2010 கற்றதும்... பெற்றதும்....
கடந்த 2010 வருடம் என் வாழ்வின் மறக்க முடியாத வருடமாக அமைந்தது. காரணம், நான் இழந்ததும் அடைந்ததும் சரி சமமாக இருந்தது தான். கடந்த வருடத்தில் பல நிகழ்வுகள் நடந்திருந்தாலும், என்னை மிகவும் பாதித்த நிகழ்வுகளை மட்டும் நான் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.
எனது பழைய அலுவலகம், நான் கல்லூரியில் படிக்கும் போதே எனக்கு "Dream Company", ஆனால் அதில் இருந்து வெளிவரும் சூழ்நிலைக்கு தள்ளபட்டேன். வாழ்க்கையில் நம்மால் எல்லா விஷயங்களையும் மாற்ற முடியாது, சில நேரங்களில் சூழ்நிலைக்கு ஏற்றவாறு நம்மை மாற்றி கொள்வது நல்லது. சரிதானே...? :)
நான் இப்போது பணி புரியும் அலுவலகத்தை எந்த விதத்திலும் என்னுடைய பழைய அலுவலகத்துடன் ஒப்பிட்டு பார்க்க முடியாது. இருந்தாலும், நான் இங்கு அடையும் வருமானம் அதிகம், அதை விட எனது பதவியும் உயர்ந்துள்ளது. இந்த அலுவலகத்தில், எனக்கு கீழும் சில பேர் வேலைபார்ப்பது பெருமையாக இருந்தாலும் பொறுப்புகளும் அதிகமாவதை நான் உணர்கிறேன். இதை தான் ஆங்கிலத்தில் "With great power, comes great responsibility" என்பார்கள்.
எனது நண்பன் நாகராஜன், பெங்களுரிலிருந்து மாற்றலாகி சென்னை சென்றான். அவன் பெங்களூரில் இருந்த காலகட்டத்தில், நான், மற்றும் எனது நண்பர்கள் பிரமோத் மற்றும் கிருஷ்ணா ஆகியோர் ஒன்றாக சுற்றிய நாட்கள், மற்றும் எனது வீட்டில் சமைத்து உண்ட நாட்கள், என்று மறக்க முடியாத நிகழ்வுகள் ஏராளம்.
நாம் பெரும்பாலும் நட்பை தேடி அலைவதில்லை, அதுவாகத்தான் அமையும். இதில் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், அவ்வாறு எனக்கு அமைந்ததெல்லாம் சிறந்த நண்பர்களாகத்தான் இருந்தது (இருக்கிறது). எனது பழைய அலுவலகத்தில் இருந்து வெளிவறுவதற்கு சில மாதங்களுக்கு முன் வரை, எனக்கு அலுவலகத்தில் நெருங்கிய நண்பர்கள் மிக குறைவே.
