காவலன்

பொதுவாக மாட்டுப் பொங்கல் அன்று நண்பர்களுடன் எங்களது ஊரில் உள்ள ராமநதி அணைக்கட்டிற்கு செல்வது வழக்கம். இந்த முறை, எங்கும் செல்லாமல் வீட்டில் சாப்பாடு மற்றும் தூக்கம் மட்டும் மாறி மாறி நடந்தது :). மாலையில், திரைப்படத்திற்கு செல்லலாம் என்று முடிவு செய்தேன். எங்களது ஊரில் உள்ள திரை அரங்கத்தில் வேலைபாடு நடப்பதால், பக்கத்து ஊரான அம்பாசமுத்திரதிற்கு எனது சகோதரன் மற்றும் மைத்துனனுடன் சென்றேன். எனது சகோதரன் இளைய தளபதி Dr.விஜயின் தீவிர ரசிகனாக இருந்தான் ஒரு காலத்தில் (போக்கிரி திரைப்படம் வரை). ஆனால், அதன் பிறகு வரிசையாக தோல்வி படங்களை அவர் கொடுத்ததால் அவனுக்கு காவலன் திரைப்படத்தை பார்க்க விருப்பம் இல்லாமல், ஆடுகளம் திரைப்படத்தை பார்க்க என்னை இழுத்தான். ஆனால், ஆடுகளம் ஓடிய திரை அரங்கம் மிக மோசமான நிலமையில் இருந்ததால் நான் அதை தவிர்த்தேன். மைத்துனன் சிறுத்தை திரைப்படத்தை பார்ப்போம் என்று ஒற்றை காலில் நின்றான். எனக்கோ, சிறுத்தை திரைப்படத்தை நண்பர்களுடன் பெங்களூரில் பார்க்க வேண்டும் என்ற ஆசை. ஆகையால், அவர்களை பேசி சமாதானபடுத்தி காவலன் படத்திற்குள் நுழைந்தேன். எனக்கு என்னவோ,  இந்த முறை விஜய் ஏமாற்ற மாட்டார் என்று ஒரு எண்ணம்.

இனி திரைப்படத்தை பற்றி...
ரொம்ப நாட்களுக்கு பிறகு அலட்டல், ஆர்ப்பாட்டம் இல்லாத பழைய விஜயை பார்க்க முடிந்தது, அளவாக நடித்திருக்கிறார். இந்த திரைப்படம் மலையாளத்தில் வெளிவந்த "பாடிகாட்" திரைப்படத்தின் தமிழ் பதிப்பென்று அனைவருக்கும் தெரியும்.


இந்த திரைப்படம் ஒரு சிறுவன் தனது அம்மா எழுதிய நாட்குறிப்பை (Diary) படிப்பதில் இருந்து தொடங்குகிறது, அதன் பிறகு அப்படியே பின்னோக்கி நகர்கிறது.

செம்மனூர் முத்துராமலிங்கம் (ராஜ்கிரன்), அந்த ஊரில் வாழும் மக்களுக்கு வரும் ஆபத்துகளில் இருந்து காக்கிறார். அதற்கு அவர் உபயோகிக்கும் வழி வன்முறையாக இருந்தாலும் மக்கள் அவரை தெய்வமாக வணங்குகின்றனர். இவருக்கு பிடிக்காத ஒரு விஷயம் நம்பிக்கை துரோகம் மட்டுமே. இதை அவருடைய அறிமுக காட்சியிலையே தெளிவு படுத்திவிடுகின்றனர். ஒரு முறை வழியில் பிரசவத்தில் துடித்த ஒருவருக்கு உதவி செய்ய போக, அதில் பிறந்த குழந்தைக்கு பெயர் வைக்கும் நிலமை வந்து விடுகிறது. அந்த குழந்தைக்கு பூமிநாதன் என்று பெயர் இடுகிறார். அந்த குழந்தை தான் விஜய்.

சிறு வயது முதலே, அடிதடி என்று சுத்துவதால் பூமிநாதனை (விஜய்) திருத்த வேறு வழி இல்லாமல் செம்மனூர் முத்துராமலிங்கதிற்கு ஆபத்து இருப்பதாகவும் அவருக்கும், அவரது குடும்பத்திற்கும் காவலாக இருக்க அழைப்பு வந்ததாக பொய் சொல்லி அனுப்பி வைக்கிறார்கள் பூமிநாதனின் பெற்றோர். அதற்கு உதவியாக அமாவாசை (வடிவேலு) உடன் செல்கிறார்.


