லக்ஷ்யா (Lakshya)

ஹிந்தி திரைப்படங்களை பார்க்கும் பழக்கம் நான் மூன்றாம் வகுப்பு படிக்கும் போதே என்னுள் தொடங்கிவிட்டது. அந்த கால கட்டத்தில் எங்களது கிராமத்தில் எத்தனை வீடுகளில் தொலைக்காட்சி பெட்டிகள்  உள்ளதென்று விரல் விட்டு எண்ணி விடலாம். அப்போது எங்களுக்கு தூர்தர்சன் அலைவரிசை மட்டுமே காண வாய்ப்பிருந்தது. சனி கிழமை தோறும் மாலை நேரத்தில் ஏதாவது ஒரு ஹிந்தி திரைப்படம் ஒளிபரப்பாகும், மொழி புரியாவிட்டாலும் அந்த ஹிந்தி படங்களை ஆரம்பம் முதல் இறுதி வரை பார்க்கும் பழக்கம் எனக்கு உண்டு. அதெல்லாம் ஒரு பசுமையான நினைவுகள், இது பற்றி ஒரு தனி பதிவை விரைவில் எழுதுவேன்.
வாழ்க்கையில் அனைவருக்கும் பெரும்பாலும் லட்சியம் என்று ஏதாவது இருக்கும். நாம் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஆனால், இந்த லட்சியம் என்பது நம் மனதில் எந்த சந்தர்ப்பத்தில் தோன்றுகிறது என்பது கவனிக்கவேண்டிய விஷயம். இந்த திரைப்படம் முதலில் கரண் (ஹிருத்திக் ரோஷன்) பஞ்சாப் ராணுவ முகாமில் இணைவதில் இருந்து தொடங்குகிறது. அந்த ராணுவ முகாமில் தற்செயலாக கரண், தொலைக்காட்சியில் செய்தி பிரிவில் வரும் ரோமி (பிரீதி ஜிந்தா) யை பார்க்கிறார். அதிலிருந்து திரைப்படம் பின்னோக்கி பயணமாகிறது.

கரண் ராணுவத்தில் சேருவதற்கு முன்பு, வாழ்க்கையை பற்றி எந்த கவலையும் இல்லாத நகர வாசி. இவரது தந்தை மிக பெரிய தொழிலதிபர், அண்ணன் உதேஷ், அமெரிக்காவில் நிரந்தரமாக வசிப்பவர். கரணுடைய மிக பெரிய பிரச்சனை, அவனது சோம்பேறிதனம் தான்,  பிடிக்காத விஷயம் தன்னை தனது அண்ணன் உதேஷிடம் ஒப்பிட்டு பேசுவது. இவரும் ரோமியும் கல்லூரியில் படிக்கும் போது காதலிக்கிறார்கள்.

ஒரு கட்டத்தில் ரோமியிடம், "என்னிடம் எந்த சிறந்த குணமும் கிடையாதே, பின்பு ஏன் என்னை காதலிக்கிறாய்" என்று கேட்கிறான். அப்போது ரோமி சொல்லும் பதிலை யோசித்து பார்க்கும் போது, நாமும் வாழ்க்கையில் கண்டிப்பாக இது போன்ற நிகழ்வுகளை அனுபவ பட்டிருப்போம் என்றே என்ன தோன்றுகிறது. இது இப்படி போக, இவரது நண்பர்களில் ஒருவன் திடீரென்று தான் ராணுவத்தில் சேர போவதாகவும், மற்றொருவன் தொழிலதிபராக போவதாகவும் முடிவெடுக்கிறார்கள். அதை பார்த்த கரண், தானும் ராணுவத்தில் சேர போவதாக ரோமியிடம் சொல்கிறான்.  பின்னொருநாள், ராணுவத்தில் சேருவதாக சொல்லி இருந்த அவனது நண்பன் தான் "MBA" படிக்க போவதாகவும், ராணுவத்தில் சேர போவதில்லை என்றும் சொல்கிறான். ஆனால், ராணுவத்தில் சேர விண்ணபிருந்த கரணுக்கு நுழைவு தேர்வு எழுத அழைப்பு வருகிறது. கரணுடைய தந்தை அதனை எதிர்கிறார். ஆனால் அந்த எதிர்பையும் மீறி  கரண் ராணுவத்தில் சேருகிறான்.
எனது தந்தை ஒரு காவல் துறை அதிகாரி என்பதால், நான் காவலர் காலநியில் தங்கி இருக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. பெரும்பாலும் எங்களது காலநியில் இருந்த அனைத்து பசங்களுக்கும் தனது தந்தையை போல காவல் துறை அதிகாரியாக வேண்டும் என்ற ஆசை இருக்கும் (எனக்கும் ஒரு காலத்தில் இருந்தது). அந்த உத்வேகத்தில், அந்த பணியில் கஷ்டபட்டு சேருவார்கள். ஆனால் சிலபேர், அங்கு பயிற்சி காலத்தில் கொடுக்கும் பணிகளை முடிக்க இயலாமல் தப்பி வீட்டுக்கு வந்து விடுவார்கள். அது போல தான் இங்கும், கரண் ராணுவ பயிற்சி முகாமில் சேர்ந்தவுடன், ஆரம்பத்தில் அவனது சோம்பேறிதனத்தாலும், விளையாட்டு புத்தியாலும் பல சோதனைகளுக்கு ஆளாகிறான். அவனால் அங்கிருந்த கட்டுப்பாடுகளுக்கு தாக்கு பிடிக்க முடியாமல், இரவொடு இரவாக அங்கிருந்து தப்பி வீட்டுக்கு வந்துவிடுகிறான்.
அவன் ரோமியை சந்திக்கும் போது, தான் ராணுவத்தில் இருந்து வந்துவிட்டதாக சொல்கிறான். அப்போது அங்கு கரணுக்கும் ரோமிக்கும் நடக்கும் உரையாடல் அவனது வாழ்க்கையின் திருப்புமுனை ஆகிறது. அந்த உரையாடலுக்கு பிறகு தன்னை இனிமேல் சந்திக்க வேண்டாம் என்று ரோமி சொல்லிவிடுகிறாள். இந்நிலையில், கரண் மீண்டும் ராணுவ பயிற்சிக்கு
செல்கிறான். கரண் செய்த தவறுக்கு அவர்கள் கொடுக்கும் தண்டனையை பெற்றுக்கொண்டு, பயிற்சியில் கவனத்தை செலுத்துகிறான். அவனது வாழ்கையின் லட்சியம் என்னவென்றும் முடிவு செய்கிறான். பயிற்சி காலம் முடிந்து ராணுவத்தில் அதிகாரியாக பொருப்பேற்கிறான். இந்த தருணத்தில் ரோமிக்கும் ராஜிவ் என்கிற தொழிலதிபருக்கும் நட்பு ஏற்படுகிறது.