அப்போது, எனக்கு நெருங்கிய தோழிகள் என்றால் மூன்று பேர் மட்டுமே. ஒன்றாக உணவு உண்பது, ஒரு நாளைக்கு 5 முறை தேநீர் அருந்த செல்லுவது, "messenger"ல் அரட்டை அடிப்பது என்று மிகவும் சந்தோசமாக களித்த நாட்கள் அவை. அவர்களுடனான நட்பு வாழ்வின் இறுதி வரை தொடர வேண்டும் என்ற ஆசை எனக்கு எப்போதும் உண்டு. நமக்காக கவலை படுபபவர்களின் ஸ்னேகிதம் தொடர நினைப்பது ஒரு சராசரி மனிதனின் ஆசை தானே. ஆனால், நாம் ஒன்று நினைத்தால், தெய்வம் ஒன்று நினைக்கும் அல்லவா...? :(
பெண் தோழிகளுடனான நட்பு பெரும்பாலும் அவர்கள் திருமணத்திற்கு பிறகு தொடர்வது என்பது மிகவும் அரிதான ஒரு விஷயம். இதை நான் ஏற்கனவே மணமான எனது இரண்டு பெண் தோழிகள் கொடுத்த அனுபவத்தால் கற்று கொண்டதால், எனது மூன்றாம் தோழிக்கு அந்த தொல்லையை கொடுக்க விரும்பாமல், நானாகவே என் தோழியிடம் பேசுவது முதல் அனைத்து நடவடிக்கைகளையும் குறைத்து கொண்டேன். அதன் பிறகு அலுவலகத்தில் மீள முடியா தனிமைக்கு என்னை தள்ளிக்கொண்டேன். தனிமை எனக்கு எப்போதும் சிரமமாக தோன்றியதில்லை, ஆனால் நான் அதை அப்போது அலுவலகத்தில் அனுபவித்த போது பெரிய சுமையாகவே கருதினேன். இப்போதும் அந்த தோழியுடன் எந்த ஒரு தொடர்பும் இல்லாமல் போய் விட்டது. ஆனால், மற்ற இரு தோழிகள் மட்டும் அவ்வப்போது "messenger"ல் அரட்டை அடிப்பார்கள், அதோடு சரி.
எனது பழைய அலுவலகத்தில் இருந்து வெளிவறுவதற்கு சில மாதங்களுக்கு முன் எனது நட்பு வட்டாரம் சற்று விரிவடைந்தது. அதற்கு, நண்பர் பரிதிக்கு நான் நன்றி சொல்லியே ஆகவேண்டும். எனது தோழிகளின் பிரிவால், அலுவலகத்தில் தனிமையில் இருந்த காலகட்டத்தில் இந்த நட்புலகம் ஒரு புத்துணர்ச்சியை அளித்தது. அதன் பிறகு நான் பழைய "குரு" வாக மாறி விட்டது போன்ற எண்ணம் தோன்றியது.
எனது அன்பு சகோதரி Joyce வீட்டிற்கு போவதும், சகோதரியின் அம்மா கையால் வித விதமாக சாப்பிட்டதையும் இன்னும் மறக்க முடியவில்லை. மேலும் என் சகோதரி அலுவலகத்திற்கு வரும் போது எனக்கும் சேர்த்து ஒரு சாப்பாட்டு Parcel கொண்டு வருவதை வழக்கமாக கொண்டிருந்தார். இதை எல்லாம் நினைக்கும் போது நான் நண்பர்களால் ஆசீர்வதிக்க பட்டே இந்த உலகத்தில் ஜனனம் எடுத்துள்ளதாக நினைத்து கொள்கிறேன். "A friend is a beautiful gift to your character" என்பது எந்த அளவுக்கு உண்மை என்பதும் விளங்குகிறது.
நான் வேலைக்கு சேர்ந்த பிறகு எனக்கென்று ஆசையாய் வாங்கியது "Pulsar" வாகனம். கடந்த மூன்று வருடங்களாக நான் அதை உபயோகித்து வந்துள்ளேன், ஆனால் என்னுடைய கவனக்குறைவால் அந்த வாகனத்தை இழந்தேன். ஆமாம், அது திருடு போய்விட்டது. :(
என்னதான் எனது தந்தை காவல் துறை அதிகாரியாக இருந்தாலும், வாழ்க்கையில் முதல் முறையாக எனக்காக காவல் நிலையத்திற்கு மனு அளிக்க சென்றேன். எனது வாகனம் காணாமல் போனதை பதிவு செய்ய நான் கொடுத்த லஞ்ச பணம் ரூ.200 /-.
