ஆடுகளம்

கடந்த வெள்ளிக்கிழமை நானும் எனது நண்பர் பரிதியும் ஆடுகளம் திரைப்படத்திற்கு சென்றோம். பொதுவாகவே நான் இரவு காட்சிகளை தவிர்ப்பது வழக்கம். ஏனென்றால், நான் படத்தின் இரண்டாம் பாதியில் பெரும்பாலும் தூங்கிவிடுவேன். எத்தனை நாட்கள் தான் இவ்வாறே இருப்பது, இதற்கு இந்த வருடம் முதல் ஒரு முடிவு கட்ட வேண்டும் என்ற எண்ணத்துடன் திரைப்படத்திற்கு சென்றேன். திரைப்படம் நன்றாக இருந்ததால் என்னவோ நான் தூங்கவில்லை.
இனி திரைப்படத்தை பற்றி...
இயக்குநர் வெற்றிமாறன் தனது முந்தய திரைப்படத்தில் PULSAR வாகனத்தை ஒரு கதாபாத்திரமாகவே வைத்திருப்பார். அது போல, இந்த திரைப்படத்தில் சேவல் ஒரு கதாபாத்திரமாகவே வந்துள்ளது. இந்த திரைப்படம் மதுரை நகரத்தை சுற்றியுள்ள மக்களின் வாழ்க்கை முறையை அடிப்படையாக கொண்டு பின்னப்பட்டுள்ளது. அதனால், அனைவருக்கும் படத்தின் உரையாடல்கள் கொஞ்சம் புரிவது கடினமே.
 சேவல் சண்டையை வைத்து நட்பு, காதல், பொறாமை, கர்வம், சோகம், துரோகம் என்று அனைத்து மனித உணர்வுகளையும் காட்டியுள்ளார் இயக்குநர் வெற்றிமாறன். திரைப்படத்தின் முதல் பாதி மிகவும் விரு விருப்பாக செல்கிறது. ஆனால், இரண்டாம் பாதியில் கொஞ்சம் தோய்வடைந்து செல்கிறது. திரைப்படத்தில், வரும் அனைத்து கதாபாத்திரங்கள் மீதும் அக்கறை காட்டியுள்ளார் இயக்குநர். உதாரணமாக, தனுஷின் அம்மா மற்றும் அவரது நண்பனாக வரும் கதாபாத்திரங்கள். 
 பேட்டைக்காரன் கதாபாத்திரம் மிகவும் அருமை, அதற்கு ராதாரவியின் பின்னணி குரல் கச்சிதமாக பொருந்தியுள்ளது. ஒரு மனிதன் எவ்வாறு இ(ரு)றக்க கூடாது என்பதற்கு இந்த கதாபாத்திரம் ஒரு உதாரணம். திரைப்படத்தின் ஆரம்பத்தில், சேவல் சண்டையின் வரலாறை சொல்வதும், படத்தின் இறுதியில்,  உருவாக்கத்திற்கு உதவியாக இருந்த திரைப்படங்களுக்கு நன்றி சொல்வதும் என்று என்னை கவர்ந்த விஷயங்கள். தனுஷின் நடிப்பிற்கு இந்த திரைப்படம் ஒரு மைல்கல், புதுப்பேட்டை திரைப்படத்திற்கு பிறகு, அருமையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
 இந்த திரைப்படத்தில் எனக்கு பிடித்த பாடல்கள் யாத்தே.. யாத்தே.. என தொடங்கும் பாடல் மற்றும் ஒத்த சொல்லால... என தொடங்கும் பாடல்.

ஆடுகளம் அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம்.
SHARE
    Blogger Comments
    Facebook Comments

0 மறுமொழிகள்:

Post a Comment