முத்துராமலிங்கத்தின் மகனை ஒரு தலையாக காதலித்து, அது நடக்காததால் தற்கொலை செய்து கொண்ட ஒருவளின் தந்தை, முத்துராமலிங்கத்தின் குடும்பத்தை வேரோடு அழிக்க நினைக்கிறான். பூமிநாதன் அங்கு சென்ற உடன், சில சந்தர்ப்பங்களில் முத்துராமாலிங்கத்தின் உயிரை எதிரிகளிடம் இருந்து காப்பாற்றுகிறார்.


மற்றொரு சந்தர்ப்பத்தில், ஏற்கனவே நிச்சயமான முத்துராமலிங்கத்தின் மகள் மீரா (அசின்) படிப்பினை தொடர கல்லூரிக்கு செல்கிறாள். அவளுக்கு பாதுகாப்பளிக்கவும், பூமிநாதனின் விட்டு போன படிப்பை தொடரவும் உடன் அனுப்புகிறார் முத்துராமலிங்கம். கல்லூரியில் பூமிநாதனின் உடை, மற்றும் செயல் பாடுகளை மாற்ற பல நடவடிக்கைகளை முயற்சி செய்து மீரா தோற்கிறாள். இறுதியில், காதல் மூலமாகத்தான் பூமிநாதனை மாற்ற முடியும் என்ற முடிவுக்கு வந்து தானே அந்த களத்தில் குதிக்கிறாள்.


தனது cell phone மூலம் private call செய்து பூமிநாதனை தான் காதலிப்பதாக சொல்கிறாள். பல முறை அவளது அழைப்பு செவி சாய்க்காத பூமிநாதன், அவளது பெயர் அம்முகுட்டி என்று சொன்ன உடன் மெல்ல காதலில் விழுகிறான். ஏனென்றால், அவனது பள்ளி பருவத்தில் அம்முகுட்டி என்ற முகம் தெரியாத பெண் அவனை காதலிப்பதாக பள்ளி சுவற்றில் எழுதியது அவனுக்கு நினைவுக்கு வந்ததும், அந்த பெண் தான் இவளாக இருக்குமோ என்ற எண்ணமும் தான் காரணம். விளையாட்டாக ஆரம்பித்த இது பிற்காலத்தில் பிரச்சனையை கொண்டு வருகிறது.


இறுதியில், பூமிநாதன் தனக்கு cellphoneல் அழைப்பு விடுத்தவரை கண்டு பிடித்தாரா..? பூமிநாதன் மற்றும் மீராவின் காதல் ஒன்று சேர்ந்ததா என்பதை திரைப்படத்தில் கண்டு மகிழுங்கள்.

இந்த திரைப்படத்தின் மிகப்பெரிய பலம், விஜய் மற்றும் வடிவேலு சம்பந்தபட்ட நகைச்சுவை காட்சிகள், முக்கியமாக விஜய் வெளிப்படுத்திய அளவான நடிப்பு :)
இந்த திரைப்படத்தை பார்ப்பதற்கு முன், முழு கதையை அறிந்து கொள்ளாமல் செல்வது நல்லது. அப்போது தான் உங்களால் உச்ச கட்ட காட்சியை ரசிக்க முடியும். ஏனென்றால், படத்தின் மிகப் பெரிய பலங்களில் இதுவும் ஒன்று. அதனால் தான் நான் இங்கு முழு கதையையும் எழுதவில்லை :)


திரைப்படத்தின் ஒளிப்பதிவு அருமை, இரண்டு பாடல்களை படத்தில் ரசித்தேன். ஒன்று "யார் அது" என தொடங்கும் பாடல், மற்றொன்று "Step..Step.." என தொடங்கும் பாடல். இந்த திரைப்படம் பெண்களின் ஆதரவை பெரும் என்பது என் கருத்து.

இந்த திரைப்படம் எனக்கு விஜய் நடித்த வசிகரா திரைப்படத்தை ஒரு சமயம் நியாபகபடுத்தியது. வெகுநாட்களுக்கு பிறகு விஜய் படத்தை ரசித்து பார்த்தேன்.
SHARE
    Blogger Comments
    Facebook Comments

0 மறுமொழிகள்:

Post a Comment