நான் +2 படிக்கும் போது, ஒரு நாள் விளம்பரத்தில் வந்த "Eliminator" வாகனத்தை வாங்க வேண்டும் என்ற ஆசை. சில விஷயங்களை நமக்கு ஏன் பிடிக்கிறது என்று கேட்டால் காரணம் சொல்ல முடியாது. அது போல தான் இதுவும். :)
நான் "Pulsar" வாகனம் வாங்க சென்ற போது, எனக்கு "Eliminator" வாகனம் போன்ற தோற்றமுடைய "Avenger" வாகனத்தை வாங்க வேண்டும் என்ற ஆசை தோன்றியது. ஆனால், என்னுடன் வந்திருந்த நண்பர் "உன் உடம்புக்கெல்லாம் இந்த வண்டி சேராது..." என்று சொல்லிவிட்டார். ஏன் என்றால் நான் அந்த கால கட்டத்தில் மிகவும் ஒல்லியாக இருப்பேன். அதன் பிறகு என்னை நானே சமாதான படுத்திக்கொண்டு "Pulsar" வாகனம் வாங்கினேன். ஆனால், நான் எனது "Pulsar" வாகனத்தை சமீபத்தில் இழந்ததால் எனது "Dream Bike ELIMINATOR" வாகனத்தை வாங்க முடிந்தது.
எனது நண்பனின் தந்தை இறந்தது என் மனதை மிகவும் பாதித்த விஷயங்களில் ஒன்று. வாழ்க்கையில் முதல் முறையாக அமரர் ஒருவரின் உடலை தொட்டு தூக்கியது அன்று தான் நடந்தது. எனது நண்பனுக்கு சமாதானம் சொல்ல முடியாமல் தடுமாறிய தருணங்கள் அவை. அந்த நிகழ்வுக்கு பிறகு நான் வாழ்க்கையில் எந்த ஒரு விஷயமும் எனக்கு கிடைக்காமல் போனாலோ, என்னுடன் நிலைக்காமல் போனாலோ கவலை கொள்வதை நிறுத்தி கொண்டேன்.
மற்றொரு துன்பியல் சம்பவம் என்னவென்றால், எனது சகோதரிக்கு குறைந்தது 8 வருடங்களுக்கு பிறகு கிடைத்த குழந்தை பாக்கியம் முழுமை அடையாமலே சென்றது. அதை தொடர்ந்து அவர் பட்ட துன்பங்களும் அவர் அதை கடந்து வந்ததும் எனக்குள் மிகவும் பிரமிப்பை ஏற்படுத்தியது.
நான் மிகவும் பிரச்சனைகளால் சோர்ந்து போன சந்தர்பங்களில் எனது சகோதரியை நினைத்துக்கொள்வேன். அவர் போன்று மன வலிமையுடன் இருக்க வேண்டும் என்று என்னை நானே சமாதான படுத்திக்கொள்வேன்.
அந்த சகோதரியின் மன வலிமைக்கு கிடைத்த பரிசு என்ன தெரியுமா...?? தற்போது அவர் மீண்டும் மாதமாக இருப்பது தான்.... :)
கடந்த வருடம், முதல் முதலாக நண்பர்களுடன் மைசூர், திருவண்ணாமலை, நந்தி ஹில்ஸ் போன்ற இடங்களை சுற்றி பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.
கடந்த வருடத்தின் இனிய நிகழ்வாக நான் கருதுவது, எனது தந்தைக்கு உதவி ஆய்வாளராக (Sub Inspector) பதவி உயர்வு கிடைத்தது தான். எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல், அவர் ஓடிக்கொண்டே தான் இருக்கிறார். அதனால் தான் என்னவோ அவர் சோர்வடைந்து நான் பார்த்ததே இல்லை. என் தந்தை தான் பல விஷயங்களில் எனக்கு முன் மாதிரி. என்னால் அவரை முழுமையாக கடைபிடிக்க முடியவில்லை என்றாலும், முடிந்தவரை முயற்சி செய்கிறேன். வாழ்த்துக்கள் அப்பா...!!
இந்த வருடத்தையும் நான் ஆவலோடு எதிர்கொள்கிறேன், நல்ல அனுபவங்களை கொடுக்கும் என்ற நம்பிக்கையுடன்.....!!
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...!!!
0 மறுமொழிகள்:
Post a Comment