிக் பேங் தியரி, ஹவ் ஐ மெட் யுவர் மதர், ஷெர்லாக் ஹோம்ஸ் என்று சில ஆங்கில சீரியல்களின் அறிமுகங்களும் கிடைத்தது. இந்த சீரியல்களை நண்பர்களிடம் இருந்து வாங்கி பார்த்து மகிழ்ந்தேன். ஆனாலும், தமிழ் சீரியல்களின் மீது நாட்டம் அதிகம் ஏற்படவே இல்லை. திருமணத்திற்கு பிறகும் இதே நிலை தொடர்ந்தது. ஆனாலும், சமீபகாலமாக இரவு 7:30 மணிக்கு "புது யுகம்" சேனலில் வரும் "கொரியன் சீரிஸ்" தமிழ் டப்பிங் நாடகங்களை தொடர்ந்து பார்த்துவருகிறேன். கொரியன் படங்கள் பார்த்த அனுபவம் இருப்பதால், கொரியன் நாடகங்களையும் பார்க்க தொடங்கினேன். இதுவரை ப்ளேஃபுல் கிஸ் (IMDB Ratings: 7.6/10), காஃபி பிரின்ஸ் (IMDB Ratings: 8.5/10) என்று இரு தொடர்கள் முடிந்துள்ளன. தற்போது பாஸ்தா (IMDB Ratings: 8.1/10) என்னும் தொடர் நடக்கிறது. இந்த கொரியன் நாடங்களில் பிடித்த விஷயமே வருஷ கணக்கில் இழுத்தடிக்காமல் விரைவாக முடித்துவிடுவது தான். மேலும், தற்போதைய தமிழ் நாடகங்களை போல அழுகாச்சி காவியங்களாக இல்லாமல் இருப்பது கூடுதல் ஆறுதல். நேரம் கிடைத்தால் இந்த தொடரை பாருங்கள், உங்களுக்கும் பிடிக்கலாம்.  சமீபத்தில், தமிழக நாடக சங்கத்தின் கூட்டத்தில் "கொரியன்" மற்றும் "ஹிந்தி" டப்பிங் நாடகங்களை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப தடைவிதிக்க போவதாக முழங்கினார்கள். இவர்கள் தரமான தமிழ் நாடங்களை கொடுத்தால், ஏன் இந்தமாதிரியான டப்பிங் தொடர்களை ஒளிபரப்ப போகிறார்கள்?!. உண்மையில், ராஜ் டிவியை இன்றளவும் மக்கள் பார்க்கிறார்கள் என்றால், அதில் ஒளிபரப்பாகும் சில "ஹிந்தி" டப்பிங் நாடகங்கள் தான் காரணம். டிவி தொடர்களில், "விஜய்" மற்றும் "புது யுகம்" சேனல்கள் சில நல்ல தொடர்களை ஒளிபரப்புவது நல்ல விஷயம்.

மேலும், ஆங்கிலத்தில் வந்த True Detective, Luther, The Wire, White Collar போன்ற பல தொடர்களை வாய்ப்பு கிடைக்கும் போது பார்க்கவேண்டும் என்கிற ஆவல் இருக்கிறது. பார்க்கலாம்! வாய்ப்புக்காக காத்திருக்கிறேன்.
SHARE
    Blogger Comments
    Facebook Comments

2 மறுமொழிகள்:

  1. மன்னிக்கவும்... பிறகு வருகிறேன்...!

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா :-)
      மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள் போல?!

      Delete