கரண், தான் ராணுவத்தில் அதிகாரியான விஷயத்தை இந்த தருணத்தில் ரோமிக்கு தொலைபேசியில் கூறுகிறான். அப்போது ரோமி, அவனை சந்திக்க விரும்புவதாக கூறுகிறாள். ஆனால் கரணோ, "நீ தான் நாம் சந்திக்க கூடாதென்று முடிவெடுத்தாய்..? அதனால் இனிமேல் நாம் சந்திக்க வேண்டுமா? வேண்டாமா? என்பதை நான் முடிவெடுக்கிறேன்" என்று கூறி விட்டு
தொலைபேசியை வைத்து விடுகிறான்.

இப்போது, திரைப்படம் நிகழ்காலத்திற்கு திரும்புகிறது. இந்த திரைப்படத்தின் பின் பகுதி முழுவதும் கார்கில் சம்பவத்தை பின்னப்பட்டு எடுக்கப்பட்டுள்ளது. விடுமுறைக்காக கரண் வீட்டிற்கு வருகிறான், அப்போது தான் அவனுக்கு தெரிய வருகிறது. ரோமிக்கும் அவளது நண்பன் ராஜீவிற்கும் நிச்சயதார்த்தம் அன்று நடக்கிறது என்று. அது போக, ராணுவத்தில் இருந்து அவனுக்கு உடனே அழைப்பு வருகிறது. அங்கே எல்லையில் அன்னியர்கள் ஆக்கிரமிப்பு நடத்திருப்பதால், கரண் தனது விடுமுறையை தவிர்த்துவிட்டு மீண்டும் கிளம்புகிறான். இந்த திட்டத்தை செயலாக்குவதற்கு தலைமை பொறுப்பை "commandar" சுனில் (அமிதாப் பச்சன்) ஏற்கிறார். இந்நிலையில், எல்லையில் நடக்கும் ராணுவ நடவடிக்கைகளை நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்ப ரோமியும் அங்கு வருகிறாள்.

இனி, கரண் எவ்வாறு எதிரிகளின் ஆக்கிரமிப்பில் இருந்து அவர்களை அகற்றுகிறான், ரோமி மற்றும் கரண் காதல் ஒன்று சேர்ந்ததா என்பதை திரைப்படத்தில் கண்டுகளிக்கவும்.

இந்த படத்தில் எனக்கு பிடித்தது, ஒளிப்பதிவு மற்றும் படத்தில் இடம் பெற்ற பாடல்கள். எனக்கு பிடித்த பாடல், கீழே உள்ள இணைப்பில் உள்ளது.



மேலும், கீழே உள்ள இணைப்பில் உள்ள பாடலுக்கு நடனம் அமைத்ததற்காக பிரபுதேவா தேசிய விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.



என்னை பாதித்த திரைப்படங்களில் இதுவும் ஒன்று...!!
SHARE
    Blogger Comments
    Facebook Comments

0 மறுமொழிகள்:

Post a Comment