ஒரு ஆண் மகன் எவ்வாறு வாழ வேண்டும்...

எனக்கு கவிதையின் மீது நாட்டம் வந்தது எனது கல்லூரி பருவத்தில்தான். அப்போது தான் நான் அதிகமாக புத்தகங்கள் வாசிக்க தொடங்கினேன். கல்லூரி நூலகத்தில் வாயிலாக கிடைத்த புத்தகங்கள், மேலும் அடிக்கடி வாங்கும் "குமுதம்", "ஆனந்த விகடன்" போன்ற புத்தகங்களின் மூலமாகவும் இந்த ஆர்வம் அதிகரித்தது. சில கவிதைகளை படிக்கும் போது, அப்போதைக்கு படித்தோம் ரசித்தோம் என்று இருக்கும். ஆனால் சில கவிதைகள் மட்டும்
மனதில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அப்படி என்னுள் தாக்கத்தை ஏற்படுத்திய கவிதையை தான் நான் கீழே பகிர்ந்துள்ளேன். இந்த கவிதை சுமார் 8 வருடங்களுக்கு முன்பு நண்பன் ஒருவன் உதவியால் கிடைக்க பெற்றேன். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், இதை எழுதிய கவிஞர் யார் என்று இன்று வரை எனக்கு தெரியாது.

இந்த கவிதை ஒரு ஆண் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை அப்பட்டமாக அறிவுறுதுகிறது.

நீங்களும் படியுங்கள்... ரசியுங்கள்... வாழுங்கள்...


இருபதுகளில்...

எழு,
உன் கால்களுக்கு
சுயமாக நிற்க சொல்லிக்கொடு
ஜன்னல்களை திறந்து வை.
படி,
எதையும் படி
வாத்யாசானம் கூடக்
காமமல்ல - கல்விதான்.
படித்த பிறகு
புத்தகங்களை எல்லாம்
உன் பிருஷ்டங்களுக்கு
பின்னால் எறிந்துவிடு
வாழ்க்கைக்கு வா.

உன் சட்டை பொத்தான்,
கடிகாரம், காதல்,
சிற்றுண்டி, சிற்றின்பம்
எல்லாம் விஞ்ஞானத்தின்
மடியில் விழுந்துவிட்டதால்
எந்திர அறிவுகொள்

ஏவாத ஏவுகனையீனும்
அடிக்கப்பட்ட ஆணியே பலம்
மனித முகங்களை
மனசுக்குள் பதிவு செய்
சபதங்களை படி
சூழ்ச்சிகள் அறி
பூமியில் நின்று வானத்தை பார்
வானத்தில் நின்று பூமியை பார்
உன் திசையை தெளிவு செய்

நுரைக்க நுரைக்க காதலி
காதலை சுவை
காதலில் அழ...

இருபதுகளின் இரண்டாம் பாகத்தில்...
மனம் புரி
பூமியில் மனிதன்
இதுவரை துய்த்த இன்பம்
கையளவு தான்
மிச்சமெல்லாம் உனக்கு
வாழ்க்கையென்பது
உழைப்பும் துய்ப்பும் என்று உணர்

உன் அஸ்திவாரத்தை ஆழப்படுத்து
இன்னும்... இன்னும்...
சூரியகதிர்கள்
விழமுடியாத ஆழத்தில்.

முப்பதுகளில்...

சுறுசுறுப்பில் தேனியாயிரு
நிதானத்தில் ஞாநியாயிரு
உறங்குதல் சுழுக்கு.
உழை,
நித்தம் கல்வி கொள்,
உட்கார முடியாத ஒருவன்
உன் நாற்காலியை
ஒளித்து வைத்திருப்பான்,
கைப்பற்று.

ஆயுதம் தயாரி,
பயன்படுத்தாதே.
எதிரிகளை பேசவிடு.

வேர்களை இடி பிளக்காத
ஆழத்திற்கு அனுப்பு.
கிளைகளை, சூரியனுக்கு
நிழல் கொடுக்கும் உயரத்தில் பரப்பு.
நிலை கொள்.

நாற்பதுகளில்...

இனிமேல் தான் வாழ்க்கை ஆரம்பம்.
செல்வத்தின் பாதியை,
அறிவில் முழுமையை செலவழி.
எதிரிகளை ஒழி,
ஆயுதங்களை மண்டையோடுகளில் தீட்டு.
ஒருவனை புதைக்க,
இன்னொருவனை குழி வெட்ட சொல்,
அதில் இருவரையும் புதை.
பொருள் சேர்,
இருகையால் ஈட்டு,
ஒரு கையாலேனும் கொடு,
பகல் தூக்கம் போடு,
கவனம் இன்னொரு காதல் வரும்.
புன்னகை வரை போ,
புடவை வரை போகாதே.

இதுவரை
லட்சியம் தானே
உனக்கு இலக்கு...
இனிமேல் லட்சியத்திற்கு நீதான் இலக்கு.

ஐம்பதுகளில்...

வாழ்க்கை, வழுக்கை,
இரண்டையும் ரசி.
கொழுப்பை குறை,
முட்டையின் வெண்கரு,
காய்கறி, கீறை கொள்.
இலட்சியத்தை தொடு,
வெற்றியில் மகிழாதே,
விழா எடுக்காதே.

அறுபதுகளில்...

இதுவரை வாழ்க்கை தானே
உன்னை வாழ்ந்தது,
இனியேனும்
வாழ்க்கையை நீ வாழ்.
விதிக்கபட்ட வாழ்க்கையை
விலக்கிவிடு,
மனிதர்கள் போதும்.
முயல் வளர்த்து பார்,
நாயோடு தூங்கு,
கிளியோடு பேசு,
மனைவிக்கு பேன் பார்,
பழைய டைரி எழுது,
இப்போதாவது உண்மையை எழுது.

ஏழுபதுக்கு மேல்...

இந்தியாவில்
இது உபரி.
சுடுகாடு வரை நடந்து போக
சக்தி இருக்கும் போதே,
செத்துப் போ...!!!
SHARE
    Blogger Comments
    Facebook Comments

1 மறுமொழிகள்:

  1. எழுதியவர் வைரமுத்து

    ReplyDelete